Tag Archives: tamil sample screenplay

Kochadaiyaan Vimarsanam in Tamil – கோச்சடையான் விமர்சனம் – 52%

கோச்சடையான் விமர்சனம்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானை விமர்சிக்க இந்த ஒற்றை வரி போதும்!

tamil screenplay

”விமர்சிக்க முடியாத பல திரைப்படங்கள் வரும். விமர்சிக்கவேண்டிய படங்கள் அவ்வப்போது வரும். கோச்சடையான் விமர்சிக்கக்கூடாத படம். என்னவோ தெரியவில்லை கோச்சடையானை விமர்சிக்க மனம் ஒப்பவில்லை.

படம் பார்த்து முடிந்தவுடன் நண்பர் ஒருவர் ”படம் எப்படி?” எனக் கேட்டபோது, அவரிடம் நான் சொன்ன பதில் இதுதான்.
”நீர் விமர்சிக்க வேண்டாமய்யா, என்ன கதை? அதையாவது சொல்லும்!” தொந்தரித்துக் கேட்டார்.
வழக்கமான ராஜாக்கள் காலத்து கதைதான்.

கலிங்காபுரி, கோட்டைப்பட்டினம் என ஒன்றுக்கொன்று சளைக்காத இரண்டு நாடுகள். மண் சேர்க்கும் அரசர்களின் ஆசைக்கு பலிகடா ஆகும் படைத் தளபதியாக அப்பா கோச்சடையான் (ரஜினி 1). தந்தை ரஜினியின் மரணத்திற்குக் காரணமான இரண்டு ராஜாக்களையும் பலிவாங்கும் படைத்தளபதியாக மகன் ராணா (ரஜினி 2)
இதற்குள் ஒரு காதல். அம்புட்டுதான் கதை. ஆனால்……

தொழிற்நுட்ப புரட்சியின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட கோச்சடையானில் கதை முக்கியமல்ல என்றாலும், அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, குழப்பம் இல்லாத திரைக்கதையை வடித்துக் கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். வசனமும் அவரே.

”எதிரிகளை வெல்ல பல வழிகள் இருக்கு. முதல் வழி மன்னிப்பு, நண்பனை எதிரியாக்கிக்கொள்ளாதே, வேஷம் போடுறவனுக்கு பகல் என்ன இரவு என்ன, சூரியனுக்கு முன்னரே எழுந்தால் அந்த சூரியனையே வெல்லலாம்” என வாழ்வியல் சார்ந்த வசனங்கள் ஏராளம்.

படத்தில் நிஜக் கதைமாந்தர்கள் ஒருவர்கூட கிடையாது. அவர்களின் உருவத் தோற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு, கனிணியின் சாகசத்தோடு வென்று காட்டியிருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடம் மட்டுமே கதை மாந்தர்களாக காட்சியளிக்கிற கணினி மாந்தர்கள் நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள். அதன்பிறகு அப்படியே நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்கள் படம் முடியும்வரை. காரணம், தொழிற்நுட்பம்.

இந்தியச் சினிமாவுக்கு இது புதுசு. பட்ஜெட் இருந்தால் அவதாரையும் மிஞ்சக்கூடிய வகையில் நம்மிடம் அறிவும், தொழிற்நுட்பமும் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சவுந்தர்யா.

கதைமாந்தர்களின் கண் அசைவு, நடை போன்றவற்றில் துல்லியமான பாவணைக் குறைகள் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளிவிடுகிறது மனசு. காரணம், படத்தில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்டம்.

அரண்மனைக் காட்சிகளிலிருந்து போர்க்கள காட்சிவரை, காட்சிக்கு காட்சி நாம் இதுவரை பார்த்திராதது.

கோச்சடையான் வெளிவருவதில் ஏன் சிக்கல் எனத் தெரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பாக வந்திருந்தால், வசூலை அள்ளிக் குவித்திருக்கும் என்றாலும், இப்போதும் அதற்குக் குறையிருக்காது என்று நம்பலாம்.

குடும்பத்தோடு பார்த்து மகிழ, முக்கியமாக குழந்தைகளோடு பார்த்து மகிழவேண்டிய படம்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானின் விமர்சனத்திற்கு இந்த ஒற்றை வரிபோதும்.

மதிப்பெண்கள் 52%

Vallavanukku Pullum Ayudham Vimarsanam 38%

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

கதையின் நாயகனாக சந்தானம் தூள்குழப்பியிருக்கும் படம்.

Tamil Screenplay

கதை

சிறையிலிருந்து வெளிவரும் சந்தானத்தின் இளைய தாய்மாமனை போட்டுத்தள்ளி, தானும் இறந்துபோகிறார் சந்தானத்தின் அப்பா. அப்போது சந்தானம் தொட்டில் குழந்தை. சந்தானத்தின் தந்தையால் வெட்டப்பட்டு இறந்துபோனவரின் அண்ணன் (மூத்த தாய்மாமன்), தன் தம்பியைக் கொன்றவனின் குடும்பத்தையே அழித்துவிடவேண்டும் என தன் இரண்டு குழந்தைகளோடு அருவாள் முனையில் சபதம் ஏற்கிறார். இனி இந்த ஊரில் இருந்தால் தன் மகனையும் கொன்றுவிடுவார்கள் என சந்தானத்தின் தாய் சென்னையில் குடியேறுகிறார்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு கதை உடனடியாக நகர்ந்துவிடுகிறது.

அதற்குள் அம்மாவும் இறந்துபோக, அநாதையான சந்தானம், இப்போது பழைய சைக்கிளில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளி. “இனி சைக்கிளில் சப்ளை செய்தால் உனக்கு வேலை இல்லை. உடனே ஒரு குட்டியானை வாங்கு” என முதலாளி சொல்ல, வேலை இழக்கும் சந்தானம் குட்டியானை வாங்குவதற்காக பணத்திற்கு அலைய, தான் பிறந்த ஊரில் தன் அப்பாவிற்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிற தகவல் வந்துசேர்கிறது. அந்த இடத்தை விற்பனை செய்வதற்காக தன் பிறந்த ஊருக்குச் செல்ல, இவரைப் பழிவாங்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் வில்லன் குடும்பத்தினரின் வீட்டுக்குள்ளேயே விபரீதமாக அடைக்கலமாகிறார்.

வீட்டில் அடைக்கலமாகியிருப்பது தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் பகையாளியின் மகன் என்கிற உண்மை வில்லன் கோஷ்டிகளுக்குத் தெரியவந்தாலும் அவர்களால் உடனடியாக சந்தானத்தைக் கொல்ல முடியவில்லை. காரணம்,

வில்லன் குடும்பத்திற்கென ஒரு கொள்கை இருக்கிறது. தன் வீட்டிற்குள் வைத்து யாரையும் இவர்கள் பழிவாங்குவது கிடையாது. வெட்டுக்குத்து, அடிதடி எல்லாம் வீட்டிற்கு வெளியேதான்.

வீட்டுவாசலைத் தாண்டினால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்கிற விஷயம் சந்தானத்திற்கு தெரியவர, அவரும் வாசலைத் தாண்டாதாவறு தகிடுதித்தங்கள் செய்து பிழைக்கிறார். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் வில்லனின் மகளுக்கு சந்தானத்தின் மீது காதல் பிறக்க, சந்தானம் பழிவாங்கப்பட்டாரா, காதலியை அடைந்தாரா என்பதை வழக்கமான தமிழ்ச் சினிமா இலக்கண விதிகளுக்கு மீறாமல் படம் காட்டியிருக்கிறார்கள்.

சில காட்சிகளில் மட்டுமே சந்தானம் சிரிக்க வைக்கிறார். சில காட்சிகளில் சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால், படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து முடிவுக் காட்சிவரை அடுக்கடுக்கான லாஜிக் இடர்பாடுகள் வந்து இம்சை படுத்துவதால், படத்தோடும் கதையோடும் ஒன்ற முடியவில்லை.

கதைக்குத் தேவையில்லாத டம்மிக் காட்சிகளே படத்தை அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள, சீரியஸான ஒரு கதைக்குள் காமடி எப்போது வரும் என்கிற மனநிலையோடு  ஏங்க வைக்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே சுற்றிச்சுற்றி வருவது, சந்தானத்தைக் கொல்ல எளிய வழிகள் இருக்கும்போது, அதற்காக வில்லன்கள் பெரிதாக மெனக்கெடுவது, இறுதிக் காட்சியில் அத்தனை அடிவாங்கிய பிறகும் வீறுகொண்டு எழுவது, நாயகியை முறைமாமன் எளிதாக விட்டுக்கொடுப்பது என நிறைய காட்சிகள் சலிப்பைக் கொடுக்கின்றன.

நாயகி ஆஸ்னா சாவேரி அழகாக இருக்கிறார். இறுதிக் காட்சியில் தன் திறமையை வெளிக்காட்டுகிறார். பின்னணி இசையும், பாடல்களும் சுமார் ரகத்திற்கும் கீழே. படத்தின் பிற கதை மாந்தர்கள் நாடக பாணியில் நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது (சக்தி, ரிச்சார்ட் நாதன்).மதிப்பெண்கள் 38%

 

Tamil Screenplay – Tamil Thiraikathaikal – Niram Marum Mugangal – Scene 3

நிறம் மாறும் முகங்கள்

திரைக்கதை

(தொலைக்காட்சி நெடுந்தொடருக்கானது)

காட்சி 3
DAY / INT / EXTN

சந்திராவின் வீடு.
சோபாவில் அமர்ந்தபடியே சந்திரா அழுதுகொண்டிருக்கிறாள்.
சந்திராவின் மாமியார், தன் மகனும் சந்திராவின் கணவருமான சேகரிடம்  செல்போனில்  பேசிக்கொண்டிருக்கிறார். பெயர் பார்வதி அம்மாள். வயது 60.

பார்வதி அம்மாள் – ‘‘எல்லா எடத்துலேயும் தேடியாச்சி…கணேசன காணோம்…நீ உடனே வீட்டுக்கு கௌம்பி வா….ஸ்டேஷன் வரைக்கும் போய் எதுக்கும் ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுத்துறலாம்….லேட் பண்ண வேண்டாம்….எனக்கு பயமா இருக்குப்பா….’’

சேகர்குரல் – ‘‘பக்கத்து வீட்டு இன்ஸ்பெக்டரும் அதைத்தான் சொன்னாரு…அம்மா…நான் வீட்டுக்கு வந்து….. அப்புறமா போலீஸ் ஸ்டேஷன் கௌம்பறதுக்கு எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் ஆகும்…… ஒன்னு பண்ணுங்க நீங்களும் சந்திராவும் ஸ்டேசனுக்கு வந்துருங்க…நான் ஆபிஸ்லேர்ந்து நேரா அங்க வந்துர்றேன்…சந்திராகிட்ட சண்டை ஏதும் போடாதீங்க…கணேசனுக்கு ஒன்னும் ஆயிருக்காது….போனை சந்திராகிட்ட குடுங்க…’’ (குரலில் பதட்டம், வேகம்)

பார்வதி அம்மாள் சோபாவில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் சந்திராவைப் பார்க்கிறார்…
சந்திராவை நோக்கி நடந்துவருகிறார். போனை சந்திராவை நோக்கி நீட்டுகிறார்…

பார்வதி அம்மாள் – ‘‘ஏய்…ந்தா….உங்கிட்ட பேசணுங்கறான்….’’

சந்திரா போனை மாமியாரிடமிருந்து வாங்குகிறாள். போனை காதில் வைக்கிறாள்.

