Tag Archives: tamil sample script

Naan Sigappu Manithan Vimarsanam 40%

Naan Sigappu Manithan Vimarsanam

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

naan sigappu manithan

அதிர்ச்சியான விஷயங்களைக் கேட்டவுடன் தூங்கிப் போகும் ஒருவனின் கதை.

தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்கிற விஷாலுக்கு, ஏதாவது அசம்பாவிதமான சத்தம் திடீரென காதில் கேட்டால், உடனே தூங்கிப்போகிற வியாதி. அப்படித் தூங்கிப் போகிற நேரத்தில், தன் எதிரே, தன் அருகே இருப்பவர்கள் பேசுகிற பேச்சையும், எழுகிற சத்தங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, கண் விழித்தவுடன் அவற்றை நினைவுகூறும் அபூர்வ வியாதி அது.

படிப்பில் கெட்டிக்காரத்தனத்துடன் விளங்குகிற விஷாலுக்கு, இந்த வியாதி பெரும் சிக்கலை தோற்றுவிக்கிறது. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு நிறுவனமும் வேலை கொடுக்க முன்வரவில்லை.

எந்நேரமும் தூக்கம் வரலாம் என்பதால், தாய் சரண்யா இவரை தனியாக எங்கும் அனுப்புவதில்லை. நன்றாகப் படித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்கிற விஷாலை, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிப் பிரிவுக்கு அழைக்கிறார்கள். அதற்காக 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்கிறார் விஷால். அவர்களும் ஓ.கே சொல்ல, தனக்கு இருக்கும் நோயின் தன்மை உணர்த்தும் ஆராய்ச்சி மாணவராக, தன்னை மற்றவர்கள் பயன்படுத்தும் நோக்கில் கணிசமான தொகையை மாதம் தோறும் சம்பாதிக்கத் தொடங்குகிறார்.

விசித்திர நோயுடன் வாழ்கிற விஷாலுக்கு பத்து ஆசைகள் இருக்கின்றன. அந்த பத்து ஆசைகளும் மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், அவரின் கோணத்தில் அந்த ஆசைகள் அனைத்தும் சவாலானவைகள்.

விஷாலின் பத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிற ஒரு பெண்ணாக லட்சுமி மேனன் இவரின் வாழ்க்கையில் குறுக்கிட, அந்தப் பெண்ணுக்கும் இவருக்குமான உறவு நட்பாகி, காதலாகி கசிந்துருகும்போது, வழக்கமான பாணியில் இடைவேளை வந்துவிடுகிறது. அதன்பிறகு…….

அதன்பிறகு உட்டாலங்கடி கிரி கிரியாக நீங்கள் பார்ப்பது அக்மார்க் தமிழ்ச் சினிமா.

இனி விமர்சனத்திற்கு வருவோம்.

பீர் குடித்தவன் போதை பத்தவில்லை என்பதால் பாதி போதையில் பிராந்திக்கு மாறி வாந்தி எடுக்க, இருக்கிற போதையும் போய்த் தொலைந்து, எரிச்சலில் கொண்டுபோய்விடுகிறது. இதைத்தான் செய்துகாட்டியிருக்கிறார் ‘நான் சிகப்பு மனிதன்’ இயக்குநர் திரு.

விசித்திர நோயுடன் வாழ்கிற உத்தம நாயகனுக்கு, அவன் மனம் விரும்பியபடியே காதலியாய் மனைவி கிடைக்கிறாள். அதுவும் செல்வச் செழிப்போடு. அழகான காதல் கதையை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் என ஆச்சரியுடத்துடன் புருவங்கள் உயர்த்தும்போது, நானும் விதிவிலக்கு அல்ல என்பதை நிரூபித்து, நம்மை புருவங்களை இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்து, அவ்வப்போது பார்வையை வேறுபக்கம் திரும்ப வைக்கிறார்.

