Tag Archives: sample tamil thiraikathaikal

tamil sample screenplay-tamil sample thiraikathai- நிறம் மாறும் முகங்கள் திரைக்கதை

நிறம் மாறும் முகங்கள்

கதை : ராஜேஷ்குமார்

திரைக்கதை, வசனம் : செ.பாலமுருகன்
 காட்சி 1/பகல்/வெளி

இருபது அடி அகலமுள்ள தெரு.
இருபுறமும் வீடுகள் நிறைந்த தெரு.
இருசக்கர வாகனத்தை குறைந்த வேகத்தில் ஓட்டிக்கொண்டு வருகிறாள் 27 வயது வாணி.
பின் இருக்கையில் வாணியின் மகன் 6 வயது சிறுவன், வாணியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
பள்ளிச் சீருடை அணிந்துள்ளான். முதுகில் புத்தகப் பை. பெயர் பிரசாத்.

தெருச் சாலையின் சிறு சிறு பள்ளங்களில் வாணியின் இருசக்கர வாகனம் குதித்து குதித்து வருகிறது.
பிரசாத்: “ம்ம்மா….முதுகு வலிக்குது….இன்னிக்கு நீ சரியாவே வண்டி ஓட்டல…குதிச்சி..குதிச்சி போவுது’’ (முகத்தில் வலி)

வாணி: ‘‘கொஞ்சம் பொறுத்துக்கோடா…..அஞ்சி நிமிஷந்தான்….வீட்டுக்கு போயிறலாம்…எந்தப் பாவி ரோட்டப் போட்டான்னே தெரியலை…ஒரு மழை பெய்யறதுக்குள்ள எல்லா ரோடும் பல்லைக் காட்டுது….பாவிப்பய நல்லாவே இருக்க மாட்டான்’’ (முனகல், ஆத்திரம்)

ஒரு வளைவில் திரும்புகிறது. தொடர்ந்து அதே வேகத்தில் வண்டி பயணிக்கிறது.

 

காட்சி 2/பகல்/வெளி

 

பிரதான சாலை. சுமாரான போக்குவரத்து.
மகிந்த்ரா வெள்ளை நிற ஸைலோ காரை 27 வயது இளைஞன் ஓட்டிக்கொண்டு வருகிறான்.
பெயர் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணனின் காருக்கு முன்னும் பின்னுமாக பல வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன.
ராமகிருஷ்ணனின் பார்வை சாலையை கூர்ந்து கவனித்தபடி இருக்கிறது.
ஒரு சிக்னலில் கார் நிற்கிறது.
ராமகிருஷ்ணனின் பார்வை சிக்னலில் எரியும் சிகப்பு நிற விளக்கையே பார்த்துக் கொண்டிருக்கிறது.
சட்டைப் பையில் இருந்து இடது கையால் ஒரு பபுள்கம்மை எடுக்கிறான்.
வலது கையால் பபுள்கம் மேலுள்ள கவரை பிரித்து, வாயில் போட்டு சுவைக்கிறான்.
சிக்னலில் பச்சை விளக்கு எரிய, ராமகிருஷ்ணன் கியரை இயக்கி வண்டியை தொடர்ந்து ஓட்டுகிறான்.
கார் பிரதான சாலையைவிட்டு உட்புற சாலைக்குள் நுழைகிறது.

      கட்

வாணி இன்னொரு தெருவுக்குள் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கிறாள்.

      கட்

அதே தெருவின் எதிர்புறத்தில் ராமகிருஷ்ணன் கார் ஓட்டிக்கொண்டு வருகிறான்.
காருக்கு இருபது மீட்டர் முன்னே வயதான தாத்தா ஒருவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போகிறார்.
சாலையில் உள்ள ஒரு பள்ளத்தில் சைக்கிள் ஏறி, இறங்கும்போது தாத்தா பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழுகிறார்.
கார் ஓட்டிக்கொண்டு வரும் ராமகிருஷ்ணன் அதைப் பார்க்கிறான்.
முகத்தில் வருத்தம். கண்களில் பரிதாபம்.
சைக்கிளோடு விழுந்துகிடக்கும் தாத்தாவுக்கு அருகில் கார் நிறுத்தப்படுகிறது.
ராமகிருஷ்ணன் அவசரமாக காரிலிருந்து இறங்குகிறான்.
விழுந்துகிடக்கும் தாத்தாவை தூக்கி விடுகிறான்.

 

ராமகிருஷ்ணன்: ‘‘என்ன தாத்தா…பாத்து வரக்கூடாதா…அடி எதும் படலியே’’

 

தாத்தா ராமகிருஷ்ணனின் உதவியோடு எழுந்துகொள்கிறார்.
தாத்தா: ‘‘ரொம்ப நன்றி தம்பி….’’
ராமகிருஷ்ணன் தாத்தாவின் சட்டையில் ஒட்டியிருக்கும் அழுக்கை தன் கையால் துடைத்து விடுகிறான்.
அவன் துடைத்து விடுவதை தாத்தா பாசத்தோடு பார்க்கிறார்.
தாத்தா: ‘‘பரவால்ல தம்பி…நீங்க நல்லாயிருக்கணும்…பாத்தா பெரிய இடத்து புள்ளை மாதிரி இருக்கீங்க…உங்கள மாதிரி ஆளுங்க ஒரு சில பேராவது இன்னும் இருக்கறதாலதான் நாட்டுல மழை பெய்யுது…’’