சேகர் குரல் – ‘‘ஏண்டி….மத்தியானம் தூங்காதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது. நாலு மணிக்கு ஸ்கூல் விடும்னு தெரியும்…மூணு மணிக்கே ஆட்டோக்காரர் வந்துடுறாரு…..அவரு வரும்போது நீ ரெடியா இருக்கவேண்டாம்..மெதுவா எழுந்திருச்சி முகம் கழுவி, பவுடர் பூசி புதுப்பொண்ணு மாதிரி அலங்கரிச்சிக்கிட்டு…அதுக்கு அப்புறம் நீ கௌம்பிப் போறது எனக்கு தெரியாதுன்னு நெனைக்கிறியா…செய்யறதெல்லாம் நீ செஞ்சிட்டு ஆட்டோக்காரர் மேல பழி போட மனசு எப்படித்தான் வருதோ….அம்மாவ கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன் வந்துரு….நான் கால் மணி நேரத்துல அங்க இருப்பேன்…’’ (குரலில் அதட்டல், எரிச்சல்)

போன் கட் செய்யப்படும் சத்தம் கேட்கிறது.
சந்திராவும் போனை கட் செய்துவிட்டு தன் மாமியாரை முறைத்துப் பார்க்கிறாள்.
பார்வதி அம்மாளும் பதிலுக்கு முறைத்தபடியே…

பார்வதி அம்மாள் – ‘‘இந்த மொறைக்கற வேலையெல்லாம் வேண்டாம்….அவங்கிட்ட நீ தூங்கற விஷயத்தை நான் சொல்லவேயில்ல…’’

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது…சந்திரா முகத்தைத் துடைத்தபடியே ஒருவித அச்சத்துடன் போய் கதவைத் திறக்கிறாள். கதவுக்கு வெளியே வாணி நிற்கிறாள்..
வாணி உள்ளே பதட்டத்தோடு நுழைந்தபடியே…

வாணி – ‘‘சந்திரா…என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன்..அவரும் நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெய்ன்ட்ட குடுத்திரச் சொல்லிட்டாரு…கமிஷனர் ஆபிஸ்லேயிருந்து இந்நேரம் நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு போன் போயிருக்கும்….நீ ஒன்னும் கவலப்படாத…போலீஸ் டிபார்ட்மென்ட்ட பொருத்தவரைக்கும் எல்லா இடத்துலேயும் என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க…எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துல உம் பையன கண்டுபிடிச்சிருவாங்க…’’

வாணி பேசுவதை பார்வதி அம்மாள் கவனிக்கிறாள்.
பின்னர் சந்திராவை பார்க்கிறார்.

பார்வதி அம்மாள் – ‘‘ஏய்…நீகௌம்புறியா…இல்ல வாணிய கூட்டிட்டு நான் ஸ்டேஷன் கௌம்பட்டுமா…’’

பார்வதி அம்மா சந்திராவை இப்படி பேசுவதை வாணி பார்க்கிறாள்.

வாணி – ‘‘அம்மா…அவளே மகனக் காணோம்ன்னு பதட்டத்துல இருக்கா…இந் நேரத்துல உங்க சண்டைய வச்சிக்க வேண்டாம்…மொதல்ல கௌம்பற வழியப் பாருங்க…’’ (கெஞ்சல், அவசரம்)

சந்திரா வாணியைப் பார்க்கிறாள்.

சந்திரா – ‘‘வாணி…நீயும் வாயேன்…எனக்கு போலீஸ் ஸ்டேஷன்னாலேயே ஒரு மாதிரி இருக்கு…’’

அழுதபடியே பேசுகிறாள்…

வாணி – ‘‘உங்கள கூட்டிட்டுப் போறதுக்குத்தான் வந்திருக்கேன்..என் வீட்டுக்காரரும் ஸ்டேஷனுக்கு வந்துர்றேன்னு சொல்லியிருக்காரு..உன் வீட்டுக்காரர்கிட்டே பேசிட்டாரு….சீக்கிரம் கௌம்புங்க…’’

மூவரும் புறப்படுகின்றனர்.
சாவித்திரி வீட்டைப் பூட்டுகிறாள்.
வெளியே ஆட்டோக்காரர் தயாராக நிற்கிறார்.
மூவரும் ஆட்டோவில் ஏறி அமர்கின்றனர்.
ஆட்டோக்காரர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்கிறார்.
ஆட்டோ புறப்பட்டுச் செல்கிறது.

(தொடரும்)

தகுதி இருந்தால் ஆசைப்படுங்கள்! What is your qualification to start a business

தகுதி இருந்தால் ஆசைப்படுங்கள்!

பங்களா வீடு, சொகுசுக் கார், வீட்டினுள்ளும், அலுவலகத்திலும் குளு குளு அறைகள், பலரும் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு சமூக அந்தஸ்து! இப்படி வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனை யாருக்குத்தான் இல்லை. ஆனால், கற்பனை காண்பவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வாழ்க்கை அமைகிறது. அந்த ஒரு சிலரின் வாழ்வு சூழலைக் கவனித்தோமானால், அவர்கள் ஏதாவது தொழில் செய்து கொண்டிருப்பார்கள்.  இந்த வசதியான வாழ்க்கைச் சூழலை அனுபவிக்கவேண்டும், அதற்கு நாமும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களிடத்தும் உண்டு. வாய்ப்பு கிடைக்கும்போது இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுத்து களத்தில் குதித்துவிடுகின்றனர்.

2 1

இப்படிக் குதித்தவர்கள் எல்லோரும் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்களா? தொழில் செய்பவர்கள் எல்லோரும் வசதியான வீட்டில்தான் வசிக்கிறார்களா? சொகுசுக் காரில்தான் உலா வருகிறார்களா? தொழில் செய்பவர்கள் அனைவருக்குமே சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கிறதா?
இதை அலசி, ஆராய்ந்து பார்த்தோமானால், அங்கே  பல உண்மை நிலவரங்கள் இது வரையில் நாம் கேள்விப்படாதவையாக இருக்கும். ஏனென்றால், தொழில் செய்து காணாமல் போனவர்களின் பட்டியலும் நிறைய உண்டு.

தொழில் செய்வதற்கும் வேலை செய்வதற்கும் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன. வேலை செய்தால் அதற்கு  சம்பளம் கிடைக்கும். தொழில் செய்தால் லாபம் கிடைக்கும். சம்பளம் மெதுவாக உயரும். ஒரு எல்லையைத் தாண்டாது. வேலை செய்பவருடைய சம்பளத்தை இன்னொருவர் நிர்ணயிக்கிறார். ஆனால், தொழில் செய்பவருடைய  லாபம் அவருடைய உழைப்பையும், திறமையையும் பொருத்து வேகமாக உயரும். அதன் உயரத்திற்கு அளவே இல்லை. லாபம் அதிகரிக்க அதிகரிக்க நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் நல்லபடியாக வாழமுடியும். இதனால்தான்,  தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணம் யாவரிடமும் வியாபத்திருக்கிறது.

ஆக, லாபம், வசதியான வாழ்க்கை என்கிற என்கிற எண்ணம்தான் பலரிடம் தொழில் ஆசையைத் தூண்டிவிடுகிறது. ஆசைதான் எல்லாவற்றிற்கும் காரணம்.  ஆனால், ஆசைப்படுவதற்கும் ஒரு தகுதி வேண¢டுமல¢லவா?   அது நம்மிடம் இருக்கிறதா என்பதை உணர்ந்து பார்த்து, செயல்படுபவர்கள் மட்டுமே, இந்த போட்டி நிறைந்த உலகில் நிலையாக நீடித்து நிற்கமுடியும். இங்கே, தகுதியற்றவர்கள் ஒரு செயலைச் செய்யும்போது முதல் சுற்றிலேயே காணாமல் போய்விடுவார்கள். உலகத்தில் எந்தச் செயலைச் செய்வதற்கும் ஒரு தகுதி தேவைப்படுகிறது. அப்படியிருக்கும்போது தொழில் செய்து  லாபத்தைப் பெறுவதற்கும் தகுதிகள் இருக்கும்தானே!

அப்படியானால்  தொழில் செய்ய முனைவோருக்கு எந்த மாதிரியான தகுதிகள் வேண்டும்?
இந்தக் கேள்விக்குப் விடை, நீங்கள் செய்யும் தொழிலைப் பொருத்தே இருக்கும். உதாரணமாக, ஒரு தனியார் நிறுவனம்  மூன்று நபர்களை வேலைக்கு எடுக்கவிருப்பதாக விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. 1.காவலாளி, 2. கணக்கர், 3. மேலாளர். இந்த மூன்று வேலைகளுக்கும் பலர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் அனைவரையும் அந்த நிறுவனம் பணியமர்த்திக்கொள்வதில்லை.

காரணம், அந் நிறுவனம் காவலாளிக்கு படிப்பு பத்தாம் வகுப்பு, கட்டுமஸ்தான உடல்வாகு, உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ, வயது 25லிருந்து 30க்குள் இருக்கவேண்டும் எனவும், கணக்கர் வேலைக்கு படிப்பு டிகிரி, வயது 30லிருந்து 35க்குள், முன் அனுபவம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் எனவும், மேலாளர் பதவிக்கு படிப்பு முதுகலை பட்டம், வயது 40லிருந்து 45க்குள், ஆங்கில மொழிப் புலமை, முன் அனுபவம் ஐந்து ஆண்டுகள் எனவும், அந்தந்த வேலைகளுக்கான தகுதிகளை எதிர்பார்க்கலாம். இந்தத் தகுதிகள் யாரிடம் உச்சபட்சமாக இருக்கிறதோ, அவரையே அந் நிறுவனம் இறுதியாகப் பணியமர்த்துகிறது.

ஆக, ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து சம்பளம் வாங்கப்போகும் ஊழியர்களுக்கே இத்தனைவிதமான தகுதிகள் எதிர்பார்க்கப்படும்போது, அவர்களை வேலை வாங்கப்போகும் முதலாளிக்கு எத்தனை தகுதிகள் தேவைப்படும்?

பூமிப் பந்தின் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன. இந்தத் தொழில்களைத் தொடங்குவதற்கு முன்னர் அதனதன் தன்மையைப் பொருத்து வெவ்வேறுவிதமான தகுதிகள் தேவைப்படுகின்றன. ஆனால், எல்லாத் தொழில்களுக்கும் சில அடிப்படையான தகுதிகள் உண்டு.  அவை நம்மிடம் இருக்கவேண்டும். இல்லையென்றால் வளர்த்துக்கொண்டு, கற்றுக்கொண்டு தொழிலைத் தொடங்கவேண்டும்.

பணம் இருந்தால் போதும், மற்ற விஷயங்கள் தானாக வந்துசேரும் என்கிற நினைப்பு  புதிதாகத் தொழில் தொடங்குபவர்களில் பலருக்கும் இருக்கிறது. பணம் என்பது உங்களின் தொழிலுக்கு ஒரு முதலீடு மட்டுமே. முதலீடு எப்போதும் தொழிலாகாது. முதலீட்டைப் பெருக்குவதுதான் தொழில். உங்கள் முதலீடு பெருகவேண்டுமானால், உங்கள் தொழில் சார்ந்த வேறுபல விஷயங்களையும் நீங்கள் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அதுதான் இங்கே தகுதியாக வரையறுக்கப்படுகிறது. எனவே, தொழில் தொடங்க பணத்தோடு வேறு பல காரணிகளும் தேவைப்படுகின்றன. அந்தக் காரணிகள் உங்கள் தொழிலுக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்தால் மட்டுமே பணம் என்கிற முதலீடு  பாதுகாப்பாக வளர்ந்துகொண்டிருக்கும்.