முன்பாதியில் நாயகனுக்கும், நாயகிக்கும் வாழ்வியல் ரீதியாக எழும் முரண்பாடுகளைக் கொண்டே மீதிக் கதையை நகர்த்திச் செல்லும் திரைக்கதை உத்திகள் ஏராளமாக இருந்தும், இடைவேளைக்குப் பிறகு பாதை மாறியிருப்பது, அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு, முருகன் கோவிலில் மொட்டையடித்த கதையாக இருக்கிறது.

நம் தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று. மையப் புள்ளியாக விளங்கும் கதை எதுவோ, அதிலிருந்து விலகிச் சென்று வித்தியாசம் காட்டி நம் திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற வறட்டுப் பந்தாவுக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ மேலும் ஓர் உதாரணம்.

வளமான ஒளிப்பதிவு, குறைசொல்ல முடியாத பின்னணி இசை, ஜெயப்பிரகாஷ், சரண்யா மற்றும் சக நடிகர்களின் கச்சிதமான நடிப்பு என பல விஷயங்கள் குறைசொல்ல முடியாத அளவிற்கு இருந்தாலும், பிரதான சாலையில் ஜரூராகப் போய்க்கொண்டிருந்த பென்ஸ் காரை முட்டுச் சந்துக்குள் நுழையவிட்டு பஞ்சராக்கிய கதையாக, இடைவேளைக்குப் பின்னான திரைக்கதை உத்தி, மொத்த படத்தையும் கீழே தள்ளி சாய்க்கிறது.

மதிப்பெண்கள் 40%

தகுதி இருந்தால் ஆசைப்படுங்கள்! What is your qualification to start a business

தகுதி இருந்தால் ஆசைப்படுங்கள்!

பங்களா வீடு, சொகுசுக் கார், வீட்டினுள்ளும், அலுவலகத்திலும் குளு குளு அறைகள், பலரும் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு சமூக அந்தஸ்து! இப்படி வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனை யாருக்குத்தான் இல்லை. ஆனால், கற்பனை காண்பவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வாழ்க்கை அமைகிறது. அந்த ஒரு சிலரின் வாழ்வு சூழலைக் கவனித்தோமானால், அவர்கள் ஏதாவது தொழில் செய்து கொண்டிருப்பார்கள்.  இந்த வசதியான வாழ்க்கைச் சூழலை அனுபவிக்கவேண்டும், அதற்கு நாமும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களிடத்தும் உண்டு. வாய்ப்பு கிடைக்கும்போது இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுத்து களத்தில் குதித்துவிடுகின்றனர்.

2 1

இப்படிக் குதித்தவர்கள் எல்லோரும் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்களா? தொழில் செய்பவர்கள் எல்லோரும் வசதியான வீட்டில்தான் வசிக்கிறார்களா? சொகுசுக் காரில்தான் உலா வருகிறார்களா? தொழில் செய்பவர்கள் அனைவருக்குமே சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கிறதா?
இதை அலசி, ஆராய்ந்து பார்த்தோமானால், அங்கே  பல உண்மை நிலவரங்கள் இது வரையில் நாம் கேள்விப்படாதவையாக இருக்கும். ஏனென்றால், தொழில் செய்து காணாமல் போனவர்களின் பட்டியலும் நிறைய உண்டு.

தொழில் செய்வதற்கும் வேலை செய்வதற்கும் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன. வேலை செய்தால் அதற்கு  சம்பளம் கிடைக்கும். தொழில் செய்தால் லாபம் கிடைக்கும். சம்பளம் மெதுவாக உயரும். ஒரு எல்லையைத் தாண்டாது. வேலை செய்பவருடைய சம்பளத்தை இன்னொருவர் நிர்ணயிக்கிறார். ஆனால், தொழில் செய்பவருடைய  லாபம் அவருடைய உழைப்பையும், திறமையையும் பொருத்து வேகமாக உயரும். அதன் உயரத்திற்கு அளவே இல்லை. லாபம் அதிகரிக்க அதிகரிக்க நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் நல்லபடியாக வாழமுடியும். இதனால்தான்,  தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணம் யாவரிடமும் வியாபத்திருக்கிறது.

