Tag Archives: tamil thiraikathai

Kochadaiyaan Vimarsanam in Tamil – கோச்சடையான் விமர்சனம் – 52%

கோச்சடையான் விமர்சனம்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானை விமர்சிக்க இந்த ஒற்றை வரி போதும்!

tamil screenplay

”விமர்சிக்க முடியாத பல திரைப்படங்கள் வரும். விமர்சிக்கவேண்டிய படங்கள் அவ்வப்போது வரும். கோச்சடையான் விமர்சிக்கக்கூடாத படம். என்னவோ தெரியவில்லை கோச்சடையானை விமர்சிக்க மனம் ஒப்பவில்லை.

படம் பார்த்து முடிந்தவுடன் நண்பர் ஒருவர் ”படம் எப்படி?” எனக் கேட்டபோது, அவரிடம் நான் சொன்ன பதில் இதுதான்.
”நீர் விமர்சிக்க வேண்டாமய்யா, என்ன கதை? அதையாவது சொல்லும்!” தொந்தரித்துக் கேட்டார்.
வழக்கமான ராஜாக்கள் காலத்து கதைதான்.

கலிங்காபுரி, கோட்டைப்பட்டினம் என ஒன்றுக்கொன்று சளைக்காத இரண்டு நாடுகள். மண் சேர்க்கும் அரசர்களின் ஆசைக்கு பலிகடா ஆகும் படைத் தளபதியாக அப்பா கோச்சடையான் (ரஜினி 1). தந்தை ரஜினியின் மரணத்திற்குக் காரணமான இரண்டு ராஜாக்களையும் பலிவாங்கும் படைத்தளபதியாக மகன் ராணா (ரஜினி 2)
இதற்குள் ஒரு காதல். அம்புட்டுதான் கதை. ஆனால்……

தொழிற்நுட்ப புரட்சியின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட கோச்சடையானில் கதை முக்கியமல்ல என்றாலும், அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, குழப்பம் இல்லாத திரைக்கதையை வடித்துக் கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். வசனமும் அவரே.

”எதிரிகளை வெல்ல பல வழிகள் இருக்கு. முதல் வழி மன்னிப்பு, நண்பனை எதிரியாக்கிக்கொள்ளாதே, வேஷம் போடுறவனுக்கு பகல் என்ன இரவு என்ன, சூரியனுக்கு முன்னரே எழுந்தால் அந்த சூரியனையே வெல்லலாம்” என வாழ்வியல் சார்ந்த வசனங்கள் ஏராளம்.

படத்தில் நிஜக் கதைமாந்தர்கள் ஒருவர்கூட கிடையாது. அவர்களின் உருவத் தோற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு, கனிணியின் சாகசத்தோடு வென்று காட்டியிருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடம் மட்டுமே கதை மாந்தர்களாக காட்சியளிக்கிற கணினி மாந்தர்கள் நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள். அதன்பிறகு அப்படியே நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்கள் படம் முடியும்வரை. காரணம், தொழிற்நுட்பம்.

இந்தியச் சினிமாவுக்கு இது புதுசு. பட்ஜெட் இருந்தால் அவதாரையும் மிஞ்சக்கூடிய வகையில் நம்மிடம் அறிவும், தொழிற்நுட்பமும் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சவுந்தர்யா.

கதைமாந்தர்களின் கண் அசைவு, நடை போன்றவற்றில் துல்லியமான பாவணைக் குறைகள் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளிவிடுகிறது மனசு. காரணம், படத்தில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்டம்.

அரண்மனைக் காட்சிகளிலிருந்து போர்க்கள காட்சிவரை, காட்சிக்கு காட்சி நாம் இதுவரை பார்த்திராதது.

கோச்சடையான் வெளிவருவதில் ஏன் சிக்கல் எனத் தெரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பாக வந்திருந்தால், வசூலை அள்ளிக் குவித்திருக்கும் என்றாலும், இப்போதும் அதற்குக் குறையிருக்காது என்று நம்பலாம்.

குடும்பத்தோடு பார்த்து மகிழ, முக்கியமாக குழந்தைகளோடு பார்த்து மகிழவேண்டிய படம்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானின் விமர்சனத்திற்கு இந்த ஒற்றை வரிபோதும்.

மதிப்பெண்கள் 52%

காளியாட்டம்-காளி ஆட்டம்-Kaaliyattam-Kaali Attam

அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்கிற கடன்

காளியாட்டக் கலைஞர் சிவபால்
38

அறிவியலும், நாகரீகமும் மாற மாற பழசெல்லாம் அழிந்துகொண்டு வருகிற காலம் இது. அது அழிந்துகொண்டு வருகிறதா, இல்லை நாமாகவே அவற்றை அழித்துக்கொண்டு வருகிறோமா? என்று யோசித்தால், இரண்டாவது காரணமே பெரும்பாலும் சரியாக இருக்கும்.
எதையும் உருவாக்குவது கஷ்டம். அழிப்பது மிக எளிது. பழமையை நேசிக்கத் தெரிந்தவர்களுக்குதான் இழப்புகளின் வலி தெரியும். அருங்காட்சியகங்களின் எண்ணிக்கையும், அங்கே குடிபுகும் பழமைகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது அடுத்த தலைமுறை மனிதர்களுக்கு நாம் விட்டுவைக்கிற சொத்து அல்ல, விட்டுப்போகிற கடன்.
சரி, இதையெல்லாம் இங்கே ஏன் சொல்லவேண்டும்? விஷயம் இருக்கிறது.
முன்பெல்லாம் கோவில்களில் திருவிழா என்றால், வில்லுப்பாட்டு, கனியான் கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம் என நம் கிராமிய வாசனையோடு கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்தான் பட்டையைக் கிளப்பும். இப்போது, அரிதாகவே இம்மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. கிராமங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களில்கூட, இன்னிசைக் கச்சேரி என்கிற பெயரில் சினிமா நுழைந்துவிட்டது.

கடந்த மாதம் உறவினர்களின் அழைப்பின்பேரில் கோயில் திருவிழா ஒன்றிற்கு விருந்தினராகச் சென்றிருந்தேன். அங்கே காளி வேடமிட்டபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் ஒருவர். இடையிடையே ருத்ர தாண்டவம் வேறு நிகழ்த்திக் காட்டினார். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, உண்மையாகவே வானுலகத்து காளி வந்துவிட்டாள் என்றே தோன்றியது. பக்கத்தில் சென்று பார்த்தபோதுதான், அவர் ஆண் என்பது தெரியவந்தது.
தமிழ் இலக்கியங்களில் இந்தக் காளிவேடம் பற்றிய குறிப்புகள் நிறைய இருப்பது ஞாபகம் வர, சிறு அறிமுகத்திற்குப் பின்னர் விழா நிகழ்வுகள் முடிந்தவுடன் சந்தித்துப் பேசினோம்.

‘‘என்னோட பெயர் சிவபால். வேதாரண்யம் பக்கத்துல இருக்கற கத்தரிபுலம் கிராமம்தான் சொந்த ஊர். இப்போ இருக்கறது சென்னையில். அங்கே செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில நடன ஆசிரியராக வேலை பார்க்கிறேன்’’ என்றவர், ‘‘நடன ஆசிரியர் என்றவுடன் இந்த காளி நடனத்தைக் கற்றுக்கொடுக்கிறேன் என நினைக்காதீர்கள். ஆனால், இதுவும் உண்டு. நான் பரத நாட்டியம் முறையாகப் பயின்றிருக்கிறேன். அதுதவிர கிராமிய நடனங்களும் தெரியும்’’ எனச் சிரித்துக்கொண்டே காளி நடனத்தை கற்றுகொண்டது பற்றி பேச ஆரம்பித்தார்.
‘‘பத்தாம் வகுப்பு படித்து முடித்தபோது, எங்கள் ஊரில் மேடை நாடகங்கள் நடத்தினோம். நாடகத்தில் அவ்வப்போது நாட்டியமும் உண்டு. நடனமும் உண்டு. எனக்கு  இரண்டுமே சுத்தமாக வரவில்லை. எல்லோரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், நடனத்தின் மீது எனக்கு காதல் இருந்தது. சரி, இதை நாம் முறையாக கற்றுக்கொண்டால் என்ன என்கிற முடிவுடன், திருவாரூர் இசைப்பள்ளியில் பரத நாட்டியப் பள்ளி மாணவனாகச் சேர்ந்தேன். அங்கு தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளையின் மகன் கே.பி.சந்திரசேகர் எனக்கு ஆசிரியராக இருந்தார். மூன்றாண்டுகள் பரதம் கற்றேன். நடனக் கலைமணி பட்டத்துடன் சிறந்த மாணவனாக கல்லூரியைவிட்டு வெளியே வந்தேன்’’ என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

பரதநாட்டியத்தில் இந்த காளி வேடமும் கற்றுத் தரப்படுகிறதா?
‘‘இல்லை. இது நானாக கற்றுக்கொண்டது. இசைப் பள்ளியில் சேர்வதற்கு முன்னரே சிறிது காலம் பாலகுமார் என்பவரிடம் நடனம் கற்றேன். இவரின் நண்பர் முத்துக்குமார் என்பவர் காளிவேடம் அணிந்து, கோவில் திருவிழாக்களில் பங்கேற்பார். அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்’’.
இதுபற்றிய இலக்கியப் பதிவுகள் உங்களுக்குத் தெரியுமா?
‘‘ஓ…நன்றாகத் தெரியும். தமிழர்களின் நாட்டுப்புறக்கலைகளில் இதிகாச நிகழ்வுகளை உணர்த்தக்கூடிய கலைகள் ஏராளம் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று இந்த காளியாட்டம். இது வழிபாடாகவோ அல்லது பொழுதுபோக்கினை அடிப்படையாகக் கொண்டோ தோன்றியிருக்கலாம். இதற்கு காளிவேடம், காளி திருநடனம், காளி வீதி உலா என பிற பெயர்களும் உண்டு.
இன்று காளியாட்டம் என்பது ஒரு சடங்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டு காலத்தில் காளியாட்டம் வேறுவிதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அதாவது காளியாட்டம் நிகழ்த்தப்படுவதற்கு முன்னர் 25 அடி நீளத்திற்கு மிகப்பெரிய அரவான் உருவத்தை மண்ணால் படுத்திருப்பது போல் செய்வர். படுத்திருக்கும் அரவான் உருவத்திற்குப் பக்கத்தில் மிகப்பெரிய காளிதேவியின் உருவமும் செய்யப்படும். பொதுவாக கோயிலின் முன்பகுதியிலேயே இந்த உருவங்கள் செய்து வைக்கப்படும். கோவில் பூஜை தொடங்கும்போது காளிதேவியின் உருவத்திற்கு முன்பாக கோழி ஒன்றைப் பலி கொடுப்பர்.

பின்னர், அரவான் உருவத்தின் மேல் பூசணிக்காய் ஒன்றை வைத்து அதைத் துண்டாக வெட்டி எறிவர். கோவில் பூசாரி துரோபதையின் வேடமிட்டு அரவானைச் சுற்றிவந்து ஒப்பாரி வைத்து பாட்டுப்பாடி மார்பில் அடித்துக்கொண்டே அழுவார். கிராமத்தில் பேய் பிடித்து ஆட்டும் பெண்கள் காளிதேவியாக வலம் வருபவரை வணங்குவர். அப் பெண்களைத் தன் கையில் வைத்திருக்கும் துடைப்பத்தால் அடிப்பாள் காளிதேவி.

இவ்வாறு அடிக்கும்போது பெண்களுக்குப் பிடித்திருக்கும் பேய் விலகிவிடும் என்பது மரபு.  இதுதான் பண்டைய தமிழ் கிராமத்துக் கோவில்களில் முக்கிய அங்கம் வகித்தது.

அதன்பிறகு நாளடைவில் மெல்ல மெல்ல இந் நிகழ்ச்சி காளிவேடமிட்டு ஆடும் நிகழ்ச்சியாக மாறியிருக்க வேண்டும். இந்தக் காளியாட்டத்தில் பச்சைக் காளி, சிவப்புக் காளி என இரு பிரிவுகளும் உண்டு. இன்றைய கம்ப்யூட்டர் காலத்தில் பழமையாவும் மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஒரு கலை இருப்பதே தெரியாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது’’.
இந்த வேடம் முழுமையாகப் போடுவதற்கு எத்தனை மணி நேரம் ஆகும்?
‘‘குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் ஆகும்’’.
பரத நாட்டிய ஆசிரியராகப் பணிபுரியும் நீங்கள், இதையும் தொழிலாகச் செய்துவருகிறீர்களே, எதற்காக?
‘‘இதை தொழிலாகச் செய்யவில்லை. மாணவப் பருவத்தில் இந்தக் கலையை கற்றுக்கொண்டேன். நல்ல பணியிலும் இருக்கிறேன். என்றாலும், இந்தக் கலை அழிந்துவிடும் சூழலில் இருக்கிறது. என் உயிர் இருக்கிறவரையிலேனும் பாதுகாப்பது என் கடமையல்லவா? தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இக் கலைஞர்கள் இருக்கிறார்கள்’’.
இதன்மூலம் சினிமா வாய்ப்புகள் வருமே?

‘‘அப்படி எதுவும் வரவில்லை!’’

காளியாட்டம்

தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகள்

kaaliyatam kaaliyaatam kaaliyatam2 15 8 kaaliyatam3kaaliyatam2

 

நம் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு மறுநாள் முழுவேடத்தையும் போட்டு அசத்தினார் சிவபால்.அந்தப் படங்கள்தான் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளன. முதலில் காளியை நினைத்து சிறு தியானம் மேற்கொண்டவர், அதன்பிறகு செந்தூரத்தால் ஆன பச்சை வண்ணத்தை உடலெங்கும் பூச ஆரம்பித்து, படிப்படியாக காளிதேவியாக மாறுவதற்கு மூன்றரை மணிநேரம் ஆயிற்று. உண்மையாகவே மேலுலக காளியே நம் முன் காட்சி தந்ததைப் போல் அவதாரம் எடுத்திருந்த சிவபாலனுக்கு தேங்காய், பழம் படைத்து கற்பூர ஆரத்தி எடுக்கலாம் போலிருந்தது.

நன்றி : சூரியகதிர் தமிழ் மாத இதழ்

 

மார்பக புற்றுநோய்-Breast Cancer-mammo gram-Needle Biopsy

மார்பகப் புற்றுநோய்

திருமணம் ஆகாத பெண்களையும் தாக்கும்!

டாக்டர் சரவணன் பெரியசாமி, குளோபல் மருத்துவமனை

         இது 21ம் நூற்றாண்டு. எல்லாவற்றிற்கும் விடை சொல்லி வருகிற மருத்துவ அறிவியல் காலம். ஆனால், இன்னமும் அடித்தட்டு மக்களிடமும், கிராமத்து மக்களிடமும் சிலவகை அறியாமை இருக்கத்தான் செய்கிறது. ஊடகங்கள் என்னதான் சொல்லிவந்தாலும், அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் அவர்களாகவே தீர்வு சொல்லித் திரிகிற மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. Drsaravananperiasami

           பெண்கள் தினத்தைக் கொண்டாடும் மார்ச் மாதத்தில், போதிய கல்வி அறிவு இல்லாமல், வெள்ளந்தியாய் கிராமங்களில் வசித்து வரும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. வயது 29. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். சோகம், அறியாமையின் மொத்த உருவமாக அவரது கணவர் அருகில் நிற்கிறார். அரை மணி நேர உரையாடலில் அவர்களது வாழ்வு பற்றி நிறைய உணர முடிந்தது.

           விஷயம் இதுதான், அந்தப் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து, வலது பக்க மார்பு அகற்றப்பட்ட நிலையில், மேற்கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

            பெண்களை எளிதாகத் தாக்கும் நோய்களில் ஒன்றாக மார்பகப் புற்று நோய் இன்று வெகு வேகமாகப் பரவி வருவதை படித்த பெண்கள்கூட அறியா திருக்கிறார்கள். ‘‘இவருக்கு வரும், இவருக்கு வராது என்கிற எந்தவிதப் பாகு பாடும் இல்லாத நோய் புற்றுநோய். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அடிக்கடி பெண்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது ஊடகங்களின் கையில்தான் இருக்கிறது. இந் நோய் பற்றிய நினைவூட்டலை செய்துகொண்டே இருப்பது ஊடகங்களின் கடமையும்கூட’’ என்கிறார் சென்னை குளோபல் மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் டாக்டர் சரவணன் பெரியசாமி.

            மார்பகப் புற்றுநோய் குறித்த பல சந்தேகங்களோடு டாக்டர் சரவணன் பெரியசாமியிடம் மேலும் பேசினோம்.

மார்பக புற்று நோய்?
மார்பகத்தில் உள்ள சில அனுக்கள் அளவுக்கதிகமாக வளர்வதே மார்பகப் புற்றுநோய். புற்று அனுக்கள் மற்ற அனுக்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களையும் ஆக்கிரமிக்கும்.