பணம் சம்பாதிப்பதற்குத்தான் தொழில் தொடங்குகிறோம். ஆனால், பணம் பணத்தை சம்பாதிக்காது. அதற்கான தகுதிகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. ஆக, தொழில் தொடங்குவதற்கான தகுதிச் சுற்றில் பணத்திற்கு முன்பாக வேறு சில தகுதிகளை நாம் வளர்த்துக்கொண்டே ஆகவேண்டும்.

பொதுவாக, தொழில் என்பது மூன்று நிலைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதலாவது உற்பத்தித் தொழில், இரண்டாவது விற்பனைத் தொழில், மூன்றாவது சேவைத் தொழில். உலகத்தில் உள்ள தொழில்கள் எல்லாமே இந்த மூன்று நிலைகளுக்குள்  வந்துவிடும்.  பொதுவான விஷயங்களில்  இந்த மூன்று தொழில்களுக்கும் அடிப்படையான சில தகுதிகள் இருக்கின்றன.
நீங்கள் தொடங்கப்போகின்ற தொழில் அல்லது செய்துகொண்டிருக்கிற தொழில் இந்த மூன்று நிலைகளுள் எந்த வகையைச் சார்ந்தது என்பதை உங்களால் கணிக்க முடிகிறதா? அந்த தொழிலுக்கான அடிப்படைத் தகுதிகள் என்னவென்று உங்களால் தீர்மானிக்க முடிகிறதா? இவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே உங்கள் வளர்ச்சி நிலையானதாக இருக்கும்.
ஒருவருக்கோ, பலருக்கோ, குறிப்பிட்ட நிறுவனத்திற்கோ, பல நிறுவனத்திற்கோ, அமைப்பிற்கோ ஒரு பொருளைத் தயாரித்துக் கொடுப்பதே உற்பத்தித் தொழில். இங்கே உற்பத்தி என்ற நிலையில் மட்டுமே உங்களின் தொழில் இருக்கும். விற்பனையைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. ஒருவேளை அந்தப் பொருளின் விற்பனை என்பதும் உங்களைச் சார்ந்தே இருக்குமானால் நீங்கள் உற்பத்தித் தொழில், விற்பனைத் தொழில் இரண்டையும் செய்பவராக இருக்கிறீர்கள். நீங்கள் கம்ப்யூட்டர் தயாரிப்பவராக இருக்கலாம், கடலைமிட்டாய் தயாரிப்பவராக இருக்கலாம். இரண்டுமே உற்பத்தித் தொழில்தான். விவசாயமும் உற்பத்தித் தொழில்தான். விவசாயத்திற்குத் தேவையான உரங்களைத் தயாரிப்பதும் உற்பத்தித் தொழில்தான். ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பும்கூட உற்பத்தித் தொழில்தான்.
ஒ ரு பொருள், அ த ன் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது வேறு நபர்களிடமிருந்தோ கொள்முதல் செய்து, குறிப்பிட்ட லாபம் வைத்து, அதன் நுகர்வோர்களிடம் அல்லது அந்தப் பொருளை பயன்படுத்துபவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதே விற்பனைத் தொழில். பலசரக்குக் கடைகள், காய்கறிக்கடைகள் தொடங்கி ஏஜென்சிகள், டிஸ்ரிபியூட்டர்கள் என பல தளங்களில் இது நீண்டு செல்லும். பெரும்பாலான சில்லறை விற்பனைக் கடைகள் இதைத்தான் செய்துவருகின்றன.

ஒருவருக்கோ, பலருக்கோ, ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு போன்றவற்றுக்கோ நீங்களோ அல்லது உங்கள் நிறுவனமோ குறிப்பிட்ட பணியைச் செய்துகொடுத்து, அதன்மூலம் வருமானம் பெறுவதே சேவைத்தொழில். அதாவது பிறருக்காக நீங்கள் செய்கின்ற வேலை. டெய்லர் கடைகள், போக்குவரத்துத் தொழில்கள், அச்சகத் தொழில், பயிற்றுநர் தொழில் போன்ற பலவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சேவைத் தொழிலில் குறிப்பிட்ட வேலை அல்லது பணி உங்களால் செய்துமுடிக்கப்பட்டதும் வாடிக்கையாளர்களுடைய மனநிறைவு என்பது முக்கியமாகக் கருதப்படும். உங்களால் வாடிக்கையாளர் மனநிறைவு அடையவில்லையென்றால் அடுத்த முறை அதே தேவைக்காக வேறு ஒருவரை அவர் நாடுவார்.

எனவே, நீங்கள் எந்தத் தொழிலைச் செய்தாலும், செய்ய விரும்பினாலும், அத் தொழில் சார்ந்த பொதுவான திறமைகளை வளர்த்துக்கொண்டு கால் பதியுங்கள். நிச்சயமாக உங்கள் கால்தடம் கல்வெட்டாக மாறும்.

பாலமுருகன்

நன்றி சூரியகதிர் தமிழ் மாத இதழ்

மார்பக புற்றுநோய்-Breast Cancer-mammo gram-Needle Biopsy

மார்பகப் புற்றுநோய்

திருமணம் ஆகாத பெண்களையும் தாக்கும்!

டாக்டர் சரவணன் பெரியசாமி, குளோபல் மருத்துவமனை

         இது 21ம் நூற்றாண்டு. எல்லாவற்றிற்கும் விடை சொல்லி வருகிற மருத்துவ அறிவியல் காலம். ஆனால், இன்னமும் அடித்தட்டு மக்களிடமும், கிராமத்து மக்களிடமும் சிலவகை அறியாமை இருக்கத்தான் செய்கிறது. ஊடகங்கள் என்னதான் சொல்லிவந்தாலும், அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் அவர்களாகவே தீர்வு சொல்லித் திரிகிற மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. Drsaravananperiasami

           பெண்கள் தினத்தைக் கொண்டாடும் மார்ச் மாதத்தில், போதிய கல்வி அறிவு இல்லாமல், வெள்ளந்தியாய் கிராமங்களில் வசித்து வரும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. வயது 29. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். சோகம், அறியாமையின் மொத்த உருவமாக அவரது கணவர் அருகில் நிற்கிறார். அரை மணி நேர உரையாடலில் அவர்களது வாழ்வு பற்றி நிறைய உணர முடிந்தது.

           விஷயம் இதுதான், அந்தப் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து, வலது பக்க மார்பு அகற்றப்பட்ட நிலையில், மேற்கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

            பெண்களை எளிதாகத் தாக்கும் நோய்களில் ஒன்றாக மார்பகப் புற்று நோய் இன்று வெகு வேகமாகப் பரவி வருவதை படித்த பெண்கள்கூட அறியா திருக்கிறார்கள். ‘‘இவருக்கு வரும், இவருக்கு வராது என்கிற எந்தவிதப் பாகு பாடும் இல்லாத நோய் புற்றுநோய். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அடிக்கடி பெண்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது ஊடகங்களின் கையில்தான் இருக்கிறது. இந் நோய் பற்றிய நினைவூட்டலை செய்துகொண்டே இருப்பது ஊடகங்களின் கடமையும்கூட’’ என்கிறார் சென்னை குளோபல் மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் டாக்டர் சரவணன் பெரியசாமி.

            மார்பகப் புற்றுநோய் குறித்த பல சந்தேகங்களோடு டாக்டர் சரவணன் பெரியசாமியிடம் மேலும் பேசினோம்.

மார்பக புற்று நோய்?
மார்பகத்தில் உள்ள சில அனுக்கள் அளவுக்கதிகமாக வளர்வதே மார்பகப் புற்றுநோய். புற்று அனுக்கள் மற்ற அனுக்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களையும் ஆக்கிரமிக்கும்.

அறிகுறிகள் எப்படித் தென்படும். வலி இருக்குமா?
துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.
1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும். 2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும். 3. சுரப்புக் காம்பிலிருந்து இரத்தமோ வேறு திரவமோ கசியும். 4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்). 5. சமீப காலமாக காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் பெண்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மம்மோ கிராம் (mammo gram) என்கிறார்கள். இந்தச் சோதனை எதற்காக?
மார்கப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்கிற சந்தேகத்தை உறுதிசெய்யும் சோதனை முறையே மம்மோகிராம். தட்டு போன்ற கருவியால் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். இதன்மூலம் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் மருத்துவருக்கு அளிக்கும். மேலும், அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி, கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம். இதுதவிர நீடில் பயோப்சி (Needle Biopsy) என்கிற முறையிலும் இது கண்டறியப்படுகிறது.

மார்பகப் புற்று நோயில் பல வகைகள் இருக்கிறதாமே?
பல வகைகள் உண்டு. அவற்றை மிக விரிவாக இங்கே சொல்லமுடியாது என்றாலும், கூடுமானவரை விளக்குகிறேன்.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும், மற்ற எல்லா லிம்ப் நோட்களிலும், எலும்பு, ஈரல், நுரையீரல் முதலிய அங்கங்களிலும் ஏற்கனவே பரவி விட்டது என்பதை அறியலாம்.

இதில் ஒன்று, இரண்டு, மூன்று என பல நிலைகள் உள்ளது என்கிறார்களே? எந்த நிலையில் இதற்கான சிகிச்சையைத் தொடங்குதல் நலம் பயக்கும்?
முதல் நிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னும் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றும், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.

இரண்டாம் நிலை அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் புற்று நோய் பரவி விட்டது என்றும் மார்பகக் கட்டியின் சற்றளவு 2.5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

மூன்றாம் நிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் பரவிவிட்டுள்ளது என்றும் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

நான்காம் நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.

ஒருமுறை சிகிச்சை எடுத்து குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் புற்று நோய் வரக்கூடிய சாத்தியம் உண்டா?
மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

எம் மாதிரியான சிகிச்சை முறைகள் செய்யப்படுகிறது?
புற்றுநோய் கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழிக்கவோ, கட்டுபடுத்தவோ மருத்துவர் முடிவு எடுப்பார். அறுவை சிகிச்சை, கீமோ தெரபி எனும் மருத்துவம், அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

ரேடியேஷன் தெரபி என்கிறார்களே? அது எதற்காக?
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (External rerdiction)என்று கூறப்படும்.

அறுவை சிகிச்சை முடிந்தவர்களுக்கு கீமோ தெரபி கொடுப்பது அவசியமா?
கண்டிப்பாக கொடுக்க வேண்டும். புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். ஊசியின் மூலமாக இது தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறை. ஏனென்றால், தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். புற்றுநோய் அணுக்கள் மேலும் பரவாமல் தடுக்க கீமோ தெரபி அவசியமாகப்படுகிறது.

திருமணம் முடிந்தவர்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் வருமா?
என் மருத்துவ அனுபவத்தில் திருமணம் முடியாதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்திருக்கிறது. எனவே, திருமணம் ஆகாத பெண்களையும் இது தாக்கலாம்! பெண்கள்தான் இதில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். மார்பகங்களை சுய பரிசோதனை செய்தே புற்றுநோய்க் கட்டி இருக்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிடலாம். நோயின் தாக்கம் அறிந்து முதலிலேயே மருத்துவரை நாடி வந்துவிட்டால், முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம்.

புற்றுநோயால் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட ஒரு பெண், அதன் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ளல் சாத்தியமா?
குழந்தைப் பேற்றுக்கும் மார்பக இழப்புக்கும் தொடர்பு இல்லை.