ஆக, லாபம், வசதியான வாழ்க்கை என்கிற என்கிற எண்ணம்தான் பலரிடம் தொழில் ஆசையைத் தூண்டிவிடுகிறது. ஆசைதான் எல்லாவற்றிற்கும் காரணம்.  ஆனால், ஆசைப்படுவதற்கும் ஒரு தகுதி வேண¢டுமல¢லவா?   அது நம்மிடம் இருக்கிறதா என்பதை உணர்ந்து பார்த்து, செயல்படுபவர்கள் மட்டுமே, இந்த போட்டி நிறைந்த உலகில் நிலையாக நீடித்து நிற்கமுடியும். இங்கே, தகுதியற்றவர்கள் ஒரு செயலைச் செய்யும்போது முதல் சுற்றிலேயே காணாமல் போய்விடுவார்கள். உலகத்தில் எந்தச் செயலைச் செய்வதற்கும் ஒரு தகுதி தேவைப்படுகிறது. அப்படியிருக்கும்போது தொழில் செய்து  லாபத்தைப் பெறுவதற்கும் தகுதிகள் இருக்கும்தானே!

அப்படியானால்  தொழில் செய்ய முனைவோருக்கு எந்த மாதிரியான தகுதிகள் வேண்டும்?
இந்தக் கேள்விக்குப் விடை, நீங்கள் செய்யும் தொழிலைப் பொருத்தே இருக்கும். உதாரணமாக, ஒரு தனியார் நிறுவனம்  மூன்று நபர்களை வேலைக்கு எடுக்கவிருப்பதாக விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. 1.காவலாளி, 2. கணக்கர், 3. மேலாளர். இந்த மூன்று வேலைகளுக்கும் பலர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் அனைவரையும் அந்த நிறுவனம் பணியமர்த்திக்கொள்வதில்லை.

காரணம், அந் நிறுவனம் காவலாளிக்கு படிப்பு பத்தாம் வகுப்பு, கட்டுமஸ்தான உடல்வாகு, உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ, வயது 25லிருந்து 30க்குள் இருக்கவேண்டும் எனவும், கணக்கர் வேலைக்கு படிப்பு டிகிரி, வயது 30லிருந்து 35க்குள், முன் அனுபவம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் எனவும், மேலாளர் பதவிக்கு படிப்பு முதுகலை பட்டம், வயது 40லிருந்து 45க்குள், ஆங்கில மொழிப் புலமை, முன் அனுபவம் ஐந்து ஆண்டுகள் எனவும், அந்தந்த வேலைகளுக்கான தகுதிகளை எதிர்பார்க்கலாம். இந்தத் தகுதிகள் யாரிடம் உச்சபட்சமாக இருக்கிறதோ, அவரையே அந் நிறுவனம் இறுதியாகப் பணியமர்த்துகிறது.

ஆக, ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து சம்பளம் வாங்கப்போகும் ஊழியர்களுக்கே இத்தனைவிதமான தகுதிகள் எதிர்பார்க்கப்படும்போது, அவர்களை வேலை வாங்கப்போகும் முதலாளிக்கு எத்தனை தகுதிகள் தேவைப்படும்?

பூமிப் பந்தின் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன. இந்தத் தொழில்களைத் தொடங்குவதற்கு முன்னர் அதனதன் தன்மையைப் பொருத்து வெவ்வேறுவிதமான தகுதிகள் தேவைப்படுகின்றன. ஆனால், எல்லாத் தொழில்களுக்கும் சில அடிப்படையான தகுதிகள் உண்டு.  அவை நம்மிடம் இருக்கவேண்டும். இல்லையென்றால் வளர்த்துக்கொண்டு, கற்றுக்கொண்டு தொழிலைத் தொடங்கவேண்டும்.