அறிகுறிகள் எப்படித் தென்படும். வலி இருக்குமா?
துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.
1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும். 2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும். 3. சுரப்புக் காம்பிலிருந்து இரத்தமோ வேறு திரவமோ கசியும். 4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்). 5. சமீப காலமாக காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் பெண்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மம்மோ கிராம் (mammo gram) என்கிறார்கள். இந்தச் சோதனை எதற்காக?
மார்கப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்கிற சந்தேகத்தை உறுதிசெய்யும் சோதனை முறையே மம்மோகிராம். தட்டு போன்ற கருவியால் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். இதன்மூலம் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் மருத்துவருக்கு அளிக்கும். மேலும், அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி, கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம். இதுதவிர நீடில் பயோப்சி (Needle Biopsy) என்கிற முறையிலும் இது கண்டறியப்படுகிறது.

மார்பகப் புற்று நோயில் பல வகைகள் இருக்கிறதாமே?
பல வகைகள் உண்டு. அவற்றை மிக விரிவாக இங்கே சொல்லமுடியாது என்றாலும், கூடுமானவரை விளக்குகிறேன்.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும், மற்ற எல்லா லிம்ப் நோட்களிலும், எலும்பு, ஈரல், நுரையீரல் முதலிய அங்கங்களிலும் ஏற்கனவே பரவி விட்டது என்பதை அறியலாம்.

இதில் ஒன்று, இரண்டு, மூன்று என பல நிலைகள் உள்ளது என்கிறார்களே? எந்த நிலையில் இதற்கான சிகிச்சையைத் தொடங்குதல் நலம் பயக்கும்?
முதல் நிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னும் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றும், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.

இரண்டாம் நிலை அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் புற்று நோய் பரவி விட்டது என்றும் மார்பகக் கட்டியின் சற்றளவு 2.5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

மூன்றாம் நிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் பரவிவிட்டுள்ளது என்றும் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

நான்காம் நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.

ஒருமுறை சிகிச்சை எடுத்து குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் புற்று நோய் வரக்கூடிய சாத்தியம் உண்டா?
மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

எம் மாதிரியான சிகிச்சை முறைகள் செய்யப்படுகிறது?
புற்றுநோய் கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழிக்கவோ, கட்டுபடுத்தவோ மருத்துவர் முடிவு எடுப்பார். அறுவை சிகிச்சை, கீமோ தெரபி எனும் மருத்துவம், அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

ரேடியேஷன் தெரபி என்கிறார்களே? அது எதற்காக?
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (External rerdiction)என்று கூறப்படும்.

அறுவை சிகிச்சை முடிந்தவர்களுக்கு கீமோ தெரபி கொடுப்பது அவசியமா?
கண்டிப்பாக கொடுக்க வேண்டும். புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். ஊசியின் மூலமாக இது தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறை. ஏனென்றால், தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். புற்றுநோய் அணுக்கள் மேலும் பரவாமல் தடுக்க கீமோ தெரபி அவசியமாகப்படுகிறது.

திருமணம் முடிந்தவர்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் வருமா?
என் மருத்துவ அனுபவத்தில் திருமணம் முடியாதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்திருக்கிறது. எனவே, திருமணம் ஆகாத பெண்களையும் இது தாக்கலாம்! பெண்கள்தான் இதில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். மார்பகங்களை சுய பரிசோதனை செய்தே புற்றுநோய்க் கட்டி இருக்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிடலாம். நோயின் தாக்கம் அறிந்து முதலிலேயே மருத்துவரை நாடி வந்துவிட்டால், முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம்.

புற்றுநோயால் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட ஒரு பெண், அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ளல் சாத்தியமா?
குழந்தைப் பேற்றுக்கும் மார்பக இழப்புக்கும் தொடர்பு இல்லை.

நன்றி – சூரியகதிர்  மாத இதழ்

பிச்சை தமிழ் திரைக்கதை – tamil screenplay sample- tamil script- pitchai

sample tamil screenplay

பிச்சை
திரைக்கதை, வசனம் : செ.பாலமுருகன்
மூலக்கதை சுபலெட்சுமி

பிச்சை திரைக்கதை – tamil screenplay sample- tamil script- pitchai

காட்சி 1 பகல் / வெளி

Int / Day

வானுயர உயர்ந்து நிற்கும் கோவில் கோபுரம்.
கோவிலின் உள்ளே பூஜை நடந்துகொண்டிருப்பதற்கான மணிச் சத்தமும், மேளச் சத்தமும் மெதுவாய் நம் காதுகளில் ஒலிக்கிறது.
கோவிலின் முன்புறத்து நுழைவு வாயில்.
அதில் உள்ள பழங்காலத்து பெரிய கதவுகள்.
கதவுகளில் தொங்க விடப்பட்டிருக்கும் சிறு மணிகள்.
கோவிலின் உள் நுழையும் பக்தர்கள். வெளியேறும் பக்தர்கள்.

கோவிலின் முன் உள்ள அகன்ற தெரு.
இருபுறமும் ஆங்காங்கே சற்று இடைவெளிவிட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் சில கார்கள்.
பக்திப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்,
பக்தர்களின் காலணிகளைப் பாதுகாக்கும் இடம் மற்றும் இதர வகையான கடைகள்.
ஒரு கணவனும், மனைவியும் கோவிலிலிருந்து வெளியேறுகிறார்கள்.
கணவருக்கு நாற்பதைத் தாண்டிய வயது.
மனைவியோடு ஏதோ பேசுகிறார்.
அவர் பேசுவது நம் காதுகளில் விழவில்லை.
இருவரும் காலணிகள் பாதுகாக்கும் இடத்திற்குச் செல்கின்றனர்.
கணவன்: ‘‘….டோக்கன் உங்கிட்டதான இருக்கு’’
மனைவி தன் கைப்பையிலிருந்து டோக்கனை எடுக்கிறார்.
கணவரிடம் கொடுக்கிறார்.
கணவர் அதை காலணிகள் பாதுகாக்கும் நபரிடம் கொடுக்கிறார்.
அந்த நபர் டோக்கன் நம்பரைப் பார்க்கிறார்.
அதற்குரிய காலணிகளை உள்ளிருந்து எடுத்து அவர்களின் முன் போடுகிறார்.
கணவனும், மனைவியும் தங்கள் காலணிகளை அணிந்துகொள்கின்றனர்.
கணவன் தன் இடது கையால் பேண்ட் பாக்கட்டைத் துழாவுகிறார்.
உள்ளிருந்து எதையோ எடுக்கிறார்.
அவர் கையில் மோட்டார் பைக் சாவி இருக்கிறது.
இருவரும், பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நடக்கின்றனர்.
அவர்கள் நடக்க, நடக்க வரிசையாக நாலைந்து பிச்சைக்காரர்கள் கையில் தட்டுக்களோடும், வளைந்து நெளிந்த பாத்திரங்களோடும் இவர்களைப் பார்த்து கை ஏந்துகின்றனர்.
பிச்சை 1 : ‘‘சாமி…மகராசனா இருக்கணும்……’’
பிச்சை 2 : ‘‘உங்கள நம்பித்தான் இருக்கோங்க….’’
பிச்சை 3 : ‘‘நெறஞ்ச ஆயுசோட இருக்கணும்…ஏதாவது போடுங்க…ஐயா…’’
பிச்சைக்காரர்கள் கையேந்தும் சமயத்தில் அவர்களின் பாத்திரங்களில் கிடக்கும் சில்லறை நாணயங்களிலிருந்து ஓசை எழும்புகிறது.
பிச்சைக்காரர்களைப் பார்க்கும் கணவணின் பார்வையில் பரிதாபம் தெரிகிறது.
கணவன் : (மனைவியிடம்)‘‘சில்லற இருந்தா கொடு’’
மனைவி பதிலேதும் பேசாமல் தன் கைப்பையிலிருந்து சில நாணயங்களை எடுத்து கணவரிடம் கொடுக்கிறார். கணவன் அந்த நாணயங்களை பிச்சைக்காரர்களுக்கு நடந்துகொண்டே போடுகிறான்.
கணவனின் கையில் உள்ள சில்லறை காலியாகி விடுகிறது.
அவர்கள் தொடர்ந்து தங்களின் பைக் நிற்கும் திசையை நோக்கி மெதுவாக நடக்கிறார்கள்.
அவர்களின் இடம் வருவதற்குள் மேலும் சில பிச்சைக்காரர்களைப் பார்க்கிறார்கள்.
கணவன் மனைவியிடம் ஏதோ பேசுகிறான்.
பேசி முடிக்கவும் அவர்களின் பைக் நிற்கும் இடம் வந்துவிடுகிறது.
இப்போது வலது கையால் பேண்ட் பாக்கெட்டை துழாவுகிறான்.
அவன் கையில் கைக்குட்டை இருக்கிறது.
அதைக்கொண்டு பைக்கின் சீட்டில் இருக்கும் தூசியை தட்டிவிடுகிறான்.
சாவியை நுழைத்து வண்டியில் உட்கார்கிறான்.
பின்சீட்டில் அவன் மனைவி ஏறி உட்காரும்போது, முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பிச்சைக்காரி கணவனுக்கு முன்னால் வருகிறாள். பெயர் செல்லி
பிச்சைக்காரி செல்லியின் வலது கையில் ஒரு அலுமினிய தட்டு சகலவிதமான நெழிவுகளோடும் இருக்கிறது.
இடது தோளில் ஒரு பை தொங்குகிறது.
கலைந்துபோன உடைகளோடும், களைத்துப் போன தேகத்தோடும் காட்சியளிக்கிறாள் செல்லி.
செல்லி பைக்கில் அமர்ந்திருக்கும் கணவனை கையெடுத்துக் கும்பிட்டு பிச்சை கேட்கிறாள்.
செல்லி : ‘‘அண்ணா….பசிக்குதுண்ணா…..ஏதாவது போடுங்கண்ணா’’
கணவன் செல்லியை உற்றுப் பார்க்கிறான்.
செல்லி : ‘‘…..அப்படிப் பாக்காதண்ணா…..மனசு இருந்தா கண்டிப்பா போடுவ….’’
கணவன் செல்லியை மீண்டும் உற்றுப் பார்க்கிறான்.
மனைவியின் பார்வையும் செல்லியை நோக்குகிறது.
கணவன் ஏதோ யோசனை வந்தவனாக தன் மேல் சட்டைப் பைக்குள் கைவிடுகிறான்.
அவன் கையில் ஐம்பது ரூபாய் நோட்டு வருகிறது.
அதை பிச்சையாகப் போடுவதற்கு அவனுக்கு மனம் வரவில்லை என்பதை முகம் காட்டுகிறது.
மீண்டும் செல்லியை உன்னிப்பாகப் பார்க்கிறான்.
மெதுவாகத் திரும்பி தன் மனைவியிடம் பேசுகிறான்….
கணவன் : ‘‘ஏண்டி….உங்கிட்ட ஏதும் சில்லறை இருக்கா’’
மனைவி : ‘‘போட்டது போதும்….இதுங்களுக்கு வேற வேலை இல்லை… (முறைத்துக்கொண்டே)‘‘கை,கால் நல்லாத்தான இருக்கு. உழைச்சி சாப்பிட வேண்டியதான….விலகும்மா…கௌம்பும் போதே வழிய மறிக்காத’’
கணவனிடம் சொல்லிவிட்டு பிச்சைக்காரி செல்லியை மனைவி பார்க்கிறாள்.
மனைவி : ‘‘நீங்க வண்டிய எடுங்க….பாவ புண்ணியம்லாம் ஓரளவுக்குப் பாத்தாப் போதும்’’
மனைவியின் சொல்கேட்டு கணவன் வண்டியின் கிக்கரை உதைக்கிறான். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.
மீண்டும் உதைக்கிறான். ஸ்டார்ட் ஆகவில்லை.
மூன்றாவது உதைக்கு வண்டி ஸ்டார்ட் ஆகிறது.
மெதுவாய் அந்த பைக்கில் கணவனும், மனைவியும் புறப்பட்டுச் செல்வதை வெறும் தட்டோடு பிச்சைக்காரி செல்லி பார்க்கிறாள்.
இப்போது செல்லி மெதுவாகப் புன்னகைக்கிறாள்.
பைக் சற்று தூரத்தில் சென்று வலதுபுறமாகத் திரும்பி மறைகிறது.
செல்லியின் புன்னனகை ஏமாற்றமாய் மாறுகிறது என்பதை அவளின் முகம் உணர்த்துகிறது.
தன் கையில் உள்ள தட்டை உற்றுப் பார்க்கிறாள். அது வெறும் தட்டாய் இருக்கிறது. அதில் காசு, பணம் ஏதுமில்லை.
மெதுவாக கோவில் வாசலை நோக்கி நடக்கிறாள்.
இப்போது கோவில் வாசலுக்கு அருகில் உள்ள பிச்சைக்காரர்களின் வரிசையில் உட்கார்ந்து கொள்கிறாள்.
கோவிலிலிருந்து வெளியேறுபவர் களுக்கு இவள் ஆறாவது பிச்சைக்காரியாக இருக்கிறாள்.
இவள் உட்கார்ந்ததும் அருகில் உள்ள பிச்சைக்காரன் இவளிடம் பேச்சுக் கொடுக்கிறான்.
பிச்சைக்காரன் : ‘‘என்ன செல்லி…..லேட்டா வந்தாப்புல இருக்கு….’’
செல்லி : ‘‘நேத்திக்கி கலெக்ஷன் முப்பத்தாறு ரூபாதான். ராத்திரிக்கு சாப்பிட பணம் பத்தலை….பட்டினி……காத்தால எந்திரிக்கவே முடியலை…கேரா இருந்திச்சி….’’
பிச்சைக்காரன் : ‘‘இன்னிக்கும் நேத்தி கதைதான்…. ஆளுங்க கொஞ்சம்பேர்தான் வர்றாங்க….பேசாம எடத்த மாத்திரலாம்னு இருக்கேன்….’’
இவர்கள் பேசுவதை மற்ற பிச்சைக்காரர்கள் கவனிக்கிறார்கள்.
பிறகு அவர்களின் கவனம் வருவோரையும், போவோரையும் பார்த்துத் திரும்புகிறது.
செல்லியின் கவனமும் கடந்து செல்லும் ஆட்களை நோக்கித் திரும்புகிறது.

 

காட்சி 1ஏ 

பகல்/வெளி

DAY/ EXTN

ஆறேழுபேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலுக்கு வெளியே வருகின்றனர்.
அவர்களை செல்லி பார்க்கிறாள்.
செல்லியின் பார்வையை வைத்து மற்ற பிச்சைக்காரர்களும் கோவில் வாசலை விட்டு வெளியேறும் அந்தக் குடும்பத்தைப் பார்க்கின்றனர்.
குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டும் பிச்சைக்கார வரிசையை நோக்கி வருகிறார்.
மற்றவர்கள் காலணி பாதுகாக்கும் இடத்தை நோக்கிச் செல்கின்றனர்.
அவர் தங்களை நோக்கி வருவதைப் பார்த்த பிச்சைக்காரர்களின் வாய் தன்னாலேயே பிச்சை கேட்டு முனுமுனுக்கத் தொடங்குகிறது.
கைகள் தட்டுகளோடு மேலும் கீழும் ஆட்டப்படுகின்றன.
தட்டுக்களில் கிடக்கும் சில்லறை ஒலி மீண்டும் கேட்கிறது.
செல்லியின் தட்டில் ஏதும் இல்லை.
அவள் வெறும் தட்டோடு கைநீட்டுகிறாள்.
அந்த நபர் வரிசையாக அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஒரு ரூபாய் போடுகிறார்.
செல்லியின் தட்டிலும் ஒரு ரூபாய் விழுகிறது.
அந்த ஒரு ரூபாயைப் பார்த்து செல்லி சிரிக்கிறாள்.
தட்டை ஆட்டுகிறாள்.
இப்போது அவளின் தட்டிலிருந்தும் ஒலி வருகிறது.
மீண்டும் செல்லி மெதுவாகச் சிரிக்கிறாள். பிச்சை போட்ட நபர் அப்படியே அவர்களைக் கடந்து போகிறார்.
செல்லியின் அருகிலிருக்கும் பிச்சைக்காரர் செல்லியிடம் பேச்சு கொடுக்கிறார்.
பிச்சைக்காரர் : ‘‘என்ன செல்லி…………. போனி ஆயிருச்சுபோல…..’’
செல்லி : ‘‘ஆமா…முதல் போட்டு யாவாரம் பண்றோம்’’

காட்சி 1பி

பகல்/வெளி

DAY/EXTN

தூரத்தில் ஒரு காரின் ஹாரன் சத்தம் கேட்கிறது.
பிச்சைக்காரர்கள் ஹாரன் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்புகின்றனர்.
ஹாரன் அடித்த கார் ஓரங்கட்டப்படுகிறது.
அதிலிருந்து நான்கு வெளிநாட்டவர் இறங்குகின்றனர்.
25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் வெள்ளைக்காரர்களைப் பார்த்துச் சிரித்தவாறே, அவர்களின் காரைக் கடந்து கோவிலைநோக்கி வருகின்றனர்.
வெள்ளைக்காரர்களைப் பார்த்த பிச்சைக்காரர்களின் முகம் பிரகாசமடைகிறது.
அனைவரும் எழுந்திரிக்கின்றனர்.
வெளிநாட்டினர் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்குகின்றனர்.
பிச்சைக்காரர்கள் அவர்களை நோக்கி நடக்கத் தொடங்குகின்றனர்.
செல்லியும் கடைசி ஆளாக தட்டோடு நடக்கிறாள்.
வெளிநாட்டினருக்கு முன்னே இரண்டு வாலிபர்களும் ஏதோ பேசிக்கொண்டே நடக்கின்றனர்.
அவர்களின் பார்வை வேகமாக நடந்துவரும் பிச்சைக்காரர்களை நோக்குகிறது.
திரும்பி தங்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருக்கும் வெள்ளைக்காரர்களைப் பார்க்கிறார்கள்.
வாலிபர்களின் முகத்தில் எரிச்சல் வருகிறது.
செல்லி கடைசி ஆளாக வந்துகொண்டிருக்கிறாள்.
இரண்டு வாலிபர்களும் அப்படியே ஓரமாக நிற்கின்றனர்.
வாலிபர்களை வெளிநாட்டினர் கடந்து செல்லவும், பிச்சைக்காரர்கள் வெளிநாட்டினரிடம் வந்து சேரவும் சரியாய் இருக்கிறது.
பிச்சைக்காரர்களின் கூட்டம் வெளிநாட்டினரிடம் தட்டுக்களை நீட்டியவாறு பிச்சை கேட்கிறது.
அவர்கள் இப்படி வெளிநாட்டினரை மொய்த்துக்கொண்டு பிச்சையெடுப்பதை இரண்டு வாலிபர்களும் உன்னிப்பாகப் பார்க்கின்றனர்.
செல்லியும் தன் பங்குக்கு பிச்சை கேட்கிறாள்.
பின்னணி இசை மட்டுமே ஒலிக்கிறது. வசனங்கள் ஏதும் இல்லை.
வெளிநாட்டினர் பிச்சைக்காரர்களைப் பார்த்துச் சிரிக்கின்றனர்.
இதை வாலிபர்கள் பார்க்கின்றனர்.
இரண்டு வாலிபர்களில் ஒருவன் அதீத எரிச்சலில் தன் நண்பனிடம் பேசுகிறான்.