நன்றி – சூரியகதிர்  மாத இதழ்

மொக்கை கவிதைகள்-Kavithaikal

வாழ்க்கை

 

பெருக்கினால் கழிக்குது

கழித்தால் வகுக்குது

வகுத்தால் கூட்டுது

கூட்டினால் பெருக்குது

இதுதான் வாழ்க்கை!

 

நடந்தால் விரட்டுது

விரட்டினால் அமருது

அமர்ந்தால் ஓட்டுது

ஓட்டினால் இழுக்குது

இதுதான் வாழ்க்கை!

 

வெள்ளைத் தாளிலே

ஏதேதோ எழுதுது

எந்த மொழியென்று

யாருக்கும் தெரியாது

அந்த மொழிபேசும்

ஆட்களே கிடையாது!

 

நவரசங்கள் தாண்டி

பலரசங்கள் காட்டுது

புதுப்புது ரசங்களை

ஜாடையாய் சொல்லுது

அதைப் புரிந்துகொண்டபோது

எட்டி அழைக்கும் சாவு!

 

கிழக்கு போனால்

தென் பக்கம் கைகாட்டும்

தென்பக்கம் போனால்

மேற் பக்கம் இழுக்கும்

வடக்கு கிழக்காகும்

கிழக்கு தெற்காகும்

தெற்கு மேற்காகும்

மேற்கு எதுவுமாகும்

இதுதான் வாழ்க்கை!

 

என் பார்முலா தேடாதே

ஒருபோதும் புரியாது

கற்றுக்கொடுக்கவும் மாட்டேன்

என்கிறது வாழ்க்கை!

 

மாத்தி யோசி

நூல் அறுபட்டபோது

கீழே விழுந்தது

பட்டம் மட்டுமல்ல

நூலும்தான்!

உண்மையில் அறுபட்டது

நூலல்ல…உறவு!

 

 

அடையாளம்

இங்கு குழந்தைகள்

இல்லையென

மவுனமாய்ச் சொல்கிறது

கிறுக்கல் ஏதுமற்ற சுவர்!

 

காமம்

நான் சைவம் என

பெருமையாகச்

சொல்லிக்கொள்கிறவனும்

சுவைத்துப் பார்க்க விரும்பும்

அசைவம் அதுமட்டுமே!

 

வழிகாட்டி

துக்கம், இயலாமை,

எதையோ இழந்துவிட்ட தவிப்பு,

எதிர்காலம் பற்றிய பயம்,

நிகழ்கால குழப்பம்,

ஏன் இப்படி என்கிற மன வேதனை ,

நம்பிக்கை தகர்ப்பு

இன்னும் பலவும் ஆட்கொண்டு

தோண்டி மனதை எடுக்கிறதா?

தனி இடம் தேடு

ஓ வென மனம் விட்டு அழு

கண்ணீர் வற்றும் அளவுக்கு அழு

முகம் கழுவு, மொட்டை மாடி செல்

வானம் பார்….அங்கே தெரியும்

எல்லாவற்றுக்குமான விடியல்!

 

சபலம்

வேர்களின்

ஆழம் பார்த்த மனசு

விழுதுகளையும்

தோண்டிப் பார்க்க

நினைக்கிறது!

 

பைத்தியக்காரன்

தவறான கேள்விக்கு

விடை சொல்கிறேன்.

தெரியாத பாதைக்கு

வழிகாட்டுகிறேன்.

இல்லாத ஒன்றை

சொந்தம் என்கிறேன்.

போட்டியில் கலவாமல்

வெற்றி பெறுகிறேன்

கேட்காமல் தருகிறேன்

கேளாமல் பிடுங்குகிறேன்

இழக்காமல் அழுகிறேன்.

பெறாமல் சிரிக்கிறேன்.

பயித்தியமடா நீ

என்கிற உலகை

ஞானத்தோடு பார்க்கிறேன்…

 

 

திரைக்கதை – தாயாகினாள்

தாயாகினாள்

திரைக்கதை

எண்ணமும் எழுத்தும் செ.பாலமுருகன்

 

காட்சி 1 : பகல்/வெளி/தெரு

இருபது அடி அகலமுள்ள தெரு. அறுபது வயது ஆறுமுகம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருகிறார். லுங்கியும், பனியனும் அணிந்திருக்கிறார். தோளில் ஒரு துண்டு. அவருக்கு எதிர்புறமாக சைக்கிளுக்கு சற்று தூரத்தில் எதிரே 55 வயது கனி அம்மாள் நடந்து வருகிறார். (தளர்ந்த நடை, மெலிந்த உடல்)  கனி அம்மாளின் இடது கையில் ஒரு பையும், வலது கையில் சிறு கூடையும் உள்ளது. பையிலும், கூடையிலும் ஏதோ பொருட்கள். எதிரே வரும் கனி அம்மாளை சைக்கிளில் வரும் ஆறுமுகம் கவனிக்கிறார். அவரின் பார்வை கூர்மையாகிறது. இருபது மீட்டர் இடைவெளி. இப்போது கனி அம்மாளும் ஆறுமுகத்தைக் கவனிக்கிறார். (முகத்தில் ஒரு மாற்றம்)

ஆறுமுகம் சைக்கிளில் இருந்து இறங்கிக் கொள்கிறார். இவர்களுக்கு சற்று தூரத்தில் சில சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். சைக்கிளில் இருந்து இறங்கிய ஆறுமுகத்தின் அருகே கனி அம்மாள் நிற்கிறார். தனது வலது கையில் உள்ள பையை தரையில் வைத்துவிட்டு, முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொள்கிறார். இவர்களைக் கடந்து இருவர் ஏதோ பேசியபடியே நடந்து செல்கின்றனர்.

ஆறுமுகம் : ‘‘என்ன கனி… இப்பத்தான் சாமான்லாம் வாங்கிட்டுப் போறியா….’’

கனி அம்மாள் :    ‘‘(சோகமான புன்னகையுடன்) ஆமாண்ண’’

ஆறுமுகம் : ‘‘எந்த ஊருன்னு சொன்ன…?’’

கனி அம்மாள் :  ‘‘முத்தையாபுரம்ண்ண…’’

ஆறுமுகம்:  ‘‘அவங்களுக்கு எல்லா வெவரமும் தெரிஞ்சிதான வர்றாங்க….’’

கனிஅம்மாள்: ‘‘ம்ம்ம்…’’ (தலையாட்டுகிறார்)

ஆறுமுகத்தின் தோளில் இருக்கும் துண்டு கீழே விழுகிறது. கனி அம்மாள் அந்தத் துண்டை குனிந்து எடுத்து ஆறுமுகத்திடம் கொடுக்கிறார். ஆறுமுகம் கனி அம்மாளிடம் இருந்து துண்டை வாங்கி தோளில் போட்டுக்கொண்டே….

ஆறுமுகம் : ‘‘என்னமோ போ…..உன் தலையெழுத்தும்…உம் மக   தலையெழுத்தும் இப்டி ஆயிருச்சி….. கவலப்படாத…. இந்த சம்பந்தம் எப்டியும் முடிஞ்சிடும்…’’

ஆறுமுகம் கனி அம்மாள் கண்களைப் பார்க்க, அவரின் கண்களில் கண்ணீர் வருகிறது. அதை முந்தானையால் துடைத்துக் கொள்கிறார்.

ஆறுமுகம் : ‘‘அழுது என்ன ஆவப்போது…போ..போ…    வாங்கிட்டுப்போறதுல்ல…ஏதாவது செஞ்சி வையி….’’

ஆறுமுகம் ஏதோ யோசிக்கிறார். பின்னர்…கனி அம்மாளிடம்…

ஆறுமுகம் : ‘‘நான் எத்தணை மணிக்கு வரணும்னு சொல்லு’’

கனி அம்மாள் : ‘‘அவங்க நாலு மணிக்கு வர்றதா சொல்லி அனுப்பியிருக்காங்க….’’

ஆறுமுகம் : ‘‘நானு மூன்றரைக்கெல்லாம் வந்துர்றேன்…போயி வேலையப் பாரு ….கவலப்படாத.. ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு வழி நிச்சயமா வச்சிருப்பான்’’

கனி அம்மாள் சரி என்று தலையாட்டிக் கொள்கிறார். ஆறுமுகம் சைக்கிளில் ஏறி புறப்படுகிறார். கனி அம்மாள் பையை எடுத்துக்கொண்டு நடக்கிறார்.

 

காட்சி 2 : பகல்/வெளி/ கனி அம்மாள் வீடு

ஓடு போட்ட வீடு தெரிகிறது. வீட்டின் முன் விசாலமான இடம் இருக்கிறது. நான்கைந்து ஆடுகள் எதையோ மேய்ந்து கொண்டிருக்கின்றன. வீட்டின் கதவு மூடி இருக்கிறது. பழங்காலத்து கதவு. கனி அம்மாள் அந்த வீட்டின் வாசலை நெருங்குகிறார். கதவு அருகே பையையும், கூடையையும் கீழே வைத்துவிட்டு, கதவைத் தட்டுகிறார்.

கனி அம்மாள் : ‘‘மீனாட்சி…மீனாட்சி’’(கதவைத் தட்டியபடியே கூப்பிடுகிறார்)

கதவு திறக்கப்படுகிறது. திறக்கப்பட்ட கதவின் அருகே உட்புறமாக 36 வயது மீனாட்சி நிற்கிறாள். மீனாட்சியின் அழகான முகம். மீனாட்சி கனி அம்மாளைப் பார்க்கிறாள். மெலிதாகப் புன்னகைக்கிறாள். அந்தச் சிரிப்பில் சோகமும் அடங்கியிருக்கிறது. மென் புன்னகையுடன் மீனாட்சி கதவைத் தாண்டி  வெளிப்புறமாக வருகிறாள்.

வாசற்படியைத் தாண்டும்போது, மீனாட்சி ஒரு காலை கெந்தி, கெந்தி நடப்பது தெளிவாகத் தெரிகிறது. மீனாட்சி எதுவும் பேசாமல் பையை மட்டும் எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறாள். மீனாட்சியின் பின்னாடியே கனி அம்மாள் கூடையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்கிறார். அது இரண்டு அறைகள் மட்டுமே உள்ள வீடு. இரண்டாவது அறையைத் தாண்டி சிறிய அடுக்களை உள்ளது. அடுக்களையின் ஓரத்தில் மீனாட்சி பையை வைக்கிறாள். மீனாட்சிக்குப் பின்னாடி கனிஅம்மாள் வந்து கூடையை வைக்கிறார். கூடையை வைத்துவிட்டு கனி அம்மாள் மீனாட்சியை உற்றுப் பார்க்கிறார். அந்தப் பார்வையில் ஒரு ஏக்கம் தெரிகிறது.

கனி அம்மாள் : ‘‘பைக்குள்ள உளுந்து இருக்கு..அத ஊறவச்சி அரைச்சி எடுத்திரு…கேசரிக்கும்  சாமான் வாங்கிட்டு வந்திருக்கேன்..’’