பணம் இருந்தால் போதும், மற்ற விஷயங்கள் தானாக வந்துசேரும் என்கிற நினைப்பு  புதிதாகத் தொழில் தொடங்குபவர்களில் பலருக்கும் இருக்கிறது. பணம் என்பது உங்களின் தொழிலுக்கு ஒரு முதலீடு மட்டுமே. முதலீடு எப்போதும் தொழிலாகாது. முதலீட்டைப் பெருக்குவதுதான் தொழில். உங்கள் முதலீடு பெருகவேண்டுமானால், உங்கள் தொழில் சார்ந்த வேறுபல விஷயங்களையும் நீங்கள் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அதுதான் இங்கே தகுதியாக வரையறுக்கப்படுகிறது. எனவே, தொழில் தொடங்க பணத்தோடு வேறு பல காரணிகளும் தேவைப்படுகின்றன. அந்தக் காரணிகள் உங்கள் தொழிலுக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்தால் மட்டுமே பணம் என்கிற முதலீடு  பாதுகாப்பாக வளர்ந்துகொண்டிருக்கும்.

பணம் சம்பாதிப்பதற்குத்தான் தொழில் தொடங்குகிறோம். ஆனால், பணம் பணத்தை சம்பாதிக்காது. அதற்கான தகுதிகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. ஆக, தொழில் தொடங்குவதற்கான தகுதிச் சுற்றில் பணத்திற்கு முன்பாக வேறு சில தகுதிகளை நாம் வளர்த்துக்கொண்டே ஆகவேண்டும்.

பொதுவாக, தொழில் என்பது மூன்று நிலைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதலாவது உற்பத்தித் தொழில், இரண்டாவது விற்பனைத் தொழில், மூன்றாவது சேவைத் தொழில். உலகத்தில் உள்ள தொழில்கள் எல்லாமே இந்த மூன்று நிலைகளுக்குள்  வந்துவிடும்.  பொதுவான விஷயங்களில்  இந்த மூன்று தொழில்களுக்கும் அடிப்படையான சில தகுதிகள் இருக்கின்றன.
நீங்கள் தொடங்கப்போகின்ற தொழில் அல்லது செய்துகொண்டிருக்கிற தொழில் இந்த மூன்று நிலைகளுள் எந்த வகையைச் சார்ந்தது என்பதை உங்களால் கணிக்க முடிகிறதா? அந்த தொழிலுக்கான அடிப்படைத் தகுதிகள் என்னவென்று உங்களால் தீர்மானிக்க முடிகிறதா? இவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே உங்கள் வளர்ச்சி நிலையானதாக இருக்கும்.
ஒருவருக்கோ, பலருக்கோ, குறிப்பிட்ட நிறுவனத்திற்கோ, பல நிறுவனத்திற்கோ, அமைப்பிற்கோ ஒரு பொருளைத் தயாரித்துக் கொடுப்பதே உற்பத்தித் தொழில். இங்கே உற்பத்தி என்ற நிலையில் மட்டுமே உங்களின் தொழில் இருக்கும். விற்பனையைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. ஒருவேளை அந்தப் பொருளின் விற்பனை என்பதும் உங்களைச் சார்ந்தே இருக்குமானால் நீங்கள் உற்பத்தித் தொழில், விற்பனைத் தொழில் இரண்டையும் செய்பவராக இருக்கிறீர்கள். நீங்கள் கம்ப்யூட்டர் தயாரிப்பவராக இருக்கலாம், கடலைமிட்டாய் தயாரிப்பவராக இருக்கலாம். இரண்டுமே உற்பத்தித் தொழில்தான். விவசாயமும் உற்பத்தித் தொழில்தான். விவசாயத்திற்குத் தேவையான உரங்களைத் தயாரிப்பதும் உற்பத்தித் தொழில்தான். ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பும்கூட உற்பத்தித் தொழில்தான்.
ஒ ரு பொருள், அ த ன் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது வேறு நபர்களிடமிருந்தோ கொள்முதல் செய்து, குறிப்பிட்ட லாபம் வைத்து, அதன் நுகர்வோர்களிடம் அல்லது அந்தப் பொருளை பயன்படுத்துபவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதே விற்பனைத் தொழில். பலசரக்குக் கடைகள், காய்கறிக்கடைகள் தொடங்கி ஏஜென்சிகள், டிஸ்ரிபியூட்டர்கள் என பல தளங்களில் இது நீண்டு செல்லும். பெரும்பாலான சில்லறை விற்பனைக் கடைகள் இதைத்தான் செய்துவருகின்றன.

