Tag Archives: Tamil Thiraikathaikal

Ponniyin Selvan Screenplay – Ponniyin Selvan Thiraikathai – Scene 4

பொன்னியின் செல்வன்

கதை,வசனம் : கல்கி

திரைக்கதை,வசனம் : தென்னாடன்

Tamil screenplay image

காட்சி 4

பகல் / வெளி

Day/ Ext

ஒரு கோயிலின் முகப்புத் தோற்றம்.

CUT

ஊடாடும் மக்கள் கூட்டம். பலவகையான கடைகள்.

CUT

ஓரிடத்தில் மட்டும் மக்கள் கூட்டமாக எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

CUT

தலையை ஓரமாக மழித்து முன்குடுமி வைத்திருக்கும் ஒருவர் (பெயர் ஆழ்வார்க்கடியான் வயது 35 இருக்கலாம். சற்றே குண்டாக இருக்கிறார். நெற்றியில் நாமம்), நெற்றி நிறைய திருநீர் அணிந்திருப்பவரிடம் ஏதோ வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்.ஆழ்வார்க்கடியானின் கையில் பிரம்பு ஒன்று இருக்கிறது.

அவர்களைச் சுற்றிலும் சுமாரான மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

CUT

சற்று தூரத்தில் குதிரையில் அமர்ந்தபடியே வரும் வந்தியத்தேவன் அந்த இடத்திற்கு எதிர்ப்புறமாக வருகிறான்.

CUT

குடுமிக்காரர் ஆழ்வார்க்கடியான் தீவிரமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், தன் கையில் உள்ள பிரம்பால் திருநீறு அணிந்திருப்பவரை அடிக்க ஓங்குவதும் வந்தியத்தேவன் கண்களில் படுகிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது இவனுக்குக் கேட்கவில்லை.

குதிரையை நிறுத்தி கீழே இறங்குகிறான். அருகில் உள்ள பெரியவரிடம் பேச்சு கொடுக்கிறான்.

வந்தியத்தேவன் : “அங்கே என்ன தகராறு?’’

பெரியவர் : “அய்யோ….அது வெகுநேரமாக நடந்துகொண்டிருக்கிறது. விஷ்ணு பெரிய கடவுளா, சிவன் பெரிய கடவுளா என ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பேசி மாய்கிறார்கள். அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்’’

வந்தியத்தேவனின் கண்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் ஆழ்வார்க்கடியான் தோற்றம் முழுமையாகப் படுகிறது. ஆழ்வார்க்கடியானின் செய்கைகள் வந்தியத்தேவனுக்கு புன்னகையை வரவழைக்கின்றன. இவன் புன்னகைப்பதை அருகில் உள்ள பெரியவர் கவனிக்கிறார். வந்தியத்தேவன் அவரைப் பார்க்கிறான்.

பெரியவர் : “என்ன வீரனே….நீ போய் அவர்களை சமாதானம் செய்யலாமே? அதற்குள் குதிரையில் இருந்து இறங்கிவிட்டாய். உனக்கும் வேடிக்கை பார்க்கத் தோன்றுகிறதோ?’’

வந்தியத்தேவன் : “அரியும் சிவனும் ஒன்னு அதை அறியாதவன் வாயில மண்ணு என நான் சொன்னால் அவர்கள் கேட்கவா போகிறார்கள்’’

வந்தியத்தேவன் பெரியவரிடம் பேசிமுடித்து மீண்டும் அவர்களின் வாக்குவாதத்தைப் பார்க்கிறான்.

CUT

இப்போது, நான்கு வீரர்கள் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்தபடியே சற்றுதூரத்தில் வருகிறார்கள்.    அதில் ஒரு வீரன் உரக்க கத்தியபடியே வந்தியத்தேவன் நிற்கும் இடத்தை நெருங்கி வருகிறான்.

குதிரை வீரன் : “ “சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு, அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர், சோழநாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள், வழி விடுங்கள்!”

வந்தியத்தேவன் அந்த நான்கு குதிரை வீரர்களையும் பார்க்கிறான்.

CUT

ஊடாடும் மக்களும், ஆழ்வார்க்கடியான் வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்கும் கூட்டமும் அவசர கதியில் சாலையோரம் ஓதுங்கி நிற்கிறார்கள்.

CUT

வந்தியத்தேவனும் தன் குதிரையை இன்னும் ஓரமாக இழுத்து, தானும் சாலையோரமாக நின்றுகொள்கிறான்.

நான்கு குதிரை வீரர்களும் சென்றதைத் தொடர்ந்து முரசு அடித்துக்கொண்டு சிலர் வருகிறார்கள். முரசு சத்தம் காதைக் கிழிக்கிறது.

முரசு அடித்துச் செல்பவர்களைத் தொடர்ந்து பனைமரத்தின் ஓவியத்தை வரைந்த கொடியைத் தாங்கியபடி சிலர் வருகிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வருகிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து ஒரு யானையின் மீது பெரிய பழுவேட்டரையர் அமர்ந்து வருகிறார். (வயது 60 இருக்கலாம். கருநிற மேனி. ஓர் அரசருக்குரிய தோற்றத்தில் கம்பீரமாக யானையின்மீது அமர்ந்து கடந்துபோகிறார்)

யானையைத் தொடர்ந்து ஒரு பல்லக்கினை சிலர் சுமந்து வருகிறார்கள். வந்தியத்தேவன் அந்தப் பல்லக்கினை கூர்ந்து பார்க்கிறான்.

பல்லக்கினைத் தொடர்ந்து குதிரை வீரர்கள் கையில் வேலோடு வருகிறார்கள். வந்தியத்தேவன் முகத்தில் ஆச்சரியமும், யோசனையும் கலந்து நிற்கிறது.

CUT

காட்சி 2ல் ஏரிக்கரையில் வந்தியத்தேவன் நிற்கும்போது தூரத்தில் வந்த படகுகளையும், ஒரு படகில் பல்லக்கு வந்ததும் இண்டர் கட்டாக வந்துபோகிறது.

CUT

தன்னைக் கடந்து தூரத்தில் செல்லும் பல்லக்கினையும், வீரர்களையும் ஏதோ யோசித்தபடியே வந்தியத்தவேன் பார்க்கிறான்.

CUT

குடுமித் தலையுடன் கூடிய ஆழ்வார்க்கடியான் எதிர்புறமாய் நின்று வந்தியத்தேவனை உற்றுப் பார்க்கிறான்.

ஆழ்வார்க்கடியான் தன்னை உற்று நோக்குவதை வந்தியத்தேவனும் கவனிக்கிறான். பின்னர் ஏதோ யோசனையுடன் வந்தியத்தேவன் தன் குதிரையில் ஏறி அமர்கிறான். குதிரையை இயக்க, அது மெல்ல வேகம் எடுக்கிறது.

CUT

வந்தியத்தேவன் குதிரையில் தூரமாய் சென்று மறைவதை ஆழ்வார்க்கடியான் உற்றுப்பார்த்துக்கொண்டே தன் தலையை மெல்ல ஆட்டுகிறான். அந்தப் பார்வையில் விஷமம் தெரிகிறது.

Vallavanukku Pullum Ayudham Vimarsanam 38%

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

கதையின் நாயகனாக சந்தானம் தூள்குழப்பியிருக்கும் படம்.

Tamil Screenplay

கதை

சிறையிலிருந்து வெளிவரும் சந்தானத்தின் இளைய தாய்மாமனை போட்டுத்தள்ளி, தானும் இறந்துபோகிறார் சந்தானத்தின் அப்பா. அப்போது சந்தானம் தொட்டில் குழந்தை. சந்தானத்தின் தந்தையால் வெட்டப்பட்டு இறந்துபோனவரின் அண்ணன் (மூத்த தாய்மாமன்), தன் தம்பியைக் கொன்றவனின் குடும்பத்தையே அழித்துவிடவேண்டும் என தன் இரண்டு குழந்தைகளோடு அருவாள் முனையில் சபதம் ஏற்கிறார். இனி இந்த ஊரில் இருந்தால் தன் மகனையும் கொன்றுவிடுவார்கள் என சந்தானத்தின் தாய் சென்னையில் குடியேறுகிறார்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு கதை உடனடியாக நகர்ந்துவிடுகிறது.

அதற்குள் அம்மாவும் இறந்துபோக, அநாதையான சந்தானம், இப்போது பழைய சைக்கிளில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளி. “இனி சைக்கிளில் சப்ளை செய்தால் உனக்கு வேலை இல்லை. உடனே ஒரு குட்டியானை வாங்கு” என முதலாளி சொல்ல, வேலை இழக்கும் சந்தானம் குட்டியானை வாங்குவதற்காக பணத்திற்கு அலைய, தான் பிறந்த ஊரில் தன் அப்பாவிற்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிற தகவல் வந்துசேர்கிறது. அந்த இடத்தை விற்பனை செய்வதற்காக தன் பிறந்த ஊருக்குச் செல்ல, இவரைப் பழிவாங்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் வில்லன் குடும்பத்தினரின் வீட்டுக்குள்ளேயே விபரீதமாக அடைக்கலமாகிறார்.

வீட்டில் அடைக்கலமாகியிருப்பது தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் பகையாளியின் மகன் என்கிற உண்மை வில்லன் கோஷ்டிகளுக்குத் தெரியவந்தாலும் அவர்களால் உடனடியாக சந்தானத்தைக் கொல்ல முடியவில்லை. காரணம்,

வில்லன் குடும்பத்திற்கென ஒரு கொள்கை இருக்கிறது. தன் வீட்டிற்குள் வைத்து யாரையும் இவர்கள் பழிவாங்குவது கிடையாது. வெட்டுக்குத்து, அடிதடி எல்லாம் வீட்டிற்கு வெளியேதான்.

வீட்டுவாசலைத் தாண்டினால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்கிற விஷயம் சந்தானத்திற்கு தெரியவர, அவரும் வாசலைத் தாண்டாதாவறு தகிடுதித்தங்கள் செய்து பிழைக்கிறார். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் வில்லனின் மகளுக்கு சந்தானத்தின் மீது காதல் பிறக்க, சந்தானம் பழிவாங்கப்பட்டாரா, காதலியை அடைந்தாரா என்பதை வழக்கமான தமிழ்ச் சினிமா இலக்கண விதிகளுக்கு மீறாமல் படம் காட்டியிருக்கிறார்கள்.