மீனாட்சி : (கனி அம்மாளைப் பார்த்து சரி என்பதுபோல் தலையை ஆட்டுகிறாள்)

கட்

அடுக்களைக்குப் பின்புறம் இரண்டு சென்ட் காலி இடம். அந்த இடத்தில் நான்கு பசு மாடுகள் கூரை வேயப்பட்ட கொட்டகையில் கட்டப்பட்டிருக்கின்றன. இரண்டு கன்றுக்குட்டிகள் தனியாக கட்டப்பட்டிருக்கின்றன. கனி அம்மாள் அடுக்களைக்குப் பின்புறம் உள்ள அந்த காலி இடத்திற்கு வருகிறார். ஒரு சிமெண்டுத் தொட்டியில் தண்ணீர் நிறைய உள்ளது. தண்ணீரீன் மேல் ஜக்கு மிதக்கிறது. காற்றின் மெல்லிய வேகத்தில் தண்ணீரில் மிதக்கும் ஜக்கு மெதுவாக ஆடிக்கொண்டிருக்கிறது. கனி அம்மாள் தொட்டியின் அருகே நிற்கிறார். அவரின் கண்களில் நீர் வருகிறது. மெதுவாகக் குனிந்து ஜக்கில் தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவுகிறார். கனி அம்மாள் கண்ணீர் வழியும் முகத்தைக் கழுவுவதை அடுக்களையின் வாசலில் நின்று கொண்டிருக்கும் மீனாட்சி பார்க்கிறாள். மீனாட்சியின் கண்களுகம் கலங்குகின்றன.

இப்போது மீனாட்சி அடுக்களைக்கு உட்புறமாக திரும்பிக் கொள்கிறாள். முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். பையிலிருக்கும் உளுந்து பொட்டலத்தை எடுக்கிறாள். பிரிக்கிறாள். ஒரு சட்டியில் உளுந்தைக் கொட்டி, தண்ணீர் ஊற்றுகிறாள். ஏதோ யோசித்தபடியே மீனாட்சி வீட்டின் முன்புற அறைக்கு நடக்கிறாள். இப்போதும் மீனாட்சி ஒரு காலை கெந்தி கெந்தி நடப்பது மீண்டும் தெளிவாக காட்டப்படுகிறது. முன் அறையின் சுவற்றில் உள்ள கடிகாரத்தில் மீனாட்சி மணி பார்க்கிறாள். கடிகாரம் 10.15 என்று காட்டுகிறது.

காட்சி 3 : பகல்/உள்/ ஆறுமுகம் வீடு.

ஆறுமுகம் தன் வீட்டில் ஒரு நார்க் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார். அவர் மனைவி  ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார். ஆறுமுகம் மனைவியிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடிக்கிறார். தண்ணீரைக் குடித்துவிட்டு சொம்பை மனைவியிடம் கொடுக்கிறார். சொம்பை மனைவி வாங்கிக் கொள்கிறார். ஆறுமுகம் மனைவியைப் பார்க்கிறார்.

ஆறுமுகம் : ‘‘இன்னைக்கி சாயந்தரம் தங்கச்சி கனியம்மாவோட மீனாட்சிய பொண்ணு பாக்கறதுக்கு வர்றாங்களாம்.   நீயும் வர்றியா…அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கும்’’

மனைவி ஆறுமுகத்தை ஏறிட்டுப் பார்க்கிறார். முகத்தில் கடுப்பு.

மனைவி :   (எரிச்சலில்) ”உங்களுக்கு வேற வேலையே இல்லியா…அந்தப்புள்ளைய இதுவரைக்கும்  எத்தணைபேரு  பொண்ணு பாத்துட்டு போயிருப்பாங்க…அதான் நொண்டின்னு தெரியுதுல்ல…  மாப்பிள்ளையும் நொண்டியா பாத்து முடிச்சிருக்கணும்..  அப்டி இல்லேண்ணா அம்பது சவரன் நகைபோட்டு சீரு செனத்தி கொடுக்கறதுக்கு வக்கு இருக்கணும்…எதுவும் இல்லாம…மாப்பிள்ள வேணும்.. மாப்பிள்ள வேணும்னு சொல்லி…வருஷத்தைக் கடத்திட்டு, இப்போ நாலு கழுத வயசு  ஆகப்போற நேரத்துல அந்தப் பொண்ணுக்கு  கல்யாணம் என்ன வேண்டி கிடக்கு. ஊரே சிரிக்குது…  இதுக்கு ஒத்தாசையா நான் வேற வரணுமாக்கும்?…

மனைவி கத்திப் பேசிவிட்டு வீட்டின் உள் அறைக்குள் செல்கிறார். தன் மனைவி செல்வதை ஏதோ சிந்தனையுடன் பார்க்கிறார் ஆறுமுகம்.

காட்சி 4 : பகல்/உள் மற்றும் வெளி/ கனி அம்மாள் வீடு

மீனாட்சி அடுக்களை ஓரத்தில் இருக்கும் ஆட்டுக்கல்லில் உளுந்தை ஆட்டிக்கொண்டிருக்கிறாள். வெள்ளை வெளேரென்று மாவு அரைபட்டுக் கொண்டிருக்கிறது.

கட்

வீட்டின் பின்புறம் மாடுகளுக்கு வைக்கோல் வைத்துக் கொண்டிருக்கிறார் கனி அம்மாள். கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது.

கதவு குரல் : ‘‘மீனாட்சி..மீனாட்சி….’’

கனி அம்மாள்  : (மாட்டிற்கு வைக்கோலை எடுத்துப்போட்டுக் கொண்டே)….‘‘மீனாட்சி…போய் யாருன்னு பாரு’’

கட்

ஆட்டுக்கல்லில் இருந்து மீனாட்சி எழுந்திரிக்கிறாள். மீனாட்சியின் வலது கையில் நுரைத்த உளுந்து மாவு ஓட்டிக்கொண்டு இருக்கிறது. இடது காலை கெந்தி கெந்தி நடந்தபடியே  இடது கையால் வாசற் கதவைத் திறக்கிறாள். கதவுக்கு வெளியே பூக்காரி நிற்கிறாள்.

பூக்காரி : ‘‘என்ன மீனாட்சி…இன்னைக்கி உன்ன பாக்கறதுக்கு வர்றாங்களாமே…அம்மா பத்து முழம் மல்லி  கேட்டுச்சி…’’

பூக்காரி சொல்வதை நிதானமாகக் கேட்கிறாள் மீனாட்சி. அவளின் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. இயல்பாக இருக்கிறாள். பூக்காரி வலது கையால் கூடையில்  இருக்கும் பூவை முழம் போடுகிறாள். இப்போது கனி அம்மாள் வாசற் கதவுக்கு அருகே வந்து நிற்கிறார். அவர் வந்திருப்பதை பூக்காரியும், மீனாட்சியும் பார்க்கின்றனர்.

பூக்காரி :  ‘‘என்ன கனியம்மா…கவலப்படாத.. எல்லாம் நல்லபடியா  கண்டிப்பா முடிஞ்சிரும் பாரு…’’ (பூவை முழம் போட்டுக்  கொண்டே பேசுகிறாள்)

பூக்காரி பேசும்போது மீனாட்சி சோகம் கலந்து புன்னகைத்துக் கொள்கிறாள்.

காட்சி 5 : பகல்/உள்/கனி அம்மாள் வீடு

கடிகாரம் ஒடிக்கொண்டிருக்கிறது. அதில் நேரம் 2.20 என்று காட்டப்படுகிறது. அடுக்களையில் மீனாட்சி வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள். உள் அறையிலிருந்து கனி அம்மாள் தனது தலை முடியை அள்ளி முடிந்துகொண்டே மீனாட்சியின் அருகே வருகிறார்.

கனி அம்மாள் : ‘‘மணி ஆவுது…நீ போயி கை,கால் அலம்பிட்டு   டிரஸ் மாத்தி ரெடியாவு…இதை நான் பாத்துக்கறேன்’’

மீனாட்சி கனி அம்மாளைப் பார்த்து சரி என்பதுபோல் தலை ஆட்டுகிறாள்.

காட்சி 6 : பகல்/ வெளி/தெரு

தெருவில் ஆறுமுகம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருகிறார். வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்துள்ளார்.

காட்சி 7 : பகல்/ வெளி மற்றும் உள்/ கனி அம்மாள் வீடு

வீட்டு வாசலில் மீனாட்சி கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள். ஆறுமுகம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே கனி அம்மாளின் வீட்டு முன் வருகிறார். ஓரமாக சைக்கிளை ஸ்டேன்ட் போட்டு நிறுத்துகிறார். கோலம் போடும் மீனாட்சி ஆறுமுகத்தைப் பார்க்கிறாள். ஆறுமுகம் மீனாட்சியைப் பார்க்கிறார். மீனாட்சி கோலப் பொடி டப்பாவை கீழே வைத்துவிட்டு எழுந்திரிக்கிறாள். ஆறுமுகத்தைப் பார்த்து மெதுவாக சிரித்தபடியே தலையை ஆட்டியபடியே…

மீனாட்சி : ‘‘வாங்க மாமா….’’

ஆறுமுகம் மீனாட்சியின் அருகே வருகிறார். அவளின் தலையை வருடித் தடவியபடியே வானத்தைப் பார்க்கிறார்.

ஆறுமுகம் : (மைன்ட் வாய்ஸ்) ‘‘இந்தக் காலத்துல பொண்ணாப் பொறக்கறதே குத்தம்…அதவிடக் குத்தம்  ஏழையாப் பொறக்கறது….இந்த ரெண்ட விடவும் பெரிய குத்தம் ஊனத்தோட பொறக்கறது…உங்கிட்ட இந்த மூணுமே இருக்கே…இது யாரோட குத்தம்ணு எனக்குத் தெரியல…’’

ஆறுமுகம் கீழே பார்க்கிறார். கோலம் பாதி போடப்பட்ட நிலையில் இருக்கிறது.

ஆறுமுகம் : ‘நீ கோலத்தை போட்டு முடி…’’

இப்போது கனி அம்மாள் வீட்டின் உள்ளிருந்து வாசலுக்கு வருகிறார். ஆறுமுகம் கனி அம்மாளைப் பார்க்கிறார். கனி அம்மாள் ஆறுமுகத்தைப் பார்க்கிறார்.

கனி அம்மாள் : ‘‘உள்ள வாங்கண்ண…. வாசல்யே நின்னுட்டீங்க’’(மென் சோகம்)

ஆறுமுகம் : ‘‘வர்றேன்….வர்றேன்…’’

ஆறுமுகம் வாசற்கதவைத் தாண்டி வீட்டிற்குள் நுழைகிறார். மீனாட்சி தொடந்து கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள்.

காட்சி 8 : பகல்/வெளி மற்றும் உள்/ கனி அம்மாள் வீடு

கடிகாரம் 4.15 என்று நேரம் காட்டுகிறது. ஆறுமுகம் கனி அம்மாளின் வீட்டிற்குள் முன் அறையில் பாயில் அமர்ந்திருக்கிறார். அந்த அறை முழுவதும் பாய்கள் விரிக்கப்பட்டிருக்கின்றன. பழைய மின்விசிறி மேலே ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டின் உள்ளே மீனாட்சி உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள். கனி அம்மாள் அடுக்களையில் கேசரி கிளறி இறக்குகிறார்.

ஒரு வாகனத்தின் ஹாரன் சத்தம் கேட்கிறது. ஆறுமுகத்தின் பார்வையில் ரியாக்ஷன்.

கட்

ஒரு வேன் கனி அம்மாளின் வீட்டு முன்பு வந்து நிற்கிறது. ஆறுமுகம் வேன் சத்தம் கேட்டு எழுந்து வாசலுக்கு வருகிறார். வேனிலிருந்து பத்துபேர் இறங்குகின்றனர். அதில் மூன்று பெண்களும், ஐந்து ஆண்களும், பத்து வயது சிறுமியும், ஆறு வயது சிறுவனும் இருக்கின்றனர். அதை ஆறுமுகம் வாசலில் நின்றபடியே பார்க்கிறார்.