ஒருவருக்கோ, பலருக்கோ, ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு போன்றவற்றுக்கோ நீங்களோ அல்லது உங்கள் நிறுவனமோ குறிப்பிட்ட பணியைச் செய்துகொடுத்து, அதன்மூலம் வருமானம் பெறுவதே சேவைத்தொழில். அதாவது பிறருக்காக நீங்கள் செய்கின்ற வேலை. டெய்லர் கடைகள், போக்குவரத்துத் தொழில்கள், அச்சகத் தொழில், பயிற்றுநர் தொழில் போன்ற பலவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சேவைத் தொழிலில் குறிப்பிட்ட வேலை அல்லது பணி உங்களால் செய்துமுடிக்கப்பட்டதும் வாடிக்கையாளர்களுடைய மனநிறைவு என்பது முக்கியமாகக் கருதப்படும். உங்களால் வாடிக்கையாளர் மனநிறைவு அடையவில்லையென்றால் அடுத்த முறை அதே தேவைக்காக வேறு ஒருவரை அவர் நாடுவார்.

எனவே, நீங்கள் எந்தத் தொழிலைச் செய்தாலும், செய்ய விரும்பினாலும், அத் தொழில் சார்ந்த பொதுவான திறமைகளை வளர்த்துக்கொண்டு கால் பதியுங்கள். நிச்சயமாக உங்கள் கால்தடம் கல்வெட்டாக மாறும்.

பாலமுருகன்

நன்றி சூரியகதிர் தமிழ் மாத இதழ்

மொக்கை கவிதைகள்-Kavithaikal

வாழ்க்கை

 

பெருக்கினால் கழிக்குது

கழித்தால் வகுக்குது

வகுத்தால் கூட்டுது

கூட்டினால் பெருக்குது

இதுதான் வாழ்க்கை!

 

நடந்தால் விரட்டுது

விரட்டினால் அமருது

அமர்ந்தால் ஓட்டுது

ஓட்டினால் இழுக்குது

இதுதான் வாழ்க்கை!

 

வெள்ளைத் தாளிலே

ஏதேதோ எழுதுது

எந்த மொழியென்று

யாருக்கும் தெரியாது

அந்த மொழிபேசும்

ஆட்களே கிடையாது!

 

நவரசங்கள் தாண்டி

பலரசங்கள் காட்டுது

புதுப்புது ரசங்களை

ஜாடையாய் சொல்லுது

அதைப் புரிந்துகொண்டபோது

எட்டி அழைக்கும் சாவு!

 

கிழக்கு போனால்

தென் பக்கம் கைகாட்டும்

தென்பக்கம் போனால்

மேற் பக்கம் இழுக்கும்

வடக்கு கிழக்காகும்

கிழக்கு தெற்காகும்

தெற்கு மேற்காகும்

மேற்கு எதுவுமாகும்

இதுதான் வாழ்க்கை!

 

என் பார்முலா தேடாதே

ஒருபோதும் புரியாது

கற்றுக்கொடுக்கவும் மாட்டேன்

என்கிறது வாழ்க்கை!

 

மாத்தி யோசி

நூல் அறுபட்டபோது

கீழே விழுந்தது

பட்டம் மட்டுமல்ல

நூலும்தான்!

உண்மையில் அறுபட்டது

நூலல்ல…உறவு!