சில காட்சிகளில் மட்டுமே சந்தானம் சிரிக்க வைக்கிறார். சில காட்சிகளில் சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால், படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து முடிவுக் காட்சிவரை அடுக்கடுக்கான லாஜிக் இடர்பாடுகள் வந்து இம்சை படுத்துவதால், படத்தோடும் கதையோடும் ஒன்ற முடியவில்லை.

கதைக்குத் தேவையில்லாத டம்மிக் காட்சிகளே படத்தை அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள, சீரியஸான ஒரு கதைக்குள் காமடி எப்போது வரும் என்கிற மனநிலையோடு  ஏங்க வைக்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே சுற்றிச்சுற்றி வருவது, சந்தானத்தைக் கொல்ல எளிய வழிகள் இருக்கும்போது, அதற்காக வில்லன்கள் பெரிதாக மெனக்கெடுவது, இறுதிக் காட்சியில் அத்தனை அடிவாங்கிய பிறகும் வீறுகொண்டு எழுவது, நாயகியை முறைமாமன் எளிதாக விட்டுக்கொடுப்பது என நிறைய காட்சிகள் சலிப்பைக் கொடுக்கின்றன.

நாயகி ஆஸ்னா சாவேரி அழகாக இருக்கிறார். இறுதிக் காட்சியில் தன் திறமையை வெளிக்காட்டுகிறார். பின்னணி இசையும், பாடல்களும் சுமார் ரகத்திற்கும் கீழே. படத்தின் பிற கதை மாந்தர்கள் நாடக பாணியில் நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது (சக்தி, ரிச்சார்ட் நாதன்).மதிப்பெண்கள் 38%

 

Ponniyin Selvan Screenplay – Ponniyin Selvan Thiraikathai – Scene 3

பொன்னியின் செல்வன்

கதை,வசனம் : கல்கி

திரைக்கதை,வசனம் : தென்னாடன்

kunthavai

காட்சி 3

பகல்/உள் மற்றும் வெளி

Day/Int and Ext

பெரியதாக காட்சியளிக்கிற பத்துக்கும் மேற்பட்ட மாளிகைகளும், அழங்காரங்களைச் சுமந்து நிற்கும் சில அரண்மனைகளும் தூரமாய் தெரிகின்றன.

திரையில்

பழையாறை நகரம்

என்கிற எழுத்து தோன்றி மறைகிறது.

ஓர் அரண்மனையின் தோற்றம். அரண்மனை மேற்பகுதியில் புலிக்கொடி காற்றில் வீரியமாகப் பறந்துகொண்டிருக்கிறது.

CUT

மக்கள் ஆங்காங்கே தெருக்களில் ஊடாடும் காட்சிகள்.

ஒரு சந்தைப் பகுதி.

காய்கறிகளும், பழங்களும், மண்பாண்டங்களும், தின்பண்டங்களும், இதரப் பொருட்களும் கூவிக் கூவி விற்கப்படுவதும், வாங்கப்படுவதும்.

CUT

மீண்டும் அரண்மனையின் தோற்றம்.

அரண்மனையின் வாயில்.

அங்கே காவலுக்கு நிற்கும் வீரர்கள்.

அரண்மனையின் விதவிதமான அழகு அறைகள், மண்டபங்கள், வேலையாட்கள் ஊடாடுதல், பணிப்பெண்கள் ஊடாடுதல், போர் வீரர்கள் ஒரு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருத்தல் என இன்னும் பல தொகுப்புக் காட்சிகள் பின்னணி இசையோடு.

CUT

அரண்மனையின் மேல்மாடம்.

செம்பியன் மாதேவி (நெற்றி நிறைய திருநீர் பூசியிருக்கிறார். கழுத்தில் உத்திராட்ச மாலைகள். தோற்றத்தில் மூப்பு தெரிகிறது) தூரத்தில் எதையோ பார்த்துக்கொண்டிருக்கும் குந்தவையை நோக்கி வருகிறார்.

(குந்தவை இக்கதையின் நாயகி. மிக அழகாக, இளமையாக இருக்கிறாள். இளவரசியின் தோற்றத்தில் இருக்கிறாள்)

குந்தவையின் முன்னே வந்து நிற்கிறார் செம்பியன் மாதேவி.

குந்தவையின் முகத்தில் குழப்பமும், யோசனையும் தெரிகிறது.

செம்பியன் மாதேவி குந்தவையின் தோள்களில் தன் வலதுகையை வைக்கிறார்.

குந்தவை அவரைப் பார்க்கிறாள்.

செம்பியன் மாதேவி : ‘‘என்ன நடந்துவிட்டது என்று இப்படிக் குழம்பியபடியே யோசித்துக்கொண்டிருக்கிறாய்? எத்தனையோ போர்களைக் கண்டவர்கள் நம் சோழத்து வீரர்கள். உன் அண்ணன் ஆதித்த கரிகாலனாகட்டும், உன் தம்பி அருள்மொழிவர்மனாகட்டும் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள்.”

குந்தவை செம்பியன் மாதேவியைப் பார்க்கிறாள்.

குந்தவை :  ‘‘என் சிந்தனை பலவாறாக குழம்பியிருப்பது உண்மைதான். சண்டை என்றால் மோதிப்பார்த்துவிடும் துணிவு இருக்கிறது. பகைவர்களை வெற்றிகொள்ளும் சக்தியும் இருக்கிறது. இங்கே நடந்துகொண்டிருப்பது சதியல்லவா?’’

பேசியபடியே மெல்ல வேறு இடம்நோக்கி நகர்கிறாள்.

அவள் நகர்ந்த இடம் நோக்கி செம்பியன் மாதேவியும் நகர்ந்துபோகிறார்.

செம்பியன் மாதேவி : ‘‘சண்டையில் தோற்று ராஜ்ஜியத்தை இழந்தவர்களைவிட சதியால் வீழ்ந்து ராஜ்ஜியத்தை இழந்துபோன அரசுகளே அதிகம் என்பதை நானும் அறிவேன். இந்தமாதிரி நேரங்களில் நாம் பதற்றப்படக்கூடாது. முக்கியமாக நீ பதற்றப்படக்கூடாது. மிகப்பெரிய சோழ ராஜ்ஜியத்தின் இளவரசி நீ’’

குந்தவை செம்பியன் மாதேவியைப் பார்க்கிறாள்.

குந்தவை : “தந்தை சுந்தரசோழர் தஞ்சை மாநகரத்தில். மகள் நானோ இந்தப் பழையாறில். அண்ணன் ஆதித்த கரிகாலன் காஞ்சி நகரத்தில். தம்பி அருள்மொழிவர்மன் இலங்கை போர் முனையில். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பேசி, மகிழ்வாய் இருந்து எத்தனை நாளாயிற்று. ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் ஆசையிலே நாங்கள் திசைக்கொருவராய் பிரிந்து, நிர்வாகத்தையும், ராஜ்ஜியத்தையும் கவனித்துக் கொள்வதாலேயே சதிகாரர்கள் சூழ்ச்சி செய்வதற்கு ஏதுவாய் போயிற்று. திட்டமிட்டே என் தந்தை தஞ்சை மாநகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அனைத்திற்கும் முடிவு கட்டுவேன்’’

செம்பியன் மாதேவி குந்தைவையைப் பார்த்து புன்னகைக்கிறார்.

குந்தவை : “ஏனம்மா புன்னகை?’’

செம்பியன் மாதேவி : “இப்போதெல்லாம் பழுவேட்டரையர்கள் உன்னைத்தான் எதிரியாக பாவிக்கிறார்களாம். உன் திட்டப்படியேதான் உன் தந்தையும், சகோதரன்களும் செயல்படுவதாகவும், இந்தச் சோழ ராஜ்ஜியமே உன் சொற்படிதான் நடக்கிறதாகவும் அவர்களுக்கு தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது. அரசு ஒற்றர்களைவிட சதிகாரர்களின் ஒற்றர்கள் திறமையாகவும் விரைவாகவும் பணியாற்றுகிறார்கள்’’

குந்தவை, செம்பியன் மாதேவியை யோசித்தபடியே பார்க்கிறாள்.

Tamil Cinema Business – Cinema Thozhil

சினிமாத் தொழில்!

பாலமுருகன்

நடப்புலக மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் முன்னணி வகிப்பதும், ஏனைய பொழுதுபோக்கு விஷயங்களைவிட அதிக நேசிப்பும், சுவாசிப்பும் கொண்டது சினிமா. சினிமாவை விரும்பாத மனிதர்கள் இன்றிருக்கும் ஆதிவாசிகள்போல் மிகக்குறைவு. மனிதர்களின் உள்ளக்கிடக்கைகளை  காட்சிப் படிவமாக கண்களால் காணச்செய்து, அதன்மூலம் உணர்வுகளைத் தூண்டி, இதயத்தின் மூலையில் தூங்கிக்கொண்டிருக்கும் நம் தேடுதல்களை உணர்ச்சியாகக் கொண்டுவருவதால்தான், ஏனைய பொழுது போக்கு விஷயங்களைவிட சினிமா மனிதர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

cinema thozhil copy

சினிமா பார்க்கும் ஒவ்வொரு மனிதனும் திரையில் தோன்றும் மாந்தர்களின் செய்கையை தம் செய்கையோடு ஒப்பிட்டு ஆனந்தமோ, அதிர்ச்சியோ, இன்பமோ, துன்பமோ, வருத்தமோ அடைந்துகொள்கிறான். இங்கே தம்மைப் பாதித்த, தமக்குப் பிடித்தமான, தாம் செய்த, வாய்ப்பு கிடைக்காமல் செய்ய மறந்த, விஷயங்களைத் திரையில் காணும் மனிதன், அதன்மூலம் தன் வாழ்வில் ஏதோ ஒன்றை அடைந்துவிட்டதைப் போன்ற உணர்வைப் பெற்று, ஆனந்தம்  அடைந்துகொள்கிறான். அப்படியான உணர்வைக் கொடுத்த சினிமாவை நல்ல சினிமா என்கிறான். இதில் முரண்பாடுகள் ஏற்படின் மோசமான சினிமா என முத்திரை பதிக்கிறான்.