அதை செல்லி கேட்கிறாள்.

வாலிபன் 1 : ‘‘ச்சே…இந்த பிச்சைக் கூட்டத்தாலதான் நம்ம நாட்டோட மானமே போகுது’’
வாலிபன் 2 : ‘‘கழுத கூட உழைச்சி சாப்பிடுது… இந்த நாய்ங்களுக்கு உழைச்சு சாப்பிட சோம்பேறித்தனம்….’’

வாலிபர்களின் பேச்சு செல்லியின் காதுகளில் விழுகிறது.
அவள் மெதுவாய் திரும்பிப் பார்க்கிறாள்.
வாலிபர்களைப் பார்த்து ஏதோ சிந்திக்கிறாள்.
வாலிபர்களின் பேச்சு தொடர்கிறது.

வாலிபன் 1: ‘‘உட்கார்ந்த எடத்திலேயே சோறு கிடைக்கணும்னு நினைக்கிற இதுகள திருத்தவே முடியாது…’’
வாலிபன் 2 : ‘‘யாரு ஆட்சிக்கு வந்தாலும் இதுங்கள ஒழிக்க முடியாது….தாந்தோன்றிங்க… அங்க பாரு நம்ம மானம் கப்பலேருது…இதுங்களலாலதான் நம்ம நாட்டுக்கே தலைகுனிவு’’

ஒருவன் தலையில் அடித்துக் கொள்கிறான்.
அவர்களின் பேச்சைக் கவனித்துக்கொண்டிருக்கும் செல்லியின் முகம் மாறுதல் அடைகிறது.
அவள் ஏதோ யோசிக்கிறாள்.
இப்போது செல்லி தன்னோடு வந்த பிச்சைக்கார கூட்டத்தைப் பார்க்கிறாள்.
பின்னர் அந்த இரண்டு வாலிபர்களையும் பார்க்கிறாள்.
வெளிநாட்டினரைப் பார்க்கிறாள்.
வெளிநாட்டினர் யாருக்கும் பிச்சை போடாமல் கோவிலை நோக்கி தொடர்ந்து நடக்கின்றனர்.
செல்லி மெல்ல சாலையின் ஓரமாகப் போகிறாள்.
வானத்தைப் பார்த்தவாறே மனதுக்குள்ளேயே பேசுகிறாள்.
செல்லியின் அந்தப் பேச்சு நம் காதுகளிலும் ஒலிக்கிறது.

செல்லி : ‘‘என்னோட வயித்துப் பசிக்காக வெளிப்படையாத்தான பிச்சையெடுக்கேன். யாரையும் நான் ஏமாத்தல…என்னோட இயலாமையாலதான இந்த தொழில செய்ய வேண்யிருக்கு….நான் சோத்துக்காக கையேந்தறது இந்த நாட்டுக்கே அவமானமா… அப்படீன்னா இந்த நாட்டை தலைகுனிய வைக்கறதுல எனக்கும் ஒரு பங்கா…’’ (வாய்ஸ் ஓவர்)

இண்டர் கட்டாக வாலிபர்கள் பேசிய பேச்சு மீண்டும் திரையில் வந்து போகிறது.

வாலிபன் 1: ‘‘உட்கார்ந்த எடத்திலேயே சோறு கிடைக்கணும்னு நினைக்கிற இதுகள திருத்தவே முடியாது…’’
வாலிபன் 2 : ‘‘யாரு ஆட்சிக்கு வந்தாலும் இதுங்கள ஒழிக்க முடியாது….தாந்தோன்றிங்க… அங்க பாரு நம்ம மானம் கப்பலேருது…இதுங்களலாலதான் நம்ம நாட்டுக்கே தலைகுனிவு’’

செல்லி வாலிபர்களைத் திரும்பிப் பார்த்தவாறே கோவிலுக்கு எதிர்ப்புறமாக நடந்துசெல்கிறாள்.
அலுமினியத் தட்டில் இருக்கும் ஒரு ரூபாயை எடுத்து சேலை முந்தானையில் முடிந்துகொள்கிறாள்.
தன்னிடம் இருக்கும் அழுக்கடைந்த பையில் அலுமினியத் தட்டை நுழைக்கிறாள்.
வெள்ளைக்கார கூட்டம் கோவிலுக்குள் உள்ளே நுழைகிறது.
பிச்சைக்காரக்கூட்டம் மீண்டும் தங்கள் இடங்களில் அமர்கின்றது. செல்லியின் இடம் வெறிச்சோடுகிறது. அவள் வராததை பக்கத்தில் இருக்கும் பிச்சைக்காரன் கவனிக்கிறான். தூரத்தில் செல்லி மெதுவாக நடந்துபோவதை அந்தப் பிச்சைக்காரன் கவனிக்கிறான்.
கோவிலிலிலிருந்து மீண்டும் மேளச் சத்தமும், மணி ஓசையும் கேட்கிறது.

காட்சி 2

பகல்/வெளி

DAY/EXTN

நீளமான இருபது அடி அகலமுள்ள தெரு.
அந்தத் தெருவின் சாலைகள் ஆங்காங்கே மேடு பள்ளத்துடன் காட்சியளிக்கிறது.
செல்லி அந்தத் தெருவில் நடந்துகொண்டிருக்கிறாள்.
ஒரு மோட்டார் சைக்கிள் அவளைக் கடந்து செல்கிறது.
தண்ணீர் லாரியும், அரசுப்பேருந்தும் எதிர்ப்புறமாக கடந்துபோகின்றன.
செல்லியின் பார்வை எதையோ தேடுகிறது.
வயிற்றை எக்கிப் பிடிக்கிறாள்.
அவளின் ஒட்டிப்போன வயிறு தெரிகிறது.
செல்லியின் பார்வையில் தூரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் அருகே பள்ளியில் பயிலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
செல்லி அந்த பள்ளிக்கூடத்தின் அருகே செல்கிறாள்.
பள்ளிக்கூடத்தின் வெளிப்புறச் சுவற்றில் ஒரு பலகையில் ஆயா வேலைக்கு ஆட்கள் தேவை என்று போர்டு தொங்குவதை செல்லி பார்க்கிறாள்.
அந்தப் போர்டை பார்த்துக்கொண்டே செல்லி நிற்கிறாள்.
கன்னத்தில் கைவைத்தவாறு யோசிக்கிறாள்.
அவளின் நினைவுகள், அவளை ஆயா வேலைக்குள் கொண்டு செல்கின்றன.
செல்லி அந்தப் பள்ளிக்கூடத்துக்குள் ஆயா வேலை செய்யும் காட்சிகள் மாண்டேஜ் காட்சிகளாக வந்துபோகின்றன.

செல்லி அந்தப் பள்ளியின் வகுப்பறை ஒன்றை விளக்குமாறு கொண்டு பெருக்குகிறாள்.
ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து அங்குள்ள பூச்செடிகளுக்கு ஊற்றுகிறாள்.
பள்ளி மைதானத்தில் குழந்தைகளுக்கு நடுவே நடந்துபோகிறாள்.
பள்ளி விட்டுச் செல்லும் குழந்தைகளை வேனில் ஏற்றுகிறாள்.
திடீரென்று மணி அடிக்கும் சத்தம் கேட்டு செல்லி திடுக்கிடுகிறாள்.
அவளின் ஆயாக் கனவு கலைந்து மீண்டும் தன் நிலைக்கு வருகிறாள்.
இப்போது ஆயா வேலைக்கு ஆட்கள் தேவை போர்டு மீண்டும் காட்டப்படுகிறது.
செல்லி அந்த போர்டை மீண்டும் ஒரு முறை பார்க்கிறாள்.
மெதுவாக பள்ளிக்கூடத்துக்குள் நுழைகிறாள்.

காட்சி 2ஏ

பகல்/வெளி மற்றும் உள்

DAY/EXTN/INT

செல்லி தட்டுத்தடுமாறி மெதுவாக பள்ளிக்கூடத்தின் உள்ளே நுழைகிறாள்.
யூனிஃபார்ம் அணிந்த குழந்தைகள் (ஆறிலிருந்து பனிரென்டு வயது) அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
ஒரு குழந்தை கீழே விழுந்து அழுதுகொண்டிருக்கிறது.
செல்லியின் பார்வை ஒரு அசட்டுத் தைரியத்தை வரவழைக்கிறது.
இரண்டு மாடிகள் கொண்ட பள்ளிக் கட்டடத்தின் கீழ் அவள் நிற்கிறாள்.
செல்லிக்கு எதிரே உள்ள அறையின் கதவில் தாளாளர் என்கிற பலகை தொங்குகிறது.
செல்லி அந்தப் பலகையைப் பார்க்கிறாள்.
அந்த அறையை நெருங்குகிறாள்.
வாசற்கதவு அருகே நிற்கிறாள்.
தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விடுகிறாள்.
அவளின் நினைவுக்குள் ஆயா தேவை போர்டு மீண்டும் வந்துபோகிறது.
கதவை ஒட்டியபடியே உள்ளே நுழைந்துவிடலாமா என்கிற மாதிரி அவளின் பார்வை இருக்கிறது.
ஒரு அடி கூடுதலாக எடுத்து வைக்கும்போது, அந்த அறையிலிருந்து பேச்சுக்குரல்கள் செல்லிக்கு கேட்கின்றன.

ஆண் குரல் : ‘‘இங்க டொனேஷன் கம்பல்சரி..’’

பெண் குரல் : ‘‘எம் பொண்ணு நல்லா படிக்கிறவ…..நீங்க நெனச்சா முடியும் சார்…ப்ளீஸ்…..’’

செல்லி அந்தக் குரல்களை உன்னிப்பாக கேட்பது தெரிகிறது.

இப்போது அறையின் உட்புறம் காட்டப்படுகிறது.

சுமார் 200 சதுரஅடி கொண்ட அந்த அறையில் பள்ளி தாளாளர் ஒரு சேரில் அமர்ந்திருக்கிறார்.
அவரின் எதிரே பத்து வயது மாணவியுடன் அம்மா அமர்ந்திருக்கிறார். அவர்களின் பேச்சு தொடர்கிறது.

அம்மா : ‘‘சார், உங்க ஸ்கூல் பத்தி கேள்விப்பட்டுத்தான் என் மகள இங்க சேக்கறதுக்கு வந்தேன்….நாங்க மிடில் கிளாஸ் பேமிலி….நான் ஒன்னும் ரொம்ப குறைக்கச் சொல்லலை…

அம்மா பள்ளி தாளாளரிடம் கெஞ்சுவதுபோல் கேட்கிறார்.
அவரின் அருகில் அமர்ந்திருக்கும் குழந்தை முதல்வரையும், அம்மாவையும் ஏற, இறங்கப் பார்க்கிறது.

முதல்வர் : ‘‘இந்த ஸ்கூல் பத்தி கேள்விப்பட்டுத்தான் வந்தீங்கன்னு சொல்றீங்க…அப்புறம் கொறைச்சுக் கட்டிடறேன்னு சொன்னா எப்பிடி…?’’

அம்மா : ‘‘சார் .பதினைஞ்சாயிரங்கிறத பத்தாயிரமா குறைச்சிக் கேக்கறேன்’’

முதல்வர் : ‘‘உங்களுக்காக எங்க ரூல்சை மாத்தமுடியாது. உங்க குழந்தை நல்லா படிக்கிற குழந்தைன்னு சொல்றீங்க. உங்கள மாதிரி ஆளுங்களுக்குத்தான் கார்ப்பரேஷன் ஸ்கூல் அங்கங்க திறந்து வச்சிருக்காங்க…அங்க போய் சேர்த்துருங்க..எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு..கௌம்புங்க கௌம்புங்க’’


அதட்டலுடன் முதல்வர் பேச… அந்த அறையிலிருந்து அம்மாவும், குழந்தையும் சோகமாக வெளியேறுகின்றனர்.

வாசலில் நிற்கும் செல்லியைக் கவனிக்காதவாறு அம்மாவும், குழந்தையும் வெளியேறுகின்றனர்.

செல்லி அவர்களின் பின்னே நடக்கத் துவங்குகிறாள்.
அவர்கள் கடந்துசெல்லும் இன்னொரு வகுப்பறையிலிருந்து மாணவ, மாணவிகளுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் ஆசிரியரின் குரல் ஒலிக்கிறது.
அது செல்லிக்கும், குழந்தையோடு நடக்கும் அம்மாவிற்கும் கேட்கிறது.

ஆசிரியர் குரல் : ‘‘கற்கை நன்றே கற்கை நன்றே…பிச்சைப் புகினும் கற்கை நன்றே’’

மாணவ, மாணவிகளின் குரல் : ‘‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே’’

குரலைக்கேட்டு குழந்தை அம்மாவை ஏறிட்டுப் பார்க்கிறாள்.
அம்மா குழந்தையின் ஏக்கத்தைப் புரிந்தவள்போல பேசுகிறாள்.

அம்மா : ‘‘இந்த ஸ்கூல்ல படிக்கனும்னா நான் பிச்சையெடுத்தா போதாது….கொள்ளை அடிக்கணும்…அப்பத்தான் முடியும்..’’

அம்மா குழந்தையிடம் சொல்வதை செல்லி கேட்கிறாள்.
அவள் முகம் இயல்பு நிலையிலிருந்து சற்றே மாறுதல் அடைகிறது.

காட்சி 3

பகல்/வெளி மற்றும் உள்

DAY/EXTN/INT

இப்போது செல்லி வேறு ஒரு தெருவில் நடந்துகொண்டிருக்கிறாள்.
தூரத்தில் ஓர் இடத்தின் முன்னே நிறைய வாகனங்கள் நிற்பதை அவளின் பார்வை பதிவுசெய்கிறது.
அவள் அந்த இடத்தை நோக்கி நடக்கிறாள்.
அது ஒரு கல்யாண மண்டபம்.

மண்டபத்தின் முன்னே வாழைத் தோரணங்கள் மற்றும் இதர அலங்காரங்கள்.

மண்டபத்தின் உள்ளே சிலர் போவதையும், சிலர் வருவதையும் செல்லி பார்க்கிறாள்.
மண்டபத்தின் எதிரே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்கு அருகே நின்றுகொண்டு மண்டபத்தை பார்க்கிறாள்.

அவளின் மனதுக்குள் மீண்டும் கனவு உட்புகுந்து நினைவு மாறுகிறது.

இப்போது செல்லி மண்டபத்தின் சாப்பாட்டு அறையில் சாப்பிட்டு முடித்தவர்களின் இலையை ஒரு கூடையில் எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறாள்.