 

 

அடையாளம்

இங்கு குழந்தைகள்

இல்லையென

மவுனமாய்ச் சொல்கிறது

கிறுக்கல் ஏதுமற்ற சுவர்!

 

காமம்

நான் சைவம் என

பெருமையாகச்

சொல்லிக்கொள்கிறவனும்

சுவைத்துப் பார்க்க விரும்பும்

அசைவம் அதுமட்டுமே!

 

வழிகாட்டி

துக்கம், இயலாமை,

எதையோ இழந்துவிட்ட தவிப்பு,

எதிர்காலம் பற்றிய பயம்,

நிகழ்கால குழப்பம்,

ஏன் இப்படி என்கிற மன வேதனை ,

நம்பிக்கை தகர்ப்பு

இன்னும் பலவும் ஆட்கொண்டு

தோண்டி மனதை எடுக்கிறதா?

தனி இடம் தேடு

ஓ வென மனம் விட்டு அழு

கண்ணீர் வற்றும் அளவுக்கு அழு

முகம் கழுவு, மொட்டை மாடி செல்

வானம் பார்….அங்கே தெரியும்

எல்லாவற்றுக்குமான விடியல்!

 

சபலம்

வேர்களின்

ஆழம் பார்த்த மனசு

விழுதுகளையும்

தோண்டிப் பார்க்க

நினைக்கிறது!

 

பைத்தியக்காரன்

தவறான கேள்விக்கு

விடை சொல்கிறேன்.

தெரியாத பாதைக்கு

வழிகாட்டுகிறேன்.

இல்லாத ஒன்றை

சொந்தம் என்கிறேன்.

போட்டியில் கலவாமல்

வெற்றி பெறுகிறேன்

கேட்காமல் தருகிறேன்

கேளாமல் பிடுங்குகிறேன்

இழக்காமல் அழுகிறேன்.

பெறாமல் சிரிக்கிறேன்.

பயித்தியமடா நீ

என்கிற உலகை

ஞானத்தோடு பார்க்கிறேன்…

 

 

தமிழ் திரைக்கதை – ஜொள்ளு tamil thiraikathai – tamil screenplay

 

காட்சி 1 பகல் / வெளி / தண்ணீர் நிறைந்த குளம்

* ஆள் அரவரமற்ற பரந்து விரிந்த ஒரு குளம்.
* தண்ணீர் மெதுவாக அசைந்துகொண்டிக்கிறது.
* குளத்தைச் சுற்றியிருக்கும் கரையோரப் பகுதி.
* கரையோரங்களில் ஆங்காங்கே சில பனை மரங்களும், வேறுபிற மர வகைகளும் மெலிதாக வீசிக்கொண்டிருக்கும் காற்றின் வேகத்திற்கு மெல்ல அசைந்துகொண்டிருக்கின்றன.
* ஓர் அரசமரத்தின் கிளைகள் மெல்ல ஆடுகின்றன.
* அரசமரத்தின் கீழே இரண்டு அடி உயரமுள்ள பிள்ளையார் சிலை.
* பிள்ளையார் சிலையின் கழுத்தில் காய்ந்த மாலை.
* பிள்ளையாரின் இரண்டு கண்களையும் அந்த காய்ந்த மாலை மறைத்துக் கொண்டிருக்கிறது.
* பிள்ளையார் சிலை தமக்கு எதிர்புறமாக அசைந்துகொண்டிருக்கும் தண்ணீரைப் பார்த்தவாறு இருக்கிறது.
* பிள்ளையார் சிலைக்கும் அசைந்துகொண்டிருக்கும் தண்ணீருக்கும் இடையே இருபது அடி இடவெளியில் புல்தரை இருக்கிறது. (அதாவது, பிள்ளையார் சிலையிலிருந்து இருபது அடி தூரம் நடந்து சென்றால்தான் தண்ணீரில் கால்வைக்க முடியும்).
* புல்தரையும் தண்ணீரும் சங்கமிக்கும் இடத்தில் துணிகளைத் துவைப்பதற்கு ஏற்றாற்போல் மூன்று பெரிய கற்கள் கால் பங்கு தண்ணீரில் நனைந்தவாறு இருக்கின்றன.
* கரைநோக்கி வரும் குளத்து தண்ணீரின் சிறு அலைகள் அந்தக் கற்களில் மெதுவான சத்தத்தோடு மோதிக்கொள்கின்றன.