வெகுஜனங்களுக்கு சினிமா என்பது பொழுதுபோக்கு விஷயமாக இருந்தாலும், அதன் தயாரிப்பாளருக்கு அது தொழில்.   இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஏனைய கலைஞர்களுக்கும் அது வேலை.  அந்தச் சினிமாவில் வணிகத் தொடர்புகளை மையப்படுத்தி செயல்படுபவர்களுக்கு அது ஒரு வியாபாரம். ஆக, பொழுதுபோக்கு அம்சமாகவும், தொழிலாகவும். வியாபாரமாகவும், வேலையாகவும் பல தளங்களில் செயல்படும் சினிமாக்கள், குறிப்பாகத் தமிழ்ச் சினிமாக்கள் பெரும்பாலும் தொடர்  தோல்விகளைத் தழுவி வருவது வேதனையான, வருந்தத்தக்க நிகழ்வு.

செய்த முதலீட்டை பல மடங்காக குறுகிய காலத்தில் திரும்பப் பெறுவது என்பது சினிமாத் தொழிலில் மட்டுமே சாத்தியம். உலகில் இப்படிப்பட்ட தொழில் வேறு எதுவுமில்லை. அப்படி இருக்குமானால் அது சூதாட்டமாகவோ, சட்டத்திற்குப் புறம்பான தொழிலாகவோதான் இருக்க முடியும். தரமான, நல்ல சினிமாவைத் தயாரித்து விற்பனை செய்யும் ஒருவருக்கு, அவர் செய்த முதலீடு அதிகபட்சம் முப்பது மடங்காகத் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு சினிமாவில் மட்டுமே இருக்கிறது. மூன்று கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட சினிமா, அதன் வாடிக்கையாளர்களான பார்வையாளர்களுக்குப் பிடித்துவிட்டால் அதன் வியாபாரம் தமிழ்நாட்டில் மட்டும் நாற்பது கோடியைத் தாண்டும். அதாவது மூன்று கோடி ரூபாய் முதலீடு. நாற்பது கோடி ரூபாய் வியாபாரம்.  லாப விகிதாச்சாரம் இப்படி அதிக அளவில் இருப்பதால்தான் பல புதிய தயாரிப்பாளர்கள் இத் தொழிலுக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

ஆனாலும், பெரும்பாலானவர்கள் இத் தொழிலில் தோல்வியைத்தான் தழுவுகின்றனர். ஏன்? சினிமாவைத் தொழிலாகப் பார்க்காமல், அதன்மூலம் எளிதாகப் பிரபலமடைந்துவிடலாம், பலரின் நட்பு கிடைக்கும், பெருமையாகப் பேசிக்கொள்ளலாம் என்கிற எதிர்பார்ப்பும் பலான இன்னபிற விஷயங்களை எளிதாக அடைந்துவிடலாம் என்கிற குருட்டுப் புத்தியும்தான் சினிமாவில் தோற்றுப் போகிறவர்களின் மறுபக்கமாக இருக்கிறது. அதாவது சினிமாவைத் தொழிலாகப் பார்க்காமல் சபல மனதோடு பார்ப்பதால் வந்த வினை.

எந்தத் தொழிலில் அதிக ரிஸ்க் இருக்கிறதோ அந்த தொழிலில்தான் லாபம் அதிகம் இருக்கும். இது சினிமாவுக்கு நன்றாகவே பொருந்தும். சினிமாவில் ரிஸ்க் என்பது பல கட்டங்களை உள்ளடக்கும். இந்தக் கட்டங்களை பின்னால் பார்ப்போம்.

இன்றைய நாளில் ஒரு சினிமாவைத் தயாரிப்பது என்பது மிகச் சவாலான விஷயம்தான். சவால் மட்டுமல்லாது பலரின் கூட்டு முயற்சியில்,  கடின உழைப்பில் உருவான ஒரு சினிமா ஏன் தோற்றுப்போகிறது என்பதற்கு,  அது பார்வையாளர்களுக்குப் பிடிக்கவில்லை என ஒற்றை வரியில் பதில் சொல்லிவிடலாம். ஆனால் அந்த ஒற்றை வரிக்குள் பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன என்பது தோல்வியை அலசி ஆராயும்போது தெரியும்.

வாடிக்கையாளர்களுக்கு பிடிக்காத எந்தத் தொழிலிலும், அதன் தயாரிப்பாளர் அல்லது தொழில் முனைவோன் வெற்றிபெறமுடியாது. ஆக, வாடிக்கையாளர்களைக் கவரவேண்டுமானால் உங்களின் படைப்பு அதாவது பொருள் தரமானதாக இருக்கவேண்டும். அப்படியானால், நீங்கள் தயாரிக்கும் சினிமாவும் தரமானதாக இருக்கவேண்டும். தரமான சினிமா ஒருபோதும் தோற்றுப்போகாது. அப்படியென்றால் நல்ல சினிமா தோற்றுப்போகுமா?  நல்ல சினிமாவுக்கும்,  தரமான சினிமாவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா?  நல்ல சினிமா யாருக்கு நல்ல சினிமாவாக அமைய வேண்டும்? தரமான சினிமா யாருக்குத் தரமானாதாக இருக்கவேண்டும்? இப்படியாக நல்ல சினிமா, தரமான சினிமா பற்றிய குழப்பங்களில் இன்றளவும் சினிமாவுலகம்  பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது. நாம் இந்த விஷயத்தில் நல்ல சினிமா, தரமான சினிமா இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்காமல் ஒரே அர்த்தத்தில் ஏற்றுக்கொள்வோம்.

ஆனால், இன்னொரு விஷயம் இருக்கிறது. அதுதான் வெற்றிச் சினிமா.

நம் சினிமா உலகம் வெற்றிபெற்ற படங்களையே நல்ல சினிமா என்று கொண்டாடுவதால் வந்த வினையே சினிமாவின் தரத்தை மதிப்பறிய முடியாமல் செய்துவிட்டது. ஏனென்றால்,  இன்று வெளியாகும்  நூறுபடங்களில் சராசரியாக 90 படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. பத்து படங்கள் மட்டுமே வெற்றியைக் கொடுக்கின்றன. இந்த பத்து படங்களில் மோசமான, தரமில்லாத இரண்டு படங்களும் வெற்றிபெற்றிருக்கும். தோல்வியடைந்த 90 படங்களில் ஒருசில தரமான படங்களும் இடம்பெற்றிருக்கும். இந்த முரண்பாடுகள்தான் சினிமா தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் புரியாத புதிராக குட்டையைக் குழப்பி, எப்படியான சினிமா எடுக்கவேண்டும் என்பதில் முடிவெடுக்க திராணியற்றவர்களாய் மாற்றிவிடுகிறது.

நல்ல, தரமான சினிமா என்பது பார்வையாளர்களை திருப்திபடுத்தியிருக்கவேண்டும், தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தைக் கொடுத்திருக்கவேண்டும். அப்போதுதான் அந்தச் சினிமா வெற்றிச் சினிமாவாகப் பார்க்கப்படுகிறது. அது சரியா தவறா என்பதையும் பின்னால் பார்ப்போம். ஏனென்றால்,     பார்வையாளர்களைத் திருப்திபடுத்திய,  சில நல்ல சினிமாக்கள் வியாபார ரீதியில் தோற்பதும் உண்டு.
(தொடரும்)

Tamil Screenplay – Tamil Thiraikathaikal – Niram Marum Mugangal – Scene 3

நிறம் மாறும் முகங்கள்

திரைக்கதை

(தொலைக்காட்சி நெடுந்தொடருக்கானது)

காட்சி 3
DAY / INT / EXTN

சந்திராவின் வீடு.
சோபாவில் அமர்ந்தபடியே சந்திரா அழுதுகொண்டிருக்கிறாள்.
சந்திராவின் மாமியார், தன் மகனும் சந்திராவின் கணவருமான சேகரிடம்  செல்போனில்  பேசிக்கொண்டிருக்கிறார். பெயர் பார்வதி அம்மாள். வயது 60.

பார்வதி அம்மாள் – ‘‘எல்லா எடத்துலேயும் தேடியாச்சி…கணேசன காணோம்…நீ உடனே வீட்டுக்கு கௌம்பி வா….ஸ்டேஷன் வரைக்கும் போய் எதுக்கும் ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுத்துறலாம்….லேட் பண்ண வேண்டாம்….எனக்கு பயமா இருக்குப்பா….’’

சேகர்குரல் – ‘‘பக்கத்து வீட்டு இன்ஸ்பெக்டரும் அதைத்தான் சொன்னாரு…அம்மா…நான் வீட்டுக்கு வந்து….. அப்புறமா போலீஸ் ஸ்டேஷன் கௌம்பறதுக்கு எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் ஆகும்…… ஒன்னு பண்ணுங்க நீங்களும் சந்திராவும் ஸ்டேசனுக்கு வந்துருங்க…நான் ஆபிஸ்லேர்ந்து நேரா அங்க வந்துர்றேன்…சந்திராகிட்ட சண்டை ஏதும் போடாதீங்க…கணேசனுக்கு ஒன்னும் ஆயிருக்காது….போனை சந்திராகிட்ட குடுங்க…’’ (குரலில் பதட்டம், வேகம்)

பார்வதி அம்மாள் சோபாவில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் சந்திராவைப் பார்க்கிறார்…
சந்திராவை நோக்கி நடந்துவருகிறார். போனை சந்திராவை நோக்கி நீட்டுகிறார்…

பார்வதி அம்மாள் – ‘‘ஏய்…ந்தா….உங்கிட்ட பேசணுங்கறான்….’’

சந்திரா போனை மாமியாரிடமிருந்து வாங்குகிறாள். போனை காதில் வைக்கிறாள்.