இப்போது, ஆறுமுகத்தின் பின்னாடியே கனி அம்மாள் வந்து நிற்கிறார். கனி அம்மாளின் முகத்தில் ரியாக்ஷன். வேனிலிருந்து இறங்கியவர்கள் கனி அம்மாளின் வீட்டை நோக்கி நடந்து வருகின்றனர். வீட்டை நெருங்குகின்றனர். ஆறுமுகம் வாசலை விட்டு வெளியே வந்து அவர்களை வரவேற்கிறார்.

ஆறுமுகம் : ‘‘வாங்க…வாங்க….’’

இன்முகத்துடன் அவர்களை வரவேற்கிறார். கனி அம்மாள் ஆறுமுகத்தின் பின்னால்  நின்றுகொண்டே வருகிறவர்களை கையெடுத்துக் கும்பிட்டபடியே வரவேற்கிறார்.

கனி அம்மாள் : ‘‘வாங்க…வாங்க…’’

கனி அம்மாளும், ஆறுமுகமும் வந்தவர்களை வீட்டிற்கு உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். வந்திருந்த அனைவரும்  வீட்டை நோட்டம் பார்த்தபடியே இருக்கின்றனர். கனி அம்மாள் அதைக் கவனிக்கிறார். ஆறுமுகமும் கவனிக்கிறார்.

கனி அம்மாள் : ‘‘உட்காருங்க…’’

தரையில் விரிக்கப்பட்டிருக்கும் பாயில் ஒவ்வொருவராக அமர்கின்றனர். ஆறுமுகமும் அவர்களில் ஒருவராக அமர்ந்து கொள்கிறார். பத்து வயது சிறுமியும், ஆறுவயது சிறுவனும் நாற்பத்து ஐந்து வயது நிரம்பிய ஒருவரின் அருகில் இடமும், வலமுமாக உட்கார்ந்து கொள்கின்றனர். அந்த நபர் சற்று கூச்சத்துடன் இருக்கிறார். அவரின் முகம் தெளிவாக காட்டப்படுகிறது. தலையின் முன்புறத்தில் வழுக்கையின் ஆரம்ப நிலை தெரிகிறது. சிறுவன், சிறுமி முகத்தில் குழப்பம். அந்த 45 வயது நபருக்கு எதிர்புறமாக ஆறுமுகம் அமர்ந்திருக்கிறார். சிறுவனின் முகத்தில் ஏதோ அச்சம் தெரிகிறது. சிறுவன் 45 வயது நபரை கையால் சுரண்டுகிறான்.

45 வயது நபர்  : ‘‘என்னடா…’’ (மெதுவாக கெஞ்சலுடன்)

சிறுவன் : ‘‘எதுக்குப்பா இங்க வந்திருக்கோம்…’’

சிறுவன் கேட்பதை அருகில் இருக்கும் பெண் கவனிக்கிறாள்.

பெண்: ‘‘உங்களுக்கு சின்னம்மா வரப்போறாங்க…’’

சிறுவன் முகத்தில் ரியாக்ஷன். இவர்கள் பேசுவதைக் கவனித்தபடியே கனி அம்மாள் வீட்டின் உட்புறம் செல்கிறார். அடுக்களையில் மீனாட்சி அலங்காரத்துடன் நின்றுகொண்டிருக்கிறாள். மீனாட்சி இப்போது மிக அழகாகத் தெரிகிறாள். அவளின் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கனி அம்மாள் சிறிய தட்டுக்களில் வடையையும், கேசரியையும் எடுத்து வைக்கிறார். அதற்கு மீனாட்சியும் துணை புரிகிறாள். முன் அறையில் அனைவரும்  அமர்ந்திருக்கின்றனர். நிசப்தமாக இருக்கிறது. ஆறுமுகத்தின் அருகில் அமர்ந்திருக்கும் எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆறுமுகத்திடம் பேச்சு கொடுக்கிறார்.

முதியவர் : ‘‘நீங்க பொண்ணுக்கு என்ன வேணும்?’’

ஆறுமுகம்: ‘‘மாமா’’

முதியவர் : ‘‘மாமான்னா…எந்த வழியில?’’ (கன்னத்தை சொறிந்து கொள்கிறார்)

ஆறுமுகம் : ‘‘கனி அம்மாளுக்கு பெரியப்பா மகன்….’’

முதியவர் : ‘‘ஓஹோ…சித்தப்பா மக்க…பெரியப்பா மக்கன்னு சொல்லுங்க….’’

ஆறுமுகம் : ‘‘ஆமாங்க…’’(தலையாட்டிச் சொல்கிறார்)

ஆறுமுகம் தன் எதிரே அமர்ந்திருக்கும் 45 வயது நபரைப் பார்க்கிறார். இதை முதியவர் கவனிக்கிறார்…

முதியவர் : ‘என்ன அப்படி பாக்கறீங்க..அவருதான் மாப்பிள்ளை..என்னோட ஒரே பையன்…போன வருஷம் மருமக….மஞ்சக்காமாளையில் போய்ச்சேர்ந்துட்டா….அவருக்கு  இடது பக்கத்துல    இருக்கறது என்னோட பேரன்… வலது பக்கத்துல  இருக்கறது என்னோட பேத்தி…இந்த ரெண்டையும் நல்லபடியா உங்க மருமக பாத்துக்கணும்….’’

பெரியவர் ஆறுமுகத்திடம் பேசும்போது மாப்பிள்ளையின் முகம் தெளிவாகக் காட்டப்படுகிறது. சிறுவனின் முகமும், சிறுமியின் முகமும் தெளிவாக காட்டப்படுகிறது. ஆறுமுகம் தலையாட்டிக் கொள்கிறார்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மீனாட்சி ஒரு பெரிய தட்டின்மீது சிறு சிறு தட்டுக்களில் வடை, கேசரியை எடுத்து வந்து மாப்பிள்ளை உட்பட அனைவருக்கும் கொடுக்கிறாள். மீனாட்சி கெந்தி கெந்தி நடப்பதை உட்கார்ந்திருக்கும் பெண்கள் கவனிக்கின்றனர். முதியவரும் இதைக் கவனிக்கிறார். அனைவருக்கும் பரிமாறிவிட்டு, மீனாட்சி ஒரு ஓரமாக நின்று கொள்கிறாள். சிலர் வடையையும், கேசரியையைம் பிய்த்துப்,பிய்த்துப் சாப்பிடுகின்றனர். முதியவர் மீனாட்சியை உற்றுப் பார்க்கிறார். அமர்ந்திருக்கும் மூன்று பெண்களும் மாறி மாறி மீனாட்சியைப் பார்க்கின்றனர். மாப்பிள்ளை மீனாட்சி நிற்பதை பார்க்கிறார். இதை ஆறுமுகம் கவனிக்கிறார்.

ஆறுமுகம் : ‘‘பெரிய ஊனம்லாம் கிடையாது…மத்த பொம்பளைங்கைங்க செய்யற எல்லா வேலையும் அசால்ட்டா செஞ்சிருவா எம் மருமக…’’

முதியவர் : ‘‘எப்டி ஆச்சி?’’

ஆறுமுகம் : ‘‘போலியா அட்டாக்…’’ (கவலையுடன்)

ஒரு பெண் குறுக்கிடுகிறார்.

பெண் : ‘‘சரி…அதான்… ஒரு கால் சரியா வராது கொஞ்சம் ஊனம்ன்னு முன்னமே தெரிஞ்சிதான வந்தோம்…பரவால்ல…இப்போ மத்த விஷயங்களைப் பேசிறலாம்…’’

அவர்கள் ஊனம் என்று பேசும்போது    மீனாட்சி மெதுவாக உட்புறமாக அடுக்களைக்குள் செல்கிறாள். அடுக்களைக்குள் ஒரு பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடிக்கிறாள். மீனாட்சியின் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கிறது. முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். அவர்கள் பேசும் குரல் மட்டும் மீனாட்சிக்கு கேட்கிறது.

பெண்குரல் : ‘‘என் தம்பி பதினைஞ்சாயிரம் சம்பளத்துல வேலை பாக்கறான்….உங்க பொண்ணு இந்த சின்னப் புள்ளைங்கள ரெண்டையும் நல்லபடியா பாத்துக்கிட்டாலே போதும்…ஆனாலும், சம்பிரதாயம்னு ஒன்னு இருக்கு…அத நாங்க கேக்காம நீங்களாவே செஞ்சிடறது நல்லது…’’

மீனாட்சி மெதுவாக அடுக்களையின் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறாள். முன் அறையில் அவர்கள் பேசும் குரல் மட்டும் மீனாட்சியின் காதுகளில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆறுமுகம் குரல் : ‘‘இந்தப் பிள்ளைக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே தகப்பனார் காலமாயிட்டாரு!  ஏதோ…. நாலு மாடுங்கள வச்சி பால்கறந்து பொழப்பு நடத்திக்கிட்டிருக்காங்க…    அவங்களால பெரிசா ஒன்னும் செய்ய முடியாது…பொண்ணுக்கு ஆறு சவரன் நகை இருக்கு…ரொக்கமா ஒரு முப்பது ஆயிரம் கொடுக்க முடியும்…இதுதான் நிலைமை.’’

முன் அறையில் அவர்கள் பேசுவதும், மீனாட்சி அடுக்களையில் உட்கார்ந்து அதைக் கேட்டுக்கொண்டிருப்பதும் மாறி, மாறி திரையில் காண்பிக்கப்படுகிறது.

முதியவர் குரல் : ‘‘சரி…உங்க நிலவரம் புரியுது…மேற்கொண்டு இருபதாயிரம் கொடுத்திருங்க. நாங்க வேற எதுவும் கேட்டுக்கல…’’

மீனாட்சியின் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டு நிற்கிறது. இப்போது முன் அறையில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பகுதி.

ஆறுமுகம் : ‘‘உங்க எண்ணத்த சொல்லிட்டீங்க. கல்யாணத்த கோயில்ல வச்சுப்போம். அது எங்க செலவு. மேற்கொண்டு இருபதாயிரங்கறது ரொம்ப அதிகம்….’’

ஆறுமுகம் முதியவரிடம் பேசிவிட்டு ஓரமாக நிற்கும் கனி அம்மாளை பார்க்கிறார். கனி அம்மாள் அமைதியாக நிற்கிறார். அவர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை.     ஆறுமுகம் கனி அம்மாளைப் பார்ப்பதை அனைவரும் பார்க்கின்றனர்.

முதியவர் : ‘‘என்ன பெரிசா கேட்டுட்டோம்… முப்பதாயிரம் தர்றீங்க அதுல மேற்கொண்டு இருபதாயிரம் சேத்து ஐம்பதாயிரம். அவ்ளோதான். அம்பதாயிரம் ரொக்கம் கொடுக்கறது இந்தக் காலத்துல பெரிய தொகை கிடையாது.’’

ஆறுமுகம் : ‘‘ஐயோ, அவ்வளவு முடியாது…முப்பத்தி அஞ்சாயிரம் கொடுக்கலாம்….இதெல்லாம் செய்யறதுக்கே ரெண்டு மாடுங்கள வித்தாத்தான் முடியும்’’

அமர்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் குறுக்கிட்டுப் பேசுகிறார்.

பெண் : ‘‘இந்த வீடு யாரோடது?’’

ஆறுமுகம்  : ‘‘என்னோடது….முப்பது வருஷமா இந்த வீட்டுலதான் இவங்க வாழ்க்கை ஓடுது…’’

முதியவர்  : ‘‘சரி…நாற்பதாயிரமாக் கொடுத்திருங்க..நாங்க மேற்கொண்டு   உங்கள கஷ்டப்படுத்த விரும்பல…’’

ஆறுமுகம் நின்றுகொண்டிருக்கும் கனி அம்மாளை ஏறிட்டுப் பார்க்கிறார். கனி அம்மாள் சரி என்பதுபோல் தலையாட்டுகிறார்.