காட்சி 2 பகல் / வெளி / குளக்கரை

* ஒரு பெண் கையில் வாளியோடு நடந்துவருகிறாள். சேலை அணிந்திருக்கிறாள்.
* அவளின் இடது கையில் வாளியில் சில துணிகளும், துணிகளின் மேற்புரம் சோப்பு டப்பாவும் இருக்கின்றன.
* அவளின் தோளில் ஒரு துண்டு.
* நடந்துவருபவள் பிள்ளையார் சிலைக்கு எதிரே, அந்தப் பாறைக் கற்களின் அருகே வருகிறாள்.
* வாளியைக் கீழே வைக்கிறாள்.
* சுற்று முற்றும் பார்க்கிறாள்.
* இப்போது பிள்ளையார் சிலை க்ளோசப் காட்சியாக.
* காலில் அணிந்திருக்கும் செருப்பை ஓரமாக கழற்றி வைக்கிறாள்.
* மீண்டும் ஒருதரம் சுற்று முற்றும் பார்க்கிறாள்.
* சேலை முந்தானையை நீக்கி, தான் அணிந்திருக்கும் ஆடையை ஒவ்வொன்றாக கழற்றத் தொடங்குகிறாள்.
* பிள்ளையார் சிலை முகம் க்ளோசப் காட்சியாக.
* இப்போது அந்தப் பெண் பாவாடையை மார்புக்கு மேலே கட்டிக் கொள்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் தும்பிக்கை நுனிப்பகுதி மட்டும் மெல்ல அசைகிறது.
* அந்தப் பெண் பாவாடையை மீண்டும் ஒருதரம் சரிசெய்து கொள்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் தும்பிக்கை மெல்ல மேல்நோக்கி வளைந்து, வலது கண்ணை மறைத்திருக்கும் காய்ந்த மாலையை மெல்ல நகர்த்துகிறது.
* அந்தப் பெண் குனிந்து தன் கால் கொலுசுகளை சரி செய்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் வலது கண் மெல்லத் துடிக்கிறது. கண்ணைத் திறக்கிறது.
* அந்தப் பெண் குளிப்பதற்காக குளத்தின் உட்பகுதிக்கு மெல்ல நடந்து செல்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் தும்பிக்கை இப்போது இடது கண்ணை மூடிக்கொண்டிருக்கும் காய்ந்த மாலையை அகற்றுகிறது.
* அந்தப் பெண் நீரில் மூழ்கிக் குளிக்கிறாள்.
* பிள்ளையாரின் இடது கண்ணும் திறக்கிறது.
* அந்தப் பெண் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடியே உடல் முழுவதையும் தண்ணீருக்குள் நுழைத்து மூழ்கிக் குளிக்கிறாள்.
* பிள்ளையாரின் இரண்டு கண்களும் அந்தப் பெண்ணை சல்லாபக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன.
* அவள் கரையோரம் நடந்து வருகிறாள்.
* ஓரமாக புல்தரையில் வைக்கப்பட்டிருந்த வாளிக்குள் இருக்கும் சோப்பு டப்பாவை எடுக்கிறாள்.
* அங்குமிங்கும் பார்க்கிறாள்.
* பிள்ளையார் சிலையின் கண்களும் மெல்ல அங்குமிங்கும் பார்த்துக்கொள்கிறது.
* அவள் தன் உடலுக்கு சோப்பு போடுகிறாள்.
* பிள்ளையார் சிலையின் கண்கள் கூர்மையாகின்றன.
* அவள் தன் வலது காலை ஓரமாக இருக்கும் கல் மேல் வைத்து காலுக்கு சோப்பு போடுகிறாள்.
* பிள்ளையார் சிலையின் தும்பிக்கை எச்சில் ஊறுகிறது.
* அவள் இடது காலுக்கு சோப்பு போடுகிறாள்.
* பிள்ளையார் சிலையின் கண்கள் மேலும் கூர்மையாகின்றன. தும்பிக்கையிலிருந்து எச்சில் சொட்டு சொட்டாக கீழே விழுகிறது.
* சோப்பு போட்டுக்கொண்டே அந்தப் பெண்ணின் பார்வை தற்செயலாக பிள்ளையார் சிலையை நோக்கி திரும்புகிறது.
* சிலையின் கண்கள் டக் என்று மூடிக் கொள்கின்றன.
* அவள் வேறு திசையை பார்த்தபடியே தன் கழுத்துக்கு சோப்பு போடுகிறாள்.
* சிலையின் கண்கள் மெல்ல திறக்கின்றன.
* அவளின் பார்வை மீண்டும் பிள்ளையார் சிலையை நோக்கித் திரும்புகிறது.
* சிலையின் கண்கள் மீண்டும் படக்கென்று மூடிக் கொள்கின்றன.
* சோப்பு போட்டு முடித்துவிட்டு அவள் மீண்டும் குளத்தின் உட்பகுதிக்கு சென்று இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி குளிக்கிறாள்.
* சிலையின் கண்கள் அகலத் திறந்தபடியே அவளை உற்று நோக்குகிறது.
* தும்பிக்கையில் மீண்டும் எச்சில் சொட்டு போடுகிறது.
* அவள் தன் தலையை கோதியபடியே கரை நோக்கி வருகிறாள்.
* நாய் ஒன்று பிள்ளையார் சிலைக்கு அருகே நிற்கிறது.
* சிலையின் கண்கள் நாயை கோபத்தோடு பார்க்கின்றன.
* அவள் துண்டை எடுத்து தன் தலையை துவட்டுகிறாள்.
* சிலையின் கண்கள் உன்னிப்பாக அவளைப் பார்க்கின்றன.
* நாய் பிள்ளையார் சிலைக்கு முன்புறமாக வந்து நிற்கிறது.
* தும்பிக்கை முகர்ந்து பார்க்கிறது நாய்.
* தன் ஒருகாலைத் தூக்கியபடியே தும்பிக்கையின் நுனிப்பகுதி மேல் மூத்திரம் பெய்கிறது நாய்.