சேகர் குரல் – ‘‘ஏண்டி….மத்தியானம் தூங்காதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது. நாலு மணிக்கு ஸ்கூல் விடும்னு தெரியும்…மூணு மணிக்கே ஆட்டோக்காரர் வந்துடுறாரு…..அவரு வரும்போது நீ ரெடியா இருக்கவேண்டாம்..மெதுவா எழுந்திருச்சி முகம் கழுவி, பவுடர் பூசி புதுப்பொண்ணு மாதிரி அலங்கரிச்சிக்கிட்டு…அதுக்கு அப்புறம் நீ கௌம்பிப் போறது எனக்கு தெரியாதுன்னு நெனைக்கிறியா…செய்யறதெல்லாம் நீ செஞ்சிட்டு ஆட்டோக்காரர் மேல பழி போட மனசு எப்படித்தான் வருதோ….அம்மாவ கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன் வந்துரு….நான் கால் மணி நேரத்துல அங்க இருப்பேன்…’’ (குரலில் அதட்டல், எரிச்சல்)

போன் கட் செய்யப்படும் சத்தம் கேட்கிறது.
சந்திராவும் போனை கட் செய்துவிட்டு தன் மாமியாரை முறைத்துப் பார்க்கிறாள்.
பார்வதி அம்மாளும் பதிலுக்கு முறைத்தபடியே…

பார்வதி அம்மாள் – ‘‘இந்த மொறைக்கற வேலையெல்லாம் வேண்டாம்….அவங்கிட்ட நீ தூங்கற விஷயத்தை நான் சொல்லவேயில்ல…’’

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது…சந்திரா முகத்தைத் துடைத்தபடியே ஒருவித அச்சத்துடன் போய் கதவைத் திறக்கிறாள். கதவுக்கு வெளியே வாணி நிற்கிறாள்..
வாணி உள்ளே பதட்டத்தோடு நுழைந்தபடியே…

வாணி – ‘‘சந்திரா…என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன்..அவரும் நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெய்ன்ட்ட குடுத்திரச் சொல்லிட்டாரு…கமிஷனர் ஆபிஸ்லேயிருந்து இந்நேரம் நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு போன் போயிருக்கும்….நீ ஒன்னும் கவலப்படாத…போலீஸ் டிபார்ட்மென்ட்ட பொருத்தவரைக்கும் எல்லா இடத்துலேயும் என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க…எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துல உம் பையன கண்டுபிடிச்சிருவாங்க…’’

வாணி பேசுவதை பார்வதி அம்மாள் கவனிக்கிறாள்.
பின்னர் சந்திராவை பார்க்கிறார்.

பார்வதி அம்மாள் – ‘‘ஏய்…நீகௌம்புறியா…இல்ல வாணிய கூட்டிட்டு நான் ஸ்டேஷன் கௌம்பட்டுமா…’’

பார்வதி அம்மா சந்திராவை இப்படி பேசுவதை வாணி பார்க்கிறாள்.

வாணி – ‘‘அம்மா…அவளே மகனக் காணோம்ன்னு பதட்டத்துல இருக்கா…இந் நேரத்துல உங்க சண்டைய வச்சிக்க வேண்டாம்…மொதல்ல கௌம்பற வழியப் பாருங்க…’’ (கெஞ்சல், அவசரம்)

சந்திரா வாணியைப் பார்க்கிறாள்.

சந்திரா – ‘‘வாணி…நீயும் வாயேன்…எனக்கு போலீஸ் ஸ்டேஷன்னாலேயே ஒரு மாதிரி இருக்கு…’’

அழுதபடியே பேசுகிறாள்…

வாணி – ‘‘உங்கள கூட்டிட்டுப் போறதுக்குத்தான் வந்திருக்கேன்..என் வீட்டுக்காரரும் ஸ்டேஷனுக்கு வந்துர்றேன்னு சொல்லியிருக்காரு..உன் வீட்டுக்காரர்கிட்டே பேசிட்டாரு….சீக்கிரம் கௌம்புங்க…’’

மூவரும் புறப்படுகின்றனர்.
சாவித்திரி வீட்டைப் பூட்டுகிறாள்.
வெளியே ஆட்டோக்காரர் தயாராக நிற்கிறார்.
மூவரும் ஆட்டோவில் ஏறி அமர்கின்றனர்.
ஆட்டோக்காரர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்கிறார்.
ஆட்டோ புறப்பட்டுச் செல்கிறது.

(தொடரும்)

Thenali Raman Vimarsanam – Review – 36%

தெனாலிராமன் விமர்சனம் 36%

 Thenali Raman Vimarsanam – Review – 36%

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம்.

நகைச்சுவைக்கு இவரை விட்டால் ஆள் இல்லை என கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவை தன் உடல்மொழியால் கவர்ந்து, கட்டிப்போட்டு வைத்திருந்த வடிவேலு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடுத்த முடிவால், தமிழ்ச் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்டவர், அரசியலைத் துறந்து சகஜநிலைக்கு வருவதற்குள், அவரின் திரைத்துறை சகாப்தத்தில் மூன்று ஆண்டுகள் காணாமல் போயிற்று. ஒருவழியாக, ‘தெனாலிராமன்’ மூலம் மறுபிரவேஷம் செய்திருக்கிறார். அதுவும் கதையின் நாயகனாக.

 

‘தெனாலிராமன்’ என தலைப்பு வைத்தாலும், படத்திற்குள் நவீன தெனாலிராமனை இன்றைய காலத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் காட்டியிருப்பார்கள் என்கிற நமது கற்பனையை எடுத்த எடுப்பிலேயே அறுத்து எறிந்துவிடுகிறார் இயக்குநர் யுவராஜ். முழுக்க முழுக்க அந்தக் காலத்துக் கதைதான். அதுவும், தென்னிந்திய வரலாற்றுக் கதைகளில் பிரதான இடம்பெற்ற அமைச்சர் தெனாலிராமன் கதையை, அந்தக் காலத்தில் நடப்பதுபோலவே காட்டியிருக்கிறார்கள். எனவே, அக்மார்க் வரலாற்றுப் படம்.

வடிவேலுக்கு இதில் இரட்டை வேடம். ஒருவர் நாடாளும் அரசனாக. மற்றொருவர் நாவண்மை, வீரம், அறிவு படைத்த அமைச்சராக.

விகட நகரம் என்கிற நாட்டை ஆள்கிற அரசர் வடிவேலுவின் மந்திரி சபையில் ஒன்பது பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சீனாவிலிருந்து வருகிற வியாபாரிகள் இந்த விகடநகரத்தில் வணிகம் செய்ய நினைக்க, ஒன்பது அமைச்சர்களில் ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்ற எட்டுபேரும் சீன வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, வியாபாரத்தைத் தொடங்க அனுமதி கொடுக்கின்றனர். எனவே, எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் மட்டும் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் அரசராக இருக்கிற வடிவேலுக்குத் தெரியாது. தன் அமைச்சர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். கொல்லப்பட்ட அமைச்சரின் மரணம் இயற்கையானது என மற்ற எட்டு அமைச்சர்களும் அரசர் வடிவேலுவிடம் தெரிவிக்க, அவரும் நம்பிவிடுகிறார்.

இப்போது கொல்லப்பட்ட அமைச்சருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற எட்டு அமைச்சர்களும் தங்களோடு ஒத்துழைக்கிற ஒருவரை இரகசியமாகத் தேர்வு செய்யும்பொருட்டு திட்டமிடுகின்றனர். ஆனால், அதே தேர்வுக்காக வரும் இரண்டாவது வடிவேலுவின் சாமர்த்தியத்தால் அந்த நபர் தேர்வில் தோற்றுப்போக, இரண்டாவது வடிவேலு அமைச்சராகிவிடுகிறார். அதாவது, அரசர் வடிவேலுவின் அமைச்சரவையில் இன்னொரு வடிவேலு. ஆக, இரண்டு வடிவேல்களும் சேர்ந்து நம் வயிற்றைப் பதம்பார்க்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நம்மை அப்பிக்கொள்கிறது.

அமைச்சரவையில் இடம்பெற்ற வடிவேலு நாவண்மை மிக்கவர். அதி புத்திசாலி. இவர் அமைச்சரவைக்குள் இடம்பெற்றதன் நோக்கம் அரசர் வடிவேலுவைக் கொல்லவேண்டும் என்பதற்காகத்தான். காரணம், அரசருக்கு நாட்டை ஆளத் தெரிவில்லை. மக்கள் அனைவரும் பஞ்சம், பசி, பட்டினியோடு வாழ்ந்துவருகிறார்கள். அரசரைக் கொன்றால் மட்டுமே மக்கள் விமோசனம் பெறுவார்கள் என்பது இவரின் திட்டம். இதற்கு பின்புலமாக போராளிக் கூட்டம் ஒன்று செயல்பட, அவர்களின் தூதுவனாகவே அமைச்சர் வடிவேலு அரண்மனைக்குள் நுழைந்திருக்கிறார் என்பதை அவ்வப்போது நமக்கு காட்டுகிறார்கள்.

அரசரைக் கொல்வதற்காக அமைச்சர் பொறுப்பேற்று வந்திருக்கும் வடிவேலுக்கு விரைவில் உண்மை தெரியவருகிறது. அரசர் நல்லவரே, எட்டு அமைச்சர்களும்தான் கெட்டவர்கள். எனவே, எட்டு அமைச்சர்களையும் அரசரிடமிருந்து நீக்கிவிட்டால், நாடு சுபிட்சமாகிவிடும் என்பதை உணர்கிறார் அமைச்சர் வடிவேலு.

ஆனால், எட்டு அமைச்சர்களும் வடிவேலுவை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியத் திட்டம் போடுகிறார்கள். அந்த திட்டம் வெற்றிபெறுகிறது. அமைச்சர் வடிவேலு தன் பதவியை  இழக்கிறார். என்றாலும், அரசர் வடிவேலுவுக்கு அமைச்சர் வடிவேலுவின் நடவடிக்கைகள் பிடித்துப் போனதால், தனிப்பட்ட முறையில் அவரைச் சந்திக்கிறார். அப்போது மற்ற எட்டு அமைச்சர்களின் போலித்தனங்களைச் சொல்கிறார் அமைச்சர் வடிவேலு.