ஆறுமுகம் : ‘‘தங்கச்சி சரின்னு சொல்றா….அப்படீன்னா எனக்கும் சம்மதம்தான்…மத்தபடி வேற பேசறதுக்கு எதுவும் இல்லை. கல்யாணத் தேதி நீங்களே சொல்லிருங்க…’’

முதியவர் : ‘‘நாங்க நாளெல்லாம் குறிச்சிட்டுத்தான் வந்தோம்…வர்ற 24ம் தேதி, ஞாயித்துக் கெழமை …சிவன் கோயில்ல  வச்சிக்கலாம்…  அங்கதான் ராசியான எடம்னு பேசிக்கறாங்க.’’

ஆறுமுகம் : ‘‘அதெல்லாம் உங்க விருப்பப்படி நாங்க விட்டிர்றோம்…’’

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

முதியவர் : ‘‘அப்போ நாங்க போயிட்டு வர்றோம்…’’

அடுக்களையில் மீனாட்சி உட்கார்ந்தபடியே கைகளால் தரையில் எதையோ வரைந்து கொண்டிருக்கிறாள். ஆறுமுகத்தின் குரல் கேட்கிறது.

ஆறுமுகம் குரல் : ‘‘மீனாட்சி…… இங்க வா தாயி…எல்லாரும் கௌம்பறாங்க…’’

மீனாட்சி அடுக்களையிலிருந்து முன் அறைக்கு கெந்தி கெந்தி நடந்து வருகிறாள். முன் அறையில் எல்லோரும் கிளம்புவதற்கு தயாராக எழுந்து நிற்கின்றனர். முன் அறையில் வந்து நிற்கும் மீனாட்சியை மாப்பிள்ளை ஏறெடுத்துப் பார்க்கிறார்.   மீனாட்சி மாப்பிள்ளையையும், அவருக்குப் பக்கத்தில் நிற்கும் இரு குழந்தைகளையும் உன்னிப்பாகப் பார்க்கிறாள். இரு குழந்தைகளும் மீனாட்சியை மாறி மாறி பார்க்கின்றனர். ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களை மீனாட்சி கையெடுத்துக் கும்பிட்டவாறே வழியனுப்பி வைக்கிறாள்.

இரு குழந்தைகளும் கடைசியாக வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். சிறுவன் நடந்து செல்லும்போதே திரும்பி திரும்பி மீனாட்சியைப் பார்க்கிறான். வேனுக்குள் ஒவ்வொருவராக ஏறுகின்றனர். சிறுவனும், சிறுமியும் வேனுக்குள் ஏறுவதற்கு முன்பு வீட்டு வாசலின் அருகே நிற்கும் மீனாட்சியை மீண்டும் ஒருதரம் எட்டிப் பார்த்துக் கொள்கின்றனர்.

காட்சி 9 : பகல்/வெளி/தெரு

தெருவின் ஓரத்தில் இருக்கும் அடிபம்ப்.  ஒரு  பெண் அதில்  தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு பெண் குடத்தோடு நிற்கிறாள். குடத்தோடு நிற்கும் பெண்ணிண் பார்வை தூரத்திற்குச் செல்கிறது. மீனாட்சி இடுப்பில் காலி குடத்தோடு கெந்தி கெந்தி நடந்து வருகிறாள்.

பெண் 1 : ‘‘அக்கா…அங்க பாருங்க…மீனாட்சி வாறா… அவளுக்கு….. நாலுநாளுக்கு முன்னாடி கல்யாணம் நிச்சயமாயிருச்சாம்….மாப்பிள்ளைக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காம்’’

மீனாட்சி குழாயடிக்கு வந்து விடுகிறாள். அந்தப் பெண்களைப் பார்த்து மெலிதாக சிரித்துக் கொள்கிறாள்.

பெண் 1 : ‘‘என்ன மீனாட்சிக்கா…… கல்யாணம் நிச்சமாயிருக்குன்னு கேள்விப் பட்டோம்…உண்மையா?’’

மீனாட்சி  : (சோகமாகச் புன்னகைத்தபடியே) ‘‘ஆமா…’’

பெண் 2 : ‘‘எங்களுக்கெல்லாம் பத்திரிக்கை வைப்பீங்கள்ல…’’

மீனாட்சி : ‘‘கண்டிப்பா….’’

பெண் 1 : ‘‘என்னைக்கு கல்யாணம்…..?’’

மீனாட்சி : ‘‘அடுத்த வாரம் 24ம் தேதி ஞாயித்துக்கிழமை…சிவன் கோவில்ல’’

பெண் 2 : ‘‘கவலைப்படாதீங்க…நீங்க எங்க இருந்தாலும் சமாளிச்சிக்குவிங்க’’

மீனாட்சி மெலிதாகச் சிரித்துக் கொண்டே தலையாட்டிக் கொள்கிறாள். இரண்டு பெண்களும் தண்ணீர்க் குடங்களைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். மீனாட்சி குடத்தை குழாய்க்கு நேரே வைத்துவிட்டு பம்ப்பை அடிக்கத் தொடங்குகிறாள்.

காட்சி 10 : பகல்/வெளி மற்றும் உள்/கனி அம்மாள் வீடு

மீனாட்சி மாட்டிற்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு கன்றுக் குட்டி அவளின் அருகே நிற்கிறது. மீனாட்சி கன்றுக் குட்டியைத் தடவி விடுகிறாள். கன்றுக்குட்டி மீனாட்சியின் கைகளை மூக்கால் முகர்ந்து பார்க்கிறது. மீனாட்சியின் கைகளை கன்றுக்குட்டி தன் நாக்கினால் நக்கிவிடுகிறது. கனி அம்மாள் வீட்டின் உள் அறையிலிருந்து மீனாட்சியை அழைக்கிறார்.

கனி அம்மாள் குரல் : ‘‘மீனாட்சி இங்க வா….’’

மீனாட்சி மாட்டிற்கு தண்ணீர் வைப்பதை அப்படியே நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைகிறாள். கனி அம்மாள் ஒரு சூட்கேசில் துணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே நூறு ரூபாய்த் தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மீனாட்சி கனி அம்மாளின் அருகே போய் நிற்கிறாள். மீனாட்சியை கனி அம்மாள் பார்க்கிறார்.

கனி அம்மாள் : ‘‘சாயந்தரம் ஜவுளி எடுக்க போலாம்னு மாமா சொல்லியிருக்காரு….மாப்பிள்ளை வீட்டுல இருந்தும் வர்றாங்களாம்…நீயும் வர்றியா?’’

மீனாட்சி :  (தலையாட்டுகிறாள்)

கனி அம்மாள் : ‘‘கௌம்பும்போது பெட்டிக்குள்ள இருக்கற மூணு பவுன் செயினை எடுத்து கழுத்துல போட்டுக்க.. பாக்கறதுக்கு அழகா இருக்கும்’’

கனி அம்மாள் தன் அருகே இருக்கும் ரூபாய்த் தாள்களை மீனாட்சியிடம் எடுத்துக் கொடுக்கிறார்.

கனி அம்மாள் : ‘‘இந்தா…இதுல அஞ்சாயிரம் ரூபா இருக்கு….’’ (ஏதோ யோசிக்கிறார்)…..மாடுங்கள வாங்கறதுக்கு நாளைக்கு ஆளுங்கள கூட்டிட்டு வர்றதா புரோக்கர் சொல்லியிருக்காரு…’’

மீனாட்சி கனி அம்மாளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறாள்.

மீனாட்சி  : ‘‘எல்லா மாட்டையும் வித்துறப் போறீங்களா?’’

கனி அம்மாள் மீனாட்சியை ஏறிட்டுப் பார்க்கிறார்.

கனி அம்மாள் : ‘‘வேற என்ன பண்றது?…’’

மீனாட்சி : ‘‘அப்புறம் நீங்க என்ன பண்ணுவீங்க…’’

கனி அம்மாள் : ‘‘கடவுள் இருக்கான்… ஏதாவது வழிகாட்டாமலா  இருப்பான்….’’

காட்சி 11 : பகல்/வெளி/பேருந்து நிறுத்தம்

பேருந்து நிறுத்தம்  ஒன்றில் கனி அம்மாள், ஆறுமுகம், மீனாட்சி மூவரும் பேருந்திற்காக காத்து நிற்கின்றனர். இன்னும் ஒருவர் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்கிறார். அவர் கனி அம்மாள் மற்றும் ஆறுமுகத்திடம் பேச்சு கொடுக்கிறார்.

நபர் : ‘‘என்ன ஆறுமுகம்ண்ணே..எப்டியோ மீனாட்சிக்கு பேசி முடிச்சிட்டீங்க…இனிமே கனி அம்மாவுக்கு கவலை கிடையாது….’’

கனி அம்மாள் மெதுவாகப் புன்னகைத்துக் கொள்கிறார். மீனாட்சி சேலை முந்தானையால் தன் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.

ஆறுமுகம் : கடவுள் இப்பத்தான் கண்ண தொறந்து இந்தப் புள்ளைய பாத்திருக்கான்… மகளுக்கு  கல்யாணமே ஆவாதோன்னு கனி பட்ட வேதனை எனக்கு ஒருத்தனுக்குத்தான் தெரியும்….’’

நபர் : ‘‘மாடுங்கள விக்கப்போறதா ஊர்ல பேசிக்கிட்டாங்க. என்ன விலைன்னா கொடுக்கலாம்…’’

ஆறுமுகம் கனி அம்மாளைப் பார்க்கிறார்…

கனி அம்மாள் : ‘‘புரோக்கர் மாடசாமிகிட்ட சொல்லிருக்கேன்…அவருகிட்ட பேசிக்கோங்க….’’

மீனாட்சியின் பார்வையில் தூரத்தில் பேருந்து வருவது தெரிகிறது.

மீனாட்சி : ‘‘பஸ் வருதும்மா…’’

அனைவரின் பார்வையும் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் பேருந்தை நோக்கிச் செல்கிறது.   பேருந்து அருகில் வந்து நிற்கிறது. மூவரும் பேருந்தில் ஏறுகின்றனர்.

 

காட்சி 12 பகல்/வெளி/ ஜவுளிக்கடையின் முன்புறம்

பெரிய ஜவுளிக்கடையின்   முன்புறத் தோற்றம். ஓங்கி உயர்ந்த கட்டடம். தெருக்களில் மக்கள் நெருக்கம். பலதரப்பட்ட வாகனங்கள்  சாலையில் ஊர்ந்தபடி சென்றுகொண்டிருக்கின்றன. ஜவுளிக்கடையின் முன்பாக இடது ஓரத்தில் ஆறுமுகம், கனி அம்மாள், மீனாட்சி மூவரும் நின்று கொண்டிருக்கின்றனர். மீனாட்சி கைகளைக் கட்டியவாறு நிற்கிறாள். இவர்களைக் கடந்து ஜவுளிக் கடையின் உள்ளும், புறமும் பலர் போவதும், வருவதுமாக இருக்கின்றனர். ஆறுமுகத்தின் பார்வை யாரையோ தேடுகிறது.

ஆறுமுகம் : (மைன்ட் வாய்ஸ்) ‘‘இங்கதான நிக்கச் சொன்னாங்க…!’’

ஓர் ஆட்டோவில் மாப்பிள்ளை, முதியவர், சிறுவன், சிறுமி நால்வரும் வந்து இறங்கு கின்றனர். மாப்பிள்ளை ஆட்டோவுக்கு பணம் கொடுக்கிறார். ஆறுமுகம் அவர்களைக் கவனித்து விடுகிறார்.