கல்யாணச் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்கிறாள்.

இறுதியில் ஓர் ஓரமாக அவளுக்கு ஒருத்தர் உணவு பரிமாறுகிறார்.

செல்லி அந்தச் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிடுகிறாள்.

திடீரென்று கல்யாண மண்டபத்திலிருந்து பலருடைய வித்தியாசமான கோபக் குரல்கள்.

குரல்கள் அணி 1 : ‘‘இதெல்லாம் நல்லாயில்லை…’’

குரல்கள் அணி 2 : ‘‘நீ முதல்லேயே சொல்லியிருக்கணும்…இப்போ வந்துட்டு உனக்குத்தான் பேசத் தெரிஞ்ச மாதிரி பேசற..அசிங்கம் உனக்குத்தான்.. எங்களுக்கில்ல..’’

செல்லியின் கனவு கலைந்துபோகிறது.
அவள் மண்டபத்தின் வாசலை உற்று நோக்குகிறாள்.

மணப்பெண்ணின் தந்தை மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு செல்லிக்கு அருகில் நிற்கும் காருக்கு உள்ளே நுழைவதற்காக கதவைத் திறந்துகொண்டே மணப்பெண்ணிடம் பேசுகிறார்.

தந்தை : ‘‘மாமனார் காசுலேயே வாழ்ந்திறலாம்னு நினைக்கிறான் அந்தப் பய……….உழைச்சு சாப்பிடனும்…அடுத்தவன் கொடுக்கிற பணத்துலயே உட்காந்து சாப்பிட்டு காலத்த ஓட்டிர்லாம்ன்னு நினைக்கிறான்போல…நீ கவலைப்படாதம்மா..நான் உனக்கு நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டிவைக்கிறேன்..’’

மணப்பெண் : ‘‘ஆமாப்பா….ஒரு பிச்சைக்காரனை கட்டிக்கிட்டாகூட சந்தோஷமா குடும்பம் நடத்தலாம்………..இந்த மாதிரி ஆளை கட்டிக்கிட்டா வாழ்க்கை ஃபுல்லா தினமும் செத்து செத்து பிழைக்கற மாதிரிதாம்ப்பா…. நீங்க எடுத்தது சரியான முடிவுதான்….கல்யாணம் நின்னு போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லப்பா….’’

மணப்பெண் சொல்லி முடிக்கவும் கார் புறப்படுகிறது.
மண்டபத்திலிருந்து நிறையபேர் வெளியே வந்து அவர்கள் புறப்பட்டுச் செல்வதை பார்க்கின்றனர்.

அவர்களிடமிருந்து ஒரு குரல் அழுத்தமாக செல்லியின் காதில் விழுகிறது.

குரல் : ‘‘சொன்னபடி பொண்ணு வீட்டுக்காரங்க சரியா நடந்துக்கல… வரதட்சனை பிரச்சினையால கல்யாணம் நின்னு போயிறிச்சி…அப்புறம் என்ன வேண்டிக்கிடக்கு…அவங்கவங்க வீட்டுக்கு கௌம்புங்க..’’

ஒரு நான்கு வயது குழந்தையும், அந்தக் குழந்தையின் அம்மாவும் செல்லியின் அருகில் வந்து நிற்கின்றனர்.

அந்தக் குழந்தை தன் அம்மாவிடம் கேட்கிறது.

குழந்தை : ‘‘அம்மா வரதட்சனைன்னா என்னம்மா?’’

அம்மா : ‘‘உங்க அப்பாகிட்ட கேளு..தெளிவாச் சொல்லுவாரு…’’

குழந்தையிடம் கோபித்துக்கொள்கிறாள் அம்மா.
செல்லியின் பார்வை மீண்டும் எதையோ யோசனை செய்கிறது.

காட்சி 4

பகல்/வெளி

DAY/EXTN

தெரு ஒன்றில் செல்லி நடந்துகொண்டிருக்கிறாள்.
அவளின் கால்கள் தடுமாறுகின்றன.

சற்று தூரத்தில் ஒரு ஹாஸ்பிட்டல் தெரிகிறது.
ஹாஸ்பிட்டலை நோக்கி நடக்க எத்தனிக்கிறாள்.
இருபதுஅடி தூரம் நடந்தவள், தெரு ஓரத்து குழாயில் சில பெண்கள் தண்ணீர் பிடிப்பதைப் பார்க்கிறாள்.

குழாயின் அருகே சென்று ஒரு பெண்ணிடம் கைகளை நீட்டியவாறு தண்ணீர் கேட்கிறாள்.

மற்ற பெண்கள் அதை கேலியாகப் பார்க்கின்றனர்.
ஒரு பெண் மட்டும் தன் குடத்தில் உள்ள தண்ணீரை செல்லிக்கு ஊற்ற, செல்லி இரண்டு கைகளையும் ஏந்தியவாறு தண்ணீர் குடிக்கிறாள்.

மீண்டும் செல்லி அங்கிருந்து நடக்கிறாள்.
நடந்துசெல்லும் பாதையில் நான்கடி நீளம் உள்ள கம்பு ஒன்றை பார்க்கிறாள்.

அதைக் குனிந்து எடுக்கிறாள்.
இப்போது வலது கையால் கம்பை ஊன்றிக்கொண்டு நடக்கிறாள்.

காட்சி 5

பகல்/வெளி

DAY/EXTN

செல்லி இப்போது நான்கு சாலைகளும் சந்திக்கும் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள்.

சிக்னல் விழுவதற்காக செல்லியின் பக்கம் உள்ள வாகனங்கள் காத்துநிற்கின்றன.
அந்த வாகன நெரிசலை செல்லி எரிச்சல் கலந்த ஆர்வத்தோடு பார்க்கிறாள்.

இப்போது அவளின் பார்வையில் ஒரு அதிசயம் தெரிகிறது.

சிக்னல் விழுவதற்காக காத்துநிற்கும் கார்களின் உள்ளே இருப்பவர்களிடம் ஒரு பெண் பிச்சை எடுப்பதைப் பார்க்கிறாள்.
அந்தப் பெண்ணின் கையில் ஒரு குழந்தை இருப்பதையும் செல்லி பார்க்கிறாள்.
இடது கையால் மண்டையைச் சொறிந்தவாறே எதையோ யோசிக்கிறாள் செல்லி.
செல்லிக்கு எதிர்திசையில் நின்றுகொண்டிருக்கும் லாரி டிரைவரிடம் ஒரு கான்ஸ்டபிள் பத்துரூபாய் வாங்குவதைப் பார்க்கிறாள்.
அந்தக் காட்சியைப் பார்த்து செல்லி புன்னகைக்கிறாள்.

காட்சி 6

பகல்/வெளி

DAY/EXTN

அகலம் குறைவான தெரு காட்டப்படுகிறது.
தெருவின் இடது பக்கம் டீ கடை தெரிகிறது.
அதன் ஓரத்தில் ஒரு நீள பெஞ்சில் இருவர் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
டீ கடையை சில மோட்டார் சைக்கிள்கள் கடந்துபோகின்றன.

டீகடை உரிமையாளர் டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார்.
பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படிக்கும் ஒருவர் பேப்பரை மடக்கி அடுத்த பக்கத்தைப் புரட்டுகிறார்.

அதில் ‘முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் ஊழல் பட்டியல் நீள்கிறது. விரைவில் கைதாவார்’ என்கிற செய்தி கொட்டை எழுத்தில் தெரிகிறது.

பேப்பர் படிப்பவர் அதை வாய்விட்டு படிக்கிறார்.

படித்துக்கொண்டே அருகில் அமர்திருப்பவரிடம் பேசத் தொடங்குகிறார்.

முதல் நபர் : ‘‘என்னய்யா உங்க ஆளு ஊழலப் பத்தி டெய்லி நியூஸ் வருது. பணம் சம்பாதிக்கறதுக்குன்னே அரசியலுக்கு வந்தவனோ?

இரண்டாம் நபர் : ‘‘ஆமா இப்போ நடக்கிற உங்க ஆட்சிக்காரங்கள்லாம் யோக்கியமா! அடுத்த தேர்தல்ல நாங்கதான் திரும்பவும் ஆட்சிக்கு வருவோம். அப்போ தெரியும் உங்காளுங்க லட்சனமெல்லாம்..’’

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது செல்லி அந்த டீ கடையை கடந்துபோகிறாள்.

செல்லியின் காதில் இவர்கள் பேசுவது கேட்கிறது.

பேசுபவர்களை சற்றே திரும்பிப் பார்க்கிறாள் செல்லி.

செல்லி திரும்பிப் பார்ப்பதை டீ ஆற்றிக்கொண்டிருக்கும் கடைகாரர் கவனிக்கிறார்.

டீ கடைகாரர் : (பெஞ்சில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து) ‘‘பிச்சைக்காரங்களவிட கேவலமானவங்களப் பத்தி நம்ம கடையில பேசக்கூடாது’’

பெஞ்சில் அமர்ந்திருக்கும் இருவரும் டீகடையாரின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கின்றனர்.
செல்லியின் காதிலும் டீகடைகாரர் பேச்சு விழுகிறது.
செல்லி அதைக் கேட்டவாறே வானத்தை நோக்குகிறாள்.

காட்சி 7

பகல் மற்றும் இரவு/ உள் மற்றும் வெளி

DAY and NIGHT/INT and EXTN

செல்லி இப்போது இன்னொரு தெருவில் நடந்துசெல்கிறாள்.

சற்று தூரத்தில் ஒரு சிறிய கோவில் தெரிகிறது.
அது தெருவின் இடது புறமாக அமைந்திருக்கும் கோவில்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் என்கிற போர்டு சற்றே மங்கலான எழுத்தில் கோவிலின் முகப்பில் தெரிகிறது.

செல்லி இப்போது கோவிலுக்கு அருகில் வந்துவிட்டாள்.
அவளின் வலது கையில் கம்பு இருக்கிறது.
இடது தோளில் பை தொங்குகிறது.

கோவிலுக்கு முன்புறம் நான்கைந்து பேர் சாமி கும்பிடுவது தெரிகிறது.

ஒரு நாய் செல்லியைப் பார்த்துக் குரைக்கிறது.

நாயின் குரலைக் கேட்டு சாமி கும்பிடுபவர்கள் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்க்கின்றனர்.

செல்லி நாயை சட்டை செய்யாமல் கோவிலுக்கு மிக நெருக்கமாக வந்துவிடுகிறாள்.

பூசாரி அம்மன் சிலைக்கு கற்பூரம் காட்டுகிறார்.
கற்பூரத் தட்டோடு பூசாரி முன்புறம் நிற்பவர்களிடம் வருகிறார்.

முன்புறத்தில் நின்று சாமி கும்பிடுபவர்கள் எரியும் கற்பூரத்தை கண்களிலும், முகத்திலும் ஒற்றிக்கொண்டு, கற்பூரத் தட்டில் நாணயங்களைப் போடுகின்றனர்.

செல்லி அந்தக் காட்சியைப் பார்க்கிறாள்.

பூசாரி அனைவருக்கும் திருநீறு கொடுக்கிறார்.

அனைவரும் திருநீறு பூசிக்கொள் கிறார்கள்.
பூசாரி உள்ளே செல்கிறார்.

ஒவ்வொருவராக கோவில் உண்டியலில் பணம் போடுகின்றனர்.

செல்லி அதை உன்னிப்பாகப் பார்க்கிறாள்.
உண்டியலும் அதற்கு நேர் எதிரே உள்ள அம்மன் சிலையும் செல்லியின் பார்வையில் தெளிவாகத் தெரிகின்றன.

கோவிலிருந்து இறங்கிவரும் பக்தர் ஒருவர் செல்லியை நோக்கி வருகிறார்.

செல்லியிடம் ஒரு ரூபாய் நாணயத்தை பிச்சையாகக் கொடுக்கிறார்.

செல்லி மெதுவாக வேண்டாம் என்கிற மாதிரி தலையை ஆட்டுகிறாள்.

பக்தர் மீண்டும் ஒரு ரூபாயை செல்லியிடம் கொடுக்க முயற்சிக்கிறார்.

செல்லி மூடியிருக்கும் தன் வலது கையை பக்தரிடம் காட்டுகிறாள்.

அதில் ஒரு ரூபாய் இருக்கிறது.

பக்தர் தலையாட்டியபடியே அங்கிருந்து செல்கிறார்.

செல்லி மெதுவாகச் சிரிக்கிறாள்.

செல்லியின் மனம் பழைய காட்சிகளை நினைவு கூர்கின்றது.

பிளாஸ்பேக் காட்சியாக இன்று காலையிலிருந்து செல்லி சந்தித்த மனிதர்களும், வசனங்களும் மீண்டும் திரையில் வந்து போகத் தொடங்குகின்றன.

கோவிலில் வெளிநாட்டுக்காரர்களிடம் பிச்சை கேட்கும்போது இரண்டு வாலிபர்கள் பேசிய வார்த்தைகள்.

பள்ளிக்கூடத்தில் பிரின்ஸிபல் ஒரு குழந்தையின் அம்மாவிடம் பேசிய வார்த்தைகள்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிற வார்த்தையை உச்சரிப்பது.

கல்யாண மண்டபத்தில் மணப்பெண் தன் தந்தையிடம் இவனைக் கட்டிக்கிறதவிட ஒரு பிச்சைக்காரனைக் கட்டிக்கலாம் என்று சொன்னது.

சிக்னலில் நிற்கும் லாரி டிரைவரிடம் கான்ஸ்டபிள் பணம் பெறுவது.

டீகடைகாரர் பேசிய வார்த்தைகள்.

கோவிலில் பூசாரியின் தட்டில் பக்தர்கள் பணம் போடுவது.
உண்டியலில் பக்தர்கள் பணம் போடுவது.

காட்சிகள் மறைந்தவுடன் செல்லி நடக்கிறாள்.

காட்சி 8

பகல் மற்றும் இரவு/ வெளி

DAY and NIGHT/ EXTN

சூரியன் மெதுவாக மறையும் காட்சி.

இருட்டத் தொடங்குகிறது.

செல்லி நகரின் ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டிருக்கிறாள்.

நன்றாக இருட்டி விடுகிறது.

செல்லி நடந்து செல்லும் சாலையில் இரவு வெளிச்சத்தில் பலவிதமான வாகனங்கள் சப்தம் எழுப்பியபடி சென்று கொண்டிருக்கின்றன.

செல்லி நடந்துகொண்டிருக்கிறாள்.
அவளின் நடை தள்ளாடுகிறது.

செல்லி தள்ளாடியபடியே இருட்டில் நடந்துசெல்வது ர்வைக்கு தூரமாகத் தெரிகிறது.

இருளோடு இருளாக அவள் உருவம் மெல்ல மறைந்துபோகிறது.

காட்சி 9

பகல்/ வெளி

DAY / EXTN

காகங்கள் கரைகின்றன.

பறவைகள் கூட்டைவிட்டு பறக்கின்றன.

சூரியன் உதிக்கிறது.

ஒரு பெண் வீட்டு வாசலில் கோலம் போடுகிறாள்.

கோவில் நடை திறக்கப்படுகிறது.

காலணிகள் பாதுகாக்கும் கடைக்காரர் கடையைத் திறக்கிறார்.

பிரதான சாலைகளில் போக்குவரத்து மெதுவாக அதிகரிப்பது காட்டப்படுகிறது.

பிச்சைக்காரர்கள் ஒவ்வொருத்தராக வந்து முன்தினம் அமர்ந்த இடத்தில் உட்கார்கின்றனர்.

முந்தைய தினம் செல்லிக்கு அருகில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் செல்லியின் இடத்தை உற்றுப் பார்க்கிறான்.

பின்னர் செல்லி வருவாளா என்கிற ஏக்கத்தில் தூரமாக நோக்குகிறான்.

பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதும், வருவதுமாக இருக்கிறார்கள்.

ஒரு பக்தர் உட்கார்ந்திருக்கும் பிச்சைக் காரர்களுக்கு நாணயங்களை தட்டில் போட்டுச் செல்கிறார்.

செல்லியின் இடம் காலியாகவே இருக்கிறது.

காட்சி 10

பகல்/ வெளி

DAY / EXTN

ஒரு சாலையில் வாகனப் போக்குவரத்து சுமாராக தெரிகிறது.

சாலையின் ஓர் இடத்தில் கூட்டம் தெரிகிறது.

மோட்டார் பைக்கில் அந்த வழியாகச் செல்லும் ஒருவர் கூட்டத்தைப் பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்துகிறார்.

கூட்டத்தை நோக்கி வருகிறார்.

கூட்டத்தை விலக்கியபடியே முன்னே வருகிறார்.

அங்கே ஒருவர் இறந்துகிடக்கிறார்.

அந்தப் பிணம் இப்போது மிக நெருக்கமாக காட்டப்படுகிறது.

அது செல்லியின் பிணம்.

இறந்துபோன செல்லியின் முகத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.

செல்லியின் உருவம் மிக நெருக்கமாக காட்டப்படுகிறது.