உண்மையைப் புரிந்துகொண்ட அரசர் வடிவேலு, அமைச்சர் வடிவேலுவை தற்காலிக அரசராக்கிவிட்டு, வேறு நாட்டுக்கு சுற்றுலா செல்கிறேன் என மக்களை நம்பவைத்து, பத்து நாட்கள் மாறுவேடத்தில் நகரத்தில் உலாவர, மக்கள் படும் துயரங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்கிறார். இந்த பத்துநாளில் மற்ற எட்டு அமைச்சர்களும் சீன வியாபாரிகளோடு சேர்ந்து அரசரைக் கொல்லத் திட்டம் போடுகின்றனர். அவர்களின் திட்டத்தை முறியடிக்கிறார் அமைச்சரும் தற்காலி அரசருமான வடிவேலு. இப்படியாக கதை முடிந்துபோகிறது.

Thenaliraman 3

இனி விமர்சனத்திற்கு வருவோம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலு படம் வந்திருப்பதால், நகைச்சுவையை மையப்படுத்தி வயிற்றைப் புண்ணாக்கும் காட்சிகளோடு கதையைச் சொல்லியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு திரையரங்குக்குள் நுழையும்போதே நமக்கு வந்துவிடுகிறது. அதுபோக, திரைப்படத்தின் சுவரொட்டிகளிலும், விளம்பரப் பதாகைகளிலும் காணப்படும் காட்சிகளும் அப்படியான கற்பனையை நமக்குள் ஊற்றெடுக்க வைத்துவிடுவதால், பரபரப்புடன் இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்கத் தூண்டப்படுகிறோம். ஆனால்….

ஆனால், அடுத்த பத்து நிமிடங்களுக்குள் ஏமாற்றத்திற்கான முதல் அறிகுறி நம் முகத்தில் ஈயாட….அடுத்த பத்துநிமிடத்தில் சிரிக்க வைப்பார் வைப்பார் வைப்பார் வைப்பார் என நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்துக்கொண்டே இருக்க, இடைவேளை வந்து படமும் முடிந்துவிடுகிறது.

இம்சை அரசன் 23ம் புலிகேசியின் சாயல் தெனாலிராமனிலும் பல இடங்களில் வந்துபோகிறது. திரைக்கதை உத்தியும் அதே சாயல்தான். ஆனால், புலிகேசியில் இருந்த பாய்ச்சல் இங்கே காணப்படவில்லை. காரணம், புலிகேசியின் திரைக்கதை புதிதாக எழுதப்பட்டது. தெனாலிராமனின் திரைக்கதை பிரதி எடுக்கப்பட்டு சற்றே மாற்றி அமைக்கப்பட்டது.

வடிவேலுவின் பல படங்களில் வயிறு வலிக்கச் சிரிக்கும் குழந்தைகள் இந்தப் படத்தில் தூங்கிப் போகிறார்கள். காரணம், கதைக் களங்களை அமைத்த அளவிற்கு, கதையின் போக்கில் சுவராஸ்யத்தை உருவாக்கத் தவறிவிட்டார்கள்.

மகள், காதலி என இரண்டுவேடத்தில்  அரசர் வடிவேலுக்கும், அமைச்சர் வடிவேலுக்கும் ஒரே நாயகியாக மீனாட்சி தீட்சித். ஊறுகாய் தயாரிப்பில் பெரிதாக என்ன திறமைகாட்டிவிடமுடியும்? அதைத்தான் செய்திருக்கிறார் மீனாட்சி தீட்சீத்.

அந்நிய முதலீடு நாட்டிற்குள் நுழைவதால் உள்நாட்டு வணிகர்களும், மக்களும் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான திரைக்கதையை அமைத்துவிட்டு, அதை நகைச்சுவை படமாக்க முயன்றிருப்பதால், முரண்பாடான கதைக்களத்தோடு ஒன்ற முடியாமல் சிதைந்துவிடுகின்றன காட்சி அமைப்புகள்.

பானைக்குள் யானை நுழைவது, எல்லாம் நன்மைக்கே போன்ற காட்சிகள் அரதப் பழசு இரகங்கள். அவற்றிற்குப் பதிலாக இன்றைய காலத்திற்கேற்ப மாற்று உத்திகளை யோசித்து திரைக்கதையாக்கியிருக்கலாம்.

திரைப்படங்கள் மிகச் சிறந்த காட்சி ஊடகங்கள். எழுத்தில் வடிக்க முடியாத பல அற்புதங்களை காட்சிவழியாக எளிதாகச் சொல்லிவிடமுடியும். அதனால்தான், மொக்கை ஜோக்குகளைகூட காட்சிவழியே சொல்லும்போது, விழுந்து விழுந்து சிரிப்பார்கள் பார்வையாளர்கள். அந்த வித்தையைக் மெத்தக் கற்ற வடிவேலு, தெனாலிராமனில் கோட்டைவிட்டிருப்பது, அவரது இயலாமையா, பலவீனமா, அறியாமையா அல்லது அகங்காரமா? அவருக்கே வெளிச்சம்.

படத்தின் இயக்குநர் யுவராஜ். இவரின் முந்தைய படம் ‘பட்டா பட்டி’. கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, அத்தனை அற்புதமாக கதைசொல்லியிருப்பார். இந்தப் படத்தில் அவரின் திறமை மழுங்கடிக்கப்பட்டதற்கு, ‘’எனக்கு எல்லாம் தெரியும். நான் சொல்கிறபடி காட்சியை வை’’ என்ற வடிவேலுவின் அசட்டுத் தைரியமும் காரணமாக இருந்திருக்கலாம்.

படத்திற்கு நிறைய செலவிட்டிருக்கிறார்கள். நிறைய உழைத்திருக்கிறார்கள். யாருக்காக இதையெல்லாம் செய்கிறோம் என்பதையும் மனதில் நினைத்திருந்தால், தெனாலிராமன் புலிகேசியை தோற்கடித்திருப்பான். இங்கே, தோற்றுவிட்டான்.

மதிப்பெண்கள் 36%

Naan Sigappu Manithan Vimarsanam 40%

Naan Sigappu Manithan Vimarsanam

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

naan sigappu manithan

அதிர்ச்சியான விஷயங்களைக் கேட்டவுடன் தூங்கிப் போகும் ஒருவனின் கதை.

தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்கிற விஷாலுக்கு, ஏதாவது அசம்பாவிதமான சத்தம் திடீரென காதில் கேட்டால், உடனே தூங்கிப்போகிற வியாதி. அப்படித் தூங்கிப் போகிற நேரத்தில், தன் எதிரே, தன் அருகே இருப்பவர்கள் பேசுகிற பேச்சையும், எழுகிற சத்தங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, கண் விழித்தவுடன் அவற்றை நினைவுகூறும் அபூர்வ வியாதி அது.

படிப்பில் கெட்டிக்காரத்தனத்துடன் விளங்குகிற விஷாலுக்கு, இந்த வியாதி பெரும் சிக்கலை தோற்றுவிக்கிறது. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு நிறுவனமும் வேலை கொடுக்க முன்வரவில்லை.

எந்நேரமும் தூக்கம் வரலாம் என்பதால், தாய் சரண்யா இவரை தனியாக எங்கும் அனுப்புவதில்லை. நன்றாகப் படித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்கிற விஷாலை, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிப் பிரிவுக்கு அழைக்கிறார்கள். அதற்காக 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்கிறார் விஷால். அவர்களும் ஓ.கே சொல்ல, தனக்கு இருக்கும் நோயின் தன்மை உணர்த்தும் ஆராய்ச்சி மாணவராக, தன்னை மற்றவர்கள் பயன்படுத்தும் நோக்கில் கணிசமான தொகையை மாதம் தோறும் சம்பாதிக்கத் தொடங்குகிறார்.

விசித்திர நோயுடன் வாழ்கிற விஷாலுக்கு பத்து ஆசைகள் இருக்கின்றன. அந்த பத்து ஆசைகளும் மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், அவரின் கோணத்தில் அந்த ஆசைகள் அனைத்தும் சவாலானவைகள்.

விஷாலின் பத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிற ஒரு பெண்ணாக லட்சுமி மேனன் இவரின் வாழ்க்கையில் குறுக்கிட, அந்தப் பெண்ணுக்கும் இவருக்குமான உறவு நட்பாகி, காதலாகி கசிந்துருகும்போது, வழக்கமான பாணியில் இடைவேளை வந்துவிடுகிறது. அதன்பிறகு…….

அதன்பிறகு உட்டாலங்கடி கிரி கிரியாக நீங்கள் பார்ப்பது அக்மார்க் தமிழ்ச் சினிமா.

இனி விமர்சனத்திற்கு வருவோம்.

பீர் குடித்தவன் போதை பத்தவில்லை என்பதால் பாதி போதையில் பிராந்திக்கு மாறி வாந்தி எடுக்க, இருக்கிற போதையும் போய்த் தொலைந்து, எரிச்சலில் கொண்டுபோய்விடுகிறது. இதைத்தான் செய்துகாட்டியிருக்கிறார் ‘நான் சிகப்பு மனிதன்’ இயக்குநர் திரு.

விசித்திர நோயுடன் வாழ்கிற உத்தம நாயகனுக்கு, அவன் மனம் விரும்பியபடியே காதலியாய் மனைவி கிடைக்கிறாள். அதுவும் செல்வச் செழிப்போடு. அழகான காதல் கதையை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் என ஆச்சரியுடத்துடன் புருவங்கள் உயர்த்தும்போது, நானும் விதிவிலக்கு அல்ல என்பதை நிரூபித்து, நம்மை புருவங்களை இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்து, அவ்வப்போது பார்வையை வேறுபக்கம் திரும்ப வைக்கிறார்.

முன்பாதியில் நாயகனுக்கும், நாயகிக்கும் வாழ்வியல் ரீதியாக எழும் முரண்பாடுகளைக் கொண்டே மீதிக் கதையை நகர்த்திச் செல்லும் திரைக்கதை உத்திகள் ஏராளமாக இருந்தும், இடைவேளைக்குப் பிறகு பாதை மாறியிருப்பது, அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு, முருகன் கோவிலில் மொட்டையடித்த கதையாக இருக்கிறது.