ராமகிருஷ்ணன்: ‘‘அப்போ….மழையால ரோடெல்லாம் பள்ளமாவுறது எங்கள மாதிரி ஆளுங்கலாலத்தான்னு சொல்ல வர்றீங்க…’’
சொல்லிவிட்டு மெலிதாகச் சிரித்துக் கொள்கிறான்.
தாத்தா ராமகிருஷ்ணனின் முகத்தை வருத்தத்தோடு ஏறிட்டுப் பார்க்கிறார்.
தாத்தாவின் முகத்தை ராமகிருஷ்ணன் கவனிக்கிறான்.

ராமகிருஷ்ணன்: ‘‘சும்மா ஜோக்கடிச்சேன்…அதுக்குப்போயி இப்படி வருத்தப்படறீங்களே…’’

தாத்தா ராமகிருஷ்ணனின் முகத்தைப் பார்க்கிறார்.
மெலிதாகப் புன்னகைக்கிறார்.
தாத்தா: ‘‘இடுக்கண் வருங்கால் நகுகன்னு சொல்றீங்க…சரிதான்ன….நான் சொல்றது’’

ராமகிருஷ்ணன்: ‘‘ஐய்யோ….திருக்குறள்லாம் சொல்றீங்க….ஒரு வேளை போன பிறவியில திருவள்ளுவராப் பிறந்திருப்பீங்களோ…’’

 தாத்தா: ‘‘துன்பம் வரும் வேளையில சிரிங்க…’’

 ராமகிருஷ்ணன்: ‘‘அப்டீன்னா கண்ணதாசனா’’    

இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்.
தொடர்ந்து சிரிக்கின்றனர்.

அவர்களுக்கு எதிர்புறமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவரும் வாணி இதைக் கவனிக்கிறாள்.
வாணியின் பார்வை ராமகிருஷ்ணனை பார்த்து ஆச்சரியமாகிறது.
வாணி இப்போது ராமகிருஷ்ணனை கூர்ந்து பார்க்கிறாள்.
வண்டியை மெதுவாக ராமகிருஷ்ணன் காருக்கு அருகில் நிறுத்துகிறாள்.
ராமகிருஷ்ணனும் தாத்தாவும் தங்களுக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு  பார்க்கின்ற வாணியையும், அவளுக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் சிறுவனையும் பார்க்கின்றனர்.
வாணி இப்போது ராமகிருஷ்ணனை கூர்ந்து பார்க்கிறாள்.
அவளின் பார்வை ராமகிருஷ்ணனின் முகத்தில் ஒருவித மாற்றத்தை வரவழைக்கிறது.
ராமகிருஷ்ணன்: ‘‘என்னங்க…அப்டீ பாக்கறீங்க?’’

வாணி: ‘‘நீங்க…ராமகிருஷ்ணந்தான?’’ (யோசித்தபடியே..தயக்கத்துடன்)

வாணி இப்படிக் கேட்டதும் ராமகிருஷ்ணன் முகத்தில் கூடுதல் மாற்றம் தெரிகிறது.
பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறான்.

வாணி: ‘‘நீங்க ராமகிருஷ்ணந்தான?’’

ராமகிருஷ்ணன் முகத்தில் இப்போது வியப்பு.
அருகில் நிற்கும் தாத்தா வாணியையும் ராமகிருஷ்ணனையும் மாறி மாறி பார்க்கிறார்.
ராமகிருஷ்ணன்: ‘‘ஆமா…நீங்க யாருன்னு தெரியலையே…’’

வாணியின் முகத்தில் மெலிதான நக்கல் சிரிப்பு வருகிறது.

வாணி: ‘‘அடப்பாவி…என்னை தெரியலையா…’’

ராமகிருஷ்ணன்: ‘‘ஏங்க….தெரியாமத்தான நீங்க யாருன்னு கேக்கறேன்..’’

வாணி: ‘‘நல்லா பாரு…நான் யாருன்னு தெரியும்…தெரியலைன்னா நீ வேஸ்ட்….’’

ராமகிருஷ்ணனின் முகத்தில் எரிச்சல்

ராமகிருஷ்ணன்: ‘‘எங்க தொகுதி எம்.எல்.ஏ பொண்டாட்டியா…’’  (நக்கல்)

வாணி மெதுவாகச் சிரித்துக் கொண்டே…

வாணி: ‘‘மண்ணாங்கட்டி….டேய் உங்கூட ஆறாவதுல  இருந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் பல்லாவரம் கவர்மென்ட் ஸ்கூல்ல ஒன்னா படிச்சேன்ன …..மறந்துட்டியா….’’

ராமகிருஷ்ணன் மெதுவாக தலையை சொறிந்துகொள்கிறான்.
வானம் பார்த்து யோசிக்கிறான்.
மூக்கை தடவிக் கொள்கிறான்.
இவர்களின் செய்கையை தாத்தா பார்க்கிறார்.