செல்லியின் வலது கை க்ளோசப் காட்சியாக காட்டப்படுகிறது.

அந்தக் கை விரல்களுக்கு இடையே ஒரு ரூபாய் நாணயம் பாதி வெளியே எட்டிப்பார்த்த நிலையில் தெரிகிறது.

இதயத்தை பிழிந்தெடுக்கும் கனமான பின்னணி இசை ஒலிக்கத் தொடங்குகிறது.

காட்சி 11

பகல்/ உள் மற்றும் வெளி

DAY /INT and EXTN

செல்லி இப்போது இன்னொரு தெருவில்

கோவில் வாசலில் செல்லி அமர்ந்திருந்த இடத்தில் இப்போது இன்னொரு நபர் வந்து அமர்கிறார்.

அதை செல்லிக்கு அருகில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர் பார்க்கிறார்.

இவர் பார்ப்பதை புதிய பிச்சைக்காரர் புரிந்துகொள்கிறார்.
புதிய பிச்சைக்காரர் : ‘‘நானு தாம்பரம் பக்கம்…. இந்த எடத்துக்கு யாராவது வருவாங்களா?’’

பழைய பிச்சைக்காரர் :  ‘‘செல்லின்னு ஒரு பொண்ணு வரும்…பத்து நாளா அந்தப் புள்ளைய காணோம்…ஏரியா மாறி போயிருச்சின்னு நெனக்கிறேன்…ஒருவேளை…அது வந்தா நீ அந்தப் பக்கமா தள்ளி உக்காந்துக்கோ….எடுக்கறது பிச்சை….இதுல எதுக்கு பொறாமை, போட்டி…

கடவுள் அவனவனுக்கு எவ்ளோ பிச்சை போடனும்னு முடிவு பண்ணியிருக்கானோ அந்தப் பிச்சைய யாராலும் தடுக்க முடியாது…’’

புதிய பிச்சைக்காரர் பழைய பிச்சைக்காரரின் பேச்சுக்குத் தலையாட்டிய படியே மெதுவாகப் புன்னகைக்கிறார்…

கோவிலுக்குள் பக்தர்கள் போவதுமாய், வருவதுமாய் இருக்கிறார்கள். அந்தக் காட்சிகள் ஸ்லோமோஷன் காட்சியாய் காண்பிக்கப்படுகிறது…

கட்

கோவிலின் உள்ளே சிவலிங்கத்திற்கு கற்பூரம் காண்பிக்கிறார் பூசாரி.

பக்தர்கள் பக்தியோடு கன்னங்களில் போட்டுக்கொள்கின்றனர்.

கற்பூரத் தட்டை பக்தர்களுக்குக் காண்பிக்கிறார்.

கற்பூரத்தை தொட்டுக் கும்பிட்டபடியே பக்தர்கள் பூசாரியின் தட்டுகளில் பணம் போடுகின்றனர்.கட்

பக்தர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள்.

கட்

வெளியே சிலர் பிச்சைக்காரர்களின் தட்டுகளில் காசு போடுகின்றனர்.

காட்சி 12

பகல்/ வெளி

DAY /INT and EXTN

இறந்து கிடக்கும் செல்லியின் பிணம் மீண்டும் காண்பிக்கப்படுகிறது.

ஓர் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து நிற்கிறது..

இரு ஊழியர்கள் ஆம்புலன்ஸிலிருந்து கீழே இறங்குகிறார்கள்…

கூட்டத்தை விலக்குகிறார்கள்.

செல்லியின் பிணத்தை ஸ்ரெட்ச்சரில் தூக்கி வைக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் உள்ளே செல்லியின் பிணம் ஏற்றப்படுகிறது.

ஊழியர் ஒருவர் மேலே ஏறி, ஸ்ட்ரெட்சரை நன்றாக இழுத்து, உள்ளே தள்ளி வைக்கிறார்.

இப்போது செல்லியின் கையிலுள்ள ஒரு ரூபாய் நாணயம் மெல்லிய சத்தத்துடன், அந்த ஊழியரின் கால்அருகே உருண்டு விழுகிறது….

ஊழியர் மெதுவாகக் குனிந்து, அந்த நாணயத்தை எடுத்து தன் மேல் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறார்.

பின்னணி இசை தொடர்ந்து ஒலிக்க திரையில் பெரிதாக எழுத்துகள் தோன்றுகின்றன…

‘‘இந்த வாழ்க்கையே இறைவன் நமக்குப் போட்டே பிச்சைதானே!”

பின்னணி இசை தொடர்ந்து ஒலிக்க படம் நிறைவு பெறுகிறது.

pitchai tamil screenplay

pitchai tamil script

sample for tamil script

sample for tamil screenplay

தமிழ் திரைக்கதை
தமிழ் சினிமா திரைக்கதை
தமிழ் ஸ்கிரீன்பிளே
திரைக்கதை சாம்பிள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் திரைக்கதை – ஜொள்ளு tamil thiraikathai – tamil screenplay

 

காட்சி 1 பகல் / வெளி / தண்ணீர் நிறைந்த குளம்

* ஆள் அரவரமற்ற பரந்து விரிந்த ஒரு குளம்.
* தண்ணீர் மெதுவாக அசைந்துகொண்டிக்கிறது.
* குளத்தைச் சுற்றியிருக்கும் கரையோரப் பகுதி.
* கரையோரங்களில் ஆங்காங்கே சில பனை மரங்களும், வேறுபிற மர வகைகளும் மெலிதாக வீசிக்கொண்டிருக்கும் காற்றின் வேகத்திற்கு மெல்ல அசைந்துகொண்டிருக்கின்றன.
* ஓர் அரசமரத்தின் கிளைகள் மெல்ல ஆடுகின்றன.
* அரசமரத்தின் கீழே இரண்டு அடி உயரமுள்ள பிள்ளையார் சிலை.
* பிள்ளையார் சிலையின் கழுத்தில் காய்ந்த மாலை.
* பிள்ளையாரின் இரண்டு கண்களையும் அந்த காய்ந்த மாலை மறைத்துக் கொண்டிருக்கிறது.
* பிள்ளையார் சிலை தமக்கு எதிர்புறமாக அசைந்துகொண்டிருக்கும் தண்ணீரைப் பார்த்தவாறு இருக்கிறது.
* பிள்ளையார் சிலைக்கும் அசைந்துகொண்டிருக்கும் தண்ணீருக்கும் இடையே இருபது அடி இடவெளியில் புல்தரை இருக்கிறது. (அதாவது, பிள்ளையார் சிலையிலிருந்து இருபது அடி தூரம் நடந்து சென்றால்தான் தண்ணீரில் கால்வைக்க முடியும்).
* புல்தரையும் தண்ணீரும் சங்கமிக்கும் இடத்தில் துணிகளைத் துவைப்பதற்கு ஏற்றாற்போல் மூன்று பெரிய கற்கள் கால் பங்கு தண்ணீரில் நனைந்தவாறு இருக்கின்றன.
* கரைநோக்கி வரும் குளத்து தண்ணீரின் சிறு அலைகள் அந்தக் கற்களில் மெதுவான சத்தத்தோடு மோதிக்கொள்கின்றன.

காட்சி 2 பகல் / வெளி / குளக்கரை

* ஒரு பெண் கையில் வாளியோடு நடந்துவருகிறாள். சேலை அணிந்திருக்கிறாள்.
* அவளின் இடது கையில் வாளியில் சில துணிகளும், துணிகளின் மேற்புரம் சோப்பு டப்பாவும் இருக்கின்றன.
* அவளின் தோளில் ஒரு துண்டு.
* நடந்துவருபவள் பிள்ளையார் சிலைக்கு எதிரே, அந்தப் பாறைக் கற்களின் அருகே வருகிறாள்.
* வாளியைக் கீழே வைக்கிறாள்.
* சுற்று முற்றும் பார்க்கிறாள்.
* இப்போது பிள்ளையார் சிலை க்ளோசப் காட்சியாக.
* காலில் அணிந்திருக்கும் செருப்பை ஓரமாக கழற்றி வைக்கிறாள்.
* மீண்டும் ஒருதரம் சுற்று முற்றும் பார்க்கிறாள்.
* சேலை முந்தானையை நீக்கி, தான் அணிந்திருக்கும் ஆடையை ஒவ்வொன்றாக கழற்றத் தொடங்குகிறாள்.
* பிள்ளையார் சிலை முகம் க்ளோசப் காட்சியாக.
* இப்போது அந்தப் பெண் பாவாடையை மார்புக்கு மேலே கட்டிக் கொள்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் தும்பிக்கை நுனிப்பகுதி மட்டும் மெல்ல அசைகிறது.
* அந்தப் பெண் பாவாடையை மீண்டும் ஒருதரம் சரிசெய்து கொள்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் தும்பிக்கை மெல்ல மேல்நோக்கி வளைந்து, வலது கண்ணை மறைத்திருக்கும் காய்ந்த மாலையை மெல்ல நகர்த்துகிறது.
* அந்தப் பெண் குனிந்து தன் கால் கொலுசுகளை சரி செய்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் வலது கண் மெல்லத் துடிக்கிறது. கண்ணைத் திறக்கிறது.
* அந்தப் பெண் குளிப்பதற்காக குளத்தின் உட்பகுதிக்கு மெல்ல நடந்து செல்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் தும்பிக்கை இப்போது இடது கண்ணை மூடிக்கொண்டிருக்கும் காய்ந்த மாலையை அகற்றுகிறது.
* அந்தப் பெண் நீரில் மூழ்கிக் குளிக்கிறாள்.
* பிள்ளையாரின் இடது கண்ணும் திறக்கிறது.
* அந்தப் பெண் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடியே உடல் முழுவதையும் தண்ணீருக்குள் நுழைத்து மூழ்கிக் குளிக்கிறாள்.
* பிள்ளையாரின் இரண்டு கண்களும் அந்தப் பெண்ணை சல்லாபக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன.
* அவள் கரையோரம் நடந்து வருகிறாள்.
* ஓரமாக புல்தரையில் வைக்கப்பட்டிருந்த வாளிக்குள் இருக்கும் சோப்பு டப்பாவை எடுக்கிறாள்.
* அங்குமிங்கும் பார்க்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் கண்களும் மெல்ல அங்குமிங்கும் பார்த்துக்கொள்கிறது.
* அவள் தன் உடலுக்கு சோப்பு போடுகிறாள்.
* பிள்ளையார் சிலையின் கண்கள் கூர்மையாகின்றன.
* அவள் தன் வலது காலை ஓரமாக இருக்கும் கல் மேல் வைத்து காலுக்கு சோப்பு போடுகிறாள்.
* பிள்ளையார் சிலையின் தும்பிக்கை எச்சில் ஊறுகிறது.
* அவள் இடது காலுக்கு சோப்பு போடுகிறாள்.
* பிள்ளையார் சிலையின் கண்கள் மேலும் கூர்மையாகின்றன. தும்பிக்கையிலிருந்து எச்சில் சொட்டு சொட்டாக கீழே விழுகிறது.
* சோப்பு போட்டுக்கொண்டே அந்தப் பெண்ணின் பார்வை தற்செயலாக பிள்ளையார் சிலையை நோக்கி திரும்புகிறது.
* சிலையின் கண்கள் டக் என்று மூடிக் கொள்கின்றன.
* அவள் வேறு திசையை பார்த்தபடியே தன் கழுத்துக்கு சோப்பு போடுகிறாள்.
* சிலையின் கண்கள் மெல்ல திறக்கின்றன.
* அவளின் பார்வை மீண்டும் பிள்ளையார் சிலையை நோக்கித் திரும்புகிறது.
* சிலையின் கண்கள் மீண்டும் படக்கென்று மூடிக் கொள்கின்றன.
* சோப்பு போட்டு முடித்துவிட்டு அவள் மீண்டும் குளத்தின் உட்பகுதிக்கு சென்று இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி குளிக்கிறாள்.
* சிலையின் கண்கள் அகலத் திறந்தபடியே அவளை உற்று நோக்குகிறது.
* தும்பிக்கையில் மீண்டும் எச்சில் சொட்டு போடுகிறது.
* அவள் தன் தலையை கோதியபடியே கரை நோக்கி வருகிறாள்.
* நாய் ஒன்று பிள்ளையார் சிலைக்கு அருகே நிற்கிறது.
* சிலையின் கண்கள் நாயை கோபத்தோடு பார்க்கின்றன.
* அவள் துண்டை எடுத்து தன் தலையை துவட்டுகிறாள்.
* சிலையின் கண்கள் உன்னிப்பாக அவளைப் பார்க்கின்றன.
* நாய் பிள்ளையார் சிலைக்கு முன்புறமாக வந்து நிற்கிறது.
* தும்பிக்கை முகர்ந்து பார்க்கிறது நாய்.
* தன் ஒருகாலைத் தூக்கியபடியே தும்பிக்கையின் நுனிப்பகுதி மேல் மூத்திரம் பெய்கிறது நாய்.

‘‘பாவம்
குளத்தங்கரைப் பிள்ளையார்
குளிக்கிறாள் அவள்!’’

கவிஞர் வெற்றிப்பேரொளியின் ‘சொல் பருக்கைகள்’ கவிதைத் தொகுப்பில் இந்தக் கவிதையைப் படித்து முடித்த நொடியில் என்னை அறியாமலேயே புன்னகைத்தேன். மனதுக்குள் அந்தக் கவிதையைப் பற்றிய காட்சிகள் தத்ரூபமாகத் தெரிந்தன. அந்தக் குளக்கரை எப்படி இருந்திருக்கும், பிள்ளையார் எப்படி இருந்திருப்பார், குளிக்கும் பெண்ணைப் பார்த்து பிள்ளையார் எப்படி வெட்கப்பட்டிருப்பார் அல்லது சலனப்பட்டிருப்பார் என்பதையெல்லாம் கற்பனையோடு ரசிக்கத் தூண்டியது அந்தக் கவிதை.
கவிதை தந்த ரசனையை காட்சிகளின் வழியாக, சற்று நகைச்சுவை கலந்து சொல்லும்படியாக திரைக்கதை அமைத்துப் பார்த்தேன்….
நன்றி, கவிஞர் வெற்றிப்பேரொளி அவர்களுக்கு!

திரைக்கதை – தாயாகினாள்

தாயாகினாள்

திரைக்கதை

எண்ணமும் எழுத்தும் செ.பாலமுருகன்

 

காட்சி 1 : பகல்/வெளி/தெரு

இருபது அடி அகலமுள்ள தெரு. அறுபது வயது ஆறுமுகம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருகிறார். லுங்கியும், பனியனும் அணிந்திருக்கிறார். தோளில் ஒரு துண்டு. அவருக்கு எதிர்புறமாக சைக்கிளுக்கு சற்று தூரத்தில் எதிரே 55 வயது கனி அம்மாள் நடந்து வருகிறார். (தளர்ந்த நடை, மெலிந்த உடல்)  கனி அம்மாளின் இடது கையில் ஒரு பையும், வலது கையில் சிறு கூடையும் உள்ளது. பையிலும், கூடையிலும் ஏதோ பொருட்கள். எதிரே வரும் கனி அம்மாளை சைக்கிளில் வரும் ஆறுமுகம் கவனிக்கிறார். அவரின் பார்வை கூர்மையாகிறது. இருபது மீட்டர் இடைவெளி. இப்போது கனி அம்மாளும் ஆறுமுகத்தைக் கவனிக்கிறார். (முகத்தில் ஒரு மாற்றம்)

ஆறுமுகம் சைக்கிளில் இருந்து இறங்கிக் கொள்கிறார். இவர்களுக்கு சற்று தூரத்தில் சில சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். சைக்கிளில் இருந்து இறங்கிய ஆறுமுகத்தின் அருகே கனி அம்மாள் நிற்கிறார். தனது வலது கையில் உள்ள பையை தரையில் வைத்துவிட்டு, முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொள்கிறார். இவர்களைக் கடந்து இருவர் ஏதோ பேசியபடியே நடந்து செல்கின்றனர்.

ஆறுமுகம் : ‘‘என்ன கனி… இப்பத்தான் சாமான்லாம் வாங்கிட்டுப் போறியா….’’

கனி அம்மாள் :    ‘‘(சோகமான புன்னகையுடன்) ஆமாண்ண’’

ஆறுமுகம் : ‘‘எந்த ஊருன்னு சொன்ன…?’’

கனி அம்மாள் :  ‘‘முத்தையாபுரம்ண்ண…’’

ஆறுமுகம்:  ‘‘அவங்களுக்கு எல்லா வெவரமும் தெரிஞ்சிதான வர்றாங்க….’’

கனிஅம்மாள்: ‘‘ம்ம்ம்…’’ (தலையாட்டுகிறார்)

ஆறுமுகத்தின் தோளில் இருக்கும் துண்டு கீழே விழுகிறது. கனி அம்மாள் அந்தத் துண்டை குனிந்து எடுத்து ஆறுமுகத்திடம் கொடுக்கிறார். ஆறுமுகம் கனி அம்மாளிடம் இருந்து துண்டை வாங்கி தோளில் போட்டுக்கொண்டே….