நம் தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று. மையப் புள்ளியாக விளங்கும் கதை எதுவோ, அதிலிருந்து விலகிச் சென்று வித்தியாசம் காட்டி நம் திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற வறட்டுப் பந்தாவுக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ மேலும் ஓர் உதாரணம்.

வளமான ஒளிப்பதிவு, குறைசொல்ல முடியாத பின்னணி இசை, ஜெயப்பிரகாஷ், சரண்யா மற்றும் சக நடிகர்களின் கச்சிதமான நடிப்பு என பல விஷயங்கள் குறைசொல்ல முடியாத அளவிற்கு இருந்தாலும், பிரதான சாலையில் ஜரூராகப் போய்க்கொண்டிருந்த பென்ஸ் காரை முட்டுச் சந்துக்குள் நுழையவிட்டு பஞ்சராக்கிய கதையாக, இடைவேளைக்குப் பின்னான திரைக்கதை உத்தி, மொத்த படத்தையும் கீழே தள்ளி சாய்க்கிறது.

மதிப்பெண்கள் 40%

உளுந்தூர்பேட்டையில் ஒரு கல்யாணம் – சிறுகதை-

உளுந்தூர்பேட்டையில் ஒரு கல்யாணம்!

தமிழ் சிறுகதை

பாலமுருகன்

tamil screenplay format

tamil thiraikathai sample, tamil screenplay

மறுக்க முடியாத சில பயணங்களில் மறக்க முடியாத நிகழ்வுகள் பலருக்கும் நடந்திருக்கும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. எனக்கு என்று சொல்வதைவிட எங்களுக்கு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

கடந்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது ( துணிகளை துவைப்பது அன்றுதான்), ‘ஏங்க போன் அடிக்குது‘ என்றபடியே அருமை மனைவி அழைத்தாள். ஒரு கையில் சோப்பும் இன்னொரு கையில் நுரையுமாக பாத்ரூமிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, ஓடிப்போய் செல்போனை எடுத்துப் பார்ப்பதற்குள் அது தவறிய அழைப்பாக இருந்தது. மெனுவிற்குள் சென்று மிஸ்டுகால் யார் பார்த்தேன். நண்பர் கவிராஜா அழைத்திருந்தார். இடதுகையிலிருந்த சோப்புக் கட்டியை ஓரமாக வைத்துவிட்டு, நுரைபடிந்த வலது கையை லுங்கியில் தேய்த்துவிட்டு, எனது போனிலிருந்து கவி ராஜாவுக்கு அழைப்பு விடுத்தேன்.

 

“என்ன சார் பிஸியா இருக்கீங்களா?“ என்று நலம் விசாரித்தபடியே, “எட்டாம் தேதி கல்யாணம் வச்சிருக்கேன்..மறக்காம வந்துருங்க…ரிஷி சார்கிட்ட உங்களோட பத்திரிகையை கொடுத்திருக்கேன்…வாங்கிக்கோங்க…நேர்ல வந்து பத்திரிகை வைக்கறதுக்கு டைம் இல்லே…ஸாரி சார்…“என்று அவசரகதியில் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார் கவி.

யாருக்கு கல்யாணம் வைத்திருக்கிறார்? சின்ன குழப்பம். மிஸ்டர் ரிஷிக்கு அடுத்த அழைப்பு என் செல்போன் வழியே பறந்தது. ரிங் போவதற்கு முன்னே போனை எடுக்கும் ஒரே நபர் இவர்தான். அதற்கான சூட்சுமம் இன்றளவும் எனக்கு பிடிபடவில்லை.
“சார் நான் பாலா பேசறேன்”

”அதான் நம்பர் பாத்தாலே தெரியுதே…அப்புறம் எதுக்கு பாலா பேசறேன் டயலாக்….நேரே விஷயத்துக்கு வாங்க…பிஸியா இருக்கேன்’’ என்ற ரிஷியின் வார்த்தைகளில் நக்கல் கலந்த நையாண்டி ஒலித்தது. ரிஷி எப்பவும் இப்படித்தான்…வெட்டியாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் அவரிடம் பேசும்போது நேராக விஷயத்திற்குச் சென்றுவிடவேண்டும்.

“கவி போன் பண்ணார்… கல்யாணம் வச்சிருக்கேன்…வந்துருங்கன்னு சொன்னார்…உங்ககிட்ட பத்திரிகை கொடுத்திருக்கிறதாவும் சொன்னார்…“ நான் பேசி முடிப்பதற்கு முன்பாகவே ரிஷி ஆரம்பித்தார்.

“தெரிஞ்சவங்களுக்கெல்லாம் வச்சிருங்கன்னு மொத்தம் பத்து பத்திரிகை கொடுத்துட்டுப் போனார்…அவருக்குத் தெரிஞ்சவங்களா…எனக்குத் தெரிஞ்சவங்களான்னு சொல்லலை..இப்போ அதுக்கு என்ன?” அதட்டலாகவே சொன்னார்.

“சார் அதுல ஒரு பத்திரிகை எனக்கானது…மிஸ் பண்ணிராதீங்க…நேர்ல வந்து வாங்கிக்கறேன்…“ நான் சொல்லி முடிக்கவும், அருகிலில் நின்று நான் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்த மனைவி…“யாருக்கு கல்யாணம்?“ என்று கேட்டபோதுதான் எனக்கு மூளையில் எறும்பு கடித்தது… அதற்குள் ரிஷியின் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் நான் ரிஷியின் நம்பருக்கு டயலினேன். கடைசி எண்ணை அழுத்திமுடித்து காதில் போனை வைக்கவும்…ரிஷயின் குரல் கம்பீரமாய் ஒலித்தது.

“என்னங்க…வெட்டியா இருக்கீங்களா…இப்போ என்ன விஷயம்…டக்குன்னு சொல்லுங்க….எனக்கு நெறைய வேலை இருக்கு“ கணீரென்று அவர் குரல் ஒலித்தது.
“ஒன்னுமில்லே சார்…கல்யாணம் யாருக்குன்னு சொல்லவேயில்ல…?’’

“சரியாப்போச்சி…என்னங்க…. தண்ணிய கிண்ணிய போட்டுருக்கீங்களா…கல்யாணம் யாருக்குன்னே தெரியாம பத்திரிகை வாங்க வர்ற ஆளு நீங்கதாங்க…’’ என் கேள்வி அவரை கோபமடையச் செய்தாலும்…அவரின் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்பது அவருக்கும், எனக்கும் நன்றாகவே தெரியும்.

“சொல்லுங்க சார்…டென்ஷன் பண்ணாதீங்க…கல்யாணம் யாருக்கு?’’ என் கேள்வியின் நியாயத்தைப் புரிந்துகொண்டவர்போல் பதிலினார்.
“நம்ம கவிக்குத்தாங்க கல்யாணம்…என்னசார் நீங்க… ஒரு வருஷத்துக்கு முன்ன பேசினத அதுக்குள்ள மறந்துட்டீங்களே’’ என்று சிரித்தவர்…“போன வருஷமே நம்ம எல்லோர்கிட்டேயும் கவி சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்க…ஞாபகம் வரும்’’என்று மீண்டும் சிரித்தார்.

எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. “அப்படி என்ன சொன்னார்?’’ கேட்டேன்.

“இவன்தான் இயக்குநர் பட விஷயமா நாம எல்லோரும் ஆபிஸ்ல உக்காந்து பேசிட்டிருக்கும்போது…அடுத்த வருஷம் எனக்கு கல்யாணம் நடக்கலாமுன்னு கவி ஒரு முறை சொன்னார்ல…மறந்துபோச்சா?’’ ரிஷி தொடர்ந்து என்னை நக்கல் செய்துகொண்டே பேசினார்.

“ஓஓஓஓ….ஆமால்ல…நானும் மறந்தே போயிட்டேன் சார்…அப்போ அவருக்குத்தான் கல்யாணம்…சரி…சரி..சென்னையிலதான கல்யாணம்…போய் ஜமாய்ச்சிணுலாம்’’ என்று நான் சொன்னபோதே…..ரிஷி மீண்டும் ஒரு கோபத்திற்கு ஆயத்தமாகிவிட்டார்.

“என்னங்க…சின்ன புள்ள மாதிரி பேசறீங்க…நீங்க சென்னையில இருக்கீங்கங்கறதுக்காக உங்களுக்கு பத்திரிகை வைக்கறவங்களும் சென்னையிலதான் கல்யாணத்தை வச்சிக்கணுமா..நல்ல கதையா இருக்கே…உளூந்தூர்பேட்டையில கல்யாணம். ஏழாம் தேதி நைட்டே நாம எல்லோரும் கௌம்புறோம்…மொத்த செலவும் உங்களோடது…ஞாபகம் வச்சிக்கோங்க…“ டக்கென்று போனை கட் செய்துவிட்டார்.

காலண்டரில் தேதியையும், அதற்கான கூட்டுமானத்தையும் கணக்கிட்டதில் இன்னும் சரியாய் பதினைந்து நாட்கள்.

ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தும் (ஒரு காருடன் டிரைவர் கம் ஓனர்) நண்பன் புருஷோத்தமனுக்கு அடுத்த அழைப்பு விட்டேன்.

“சொல்லு பாலா…என்ன திடீர்ன்னு ஞாயிற்றுக் கெழமையில கால் பண்றே…“ புருஷிடமிருந்து அடுத்த நையாண்டி வந்தது.

“ஒன்னுமில்லே…ப்ரண்ட் ஒருத்தருக்கு உளூந்தூர்பேட்டையில கல்யாணம்’’

“அதுக்கு ரூட் சொல்லணுமா?’’

“இல்லடா…மொத்தம் எட்டுபேர் போறோம்…பஸ்ஸூல போய் வந்தா நல்லா இருக்காது…உன்னோட கார்ல போயிட்டு வந்துரலாமுன்னு முடிவு பண்ணிருக்கேன்’’     நான் பேசுவதின் அர்த்தம் புரிந்துவிட்டது அவனுக்கு.