தாத்தா: ‘‘தம்பி நான் கௌம்புறேன்…உங்களுக்கு சனி திசை ஆரம்பம் ஆகறமாதிரி இருக்கு…’’
தாத்தா சொல்லிவிட்டு ராமகிருஷ்ணனின் பதிலை எதிர்பார்க்காமல் சைக்கிளில் ஏறி கிளம்புகிறார்.
ராமகிருஷ்ணன் தாத்தா புறப்பட்டு போவதை ஒருமுறை பார்த்துவிட்டு, வாணியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறான்.

ராமகிருஷ்ணன்: ”ம்ம்…….வாணி…….’’ (யோசனை மற்றும் தயக்கம்)

வாணி: ‘‘அப்பாடி……இப்பவாவது ஞாபகம் வந்திச்சே….’’

ராமகிருஷ்ணன் வாணியின் வண்டியின் பின்னால் கவலையோடு அமர்ந்திருக்கும் சிறுவனைப் பார்க்கிறான்.
அதை வாணி கவனிக்கிறாள்…

வாணி: ‘‘என்னோட மகன்….மீனாட்சி  மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ஒன்னாவது படிக்கிறான்….’’
சிறுவன் பிரசாத் ராமகிருஷ்ணனை ஏறிட்டுப் பார்க்கிறான்.
ராமகிருஷ்ணன் சிறுவன் பிரசாத்தின்  அருகில் வந்து அவன் முகத்தை கையால் தடவியபடியே வாணியிடம் பேசுகிறான்..

ராமகிருஷ்ணன்: ‘‘பாத்து பனிரெண்டு வருஷம்…..ஆளே மாறிட்ட வாணி……அப்போ ஒல்லியா இருப்பே…இப்போ கொஞ்சம் சதை போட்டு….முகம்லாம் வேறமாதிரி ஆயிருச்சா…உடனே ஞாபகத்துக்கு வரலே….’’

வாணி அவன் பேசுவதை கவனிக்கிறாள்…

ராமகிருஷ்ணன்: ‘‘கல்யாணம் எப்போ ஆச்சி….?’’

வாணி: ‘‘ஏழு வருஷம் முடிஞ்சிருச்சி…அதுக்கு அத்தாட்சியாத்தான் இவரு….பேரு…பிரசாத்’’
பின்னால் அமர்ந்திருக்கும் தன் மகனை தலையை அசைத்து ஜாடை காட்டி பேசுகிறாள்.

ராமகிருஷ்ணன்: ‘‘உன்னோட….அவர் என்ன பண்றார்….?’’

வாணி: ‘‘க்ரைம் இன்ஸ்பெக்டர்….’’

வாணி சொன்னதைக் கேட்டு ராமகிருஷ்ணன் மெலிதாகச் சிரிக்கிறான்.

வாணி: ‘‘ஏன்டா சிரிக்கறே….?’

ராமகிருஷ்ணன்: ’’இல்லே…சின்ன வயசுல போலீஸ்னாலயே ஓடி ஒளிஞ்சுக்குவே….இப்போ போலீஸ்காரருக்கே பொண்டாட்டியா ஆயிட்டியே…அதான்…’’

வாணி: ‘‘என்ன பண்றது…ஆனா என்னப் பாத்து இப்போ அவருதான் பயப்படாரு…’’

சொல்லிவிட்டு வாணி சிரித்துக் கொள்கிறாள்.

ராமகிருஷ்ணன்: ‘‘வீடு இந்தப் பக்கம்தானா…?’’
வாணி: ‘‘ஆமா…அடுத்த தெருதான்….’’

சில நொடிகள் யோசிக்கிறாள்…

வாணி: ‘‘சரி…நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்…உனக்கு கல்யாணம் ஆயிருச்சா…?’’

ராமகிருஷ்ணன் இல்லை என்பதுபோல் தலையாட்டுகிறான்.

வாணி: ‘‘கார்லாம் வச்சிருக்கே…ரொம்ப வசதியாயிட்டேன்னு நினைக்கிறேன்….’’

ராமகிருஷ்ணன்: ‘‘பிஸ்னெஸ் பண்றேன்…அண்ணங்கூட சேர்ந்து….சுமாரான வசதிதான்…’’

   கட்

அதே தெருவில் சற்று தூரத்தில் ஆட்டோ ஒன்று வந்துகொண்டிருக்கிறது.
ஆட்டோவுக்குள் வாணியின் வயதுடைய ஒரு பெண் கண்களைக் கசக்கியபடியே அமர்ந்திருக்கிறாள். பெயர் சந்திரா.
முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.
ஆட்டோ ஓட்டுபவர், ஆட்டோவின் கண்ணாடி வழியே பின்னாடி அமர்ந்திருக்கும் பெண் கண்களைத் துடைத்து விடுவதை பார்க்கிறார்.

ஆட்டோ ஓட்டுபவர்: ‘‘மேடம்……எதுவும் நடந்திருக்காது…தேவையில்லாம மனசப் போட்டு குழப்பிக்காதீங்க…’’

சந்திரா ஆட்டோ ஓட்டுநரைப் பார்க்கிறார்.
கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.
ஆட்டோ தொடர்ந்து பயணிக்கிறது.

      கட்

வாணி இப்போது டூ வீலரிலிருந்தி இறங்கி நின்றுகொண்டு ராமகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்.