ஆறுமுகம் : ‘‘என்னமோ போ…..உன் தலையெழுத்தும்…உம் மக   தலையெழுத்தும் இப்டி ஆயிருச்சி….. கவலப்படாத…. இந்த சம்பந்தம் எப்டியும் முடிஞ்சிடும்…’’

ஆறுமுகம் கனி அம்மாள் கண்களைப் பார்க்க, அவரின் கண்களில் கண்ணீர் வருகிறது. அதை முந்தானையால் துடைத்துக் கொள்கிறார்.

ஆறுமுகம் : ‘‘அழுது என்ன ஆவப்போது…போ..போ…    வாங்கிட்டுப்போறதுல்ல…ஏதாவது செஞ்சி வையி….’’

ஆறுமுகம் ஏதோ யோசிக்கிறார். பின்னர்…கனி அம்மாளிடம்…

ஆறுமுகம் : ‘‘நான் எத்தணை மணிக்கு வரணும்னு சொல்லு’’

கனி அம்மாள் : ‘‘அவங்க நாலு மணிக்கு வர்றதா சொல்லி அனுப்பியிருக்காங்க….’’

ஆறுமுகம் : ‘‘நானு மூன்றரைக்கெல்லாம் வந்துர்றேன்…போயி வேலையப் பாரு ….கவலப்படாத.. ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு வழி நிச்சயமா வச்சிருப்பான்’’

கனி அம்மாள் சரி என்று தலையாட்டிக் கொள்கிறார். ஆறுமுகம் சைக்கிளில் ஏறி புறப்படுகிறார். கனி அம்மாள் பையை எடுத்துக்கொண்டு நடக்கிறார்.

 

காட்சி 2 : பகல்/வெளி/ கனி அம்மாள் வீடு

ஓடு போட்ட வீடு தெரிகிறது. வீட்டின் முன் விசாலமான இடம் இருக்கிறது. நான்கைந்து ஆடுகள் எதையோ மேய்ந்து கொண்டிருக்கின்றன. வீட்டின் கதவு மூடி இருக்கிறது. பழங்காலத்து கதவு. கனி அம்மாள் அந்த வீட்டின் வாசலை நெருங்குகிறார். கதவு அருகே பையையும், கூடையையும் கீழே வைத்துவிட்டு, கதவைத் தட்டுகிறார்.

கனி அம்மாள் : ‘‘மீனாட்சி…மீனாட்சி’’(கதவைத் தட்டியபடியே கூப்பிடுகிறார்)

கதவு திறக்கப்படுகிறது. திறக்கப்பட்ட கதவின் அருகே உட்புறமாக 36 வயது மீனாட்சி நிற்கிறாள். மீனாட்சியின் அழகான முகம். மீனாட்சி கனி அம்மாளைப் பார்க்கிறாள். மெலிதாகப் புன்னகைக்கிறாள். அந்தச் சிரிப்பில் சோகமும் அடங்கியிருக்கிறது. மென் புன்னகையுடன் மீனாட்சி கதவைத் தாண்டி  வெளிப்புறமாக வருகிறாள்.

வாசற்படியைத் தாண்டும்போது, மீனாட்சி ஒரு காலை கெந்தி, கெந்தி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. மீனாட்சி எதுவும் பேசாமல் பையை மட்டும் எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறாள். மீனாட்சியின் பின்னாடியே கனி அம்மாள் கூடையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்கிறார். அது இரண்டு அறைகள் மட்டுமே உள்ள வீடு. இரண்டாவது அறையைத் தாண்டி சிறிய அடுக்களை உள்ளது. அடுக்களையின் ஓரத்தில் மீனாட்சி பையை வைக்கிறாள். மீனாட்சிக்குப் பின்னாடி கனிஅம்மாள் வந்து கூடையை வைக்கிறார். கூடையை வைத்துவிட்டு கனி அம்மாள் மீனாட்சியை உற்றுப் பார்க்கிறார். அந்தப் பார்வையில் ஒரு ஏக்கம் தெரிகிறது.

கனி அம்மாள் : ‘‘பைக்குள்ள உளுந்து இருக்கு..அத ஊறவச்சி அரைச்சி எடுத்திரு…கேசரிக்கும்  சாமான் வாங்கிட்டு வந்திருக்கேன்..’’

மீனாட்சி : (கனி அம்மாளைப் பார்த்து சரி என்பதுபோல் தலையை ஆட்டுகிறாள்)

கட்

அடுக்களைக்குப் பின்புறம் இரண்டு சென்ட் காலி இடம். அந்த இடத்தில் நான்கு பசு மாடுகள் கூரை வேயப்பட்ட கொட்டகையில் கட்டப்பட்டிருக்கின்றன. இரண்டு கன்றுக்குட்டிகள் தனியாக கட்டப்பட்டிருக்கின்றன. கனி அம்மாள் அடுக்களைக்குப் பின்புறம் உள்ள அந்த காலி இடத்திற்கு வருகிறார். ஒரு சிமெண்டுத் தொட்டியில் தண்ணீர் நிறைய உள்ளது. தண்ணீரீன் மேல் ஜக்கு மிதக்கிறது. காற்றின் மெல்லிய வேகத்தில் தண்ணீரில் மிதக்கும் ஜக்கு மெதுவாக ஆடிக்கொண்டிருக்கிறது. கனி அம்மாள் தொட்டியின் அருகே நிற்கிறார். அவரின் கண்களில் நீர் வருகிறது. மெதுவாகக் குனிந்து ஜக்கில் தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவுகிறார். கனி அம்மாள் கண்ணீர் வழியும் முகத்தைக் கழுவுவதை அடுக்களையின் வாசலில் நின்று கொண்டிருக்கும் மீனாட்சி பார்க்கிறாள். மீனாட்சியின் கண்களுகம் கலங்குகின்றன.

இப்போது மீனாட்சி அடுக்களைக்கு உட்புறமாக திரும்பிக் கொள்கிறாள். முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். பையிலிருக்கும் உளுந்து பொட்டலத்தை எடுக்கிறாள். பிரிக்கிறாள். ஒரு சட்டியில் உளுந்தைக் கொட்டி, தண்ணீர் ஊற்றுகிறாள். ஏதோ யோசித்தபடியே மீனாட்சி வீட்டின் முன்புற அறைக்கு நடக்கிறாள். இப்போதும் மீனாட்சி ஒரு காலை கெந்தி கெந்தி நடப்பது மீண்டும் தெளிவாக காட்டப்படுகிறது. முன் அறையின் சுவற்றில் உள்ள கடிகாரத்தில் மீனாட்சி மணி பார்க்கிறாள். கடிகாரம் 10.15 என்று காட்டுகிறது.

காட்சி 3 : பகல்/உள்/ ஆறுமுகம் வீடு.

ஆறுமுகம் தன் வீட்டில் ஒரு நார்க் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார். அவர் மனைவி  ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார். ஆறுமுகம் மனைவியிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடிக்கிறார். தண்ணீரைக் குடித்துவிட்டு சொம்பை மனைவியிடம் கொடுக்கிறார். சொம்பை மனைவி வாங்கிக் கொள்கிறார். ஆறுமுகம் மனைவியைப் பார்க்கிறார்.

ஆறுமுகம் : ‘‘இன்னைக்கி சாயந்தரம் தங்கச்சி கனியம்மாவோட மீனாட்சிய பொண்ணு பாக்கறதுக்கு வர்றாங்களாம்.   நீயும் வர்றியா…அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கும்’’

மனைவி ஆறுமுகத்தை ஏறிட்டுப் பார்க்கிறார். முகத்தில் கடுப்பு.

மனைவி :   (எரிச்சலில்) ”உங்களுக்கு வேற வேலையே இல்லியா…அந்தப்புள்ளைய இதுவரைக்கும்  எத்தணைபேரு  பொண்ணு பாத்துட்டு போயிருப்பாங்க…அதான் நொண்டின்னு தெரியுதுல்ல…  மாப்பிள்ளையும் நொண்டியா பாத்து முடிச்சிருக்கணும்..  அப்டி இல்லேண்ணா அம்பது சவரன் நகைபோட்டு சீரு செனத்தி கொடுக்கறதுக்கு வக்கு இருக்கணும்…எதுவும் இல்லாம…மாப்பிள்ள வேணும்.. மாப்பிள்ள வேணும்னு சொல்லி…வருஷத்தைக் கடத்திட்டு, இப்போ நாலு கழுத வயசு  ஆகப்போற நேரத்துல அந்தப் பொண்ணுக்கு  கல்யாணம் என்ன வேண்டி கிடக்கு. ஊரே சிரிக்குது…  இதுக்கு ஒத்தாசையா நான் வேற வரணுமாக்கும்?…

மனைவி கத்திப் பேசிவிட்டு வீட்டின் உள் அறைக்குள் செல்கிறார். தன் மனைவி செல்வதை ஏதோ சிந்தனையுடன் பார்க்கிறார் ஆறுமுகம்.

காட்சி 4 : பகல்/உள் மற்றும் வெளி/ கனி அம்மாள் வீடு

மீனாட்சி அடுக்களை ஓரத்தில் இருக்கும் ஆட்டுக்கல்லில் உளுந்தை ஆட்டிக்கொண்டிருக்கிறாள். வெள்ளை வெளேரென்று மாவு அரைபட்டுக் கொண்டிருக்கிறது.

கட்

வீட்டின் பின்புறம் மாடுகளுக்கு வைக்கோல் வைத்துக் கொண்டிருக்கிறார் கனி அம்மாள். கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது.

கதவு குரல் : ‘‘மீனாட்சி..மீனாட்சி….’’

கனி அம்மாள்  : (மாட்டிற்கு வைக்கோலை எடுத்துப்போட்டுக் கொண்டே)….‘‘மீனாட்சி…போய் யாருன்னு பாரு’’

கட்

ஆட்டுக்கல்லில் இருந்து மீனாட்சி எழுந்திரிக்கிறாள். மீனாட்சியின் வலது கையில் நுரைத்த உளுந்து மாவு ஓட்டிக்கொண்டு இருக்கிறது. இடது காலை கெந்தி கெந்தி நடந்தபடியே  இடது கையால் வாசற் கதவைத் திறக்கிறாள். கதவுக்கு வெளியே பூக்காரி நிற்கிறாள்.

பூக்காரி : ‘‘என்ன மீனாட்சி…இன்னைக்கி உன்ன பாக்கறதுக்கு வர்றாங்களாமே…அம்மா பத்து முழம் மல்லி  கேட்டுச்சி…’’

பூக்காரி சொல்வதை நிதானமாகக் கேட்கிறாள் மீனாட்சி. அவளின் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. இயல்பாக இருக்கிறாள். பூக்காரி வலது கையால் கூடையில்  இருக்கும் பூவை முழம் போடுகிறாள். இப்போது கனி அம்மாள் வாசற் கதவுக்கு அருகே வந்து நிற்கிறார். அவர் வந்திருப்பதை பூக்காரியும், மீனாட்சியும் பார்க்கின்றனர்.

பூக்காரி :  ‘‘என்ன கனியம்மா…கவலப்படாத.. எல்லாம் நல்லபடியா  கண்டிப்பா முடிஞ்சிரும் பாரு…’’ (பூவை முழம் போட்டுக்  கொண்டே பேசுகிறாள்)

பூக்காரி பேசும்போது மீனாட்சி சோகம் கலந்து புன்னகைத்துக் கொள்கிறாள்.

காட்சி 5 : பகல்/உள்/கனி அம்மாள் வீடு

கடிகாரம் ஒடிக்கொண்டிருக்கிறது. அதில் நேரம் 2.20 என்று காட்டப்படுகிறது. அடுக்களையில் மீனாட்சி வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள். உள் அறையிலிருந்து கனி அம்மாள் தனது தலை முடியை அள்ளி முடிந்துகொண்டே மீனாட்சியின் அருகே வருகிறார்.

கனி அம்மாள் : ‘‘மணி ஆவுது…நீ போயி கை,கால் அலம்பிட்டு   டிரஸ் மாத்தி ரெடியாவு…இதை நான் பாத்துக்கறேன்’’

மீனாட்சி கனி அம்மாளைப் பார்த்து சரி என்பதுபோல் தலை ஆட்டுகிறாள்.

காட்சி 6 : பகல்/ வெளி/தெரு

தெருவில் ஆறுமுகம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருகிறார். வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்துள்ளார்.

காட்சி 7 : பகல்/ வெளி மற்றும் உள்/ கனி அம்மாள் வீடு

வீட்டு வாசலில் மீனாட்சி கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள். ஆறுமுகம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே கனி அம்மாளின் வீட்டு முன் வருகிறார். ஓரமாக சைக்கிளை ஸ்டேன்ட் போட்டு நிறுத்துகிறார். கோலம் போடும் மீனாட்சி ஆறுமுகத்தைப் பார்க்கிறாள். ஆறுமுகம் மீனாட்சியைப் பார்க்கிறார். மீனாட்சி கோலப் பொடி டப்பாவை கீழே வைத்துவிட்டு எழுந்திரிக்கிறாள். ஆறுமுகத்தைப் பார்த்து மெதுவாக சிரித்தபடியே தலையை ஆட்டியபடியே…

மீனாட்சி : ‘‘வாங்க மாமா….’’

ஆறுமுகம் மீனாட்சியின் அருகே வருகிறார். அவளின் தலையை வருடித் தடவியபடியே வானத்தைப் பார்க்கிறார்.

ஆறுமுகம் : (மைன்ட் வாய்ஸ்) ‘‘இந்தக் காலத்துல பொண்ணாப் பொறக்கறதே குத்தம்…அதவிடக் குத்தம்  ஏழையாப் பொறக்கறது….இந்த ரெண்ட விடவும் பெரிய குத்தம் ஊனத்தோட பொறக்கறது…உங்கிட்ட இந்த மூணுமே இருக்கே…இது யாரோட குத்தம்ணு எனக்குத் தெரியல…’’

ஆறுமுகம் கீழே பார்க்கிறார். கோலம் பாதி போடப்பட்ட நிலையில் இருக்கிறது.

ஆறுமுகம் : ‘நீ கோலத்தை போட்டு முடி…’’

இப்போது கனி அம்மாள் வீட்டின் உள்ளிருந்து வாசலுக்கு வருகிறார். ஆறுமுகம் கனி அம்மாளைப் பார்க்கிறார். கனி அம்மாள் ஆறுமுகத்தைப் பார்க்கிறார்.

கனி அம்மாள் : ‘‘உள்ள வாங்கண்ண…. வாசல்யே நின்னுட்டீங்க’’(மென் சோகம்)

ஆறுமுகம் : ‘‘வர்றேன்….வர்றேன்…’’

ஆறுமுகம் வாசற்கதவைத் தாண்டி வீட்டிற்குள் நுழைகிறார். மீனாட்சி தொடந்து கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள்.

காட்சி 8 : பகல்/வெளி மற்றும் உள்/ கனி அம்மாள் வீடு

கடிகாரம் 4.15 என்று நேரம் காட்டுகிறது. ஆறுமுகம் கனி அம்மாளின் வீட்டிற்குள் முன் அறையில் பாயில் அமர்ந்திருக்கிறார். அந்த அறை முழுவதும் பாய்கள் விரிக்கப்பட்டிருக்கின்றன. பழைய மின்விசிறி மேலே ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டின் உள்ளே மீனாட்சி உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள். கனி அம்மாள் அடுக்களையில் கேசரி கிளறி இறக்குகிறார்.

ஒரு வாகனத்தின் ஹாரன் சத்தம் கேட்கிறது. ஆறுமுகத்தின் பார்வையில் ரியாக்ஷன்.

கட்

ஒரு வேன் கனி அம்மாளின் வீட்டு முன்பு வந்து நிற்கிறது. ஆறுமுகம் வேன் சத்தம் கேட்டு எழுந்து வாசலுக்கு வருகிறார். வேனிலிருந்து பத்துபேர் இறங்குகின்றனர். அதில் மூன்று பெண்களும், ஐந்து ஆண்களும், பத்து வயது சிறுமியும், ஆறு வயது சிறுவனும் இருக்கின்றனர். அதை ஆறுமுகம் வாசலில் நின்றபடியே பார்க்கிறார்.

இப்போது, ஆறுமுகத்தின் பின்னாடியே கனி அம்மாள் வந்து நிற்கிறார். கனி அம்மாளின் முகத்தில் ரியாக்ஷன். வேனிலிருந்து இறங்கியவர்கள் கனி அம்மாளின் வீட்டை நோக்கி நடந்து வருகின்றனர். வீட்டை நெருங்குகின்றனர். ஆறுமுகம் வாசலை விட்டு வெளியே வந்து அவர்களை வரவேற்கிறார்.

ஆறுமுகம் : ‘‘வாங்க…வாங்க….’’

