Tamil Screenplay – Tamil Thiraikathaikal – Niram Marum Mugangal – Scene 3

நிறம் மாறும் முகங்கள்

திரைக்கதை

(தொலைக்காட்சி நெடுந்தொடருக்கானது)

காட்சி 3
Day / Int / Extn

சந்திராவின் வீடு.
சோபாவில் அமர்ந்தபடியே சந்திரா அழுதுகொண்டிருக்கிறாள்.
சந்திராவின் மாமியார் தன் மகனும் சந்திராவின் கணவருமான சேகரிடம்  செல்போனில்  பேசிக்கொண்டிருக்கிறார். பெயர் பார்வதி அம்மாள். வயது 60.

பார்வதி அம்மாள்: ‘‘எல்லா எடத்துலேயும் தேடியாச்சி…கணேசன காணோம்…நீ உடனே வீட்டுக்கு கௌம்பி வா….ஸ்டேஷன் வரைக்கும் போய் எதுக்கும் ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுத்துறலாம்….லேட் பண்ண வேண்டாம்….எனக்கு பயமா இருக்குப்பா….’’

சேகர்குரல்: ‘‘பக்கத்து வீட்டு இன்ஸ்பெக்டரும் அதைத்தான் சொன்னாரு…அம்மா…நான் வீட்டுக்கு வந்து….. அப்புறமா போலீஸ் ஸ்டேஷன் கௌம்பறதுக்கு எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் ஆகும்…… ஒன்னு பண்ணுங்க நீங்களும் சந்திராவும் ஸ்டேசனுக்கு வந்துருங்க…நான் ஆபிஸ்லேர்ந்து நேரா அங்க வந்துர்றேன்…சந்திராகிட்ட சண்டை ஏதும் போடாதீங்க…கணேசனுக்கு ஒன்னும் ஆயிருக்காது….போனை சந்திராகிட்ட குடுங்க…’’ (குரலில் பதட்டம், வேகம்)

பார்வதி அம்மாள் சோபாவில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் சந்திராவைப் பார்க்கிறார்…

சந்திராவை நோக்கி நடந்துவருகிறார். போனை சந்திராவை நோக்கி நீட்டுகிறார்.

பார்வதி அம்மாள்: ‘‘ஏய்…ந்தா….உங்கிட்ட பேசணுங்கறான்….’’

சந்திரா போனை மாமியாரிடமிருந்து வாங்குகிறாள். போனை காதில் வைக்கிறாள்.

சேகர் குரல்: ‘‘ஏண்டி….மத்தியானம் தூங்காதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது. நாலு மணிக்கு ஸ்கூல் விடும்னு தெரியும்…மூணு மணிக்கே ஆட்டோக்காரர் வந்துடுறாரு…..அவரு வரும்போது நீ ரெடியா இருக்கவேண்டாம்..மெதுவா எழுந்திருச்சி முகம் கழுவி, பவுடர் பூசி புதுப்பொண்ணு மாதிரி அலங்கரிச்சிக்கிட்டு…அதுக்கு அப்புறம் நீ கௌம்பிப் போறது எனக்கு தெரியாதுன்னு நெனைக்கிறியா…செய்யறதெல்லாம் நீ செஞ்சிட்டு ஆட்டோக்காரர் மேல பழி போட மனசு எப்படித்தான் வருதோ….அம்மாவ கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன் வந்துரு….நான் கால் மணி நேரத்துல அங்க இருப்பேன்…’’ (குரலில் அதட்டல், எரிச்சல்)
போன் கட் செய்யப்படும் சத்தம் கேட்கிறது.
சந்திராவும் போனை கட் செய்துவிட்டு தன் மாமியாரை முறைத்துப் பார்க்கிறாள்.
பார்வதி அம்மாளும் பதிலுக்கு முறைத்தபடியே…
பார்வதி அம்மாள்: ‘‘இந்த மொறைக்கற வேலையெல்லாம் வேண்டாம்….அவங்கிட்ட நீ தூங்கற விஷயத்தை நான் சொல்லவேயில்ல…’’

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது…சந்திரா முகத்தைத் துடைத்தபடியே ஒருவித அச்சத்துடன் போய் கதவைத் திறக்கிறாள். கதவுக்கு வெளியே வாணி நிற்கிறாள்..
வாணி உள்ளே பதட்டத்தோடு நுழைந்தபடியே…

வாணி: ‘‘சந்திரா…என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன்..அவரும் நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெய்ன்ட்ட குடுத்திரச் சொல்லிட்டாரு…கமிஷனர் ஆபிஸ்லேயிருந்து இந்நேரம் நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு போன் போயிருக்கும்….நீ ஒன்னும் கவலப்படாத…போலீஸ் டிபார்ட்மென்ட்ட பொருத்தவரைக்கும் எல்லா இடத்துலேயும் என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க…எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துல உம் பையன கண்டுபிடிச்சிருவாங்க…’’

வாணி பேசுவதை பார்வதி அம்மாள் கவனிக்கிறாள்.
பின்னர் சந்திராவை பார்க்கிறார்.

பார்வதி அம்மாள்: ‘‘ஏய்…நீகௌம்புறியா…இல்ல வாணிய கூட்டிட்டு நான் ஸ்டேஷன் கௌம்பட்டுமா…’’

பார்வதி அம்மா சந்திராவை இப்படி பேசுவதை வாணி பார்க்கிறாள்.

வாணி: ‘‘அம்மா…அவளே மகனக் காணோம்ன்னு பதட்டத்துல இருக்கா…இந் நேரத்துல உங்க சண்டைய வச்சிக்க வேண்டாம்…மொதல்ல கௌம்பற வழியப் பாருங்க…’’ (கெஞ்சல், அவசரம்)

சந்திரா வாணியைப் பார்க்கிறாள்.

சந்திரா: ‘‘வாணி…நீயும் வாயேன்…எனக்கு போலீஸ் ஸ்டேஷன்னாலேயே ஒரு மாதிரி இருக்கு…’’

அழுதபடியே பேசுகிறாள்…

வாணி: ‘‘உங்கள கூட்டிட்டுப் போறதுக்குத்தான் வந்திருக்கேன்..என் வீட்டுக்காரரும் ஸ்டேஷனுக்கு வந்துர்றேன்னு சொல்லியிருக்காரு..உன் வீட்டுக்காரர்கிட்டே பேசிட்டாரு….சீக்கிரம் கௌம்புங்க…’’

மூவரும் புறப்படுகின்றனர்.
சாவித்திரி வீட்டைப் பூட்டுகிறாள்.
வெளியே ஆட்டோக்காரர் தயாராக நிற்கிறார்.
மூவரும் ஆட்டோவில் ஏறி அமர்கின்றனர்.
ஆட்டோக்காரர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்கிறார்.
ஆட்டோ புறப்பட்டுச் செல்கிறது.

Clip to Evernote