வாணி: ‘‘வீடு….?’’

ராமகிருஷ்ணன்: ‘‘அனகாபுத்தூர்ல….’’

தூரத்தில் வந்துகொண்டிருந்த ஆட்டோ இவர்களைக் கடந்து செல்லும்போது…. ஆட்டோவினுள் அமர்ந்திருக்கும் சந்திரா வாணியைப் பார்க்கிறாள்…

சந்திரா: ‘‘நிப்பாட்டுங்க….நிப்பாட்டுங்க’’

சந்திரா சொல்லவும் ஆட்டோ ஓட்டும் நபர் ஆட்டோவை நிறுத்துகிறார்.
தங்களுக்கு அருகே திடீரென்று ஆட்டோ நிற்பதை வாணியும், ராமகிருஷ்ணனும் கவனிக்கின்றனர்.
ஆட்டோவிலிருந்து சந்திரா அழுது வடியும் முகத்துடன் இறங்குகிறாள்.
சந்திரா அழுதுகொண்டே இறங்குவதை வாணி பார்க்கிறாள்.
வாணியின் முகத்தில் ரியாக்ஷன்.
ராமகிருஷ்ணன் சந்திராவைப் பார்க்கிறான்.
சந்திரா வாணியை நோக்கி அழுதபடியே நடந்து வருகிறாள்.

வாணி: ‘‘என்னாச்சி சந்திரா…?’’ 

சந்திரா: ‘‘வாணி….என் மகனைப் பாத்தியா……அவனைக் காணோம்…..’’ (பயம், சோகம்)

வாணி: ‘‘என்ன சொல்ற….?’’ (பதட்டம்)

சந்திரா: ‘‘ஆட்டோக்காரர் கொஞ்சம் லேட்டா வந்தாரு…எல்லாப் பசங்களும் ஸ்கூல் விட்டு வந்துட்டிருந்தாங்க…நீ கூட உன் மகனை கூட்டிட்டு வந்ததை பாத்தேன்…பத்து நிமிஷந்தான் லேட்டு… உள்ள போய் பாத்தேன்…வழக்கமா நிக்கற இடத்துல என் மகன் கணேஷ் இல்ல….ஸ்கூல் ஃபுல்லா நல்லாத் தேடிப்பாத்துட்டேன்…அங்க   எங்கேயும் இல்ல….வாட்ச்மேன்கிட்ட கேட்டதுக்கு…உங்க மகன் வெளியில போனத பாத்தேன்னு சொல்றாரு…எனக்கு பயமா இருக்குடி…’’

ராமகிருஷ்ணன்: ‘‘என்ன படிக்கறான்….’’

ராமகிருஷ்ணன் சந்திராவிடம் கேட்கிறான். அதற்கு வாணி பதில் சொல்கிறாள்.

வாணி: ‘‘எம் பையனும் இவங்க பையனும் ஒரே வகுப்புதான்..எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுலதான் இவங்க இருக்காங்க’’

ராமகிருஷ்ணன்: ‘‘ஒரு வேளை நீங்க வர்றதுக்கு லேட்டாயிருச்சுன்னு அவனே கௌம்பி போயிருக்கலாம் இல்லியா…அந்தக் கோணத்துலேயும் யோசியுங்க… பதட்டப்படாதீங்க…உடனே வீட்டுக்கு கௌம்பிப் போங்க…உங்க மகன் அங்க இருப்பான்…’’

சந்திரா: ‘‘வீட்டுல மாமியார் இருக்காங்க…போன் பண்ணி கேட்டுட்டேன்…இன்னும் வரலைங்கறாங்க… எனக்கு பயமா இருக்கு…’’ (அழுகிறாள்….)…அய்யோ கடவுளே… எம் புள்ளை என்ன ஆனான்னு தெரியலையே…’’ (ராமகிருஷ்ணனிடம் சொல்கிறாள்) 

வாணி: ‘‘அழுகைய நிறுத்து சந்திரா…சீக்கிரம் கௌம்பு….நானும் வர்றேன்…மொதல்ல வீட்டுக்கு போய் பாப்போம்….’’

ராமகிருஷ்ணனை பார்க்கிறாள் வாணி…

வாணி: ‘‘நான் வர்றேன் ராமு…இன்னொரு நாளைக்கு பாக்கலாம்…அடுத்த தெருவுல 13ம் நம்பர் வீடுதான் என்னோடது….கேட்ல வனராஜன் இன்ஸ்பெக்டர்ன்னு போர்டு தொங்கும்…..’’ (அவசரப் பேச்சு)

 

ராமகிருஷ்ணன்: ‘‘என்னோட ஹெல்ப் எதாச்சும் வேணுமா..?

வாணி: ‘‘பரவாயில்ல….நாங்க பாத்துக்கறோம்….தவறா எதும் நடந்துருக்காது…..’’

ராமகிருஷ்ணன்: ‘‘சரி….அவசரப்படாம போங்க…ஒன்னும் ஆயிருக்காது….’’
சந்திரா ஆட்டோவில் ஏறிக்கொள்கிறாள்…
ஆட்டோவை ஸ்டார்ட் செய்கிறார் ஓட்டுநர்…
ஆட்டோ புறப்பட்டுச் செல்ல…அதன் பின்னாடியே வாணி தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்கிறாள்.
அவர்கள் புறப்பட்டுச் செல்வதையே ராமகிருஷ்ணன் பார்க்கிறான்.