“உன் வீட்ல நீயும் உன் ஒய்ஃபும்..மொத்தம் ரெண்டே பேர்தான. எட்டுபேருன்னு எப்படி சொல்றே…உன் தம்பி…அண்ணன் பேமிலியெல்லாம் வர்றாங்களா…மொத்த குடும்பமும் போற அளவுக்கு அப்டி என்ன முக்கியமான ப்ரண்ட் உனக்கு..எங்கிட்ட இது அவரை அறிமுகப்படுத்தவேயில்லியே! ’’புருஷ் ஆச்சரியக்குறியோடு கேட்க…
“பேமிலி ஃப்ரெண்ட்லாம் இல்லே…க்ரைம் டுடே பத்திரிகை ஆபிஸ் ஃப்ரெண்ட்…ஒர்க் பண்றவங்க எல்லோரும் போறோம்’’ நான் சொன்னபோது, புருஷ் சுதாரித்துக்கொண்டவனாய் கேட்டான்..

“ஓஓஓ..ஒரு முறை இவருதான் க்ரைம் டுடே பத்திரிகை ஆசிரியருன்னு கடா மீசைக்காரர் ஒருத்தரை அறிமுகப் படுத்தினியே..பேருகூட ரிஷின்னு நெனைக்கிறேன்’’ என்று எனக்கு இன்னொரு அறிமுகப்படுத்தல் தேவையில்லாமல் அவனே ஆச்சரியமாகிவிட்டபடியால், ஏழாம் தேதி இரவு, புருஷோத்தமனுடைய சைலோ காரில் (வித் ஏசி) டீசல் மட்டும் போட்டுக்கொண்டு, காருக்கு வாடகை தர முடியாது என்கிற நட்பின் ஒப்பந்த அடிப்படையில் எங்கள் குழுவினரின் பயணம் தீர்மானமாயிற்று.

மணித்துளிகள் கடந்தன. நாட்கள் பறந்தன…வாரங்கள் ஓடின…என்றெல்லாம் வசனங்கள் எழுதத் தேவையில்லாமல் ஏழாம் தேதி காலை வந்து நின்றது. நான் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பவேண்டும். அன்றைய அலுவல் பணிகளை முடித்துவிட்டு மாலை மூன்றுமணி வாக்கில் புருஷோத்தமனுக்கு போன் செய்தால், அவர் தன் சைலோ காரை ஓட்டிக்கொண்டு என் அலுவலகத்திற்கு வந்து, என்னை பிக்கப் செய்துவிட்டு, அப்படியே ரிஷியின் வீட்டிற்குச் சென்று மற்றவர்களை பிக்கப் செய்துகொண்டு, ஆறு மணிவாக்கில் உளூந்தூர்பேட்டை கிளம்பவேண்டும். இதுதான் அன்றைய புரோக்கிராம். ஆனால்…

ஆனால் கடைசி நேரத்தில் கார் காணல் நீராகிப்போனது.

“பாலா..ஸாரி பாலா…அர்ஜென்ட்டா ஒரு டியூட்டி…திருச்சிக்கு கிளம்பி போயிட்டேன்…நீ வேற கார் பாத்துக்கோ…”

அசால்ட்டாக சொல்லிவிட்டான் டிராவல்ஸ் அதிபர் புருஷோத்தமன். வேற கார் புக் பண்ணி போகத்தெரியாதா எனக்கு…டீசல் மட்டும் போட்டா போதும்ன்னு எவன் வருவான்? கார் கேன்சல் ஆகிப்போனதை ரிஷியிடம் எப்படிச் சொல்ல…கண்டிப்பா வார்த்தையால கொல்வாரு.
விஷயத்தை ரிஷியிடம் சொன்னபோது …“எனக்கு அன்னைக்கே தெரியும்…உங்க ஃப்ரெண்டப் பத்தி தெரியாதா…ஒரு காரை வச்சிக்கிட்டு டிராவல்ஸ் நடத்தறவன் வாக்கு இப்படித்தான் இருக்கும்….சரி வுடுங்க…இப்போ நாம எப்படியாவது போயாகணும்….அதுக்கு என்ன ஐடியான்னு யோசிங்க’’ தெளிவாகப் பேசினார்.. எனக்கு ஆறுதலாக இருந்தது.

பழைய திட்ட அறிக்கை கேன்சல் செய்யப்பட்டு புதிய அறிக்கை தயார்செய்யப்பட்டது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு கோயம்பேடு சென்று அங்கிருந்து…..

அங்கிருந்து பஸ்ல போகவேண்டியதுதான்….வேற வழி?

பேருந்துப் பயணம் என்றதும் எங்கள் குழுவின் எண்ணிக்கை எட்டிலிருத்து ஐந்தாகக் குறைந்துவிட்டது. ஒன்பது மணிக்கு முதல் ஆளாக நான் கோயம்பேடுக்குள் நுழைந்துவிட்டேன். ரிஷியும் மற்றவர்களும் பத்துமணிக்குத்தான் வருகைதந்தார்கள். விதவிதமான மக்களை உள்வாங்கிக்கொண்டிருந்த பேருந்து நிலையம் திருவிழாக்கூட்டம்போல் காட்சியளித்தது.

உளூந்தூர்பேட்டைக்கு என்று தனிப் பேரூந்துகள் இல்லை போலும்! திருச்சி செல்லும் வண்டியில் ஏறி, உளுந்தூர்பேட்டையில் இறங்கிக்கொள்ளவேண்டும். ஆனால், திருச்சி வண்டியில் உளுந்தூர்பேட்டைக்கு ஆள் ஏற்ற மாட்டார்களாம்…..கிட்டத்தட்ட பத்து பேருந்துகளில் ஏறி…நடத்துனர்களால் எமது குழு விரட்டி அடிக்கப்பட்டது. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’…..ஒவ்வொரு வண்டியாக ஏறி நடத்துனரிடம் பரிதாபமாகப் பேசி….கடைசியாக பனிரெண்டு மணிக்கு எங்கள் பேருந்துப் பயணம் உறுதிசெய்யப்பட்ட.து. அதுவும் “திருச்சி வரை டிக்கெட் வாங்கிக்கொண்டு உளுந்தூர் பேட்டையில் இறங்கிவிடவேண்டும்’’என்று நடத்துனர் சொன்ன அந்த டீலிங்கை எம்மால் மறுக்க முடியவில்லை.

எங்களைச் சுமந்த பேருந்து கிளம்பியபிறகு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை எங்கள் பயணத்தின் போக்குகளை செல்போன் மூலம் மணமகன் கவிராஜாவுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் ரிஷி…. “இப்போ வடபழநி தாண்டிட்டோம்…..கிண்டி வந்துட்டோம்…பல்லாவாரம் ரீச் ஆயிட்டோம்…குரோம்பேட்டையில டிராபிக்ஜாம்.
தாம்பரம் தாண்டும்போது ரிஷியின் செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆஃப் ஆக……நல்லவேளை கவி பிழைத்தார்.

நான்கு மணிநேர பயணம்….ஒருவழியாக வந்துசேர்ந்தது உளுந்தூர்பேட்டை.
தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் விடுதியில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெருநாய்களின் வீரிய அணிவகுப்பு எங்களைப் பின்தொடர…அவைகளை விரட்டியபடியே நாலரைமணிவாக்கில் விடுதிக்குள் நுழைந்து, சுமைகளை வைத்துவிட்டு மணமகன் கவிராஜாவை அழைத்தோம்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தவர் “வந்திட்டீங்களா?” என்றபடியே கொட்டாவி விட்டது எனது செல்போனில் எதிரொலித்தது.

“சார் உடனடியா மண்டபத்துக்கு போயாகணும்…“ செல்போனில் சார்ஜ் ஏற்றிக்கொண்டே உத்தரவு போட்டார் ரிஷி….எனக்கும் உடன் வந்தவர்களுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. ஆனால், எங்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், மண்டபத்திற்கு போவதில் குறியாக இருந்தார் ரிஷி.

“அர்ஜென்ட்டா மண்டபத்துக்குப் போகணும்…நீங்க வரலைன்னா…நான் மட்டும் தனியாப் போவேன்’’

ரிஷியின் வார்த்தையில் ஒரு ஏக்கம் தெரிந்தது. ஓய்வைப் புறந்தள்ளிவிட்டு, ரிஷிக்காக மண்டபம் போகத் தயாராகினோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் நடை பயணத்திற்குப் பிறகு மண்டபம் தெரிந்தது. மறுநாள் மாப்பிள்ளையாகப்போகிற கவிராஜா எங்களுக்காக மண்டபத்தின் வாசலில் காத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் ஒவ்வொருத்தராக கட்டித் தழுவிக்கொண்டார்.

பின்னர் ரிஷியும், கவிராஜாவும் தனியாகப் போய் ஏதோ பேசினர். பின்னர்
மண்டபத்தின் இடதுபக்க சாலை ஓரம் கவிராஜா ரிஷியை அழைத்துக்கொண்டு முன்னேற, நாங்கள் பின்தொடர்ந்தோம். இருபது அடி உயரம் முப்பது அடி நீளத்தில் பெரிய டிஜிட்டல் பேனருக்கு முன்பாக ரிஷியோடு கவிராஜா நிற்க, நாங்களும் அந்தப் பேனருக்கும் முன்பாக நின்று கண்களைச் சுழலவிட்டோம்.

‘மணமக்களை வாழ்த்த வருகை தரும் எங்கள் அண்ணன் ரிஷி அவர்களை வருக…வருக என வரவேற்கிறோம்’ என்கிற வாசகத்தோடு டிஜிட்டல் பேனரில் சிரித்துக்கொண்டிருந்தது ரிஷியின் முகம். பதினைந்து அடி உயரத்தில் ரிஷியின் கடா மீசை புகைப்படம் அது. கண்கொட்டாமல் தன் படத்தை தானே ருசித்துக்கொண்டிருந்த ரிஷியை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்.

இடதுகையால் தனது மீசையை வருடிவிட்டுக்கொண்டே, பேனரில் உள்ள தன் புகைப்படத்தையும் அப்படியே என்னையும் ஜாடையாகப் பார்த்து புன்னகைத்தார் ரிஷி.

 

தமிழ் திரைக்கதை-tamil screenplay-tamil sample screenplay- tamil screenplay format-

 

மார்பக புற்றுநோய்-Breast Cancer-mammo gram-Needle Biopsy

மார்பகப் புற்றுநோய்

திருமணம் ஆகாத பெண்களையும் தாக்கும்!