ஆறுமுகம் : ‘‘கனிம்மா…அந்தா வந்துட்டாங்க பாரு…’’

கையை நீட்டிச் சொல்கிறார். கனி அம்மாளும், மீனாட்சியும் ஆறுமுகம் கைகாட்டும் திசை நோக்கிப் பார்க்கின்றனர். மீனாட்சியின் பார்வையில் சிறுவனும், சிறுமியும் தெரிகின்றனர். மீனாட்சியின் முகத்தில் ரியாக்ஷன். மூவரும் அவர்களை நோக்கி நடக்கின்றனர். இவர்கள் நடந்து வருவதை சிறுவன் பார்க்கிறான். சிறுவன் தன் அப்பாவிடம் (மாப்பிள்ளை) கையைச் சுரண்டியபடியே…

சிறுவன் : ‘‘ப்பா..அங்க பாருங்க..அவங்க வாறாங்க..’’

சிறுவன் கைகாட்டும் திசையை மாப்பிள்ளை பார்க்கிறார். அவரின் பார்வையில் மீனாட்சி தெரிகிறாள். அவர்களை நோக்கி இவர்கள் நடக்கின்றனர். இரு வீட்டாரும் சேர்ந்து விடுகின்றனர். மாப்பிள்ளை மீனாட்சியைப் பார்க்கிறார். மீனாட்சியின் முகத்தில் கொஞ்சம் வெட்கம், தயக்கம். சிறுவனும், சிறுமியும் மீனாட்சியை உற்றுப் பார்க்கின்றனர். அதை மீனாட்சி கவனிக்கிறாள்.

முதியவர்  : ‘‘கொஞ்சம் லேட்டாயிருச்சி….’’(ஆறுமுகத்திடம்)

ஆறுமுகம் : ‘‘பரவால்ல…பொம்பளைங்க யாரும் வரலையா…?’’

முதியவர்  : ‘‘வந்துக்கிட்டே இருக்காங்க…நாம உள்ள போயி மொதல்ல மாப்பிள்ளைக்கு வேண்டியத வாங்கிரலாம்..அவங்கள்லாம் வந்தபிறகு பொண்ணுக்கு வாங்கிக்கலாம்’’

சிறுவன் மீனாட்சியின் அருகில் வருகிறான். மீனாட்சி அவனுடைய தோளில் கை வைக்கிறாள். பின்னர் அவன் தலையை வருடுகிறாள். சிறுவனிடம் ஏதோ பேசுகிறாள். இதை மாப்பிள்ளை ஜாடையாக கவனிக்கிறார். சிறுவன் பதில் சொல்லிக்கொண்டே மீனாட்சியை ஏறிட்டுப் பார்க்கிறான். அந்தப் பார்வையில் பாசம் இருக்கிறது. மாப்பிள்ளையின் அருகே நிற்கும் சிறுமியும் மீனாட்சியைப் பார்க்கிறாள். சிறுமியை தன் அருகே வருமாறு ஜாடையாக அழைக்கிறாள் மீனாட்சி. சிறுமி மீனாட்சியின் அருகே வருகிறாள்.

ஆறுமுகம் : ‘‘வாங்க..கடைக்கு உள்ள போவோம்…’’

எல்லோரும் ஜவுளிக் கடையின் படிக்கட்டுகளில் ஏறுகின்றனர். ஆறுமுகம், முதியவர், மாப்பிள்ளை, கனி அம்மாள் ஆகியோர் முன்னாடி செல்ல, மீனாட்சியும், இரு குழந்தைகளும் ஒன்றாக படிக்கட்டுகளில் ஏறுகின்றனர். மீனாட்சியின் இடது பக்கம் சிறுவனும், வலது பக்கம் சிறுமியும் ஏறுகின்றனர். சிறுவனின் கைகளை மீனாட்சி தன் விரல்களால் பிடித்திருக்கிறாள். மீனாட்சி கெந்தி, கெந்தி நடப்பதால் முன்னாடி நடந்து செல்பவர்களுக்கும், மீனாட்சிக்கும் சற்று இடைவெளி விழுகிறது. மீனாட்சி சிறுவனையும், சிறுமியையும் மாறி மாறி பார்த்துக் கொள்கிறாள்.

இப்போது, மீனாட்சிக்கு எதிரே ஒரு பெண் வழிவிடாமல் மறித்துக்கொள்கிறாள். மீனாட்சி அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்க்கிறாள். வழிமறித்த பெண் மீனாட்சியைப் பார்த்துச் புன்னகைக்கிறாள். அதை சிறுவனும், சிறுமியும் கவனிக்கின்றனர். மீனாட்சி அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறாள். மீனாட்சியின்  முகத்திலும் அந்தப் பெண்ணிண் முகத்திலும் சந்தேகப் புன்னகை. வழிமறித்த பெண்ணின் கழுத்து நிறைய தங்க நகைகள் மிளிர்கின்றன. அந்தப் பெண்ணின் அருகே அவளின் கணவர் பணக்காரத் தோரனையுடன் நிற்கிறார். அந்தப் பெண் விலை உயர்ந்த பட்டுப்புடவை கட்டியிருக்கிறாள். அவளின் பெயர் கவிதா.

கவிதா : ‘‘ஏய்…நான் யாருன்னு தெரியுதா….’’ (முகத்தில் ஆச்சரியம்)

மீனாட்சி உற்றுப் பார்க்கிறாள். மீனாட்சியின் முகத்தில் மெல்லிய புன்னகை தவழ ஆரம்பிக்கிறது.

மீனாட்சி : ‘‘நீ கவிதாதான….’’ (மெலிதான சிரிப்பு)

கவிதா : ‘‘கரெக்ட்டா ஞாபகம் வச்சிருக்கியே!”

மீனாட்சி : ப்ளஸ் டூ படிக்கும்போது…பாதியிலேயே கல்யாணம் ஆகி, நீ போனத எப்டி மறக்க முடியும்…’’

கவிதா : ‘‘ப்ப்ப்….பா…எவ்ளோ வருஷம்…நல்லா இருக்கியா?’’

மீனாட்சி : ‘‘ம்ம்ம்…நீ எப்டி இருக்கே….?’’

இருவரும் பேசிக்கொள்வதை சிறுவனும், சிறுமியும் வித்தியாசமாகப் பார்க்கின்றனர்.

கவிதா : ‘‘எனக்கென்ன குறைச்சல்…..பாரு நாப்பது மைல் வித்தியாசத்துலதான் நாம இருக்கோம்….ஆனாலும்  பாத்து பல வருஷம் ஆகுது….’’

கவிதா தன் கணவரை மீனாட்சிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள்.

கவிதா : ‘‘என்னோட வீட்டுக்காரர்….’’ (கை நீட்டியவாறே)

மீனாட்சியும், கவிதாவின் கணவரும் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இப்போது, கவிதா தன் ஹேண்ட் பேக்கைத் திறக்கிறாள். அதிலிருந்து ஒரு கவரையும்  பேனாவையும் எடுக்கிறாள். கவரின்மேல் பேனாவால் எழுதுகிறாள். அந்தக் கவரை மீனாட்சியிடம் நீட்டுகிறாள்.

கவிதா : ‘‘இந்தா…வர்ற ஞாயிற்றுக் கெழமை 24ம் தேதி என் மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கோம்…கண்டிப்பா நீ குடும்பத்தோட    வரணும்….’’

கவிதா சொல்வது மீனாட்சிக்கு மீண்டும் ஒரு முறை கேட்கிறது….

கவிதா : ‘‘…வர்ற ஞாயிற்றுக் கெழமை 24ம் தேதி என் மகளுக்கு      கல்யாணம் வச்சிருக்கோம்…கண்டிப்பா நீ குடும்பத்தோட வரணும்..

மீனாட்சியின் முகம் ஏதோ ஒரு பரிதவிப்பில் கவிதாவின் கண்களைப் பார்க்கிறது. பின்னணி இசையில் மீனாட்சியின் பரிதவிப்பு உணர்த்தப்படுகிறது.

கவிதா : ‘‘ஏய்…என்ன…அப்டி பாக்கற…கண்டிப்பா வந்துறணும்..’’

மீனாட்சி : ‘‘சரி’’ என்பதுபோல் தலையாட்டுகிறாள்…சிறுவனும், சிறுமியும் மீனாட்சிக்கு சற்று தள்ளி நிற்கின்றனர்.

கவிதா : ‘‘உனக்கு எத்தனை குழந்தைங்க?’’

மீனாட்சி அமைதியாகப் புன்னகைக்கிறாள். சிறுவனும், சிறுமியும் மீனாட்சியை கூர்ந்து கவனிக்கின்றனர். மீனாட்சி இரு குழந்தைகளையும்  முக ஜாடையால் தன்  அருகே வருமாறு அழைக்கிறாள். இரு குழந்தைகளும் மீனாட்சியின்  அருகே தயக்கத்துடன் வந்து   ஒட்டிக்கொள்கின்றனர். வலது புறம் சிறுமியும், இடது புறம் சிறுவனும்…

மீனாட்சி : ‘‘இவ மூத்தவ..பேரு……ஈஸ்வரி… இவன் ரெண்டாவது……பேரு….கணேச மூர்த்தி….’’

கவிதா இரண்டு குழந்தைகளையும் உற்றுப் பார்க்கிறாள்.

கவிதா : ‘‘வீட்டுக்காரர் வரலையா?’’

மீனாட்சி : ‘‘கடைக்கு உள்ள போயிட்டாங்க’’

சிறுவனும், சிறுமியும் மீனாட்சியின் இடுப்பில் தலைசாய்த்தவாறே முழிக்கின்றனர். கவிதா சிறுவனின் கன்னத்தில் தட்டிக்கொடுத்தவாறே…

கவிதா : ‘‘உங்க அம்மா ரொம்ப நல்லவங்க…நல்லா படிப்பாங்க…அவங்க மாதிரியே நீங்களும் நல்லா படிக்கணும்…என்ன’’

சிறுவனும், சிறுமியும் சரி என்பதுபோல் தலையாட்டுகின்றனர்.

கவிதா : ‘‘நான் கௌம்பறேன் மீனாட்சி…கண்டிப்பா என் மகள் கல்யாணத்துக்கு வரணும்…குழந்தைங்க..உன் வீட்டுக்காரரையும் மறக்காம அழைச்சிட்டு வரணும்…’’

மீனாட்சி  ‘சரி’… என்பதுபோல் தலையாட்டிக் கொள்கிறாள்.

கவிதா புறப்படுகிறாள்…மீனாட்சி இரு குழந்தைகளோடு மீண்டும் ஜவுளிக்கடையின் படிக்கட்டுகளில் கெந்தியபடியே ஏறத் தொடங்குகிறாள். சிறுவனும், சிறுமியும் மீனாட்சியைப் அண்ணாந்து பார்த்துக்கொண்டே அவளோடு படிக்கட்டுகளில் ஏறுகின்றனர்.

இந்தக் காட்சி ஸ்லோ மோஷனில் காண்பிக்கப்படுகிறது.

மனதை வருடும் பின்னணி இசை ஒலிக்க மீனாட்சி மேல் நோக்கிப் பார்க்கிறாள். அவள் இரு குழந்தைகளோடும் படிகளில் ஏறி வருவதை ஜவுளிக்கடையின் வாசலுக்கு உட்புறம் நிற்கும் மாப்பிள்ளை பாசத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார். பின்னணி இசை தொடர்ந்து ஒலிக்க, தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மேல் நோக்கி நகர்ந்தபடியே படம் நிறைவடைகிறது.