தூரத்தில் செல்லும் ஆட்டோவும்…டூ வீலரில் செல்லும் வாணியும் இடது பக்கமாகத் திரும்பி மறைவதை ராமகிருஷ்ணன் பார்க்கிறான்…

ராமகிருஷ்ணன்:  (மைன்ட் வாய்ஸ்) ‘‘காலம் கெட்டுப் போச்சி….இஷ்டத்துக்கு குழந்தைங்க காணாமப் போறாங்க….கவர்மென்ட்ல ஆளுங்க என்ன பண்றாங்கன்னே தெரியலை…..’’

கார் கதவைத் திறக்கிறான். இருக்கையில் அமர்கிறான். கதவை மூடிக்கொள்கிறான். சுற்று முற்றும் பார்க்கிறான். இப்போது அவன் பார்வையில் வில்லத்தனம் தெரிகிறது. சட்டைப் பையிலிருந்து ஒரு பபுள்கம் எடுத்து, அதன் கவரைப் பிரித்து வாயில் போட்டு மென்னுகிறான்.

 

தன் இருக்கையில் அமர்ந்தபடியே பின் இருக்கைக்குக் கீழே எட்டிப் பார்க்கிறான்.
பின் இருக்கையில் வாயில் பிளாஸ்திரியோடு, மயங்கிய நிலையில் ஆறுவயதுச் சிறுவன் கிடக்கிறான்.

அந்தச் சிறுவனின் முகம் க்ளோசப் காட்சியாக. சிறுவன் பள்ளிச் சீருடையில் இருக்கிறான். சிறுவனின் கழுத்தில் அடையாள அட்டை தொங்கிடப்பட்டிருக்கிறது. அதில்  கணேஷ், பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் பி செக்ஷன் மீனாட்சி மெட்குலேசன் ஸ்கூல் என்கிற எழுத்துகள் தெளிவாக இருக்கின்றன.

ராமகிருஷ்ணன் சிறுவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தபடியே காரை ஸ்டார்ட் செய்கிறான். கார் புறப்பட்டுச் செல்கிறது.

 

Thanks for reading tamil thiraikathai

Thankyou for reading tamil screenplay

தத்துவம் – பித்துவம் – பிதற்றுவம் – tamil screenplay- tamil thiraikathai

screenplay tamil - tamil screenplay sample

tamil thiraikathaikal -tamil screenplay sample

வாழ்க்கை போராட்டத்தின் நான்கு நிலைகள்
screenplay tamil - tamil screenplay sample

tamil thiraikathaikal -tamil screenplay sample – tamil sample thiraikathai – tamil script

screenplay tamil - tamil screenplay sample

tamil thiraikathaikal -tamil screenplay sample

1. எனக்குத் தேவை. என்னிடம் இருக்கிறது….(பிரச்சினையே இல்லை)
2. எனக்குத் தேவையில்லை..என்னிடமும் இல்லை…(இதுவும் பிரச்சினை இல்லை)
3. எனக்குத் தேவை…என்னிடம் இல்லை…(இதற்காகத்தான் வாழ்வுப் போராட்டம்)
4. எனக்குத் தேவையில்லை….என்னிடம் இருக்கிறது…(நாசமாய் போவதற்கான காரணம் இதுதான்)

 

* உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது முகம் தாமாகவே  பவுடர் போட்டுக்கொண்டு அழகாகிவிடுகிறது.

* தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டால்
எல்லோரும் அநாதைகள்தான்!

* ஒரு பழத்திற்குள் எத்தனை விதை இருக்கிறது என்பதை மனிதன் அறிந்துகொள்ளும் முன்பே, ஒரு விதைக்குள் எத்தனை பழம் இருக்கவேண்டும் என்பதை இறைவன் தீர்மானித்து விடுகிறான்.

* வெற்றிபெறும்போது தன்னடக்கத்துடன் இருப்பவன்
அடுத்த வெற்றிக்கு ஆயத்தமாகிவிடுகிறான்.

* யாரிடம் செல்லுபடியாகுமோ, அவரிடம் மட்டுமே கோபம் கொள்கிறவன்
மிகச் சிறந்த கோழை!

* நான் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதற்கு நட்பு தேவையில்லை. என் நிழலே போதும்!

* நான் உன்னை விட்டு விலகுவதில்லை – துன்பம்!
நான் உன்னைக் கைவிடுவதில்லை- இன்பம்!

* கூட்டமோ கூட்டம் கூட்டம் பார்க்க!

 

tamil thiraikathai – tamil screenplay – sample tamil thiraikathai – model of tamil screenplay – sample of tamil screenplay – tamil script sample – tamil thiraikathaikal

 

உளுந்தூர்பேட்டையில் ஒரு கல்யாணம் – சிறுகதை-

உளுந்தூர்பேட்டையில் ஒரு கல்யாணம்!