டாக்டர் சரவணன் பெரியசாமி, குளோபல் மருத்துவமனை

         இது 21ம் நூற்றாண்டு. எல்லாவற்றிற்கும் விடை சொல்லி வருகிற மருத்துவ அறிவியல் காலம். ஆனால், இன்னமும் அடித்தட்டு மக்களிடமும், கிராமத்து மக்களிடமும் சிலவகை அறியாமை இருக்கத்தான் செய்கிறது. ஊடகங்கள் என்னதான் சொல்லிவந்தாலும், அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் அவர்களாகவே தீர்வு சொல்லித் திரிகிற மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. Drsaravananperiasami

           பெண்கள் தினத்தைக் கொண்டாடும் மார்ச் மாதத்தில், போதிய கல்வி அறிவு இல்லாமல், வெள்ளந்தியாய் கிராமங்களில் வசித்து வரும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. வயது 29. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். சோகம், அறியாமையின் மொத்த உருவமாக அவரது கணவர் அருகில் நிற்கிறார். அரை மணி நேர உரையாடலில் அவர்களது வாழ்வு பற்றி நிறைய உணர முடிந்தது.

           விஷயம் இதுதான், அந்தப் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து, வலது பக்க மார்பு அகற்றப்பட்ட நிலையில், மேற்கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

            பெண்களை எளிதாகத் தாக்கும் நோய்களில் ஒன்றாக மார்பகப் புற்று நோய் இன்று வெகு வேகமாகப் பரவி வருவதை படித்த பெண்கள்கூட அறியா திருக்கிறார்கள். ‘‘இவருக்கு வரும், இவருக்கு வராது என்கிற எந்தவிதப் பாகு பாடும் இல்லாத நோய் புற்றுநோய். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அடிக்கடி பெண்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது ஊடகங்களின் கையில்தான் இருக்கிறது. இந் நோய் பற்றிய நினைவூட்டலை செய்துகொண்டே இருப்பது ஊடகங்களின் கடமையும்கூட’’ என்கிறார் சென்னை குளோபல் மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் டாக்டர் சரவணன் பெரியசாமி.

            மார்பகப் புற்றுநோய் குறித்த பல சந்தேகங்களோடு டாக்டர் சரவணன் பெரியசாமியிடம் மேலும் பேசினோம்.

மார்பக புற்று நோய்?
மார்பகத்தில் உள்ள சில அனுக்கள் அளவுக்கதிகமாக வளர்வதே மார்பகப் புற்றுநோய். புற்று அனுக்கள் மற்ற அனுக்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களையும் ஆக்கிரமிக்கும்.

அறிகுறிகள் எப்படித் தென்படும். வலி இருக்குமா?
துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.
1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும். 2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும். 3. சுரப்புக் காம்பிலிருந்து இரத்தமோ வேறு திரவமோ கசியும். 4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்). 5. சமீப காலமாக காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் பெண்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மம்மோ கிராம் (mammo gram) என்கிறார்கள். இந்தச் சோதனை எதற்காக?
மார்கப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்கிற சந்தேகத்தை உறுதிசெய்யும் சோதனை முறையே மம்மோகிராம். தட்டு போன்ற கருவியால் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். இதன்மூலம் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் மருத்துவருக்கு அளிக்கும். மேலும், அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி, கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம். இதுதவிர நீடில் பயோப்சி (Needle Biopsy) என்கிற முறையிலும் இது கண்டறியப்படுகிறது.

மார்பகப் புற்று நோயில் பல வகைகள் இருக்கிறதாமே?
பல வகைகள் உண்டு. அவற்றை மிக விரிவாக இங்கே சொல்லமுடியாது என்றாலும், கூடுமானவரை விளக்குகிறேன்.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும், மற்ற எல்லா லிம்ப் நோட்களிலும், எலும்பு, ஈரல், நுரையீரல் முதலிய அங்கங்களிலும் ஏற்கனவே பரவி விட்டது என்பதை அறியலாம்.

இதில் ஒன்று, இரண்டு, மூன்று என பல நிலைகள் உள்ளது என்கிறார்களே? எந்த நிலையில் இதற்கான சிகிச்சையைத் தொடங்குதல் நலம் பயக்கும்?
முதல் நிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னும் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றும், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.

இரண்டாம் நிலை அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் புற்று நோய் பரவி விட்டது என்றும் மார்பகக் கட்டியின் சற்றளவு 2.5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

மூன்றாம் நிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் பரவிவிட்டுள்ளது என்றும் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

நான்காம் நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.

ஒருமுறை சிகிச்சை எடுத்து குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் புற்று நோய் வரக்கூடிய சாத்தியம் உண்டா?
மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

எம் மாதிரியான சிகிச்சை முறைகள் செய்யப்படுகிறது?
புற்றுநோய் கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழிக்கவோ, கட்டுபடுத்தவோ மருத்துவர் முடிவு எடுப்பார். அறுவை சிகிச்சை, கீமோ தெரபி எனும் மருத்துவம், அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

ரேடியேஷன் தெரபி என்கிறார்களே? அது எதற்காக?
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (External rerdiction)என்று கூறப்படும்.

அறுவை சிகிச்சை முடிந்தவர்களுக்கு கீமோ தெரபி கொடுப்பது அவசியமா?
கண்டிப்பாக கொடுக்க வேண்டும். புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். ஊசியின் மூலமாக இது தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறை. ஏனென்றால், தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். புற்றுநோய் அணுக்கள் மேலும் பரவாமல் தடுக்க கீமோ தெரபி அவசியமாகப்படுகிறது.

திருமணம் முடிந்தவர்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் வருமா?
என் மருத்துவ அனுபவத்தில் திருமணம் முடியாதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்திருக்கிறது. எனவே, திருமணம் ஆகாத பெண்களையும் இது தாக்கலாம்! பெண்கள்தான் இதில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். மார்பகங்களை சுய பரிசோதனை செய்தே புற்றுநோய்க் கட்டி இருக்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிடலாம். நோயின் தாக்கம் அறிந்து முதலிலேயே மருத்துவரை நாடி வந்துவிட்டால், முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம்.

புற்றுநோயால் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட ஒரு பெண், அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ளல் சாத்தியமா?
குழந்தைப் பேற்றுக்கும் மார்பக இழப்புக்கும் தொடர்பு இல்லை.

நன்றி – சூரியகதிர்  மாத இதழ்

மொக்கை கவிதைகள்-Kavithaikal

வாழ்க்கை

 

பெருக்கினால் கழிக்குது

கழித்தால் வகுக்குது

வகுத்தால் கூட்டுது

கூட்டினால் பெருக்குது

இதுதான் வாழ்க்கை!

 

நடந்தால் விரட்டுது

விரட்டினால் அமருது

அமர்ந்தால் ஓட்டுது

ஓட்டினால் இழுக்குது

இதுதான் வாழ்க்கை!

 

வெள்ளைத் தாளிலே

ஏதேதோ எழுதுது

எந்த மொழியென்று

யாருக்கும் தெரியாது

அந்த மொழிபேசும்

ஆட்களே கிடையாது!

 

நவரசங்கள் தாண்டி

பலரசங்கள் காட்டுது

புதுப்புது ரசங்களை

ஜாடையாய் சொல்லுது

அதைப் புரிந்துகொண்டபோது

எட்டி அழைக்கும் சாவு!

 

கிழக்கு போனால்

தென் பக்கம் கைகாட்டும்

தென்பக்கம் போனால்

மேற் பக்கம் இழுக்கும்

வடக்கு கிழக்காகும்

கிழக்கு தெற்காகும்

தெற்கு மேற்காகும்

மேற்கு எதுவுமாகும்

இதுதான் வாழ்க்கை!

 

என் பார்முலா தேடாதே

ஒருபோதும் புரியாது

கற்றுக்கொடுக்கவும் மாட்டேன்

என்கிறது வாழ்க்கை!

 

மாத்தி யோசி

நூல் அறுபட்டபோது

கீழே விழுந்தது

பட்டம் மட்டுமல்ல

நூலும்தான்!

உண்மையில் அறுபட்டது

நூலல்ல…உறவு!

 

 

அடையாளம்

இங்கு குழந்தைகள்

இல்லையென

மவுனமாய்ச் சொல்கிறது

கிறுக்கல் ஏதுமற்ற சுவர்!

 

காமம்

நான் சைவம் என

பெருமையாகச்

சொல்லிக்கொள்கிறவனும்

சுவைத்துப் பார்க்க விரும்பும்

அசைவம் அதுமட்டுமே!

 

வழிகாட்டி

துக்கம், இயலாமை,

எதையோ இழந்துவிட்ட தவிப்பு,

எதிர்காலம் பற்றிய பயம்,

நிகழ்கால குழப்பம்,

ஏன் இப்படி என்கிற மன வேதனை ,

நம்பிக்கை தகர்ப்பு

இன்னும் பலவும் ஆட்கொண்டு

தோண்டி மனதை எடுக்கிறதா?

தனி இடம் தேடு

ஓ வென மனம் விட்டு அழு

கண்ணீர் வற்றும் அளவுக்கு அழு

முகம் கழுவு, மொட்டை மாடி செல்

வானம் பார்….அங்கே தெரியும்

எல்லாவற்றுக்குமான விடியல்!

 

சபலம்

வேர்களின்

ஆழம் பார்த்த மனசு

விழுதுகளையும்

தோண்டிப் பார்க்க

நினைக்கிறது!

 

பைத்தியக்காரன்

தவறான கேள்விக்கு

விடை சொல்கிறேன்.

தெரியாத பாதைக்கு

வழிகாட்டுகிறேன்.

இல்லாத ஒன்றை

சொந்தம் என்கிறேன்.

போட்டியில் கலவாமல்

வெற்றி பெறுகிறேன்

கேட்காமல் தருகிறேன்

கேளாமல் பிடுங்குகிறேன்

இழக்காமல் அழுகிறேன்.

பெறாமல் சிரிக்கிறேன்.

பயித்தியமடா நீ

என்கிற உலகை

ஞானத்தோடு பார்க்கிறேன்…