இன்முகத்துடன் அவர்களை வரவேற்கிறார். கனி அம்மாள் ஆறுமுகத்தின் பின்னால்  நின்றுகொண்டே வருகிறவர்களை கையெடுத்துக் கும்பிட்டபடியே வரவேற்கிறார்.

கனி அம்மாள் : ‘‘வாங்க…வாங்க…’’

கனி அம்மாளும், ஆறுமுகமும் வந்தவர்களை வீட்டிற்கு உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். வந்திருந்த அனைவரும்  வீட்டை நோட்டம் பார்த்தபடியே இருக்கின்றனர். கனி அம்மாள் அதைக் கவனிக்கிறார். ஆறுமுகமும் கவனிக்கிறார்.

கனி அம்மாள் : ‘‘உட்காருங்க…’’

தரையில் விரிக்கப்பட்டிருக்கும் பாயில் ஒவ்வொருவராக அமர்கின்றனர். ஆறுமுகமும் அவர்களில் ஒருவராக அமர்ந்து கொள்கிறார். பத்து வயது சிறுமியும், ஆறுவயது சிறுவனும் நாற்பத்து ஐந்து வயது நிரம்பிய ஒருவரின் அருகில் இடமும், வலமுமாக உட்கார்ந்து கொள்கின்றனர். அந்த நபர் சற்று கூச்சத்துடன் இருக்கிறார். அவரின் முகம் தெளிவாக காட்டப்படுகிறது. தலையின் முன்புறத்தில் வழுக்கையின் ஆரம்ப நிலை தெரிகிறது. சிறுவன், சிறுமி முகத்தில் குழப்பம். அந்த 45 வயது நபருக்கு எதிர்புறமாக ஆறுமுகம் அமர்ந்திருக்கிறார். சிறுவனின் முகத்தில் ஏதோ அச்சம் தெரிகிறது. சிறுவன் 45 வயது நபரை கையால் சுரண்டுகிறான்.

45 வயது நபர்  : ‘‘என்னடா…’’ (மெதுவாக கெஞ்சலுடன்)

சிறுவன் : ‘‘எதுக்குப்பா இங்க வந்திருக்கோம்…’’

சிறுவன் கேட்பதை அருகில் இருக்கும் பெண் கவனிக்கிறாள்.

பெண்: ‘‘உங்களுக்கு சின்னம்மா வரப்போறாங்க…’’

சிறுவன் முகத்தில் ரியாக்ஷன். இவர்கள் பேசுவதைக் கவனித்தபடியே கனி அம்மாள் வீட்டின் உட்புறம் செல்கிறார். அடுக்களையில் மீனாட்சி அலங்காரத்துடன் நின்றுகொண்டிருக்கிறாள். மீனாட்சி இப்போது மிக அழகாகத் தெரிகிறாள். அவளின் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கனி அம்மாள் சிறிய தட்டுக்களில் வடையையும், கேசரியையும் எடுத்து வைக்கிறார். அதற்கு மீனாட்சியும் துணை புரிகிறாள். முன் அறையில் அனைவரும்  அமர்ந்திருக்கின்றனர். நிசப்தமாக இருக்கிறது. ஆறுமுகத்தின் அருகில் அமர்ந்திருக்கும் எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆறுமுகத்திடம் பேச்சு கொடுக்கிறார்.

முதியவர் : ‘‘நீங்க பொண்ணுக்கு என்ன வேணும்?’’

ஆறுமுகம்: ‘‘மாமா’’

முதியவர் : ‘‘மாமான்னா…எந்த வழியில?’’ (கன்னத்தை சொறிந்து கொள்கிறார்)

ஆறுமுகம் : ‘‘கனி அம்மாளுக்கு பெரியப்பா மகன்….’’

முதியவர் : ‘‘ஓஹோ…சித்தப்பா மக்க…பெரியப்பா மக்கன்னு சொல்லுங்க….’’

ஆறுமுகம் : ‘‘ஆமாங்க…’’(தலையாட்டிச் சொல்கிறார்)

ஆறுமுகம் தன் எதிரே அமர்ந்திருக்கும் 45 வயது நபரைப் பார்க்கிறார். இதை முதியவர் கவனிக்கிறார்…

முதியவர் : ‘என்ன அப்படி பாக்கறீங்க..அவருதான் மாப்பிள்ளை..என்னோட ஒரே பையன்…போன வருஷம் மருமக….மஞ்சக்காமாளையில் போய்ச்சேர்ந்துட்டா….அவருக்கு  இடது பக்கத்துல    இருக்கறது என்னோட பேரன்… வலது பக்கத்துல  இருக்கறது என்னோட பேத்தி…இந்த ரெண்டையும் நல்லபடியா உங்க மருமக பாத்துக்கணும்….’’

பெரியவர் ஆறுமுகத்திடம் பேசும்போது மாப்பிள்ளையின் முகம் தெளிவாகக் காட்டப்படுகிறது. சிறுவனின் முகமும், சிறுமியின் முகமும் தெளிவாக காட்டப்படுகிறது. ஆறுமுகம் தலையாட்டிக் கொள்கிறார்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மீனாட்சி ஒரு பெரிய தட்டின்மீது சிறு சிறு தட்டுக்களில் வடை, கேசரியை எடுத்து வந்து மாப்பிள்ளை உட்பட அனைவருக்கும் கொடுக்கிறாள். மீனாட்சி கெந்தி கெந்தி நடப்பதை உட்கார்ந்திருக்கும் பெண்கள் கவனிக்கின்றனர். முதியவரும் இதைக் கவனிக்கிறார். அனைவருக்கும் பரிமாறிவிட்டு, மீனாட்சி ஒரு ஓரமாக நின்று கொள்கிறாள். சிலர் வடையையும், கேசரியையைம் பிய்த்துப்,பிய்த்துப் சாப்பிடுகின்றனர். முதியவர் மீனாட்சியை உற்றுப் பார்க்கிறார். அமர்ந்திருக்கும் மூன்று பெண்களும் மாறி மாறி மீனாட்சியைப் பார்க்கின்றனர். மாப்பிள்ளை மீனாட்சி நிற்பதை பார்க்கிறார். இதை ஆறுமுகம் கவனிக்கிறார்.

ஆறுமுகம் : ‘‘பெரிய ஊனம்லாம் கிடையாது…மத்த பொம்பளைங்கைங்க செய்யற எல்லா வேலையும் அசால்ட்டா செஞ்சிருவா எம் மருமக…’’

முதியவர் : ‘‘எப்டி ஆச்சி?’’

ஆறுமுகம் : ‘‘போலியா அட்டாக்…’’ (கவலையுடன்)

ஒரு பெண் குறுக்கிடுகிறார்.

பெண் : ‘‘சரி…அதான்… ஒரு கால் சரியா வராது கொஞ்சம் ஊனம்ன்னு முன்னமே தெரிஞ்சிதான வந்தோம்…பரவால்ல…இப்போ மத்த விஷயங்களைப் பேசிறலாம்…’’

அவர்கள் ஊனம் என்று பேசும்போது    மீனாட்சி மெதுவாக உட்புறமாக அடுக்களைக்குள் செல்கிறாள். அடுக்களைக்குள் ஒரு பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடிக்கிறாள். மீனாட்சியின் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கிறது. முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். அவர்கள் பேசும் குரல் மட்டும் மீனாட்சிக்கு கேட்கிறது.

பெண்குரல் : ‘‘என் தம்பி பதினைஞ்சாயிரம் சம்பளத்துல வேலை பாக்கறான்….உங்க பொண்ணு இந்த சின்னப் புள்ளைங்கள ரெண்டையும் நல்லபடியா பாத்துக்கிட்டாலே போதும்…ஆனாலும், சம்பிரதாயம்னு ஒன்னு இருக்கு…அத நாங்க கேக்காம நீங்களாவே செஞ்சிடறது நல்லது…’’

மீனாட்சி மெதுவாக அடுக்களையின் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறாள். முன் அறையில் அவர்கள் பேசும் குரல் மட்டும் மீனாட்சியின் காதுகளில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆறுமுகம் குரல் : ‘‘இந்தப் பிள்ளைக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே தகப்பனார் காலமாயிட்டாரு!  ஏதோ…. நாலு மாடுங்கள வச்சி பால்கறந்து பொழப்பு நடத்திக்கிட்டிருக்காங்க…    அவங்களால பெரிசா ஒன்னும் செய்ய முடியாது…பொண்ணுக்கு ஆறு சவரன் நகை இருக்கு…ரொக்கமா ஒரு முப்பது ஆயிரம் கொடுக்க முடியும்…இதுதான் நிலைமை.’’

முன் அறையில் அவர்கள் பேசுவதும், மீனாட்சி அடுக்களையில் உட்கார்ந்து அதைக் கேட்டுக்கொண்டிருப்பதும் மாறி, மாறி திரையில் காண்பிக்கப்படுகிறது.

முதியவர் குரல் : ‘‘சரி…உங்க நிலவரம் புரியுது…மேற்கொண்டு இருபதாயிரம் கொடுத்திருங்க. நாங்க வேற எதுவும் கேட்டுக்கல…’’

மீனாட்சியின் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டு நிற்கிறது. இப்போது முன் அறையில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பகுதி.

ஆறுமுகம் : ‘‘உங்க எண்ணத்த சொல்லிட்டீங்க. கல்யாணத்த கோயில்ல வச்சுப்போம். அது எங்க செலவு. மேற்கொண்டு இருபதாயிரங்கறது ரொம்ப அதிகம்….’’

ஆறுமுகம் முதியவரிடம் பேசிவிட்டு ஓரமாக நிற்கும் கனி அம்மாளை பார்க்கிறார். கனி அம்மாள் அமைதியாக நிற்கிறார். அவர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை.     ஆறுமுகம் கனி அம்மாளைப் பார்ப்பதை அனைவரும் பார்க்கின்றனர்.

முதியவர் : ‘‘என்ன பெரிசா கேட்டுட்டோம்… முப்பதாயிரம் தர்றீங்க அதுல மேற்கொண்டு இருபதாயிரம் சேத்து ஐம்பதாயிரம். அவ்ளோதான். அம்பதாயிரம் ரொக்கம் கொடுக்கறது இந்தக் காலத்துல பெரிய தொகை கிடையாது.’’

ஆறுமுகம் : ‘‘ஐயோ, அவ்வளவு முடியாது…முப்பத்தி அஞ்சாயிரம் கொடுக்கலாம்….இதெல்லாம் செய்யறதுக்கே ரெண்டு மாடுங்கள வித்தாத்தான் முடியும்’’

அமர்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் குறுக்கிட்டுப் பேசுகிறார்.

பெண் : ‘‘இந்த வீடு யாரோடது?’’

ஆறுமுகம்  : ‘‘என்னோடது….முப்பது வருஷமா இந்த வீட்டுலதான் இவங்க வாழ்க்கை ஓடுது…’’

முதியவர்  : ‘‘சரி…நாற்பதாயிரமாக் கொடுத்திருங்க..நாங்க மேற்கொண்டு   உங்கள கஷ்டப்படுத்த விரும்பல…’’

ஆறுமுகம் நின்றுகொண்டிருக்கும் கனி அம்மாளை ஏறிட்டுப் பார்க்கிறார். கனி அம்மாள் சரி என்பதுபோல் தலையாட்டுகிறார்.

ஆறுமுகம் : ‘‘தங்கச்சி சரின்னு சொல்றா….அப்படீன்னா எனக்கும் சம்மதம்தான்…மத்தபடி வேற பேசறதுக்கு எதுவும் இல்லை. கல்யாணத் தேதி நீங்களே சொல்லிருங்க…’’

முதியவர் : ‘‘நாங்க நாளெல்லாம் குறிச்சிட்டுத்தான் வந்தோம்…வர்ற 24ம் தேதி, ஞாயித்துக் கெழமை …சிவன் கோயில்ல  வச்சிக்கலாம்…  அங்கதான் ராசியான எடம்னு பேசிக்கறாங்க.’’

ஆறுமுகம் : ‘‘அதெல்லாம் உங்க விருப்பப்படி நாங்க விட்டிர்றோம்…’’

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

முதியவர் : ‘‘அப்போ நாங்க போயிட்டு வர்றோம்…’’

அடுக்களையில் மீனாட்சி உட்கார்ந்தபடியே கைகளால் தரையில் எதையோ வரைந்து கொண்டிருக்கிறாள். ஆறுமுகத்தின் குரல் கேட்கிறது.

ஆறுமுகம் குரல் : ‘‘மீனாட்சி…… இங்க வா தாயி…எல்லாரும் கௌம்பறாங்க…’’

மீனாட்சி அடுக்களையிலிருந்து முன் அறைக்கு கெந்தி கெந்தி நடந்து வருகிறாள். முன் அறையில் எல்லோரும் கிளம்புவதற்கு தயாராக எழுந்து நிற்கின்றனர். முன் அறையில் வந்து நிற்கும் மீனாட்சியை மாப்பிள்ளை ஏறெடுத்துப் பார்க்கிறார்.   மீனாட்சி மாப்பிள்ளையையும், அவருக்குப் பக்கத்தில் நிற்கும் இரு குழந்தைகளையும் உன்னிப்பாகப் பார்க்கிறாள். இரு குழந்தைகளும் மீனாட்சியை மாறி மாறி பார்க்கின்றனர். ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களை மீனாட்சி கையெடுத்துக் கும்பிட்டவாறே வழியனுப்பி வைக்கிறாள்.

இரு குழந்தைகளும் கடைசியாக வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். சிறுவன் நடந்து செல்லும்போதே திரும்பி திரும்பி மீனாட்சியைப் பார்க்கிறான். வேனுக்குள் ஒவ்வொருவராக ஏறுகின்றனர். சிறுவனும், சிறுமியும் வேனுக்குள் ஏறுவதற்கு முன்பு வீட்டு வாசலின் அருகே நிற்கும் மீனாட்சியை மீண்டும் ஒருதரம் எட்டிப் பார்த்துக் கொள்கின்றனர்.

காட்சி 9 : பகல்/வெளி/தெரு

தெருவின் ஓரத்தில் இருக்கும் அடிபம்ப்.  ஒரு  பெண் அதில்  தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு பெண் குடத்தோடு நிற்கிறாள். குடத்தோடு நிற்கும் பெண்ணிண் பார்வை தூரத்திற்குச் செல்கிறது. மீனாட்சி இடுப்பில் காலி குடத்தோடு கெந்தி கெந்தி நடந்து வருகிறாள்.

பெண் 1 : ‘‘அக்கா…அங்க பாருங்க…மீனாட்சி வாறா… அவளுக்கு….. நாலுநாளுக்கு முன்னாடி கல்யாணம் நிச்சயமாயிருச்சாம்….மாப்பிள்ளைக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காம்’’

மீனாட்சி குழாயடிக்கு வந்து விடுகிறாள். அந்தப் பெண்களைப் பார்த்து மெலிதாக சிரித்துக் கொள்கிறாள்.

பெண் 1 : ‘‘என்ன மீனாட்சிக்கா…… கல்யாணம் நிச்சமாயிருக்குன்னு கேள்விப் பட்டோம்…உண்மையா?’’

மீனாட்சி  : (சோகமாகச் புன்னகைத்தபடியே) ‘‘ஆமா…’’

பெண் 2 : ‘‘எங்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைப்பீங்கள்ல…’’

மீனாட்சி : ‘‘கண்டிப்பா….’’

பெண் 1 : ‘‘என்னைக்கு கல்யாணம்…..?’’

மீனாட்சி : ‘‘அடுத்த வாரம் 24ம் தேதி ஞாயித்துக்கிழமை…சிவன் கோவில்ல’’

பெண் 2 : ‘‘கவலைப்படாதீங்க…நீங்க எங்க இருந்தாலும் சமாளிச்சிக்குவிங்க’’

மீனாட்சி மெலிதாகச் சிரித்துக் கொண்டே தலையாட்டிக் கொள்கிறாள். இரண்டு பெண்களும் தண்ணீர்க் குடங்களைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். மீனாட்சி குடத்தை குழாய்க்கு நேரே வைத்துவிட்டு பம்ப்பை அடிக்கத் தொடங்குகிறாள்.

காட்சி 10 : பகல்/வெளி மற்றும் உள்/கனி அம்மாள் வீடு

மீனாட்சி மாட்டிற்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு கன்றுக் குட்டி அவளின் அருகே நிற்கிறது. மீனாட்சி கன்றுக் குட்டியைத் தடவி விடுகிறாள். கன்றுக்குட்டி மீனாட்சியின் கைகளை மூக்கால் முகர்ந்து பார்க்கிறது. மீனாட்சியின் கைகளை கன்றுக்குட்டி தன் நாக்கினால் நக்கிவிடுகிறது. கனி அம்மாள் வீட்டின் உள் அறையிலிருந்து மீனாட்சியை அழைக்கிறார்.

கனி அம்மாள் குரல் : ‘‘மீனாட்சி இங்க வா….’’