தமிழ் சிறுகதை

பாலமுருகன்

tamil screenplay format

tamil thiraikathai sample, tamil screenplay

மறுக்க முடியாத சில பயணங்களில் மறக்க முடியாத நிகழ்வுகள் பலருக்கும் நடந்திருக்கும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. எனக்கு என்று சொல்வதைவிட எங்களுக்கு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

கடந்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது ( துணிகளை துவைப்பது அன்றுதான்), ‘ஏங்க போன் அடிக்குது‘ என்றபடியே அருமை மனைவி அழைத்தாள். ஒரு கையில் சோப்பும் இன்னொரு கையில் நுரையுமாக பாத்ரூமிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, ஓடிப்போய் செல்போனை எடுத்துப் பார்ப்பதற்குள் அது தவறிய அழைப்பாக இருந்தது. மெனுவிற்குள் சென்று மிஸ்டுகால் யார் பார்த்தேன். நண்பர் கவிராஜா அழைத்திருந்தார். இடதுகையிலிருந்த சோப்புக் கட்டியை ஓரமாக வைத்துவிட்டு, நுரைபடிந்த வலது கையை லுங்கியில் தேய்த்துவிட்டு, எனது போனிலிருந்து கவி ராஜாவுக்கு அழைப்பு விடுத்தேன்.

 

“என்ன சார் பிஸியா இருக்கீங்களா?“ என்று நலம் விசாரித்தபடியே, “எட்டாம் தேதி கல்யாணம் வச்சிருக்கேன்..மறக்காம வந்துருங்க…ரிஷி சார்கிட்ட உங்களோட பத்திரிகையை கொடுத்திருக்கேன்…வாங்கிக்கோங்க…நேர்ல வந்து பத்திரிகை வைக்கறதுக்கு டைம் இல்லே…ஸாரி சார்…“என்று அவசரகதியில் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார் கவி.

யாருக்கு கல்யாணம் வைத்திருக்கிறார்? சின்ன குழப்பம். மிஸ்டர் ரிஷிக்கு அடுத்த அழைப்பு என் செல்போன் வழியே பறந்தது. ரிங் போவதற்கு முன்னே போனை எடுக்கும் ஒரே நபர் இவர்தான். அதற்கான சூட்சுமம் இன்றளவும் எனக்கு பிடிபடவில்லை.
“சார் நான் பாலா பேசறேன்”

”அதான் நம்பர் பாத்தாலே தெரியுதே…அப்புறம் எதுக்கு பாலா பேசறேன் டயலாக்….நேரே விஷயத்துக்கு வாங்க…பிஸியா இருக்கேன்’’ என்ற ரிஷியின் வார்த்தைகளில் நக்கல் கலந்த நையாண்டி ஒலித்தது. ரிஷி எப்பவும் இப்படித்தான்…வெட்டியாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் அவரிடம் பேசும்போது நேராக விஷயத்திற்குச் சென்றுவிடவேண்டும்.

“கவி போன் பண்ணார்… கல்யாணம் வச்சிருக்கேன்…வந்துருங்கன்னு சொன்னார்…உங்ககிட்ட பத்திரிகை கொடுத்திருக்கிறதாவும் சொன்னார்…“ நான் பேசி முடிப்பதற்கு முன்பாகவே ரிஷி ஆரம்பித்தார்.

“தெரிஞ்சவங்களுக்கெல்லாம் வச்சிருங்கன்னு மொத்தம் பத்து பத்திரிகை கொடுத்துட்டுப் போனார்…அவருக்குத் தெரிஞ்சவங்களா…எனக்குத் தெரிஞ்சவங்களான்னு சொல்லலை..இப்போ அதுக்கு என்ன?” அதட்டலாகவே சொன்னார்.

“சார் அதுல ஒரு பத்திரிகை எனக்கானது…மிஸ் பண்ணிராதீங்க…நேர்ல வந்து வாங்கிக்கறேன்…“ நான் சொல்லி முடிக்கவும், அருகிலில் நின்று நான் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்த மனைவி…“யாருக்கு கல்யாணம்?“ என்று கேட்டபோதுதான் எனக்கு மூளையில் எறும்பு கடித்தது… அதற்குள் ரிஷியின் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் நான் ரிஷியின் நம்பருக்கு டயலினேன். கடைசி எண்ணை அழுத்திமுடித்து காதில் போனை வைக்கவும்…ரிஷயின் குரல் கம்பீரமாய் ஒலித்தது.

“என்னங்க…வெட்டியா இருக்கீங்களா…இப்போ என்ன விஷயம்…டக்குன்னு சொல்லுங்க….எனக்கு நெறைய வேலை இருக்கு“ கணீரென்று அவர் குரல் ஒலித்தது.
“ஒன்னுமில்லே சார்…கல்யாணம் யாருக்குன்னு சொல்லவேயில்ல…?’’

“சரியாப்போச்சி…என்னங்க…. தண்ணிய கிண்ணிய போட்டுருக்கீங்களா…கல்யாணம் யாருக்குன்னே தெரியாம பத்திரிகை வாங்க வர்ற ஆளு நீங்கதாங்க…’’ என் கேள்வி அவரை கோபமடையச் செய்தாலும்…அவரின் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்பது அவருக்கும், எனக்கும் நன்றாகவே தெரியும்.