‘‘பாவம்
குளத்தங்கரைப் பிள்ளையார்
குளிக்கிறாள் அவள்!’’

கவிஞர் வெற்றிப்பேரொளியின் ‘சொல் பருக்கைகள்’ கவிதைத் தொகுப்பில் இந்தக் கவிதையைப் படித்து முடித்த நொடியில் என்னை அறியாமலேயே புன்னகைத்தேன். மனதுக்குள் அந்தக் கவிதையைப் பற்றிய காட்சிகள் தத்ரூபமாகத் தெரிந்தன. அந்தக் குளக்கரை எப்படி இருந்திருக்கும், பிள்ளையார் எப்படி இருந்திருப்பார், குளிக்கும் பெண்ணைப் பார்த்து பிள்ளையார் எப்படி வெட்கப்பட்டிருப்பார் அல்லது சலனப்பட்டிருப்பார் என்பதையெல்லாம் கற்பனையோடு ரசிக்கத் தூண்டியது அந்தக் கவிதை.
கவிதை தந்த ரசனையை காட்சிகளின் வழியாக, சற்று நகைச்சுவை கலந்து சொல்லும்படியாக திரைக்கதை அமைத்துப் பார்த்தேன்….
நன்றி, கவிஞர் வெற்றிப்பேரொளி அவர்களுக்கு!