மீனாட்சி மாட்டிற்கு தண்ணீர் வைப்பதை அப்படியே நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைகிறாள். கனி அம்மாள் ஒரு சூட்கேசில் துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே நூறு ரூபாய்த் தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மீனாட்சி கனி அம்மாளின் அருகே போய் நிற்கிறாள். மீனாட்சியை கனி அம்மாள் பார்க்கிறார்.

கனி அம்மாள் : ‘‘சாயந்தரம் ஜவுளி எடுக்க போலாம்னு மாமா சொல்லியிருக்காரு….மாப்பிள்ளை வீட்டுல இருந்தும் வர்றாங்களாம்…நீயும் வர்றியா?’’

மீனாட்சி :  (தலையாட்டுகிறாள்)

கனி அம்மாள் : ‘‘கௌம்பும்போது பெட்டிக்குள்ள இருக்கற மூணு பவுன் செயினை எடுத்து கழுத்துல போட்டுக்க.. பாக்கறதுக்கு அழகா இருக்கும்’’

கனி அம்மாள் தன் அருகே இருக்கும் ரூபாய்த் தாள்களை மீனாட்சியிடம் எடுத்துக் கொடுக்கிறார்.

கனி அம்மாள் : ‘‘இந்தா…இதுல அஞ்சாயிரம் ரூபா இருக்கு….’’ (ஏதோ யோசிக்கிறார்)…..மாடுங்கள வாங்கறதுக்கு நாளைக்கு ஆளுங்கள கூட்டிட்டு வர்றதா புரோக்கர் சொல்லியிருக்காரு…’’

மீனாட்சி கனி அம்மாளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறாள்.

மீனாட்சி  : ‘‘எல்லா மாட்டையும் வித்துறப் போறீங்களா?’’

கனி அம்மாள் மீனாட்சியை ஏறிட்டுப் பார்க்கிறார்.

கனி அம்மாள் : ‘‘வேற என்ன பண்றது?…’’

மீனாட்சி : ‘‘அப்புறம் நீங்க என்ன பண்ணுவீங்க…’’

கனி அம்மாள் : ‘‘கடவுள் இருக்கான்… ஏதாவது வழிகாட்டாமலா  இருப்பான்….’’

காட்சி 11 : பகல்/வெளி/பேருந்து நிறுத்தம்

பேருந்து நிறுத்தம்  ஒன்றில் கனி அம்மாள், ஆறுமுகம், மீனாட்சி மூவரும் பேருந்திற்காக காத்து நிற்கின்றனர். இன்னும் ஒருவர் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்கிறார். அவர் கனி அம்மாள் மற்றும் ஆறுமுகத்திடம் பேச்சு கொடுக்கிறார்.

நபர் : ‘‘என்ன ஆறுமுகம்ண்ணே..எப்டியோ மீனாட்சிக்கு பேசி முடிச்சிட்டீங்க…இனிமே கனி அம்மாவுக்கு கவலை கிடையாது….’’

கனி அம்மாள் மெதுவாகப் புன்னகைத்துக் கொள்கிறார். மீனாட்சி சேலை முந்தானையால் தன் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.

ஆறுமுகம் : கடவுள் இப்பத்தான் கண்ண தொறந்து இந்தப் புள்ளைய பாத்திருக்கான்… மகளுக்கு  கல்யாணமே ஆவாதோன்னு கனி பட்ட வேதனை எனக்கு ஒருத்தனுக்குத்தான் தெரியும்….’’

நபர் : ‘‘மாடுங்கள விக்கப்போறதா ஊர்ல பேசிக்கிட்டாங்க. என்ன விலைன்னா கொடுக்கலாம்…’’

ஆறுமுகம் கனி அம்மாளைப் பார்க்கிறார்…

கனி அம்மாள் : ‘‘புரோக்கர் மாடசாமிகிட்ட சொல்லிருக்கேன்…அவருகிட்ட பேசிக்கோங்க….’’

மீனாட்சியின் பார்வையில் தூரத்தில் பேருந்து வருவது தெரிகிறது.

மீனாட்சி : ‘‘பஸ் வருதும்மா…’’

அனைவரின் பார்வையும் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் பேருந்தை நோக்கிச் செல்கிறது.   பேருந்து அருகில் வந்து நிற்கிறது. மூவரும் பேருந்தில் ஏறுகின்றனர்.

 

காட்சி 12 பகல்/வெளி/ ஜவுளிக்கடையின் முன்புறம்

பெரிய ஜவுளிக்கடையின்   முன்புறத் தோற்றம். ஓங்கி உயர்ந்த கட்டடம். தெருக்களில் மக்கள் நெருக்கம். பலதரப்பட்ட வாகனங்கள்  சாலையில் ஊர்ந்தபடி சென்றுகொண்டிருக்கின்றன. ஜவுளிக்கடையின் முன்பாக இடது ஓரத்தில் ஆறுமுகம், கனி அம்மாள், மீனாட்சி மூவரும் நின்று கொண்டிருக்கின்றனர். மீனாட்சி கைகளைக் கட்டியவாறு நிற்கிறாள். இவர்களைக் கடந்து ஜவுளிக் கடையின் உள்ளும், புறமும் பலர் போவதும், வருவதுமாக இருக்கின்றனர். ஆறுமுகத்தின் பார்வை யாரையோ தேடுகிறது.

ஆறுமுகம் : (மைன்ட் வாய்ஸ்) ‘‘இங்கதான நிக்கச் சொன்னாங்க…!’’

ஓர் ஆட்டோவில் மாப்பிள்ளை, முதியவர், சிறுவன், சிறுமி நால்வரும் வந்து இறங்கு கின்றனர். மாப்பிள்ளை ஆட்டோவுக்கு பணம் கொடுக்கிறார். ஆறுமுகம் அவர்களைக் கவனித்து விடுகிறார்.

ஆறுமுகம் : ‘‘கனிம்மா…அந்தா வந்துட்டாங்க பாரு…’’

கையை நீட்டிச் சொல்கிறார். கனி அம்மாளும், மீனாட்சியும் ஆறுமுகம் கைகாட்டும் திசை நோக்கிப் பார்க்கின்றனர். மீனாட்சியின் பார்வையில் சிறுவனும், சிறுமியும் தெரிகின்றனர். மீனாட்சியின் முகத்தில் ரியாக்ஷன். மூவரும் அவர்களை நோக்கி நடக்கின்றனர். இவர்கள் நடந்து வருவதை சிறுவன் பார்க்கிறான். சிறுவன் தன் அப்பாவிடம் (மாப்பிள்ளை) கையைச் சுரண்டியபடியே…

சிறுவன் : ‘‘ப்பா..அங்க பாருங்க..அவங்க வாறாங்க..’’

சிறுவன் கைகாட்டும் திசையை மாப்பிள்ளை பார்க்கிறார். அவரின் பார்வையில் மீனாட்சி தெரிகிறாள். அவர்களை நோக்கி இவர்கள் நடக்கின்றனர். இரு வீட்டாரும் சேர்ந்து விடுகின்றனர். மாப்பிள்ளை மீனாட்சியைப் பார்க்கிறார். மீனாட்சியின் முகத்தில் கொஞ்சம் வெட்கம், தயக்கம். சிறுவனும், சிறுமியும் மீனாட்சியை உற்றுப் பார்க்கின்றனர். அதை மீனாட்சி கவனிக்கிறாள்.

முதியவர்  : ‘‘கொஞ்சம் லேட்டாயிருச்சி….’’(ஆறுமுகத்திடம்)

ஆறுமுகம் : ‘‘பரவால்ல…பொம்பளைங்க யாரும் வரலையா…?’’

முதியவர்  : ‘‘வந்துக்கிட்டே இருக்காங்க…நாம உள்ள போயி மொதல்ல மாப்பிள்ளைக்கு வேண்டியத வாங்கிரலாம்..அவங்கள்லாம் வந்தபிறகு பொண்ணுக்கு வாங்கிக்கலாம்’’

சிறுவன் மீனாட்சியின் அருகில் வருகிறான். மீனாட்சி அவனுடைய தோளில் கை வைக்கிறாள். பின்னர் அவன் தலையை வருடுகிறாள். சிறுவனிடம் ஏதோ பேசுகிறாள். இதை மாப்பிள்ளை ஜாடையாக கவனிக்கிறார். சிறுவன் பதில் சொல்லிக்கொண்டே மீனாட்சியை ஏறிட்டுப் பார்க்கிறான். அந்தப் பார்வையில் பாசம் இருக்கிறது. மாப்பிள்ளையின் அருகே நிற்கும் சிறுமியும் மீனாட்சியைப் பார்க்கிறாள். சிறுமியை தன் அருகே வருமாறு ஜாடையாக அழைக்கிறாள் மீனாட்சி. சிறுமி மீனாட்சியின் அருகே வருகிறாள்.

ஆறுமுகம் : ‘‘வாங்க..கடைக்கு உள்ள போவோம்…’’

எல்லோரும் ஜவுளிக் கடையின் படிக்கட்டுகளில் ஏறுகின்றனர். ஆறுமுகம், முதியவர், மாப்பிள்ளை, கனி அம்மாள் ஆகியோர் முன்னாடி செல்ல, மீனாட்சியும், இரு குழந்தைகளும் ஒன்றாக படிக்கட்டுகளில் ஏறுகின்றனர். மீனாட்சியின் இடது பக்கம் சிறுவனும், வலது பக்கம் சிறுமியும் ஏறுகின்றனர். சிறுவனின் கைகளை மீனாட்சி தன் விரல்களால் பிடித்திருக்கிறாள். மீனாட்சி கெந்தி, கெந்தி நடப்பதால் முன்னாடி நடந்து செல்பவர்களுக்கும், மீனாட்சிக்கும் சற்று இடைவெளி விழுகிறது. மீனாட்சி சிறுவனையும், சிறுமியையும் மாறி மாறி பார்த்துக் கொள்கிறாள்.

இப்போது, மீனாட்சிக்கு எதிரே ஒரு பெண் வழிவிடாமல் மறித்துக்கொள்கிறாள். மீனாட்சி அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்க்கிறாள். வழிமறித்த பெண் மீனாட்சியைப் பார்த்துச் புன்னகைக்கிறாள். அதை சிறுவனும், சிறுமியும் கவனிக்கின்றனர். மீனாட்சி அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறாள். மீனாட்சியின்  முகத்திலும் அந்தப் பெண்ணிண் முகத்திலும் சந்தேகப் புன்னகை. வழிமறித்த பெண்ணின் கழுத்து நிறைய தங்க நகைகள் மிளிர்கின்றன. அந்தப் பெண்ணின் அருகே அவளின் கணவர் பணக்காரத் தோரனையுடன் நிற்கிறார். அந்தப் பெண் விலை உயர்ந்த பட்டுப்புடவை கட்டியிருக்கிறாள். அவளின் பெயர் கவிதா.

கவிதா : ‘‘ஏய்…நான் யாருன்னு தெரியுதா….’’ (முகத்தில் ஆச்சரியம்)

மீனாட்சி உற்றுப் பார்க்கிறாள். மீனாட்சியின் முகத்தில் மெல்லிய புன்னகை தவழ ஆரம்பிக்கிறது.

மீனாட்சி : ‘‘நீ கவிதாதான….’’ (மெலிதான சிரிப்பு)

கவிதா : ‘‘கரெக்ட்டா ஞாபகம் வச்சிருக்கியே!”

மீனாட்சி : ப்ளஸ் டூ படிக்கும்போது…பாதியிலேயே கல்யாணம் ஆகி, நீ போனத எப்டி மறக்க முடியும்…’’

கவிதா : ‘‘ப்ப்ப்….பா…எவ்ளோ வருஷம்…நல்லா இருக்கியா?’’

மீனாட்சி : ‘‘ம்ம்ம்…நீ எப்டி இருக்கே….?’’

இருவரும் பேசிக்கொள்வதை சிறுவனும், சிறுமியும் வித்தியாசமாகப் பார்க்கின்றனர்.

கவிதா : ‘‘எனக்கென்ன குறைச்சல்…..பாரு நாப்பது மைல் வித்தியாசத்துலதான் நாம இருக்கோம்….ஆனாலும்  பாத்து பல வருஷம் ஆகுது….’’

கவிதா தன் கணவரை மீனாட்சிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள்.

கவிதா : ‘‘என்னோட வீட்டுக்காரர்….’’ (கை நீட்டியவாறே)

மீனாட்சியும், கவிதாவின் கணவரும் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இப்போது, கவிதா தன் ஹேண்ட் பேக்கைத் திறக்கிறாள். அதிலிருந்து ஒரு கவரையும்  பேனாவையும் எடுக்கிறாள். கவரின்மேல் பேனாவால் எழுதுகிறாள். அந்தக் கவரை மீனாட்சியிடம் நீட்டுகிறாள்.

கவிதா : ‘‘இந்தா…வர்ற ஞாயிற்றுக் கெழமை 24ம் தேதி என் மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கோம்…கண்டிப்பா நீ குடும்பத்தோட    வரணும்….’’

கவிதா சொல்வது மீனாட்சிக்கு மீண்டும் ஒரு முறை கேட்கிறது….

கவிதா : ‘‘…வர்ற ஞாயிற்றுக் கெழமை 24ம் தேதி என் மகளுக்கு      கல்யாணம் வச்சிருக்கோம்…கண்டிப்பா நீ குடும்பத்தோட வரணும்..

மீனாட்சியின் முகம் ஏதோ ஒரு பரிதவிப்பில் கவிதாவின் கண்களைப் பார்க்கிறது. பின்னணி இசையில் மீனாட்சியின் பரிதவிப்பு உணர்த்தப்படுகிறது.

கவிதா : ‘‘ஏய்…என்ன…அப்டி பாக்கற…கண்டிப்பா வந்துறணும்..’’

மீனாட்சி : ‘‘சரி’’ என்பதுபோல் தலையாட்டுகிறாள்…சிறுவனும், சிறுமியும் மீனாட்சிக்கு சற்று தள்ளி நிற்கின்றனர்.

கவிதா : ‘‘உனக்கு எத்தனை குழந்தைங்க?’’

மீனாட்சி அமைதியாகப் புன்னகைக்கிறாள். சிறுவனும், சிறுமியும் மீனாட்சியை கூர்ந்து கவனிக்கின்றனர். மீனாட்சி இரு குழந்தைகளையும்  முக ஜாடையால் தன்  அருகே வருமாறு அழைக்கிறாள். இரு குழந்தைகளும் மீனாட்சியின்  அருகே தயக்கத்துடன் வந்து   ஒட்டிக்கொள்கின்றனர். வலது புறம் சிறுமியும், இடது புறம் சிறுவனும்…

மீனாட்சி : ‘‘இவ மூத்தவ..பேரு……ஈஸ்வரி… இவன் ரெண்டாவது……பேரு….கணேச மூர்த்தி….’’

கவிதா இரண்டு குழந்தைகளையும் உற்றுப் பார்க்கிறாள்.

கவிதா : ‘‘வீட்டுக்காரர் வரலையா?’’

மீனாட்சி : ‘‘கடைக்கு உள்ள போயிட்டாங்க’’

சிறுவனும், சிறுமியும் மீனாட்சியின் இடுப்பில் தலைசாய்த்தவாறே முழிக்கின்றனர். கவிதா சிறுவனின் கன்னத்தில் தட்டிக்கொடுத்தவாறே…

கவிதா : ‘‘உங்க அம்மா ரொம்ப நல்லவங்க…நல்லா படிப்பாங்க…அவங்க மாதிரியே நீங்களும் நல்லா படிக்கணும்…என்ன’’

சிறுவனும், சிறுமியும் சரி என்பதுபோல் தலையாட்டுகின்றனர்.

கவிதா : ‘‘நான் கௌம்பறேன் மீனாட்சி…கண்டிப்பா என் மகள் கல்யாணத்துக்கு வரணும்…குழந்தைங்க..உன் வீட்டுக்காரரையும் மறக்காம அழைச்சிட்டு வரணும்…’’

மீனாட்சி  ‘சரி’… என்பதுபோல் தலையாட்டிக் கொள்கிறாள்.

கவிதா புறப்படுகிறாள்…மீனாட்சி இரு குழந்தைகளோடு மீண்டும் ஜவுளிக்கடையின் படிக்கட்டுகளில் கெந்தியபடியே ஏறத் தொடங்குகிறாள். சிறுவனும், சிறுமியும் மீனாட்சியைப் அண்ணாந்து பார்த்துக்கொண்டே அவளோடு படிக்கட்டுகளில் ஏறுகின்றனர்.

இந்தக் காட்சி ஸ்லோ மோஷனில் காண்பிக்கப்படுகிறது.

மனதை வருடும் பின்னணி இசை ஒலிக்க மீனாட்சி மேல் நோக்கிப் பார்க்கிறாள். அவள் இரு குழந்தைகளோடும் படிகளில் ஏறி வருவதை ஜவுளிக்கடையின் வாசலுக்கு உட்புறம் நிற்கும் மாப்பிள்ளை பாசத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார். பின்னணி இசை தொடர்ந்து ஒலிக்க, தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மேல் நோக்கி நகர்ந்தபடியே படம் நிறைவடைகிறது.