“சொல்லுங்க சார்…டென்ஷன் பண்ணாதீங்க…கல்யாணம் யாருக்கு?’’ என் கேள்வியின் நியாயத்தைப் புரிந்துகொண்டவர்போல் பதிலினார்.
“நம்ம கவிக்குத்தாங்க கல்யாணம்…என்னசார் நீங்க… ஒரு வருஷத்துக்கு முன்ன பேசினத அதுக்குள்ள மறந்துட்டீங்களே’’ என்று சிரித்தவர்…“போன வருஷமே நம்ம எல்லோர்கிட்டேயும் கவி சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்க…ஞாபகம் வரும்’’என்று மீண்டும் சிரித்தார்.

எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. “அப்படி என்ன சொன்னார்?’’ கேட்டேன்.

“இவன்தான் இயக்குநர் பட விஷயமா நாம எல்லோரும் ஆபிஸ்ல உக்காந்து பேசிட்டிருக்கும்போது…அடுத்த வருஷம் எனக்கு கல்யாணம் நடக்கலாமுன்னு கவி ஒரு முறை சொன்னார்ல…மறந்துபோச்சா?’’ ரிஷி தொடர்ந்து என்னை நக்கல் செய்துகொண்டே பேசினார்.

“ஓஓஓஓ….ஆமால்ல…நானும் மறந்தே போயிட்டேன் சார்…அப்போ அவருக்குத்தான் கல்யாணம்…சரி…சரி..சென்னையிலதான கல்யாணம்…போய் ஜமாய்ச்சிணுலாம்’’ என்று நான் சொன்னபோதே…..ரிஷி மீண்டும் ஒரு கோபத்திற்கு ஆயத்தமாகிவிட்டார்.

“என்னங்க…சின்ன புள்ள மாதிரி பேசறீங்க…நீங்க சென்னையில இருக்கீங்கங்கறதுக்காக உங்களுக்கு பத்திரிகை வைக்கறவங்களும் சென்னையிலதான் கல்யாணத்தை வச்சிக்கணுமா..நல்ல கதையா இருக்கே…உளூந்தூர்பேட்டையில கல்யாணம். ஏழாம் தேதி நைட்டே நாம எல்லோரும் கௌம்புறோம்…மொத்த செலவும் உங்களோடது…ஞாபகம் வச்சிக்கோங்க…“ டக்கென்று போனை கட் செய்துவிட்டார்.

காலண்டரில் தேதியையும், அதற்கான கூட்டுமானத்தையும் கணக்கிட்டதில் இன்னும் சரியாய் பதினைந்து நாட்கள்.

ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தும் (ஒரு காருடன் டிரைவர் கம் ஓனர்) நண்பன் புருஷோத்தமனுக்கு அடுத்த அழைப்பு விட்டேன்.

“சொல்லு பாலா…என்ன திடீர்ன்னு ஞாயிற்றுக் கெழமையில கால் பண்றே…“ புருஷிடமிருந்து அடுத்த நையாண்டி வந்தது.

“ஒன்னுமில்லே…ப்ரண்ட் ஒருத்தருக்கு உளூந்தூர்பேட்டையில கல்யாணம்’’

“அதுக்கு ரூட் சொல்லணுமா?’’

“இல்லடா…மொத்தம் எட்டுபேர் போறோம்…பஸ்ஸூல போய் வந்தா நல்லா இருக்காது…உன்னோட கார்ல போயிட்டு வந்துரலாமுன்னு முடிவு பண்ணிருக்கேன்’’     நான் பேசுவதின் அர்த்தம் புரிந்துவிட்டது அவனுக்கு.

“உன் வீட்ல நீயும் உன் ஒய்ஃபும்..மொத்தம் ரெண்டே பேர்தான. எட்டுபேருன்னு எப்படி சொல்றே…உன் தம்பி…அண்ணன் பேமிலியெல்லாம் வர்றாங்களா…மொத்த குடும்பமும் போற அளவுக்கு அப்டி என்ன முக்கியமான ப்ரண்ட் உனக்கு..எங்கிட்ட இது அவரை அறிமுகப்படுத்தவேயில்லியே! ’’புருஷ் ஆச்சரியக்குறியோடு கேட்க…
“பேமிலி ஃப்ரெண்ட்லாம் இல்லே…க்ரைம் டுடே பத்திரிகை ஆபிஸ் ஃப்ரெண்ட்…ஒர்க் பண்றவங்க எல்லோரும் போறோம்’’ நான் சொன்னபோது, புருஷ் சுதாரித்துக்கொண்டவனாய் கேட்டான்..

“ஓஓஓ..ஒரு முறை இவருதான் க்ரைம் டுடே பத்திரிகை ஆசிரியருன்னு கடா மீசைக்காரர் ஒருத்தரை அறிமுகப் படுத்தினியே..பேருகூட ரிஷின்னு நெனைக்கிறேன்’’ என்று எனக்கு இன்னொரு அறிமுகப்படுத்தல் தேவையில்லாமல் அவனே ஆச்சரியமாகிவிட்டபடியால், ஏழாம் தேதி இரவு, புருஷோத்தமனுடைய சைலோ காரில் (வித் ஏசி) டீசல் மட்டும் போட்டுக்கொண்டு, காருக்கு வாடகை தர முடியாது என்கிற நட்பின் ஒப்பந்த அடிப்படையில் எங்கள் குழுவினரின் பயணம் தீர்மானமாயிற்று.

மணித்துளிகள் கடந்தன. நாட்கள் பறந்தன…வாரங்கள் ஓடின…என்றெல்லாம் வசனங்கள் எழுதத் தேவையில்லாமல் ஏழாம் தேதி காலை வந்து நின்றது. நான் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பவேண்டும். அன்றைய அலுவல் பணிகளை முடித்துவிட்டு மாலை மூன்றுமணி வாக்கில் புருஷோத்தமனுக்கு போன் செய்தால், அவர் தன் சைலோ காரை ஓட்டிக்கொண்டு என் அலுவலகத்திற்கு வந்து, என்னை பிக்கப் செய்துவிட்டு, அப்படியே ரிஷியின் வீட்டிற்குச் சென்று மற்றவர்களை பிக்கப் செய்துகொண்டு, ஆறு மணிவாக்கில் உளூந்தூர்பேட்டை கிளம்பவேண்டும். இதுதான் அன்றைய புரோக்கிராம். ஆனால்…

ஆனால் கடைசி நேரத்தில் கார் காணல் நீராகிப்போனது.

“பாலா..ஸாரி பாலா…அர்ஜென்ட்டா ஒரு டியூட்டி…திருச்சிக்கு கிளம்பி போயிட்டேன்…நீ வேற கார் பாத்துக்கோ…”

அசால்ட்டாக சொல்லிவிட்டான் டிராவல்ஸ் அதிபர் புருஷோத்தமன். வேற கார் புக் பண்ணி போகத்தெரியாதா எனக்கு…டீசல் மட்டும் போட்டா போதும்ன்னு எவன் வருவான்? கார் கேன்சல் ஆகிப்போனதை ரிஷியிடம் எப்படிச் சொல்ல…கண்டிப்பா வார்த்தையால கொல்வாரு.
விஷயத்தை ரிஷியிடம் சொன்னபோது …“எனக்கு அன்னைக்கே தெரியும்…உங்க ஃப்ரெண்டப் பத்தி தெரியாதா…ஒரு காரை வச்சிக்கிட்டு டிராவல்ஸ் நடத்தறவன் வாக்கு இப்படித்தான் இருக்கும்….சரி வுடுங்க…இப்போ நாம எப்படியாவது போயாகணும்….அதுக்கு என்ன ஐடியான்னு யோசிங்க’’ தெளிவாகப் பேசினார்.. எனக்கு ஆறுதலாக இருந்தது.

பழைய திட்ட அறிக்கை கேன்சல் செய்யப்பட்டு புதிய அறிக்கை தயார்செய்யப்பட்டது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு கோயம்பேடு சென்று அங்கிருந்து…..

அங்கிருந்து பஸ்ல போகவேண்டியதுதான்….வேற வழி?

பேருந்துப் பயணம் என்றதும் எங்கள் குழுவின் எண்ணிக்கை எட்டிலிருத்து ஐந்தாகக் குறைந்துவிட்டது. ஒன்பது மணிக்கு முதல் ஆளாக நான் கோயம்பேடுக்குள் நுழைந்துவிட்டேன். ரிஷியும் மற்றவர்களும் பத்துமணிக்குத்தான் வருகைதந்தார்கள். விதவிதமான மக்களை உள்வாங்கிக்கொண்டிருந்த பேருந்து நிலையம் திருவிழாக்கூட்டம்போல் காட்சியளித்தது.

உளூந்தூர்பேட்டைக்கு என்று தனிப் பேரூந்துகள் இல்லை போலும்! திருச்சி செல்லும் வண்டியில் ஏறி, உளுந்தூர்பேட்டையில் இறங்கிக்கொள்ளவேண்டும். ஆனால், திருச்சி வண்டியில் உளுந்தூர்பேட்டைக்கு ஆள் ஏற்ற மாட்டார்களாம்…..கிட்டத்தட்ட பத்து பேருந்துகளில் ஏறி…நடத்துனர்களால் எமது குழு விரட்டி அடிக்கப்பட்டது. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’…..ஒவ்வொரு வண்டியாக ஏறி நடத்துனரிடம் பரிதாபமாகப் பேசி….கடைசியாக பனிரெண்டு மணிக்கு எங்கள் பேருந்துப் பயணம் உறுதிசெய்யப்பட்ட.து. அதுவும் “திருச்சி வரை டிக்கெட் வாங்கிக்கொண்டு உளுந்தூர் பேட்டையில் இறங்கிவிடவேண்டும்’’என்று நடத்துனர் சொன்ன அந்த டீலிங்கை எம்மால் மறுக்க முடியவில்லை.

எங்களைச் சுமந்த பேருந்து கிளம்பியபிறகு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை எங்கள் பயணத்தின் போக்குகளை செல்போன் மூலம் மணமகன் கவிராஜாவுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் ரிஷி…. “இப்போ வடபழநி தாண்டிட்டோம்…..கிண்டி வந்துட்டோம்…பல்லாவாரம் ரீச் ஆயிட்டோம்…குரோம்பேட்டையில டிராபிக்ஜாம்.
தாம்பரம் தாண்டும்போது ரிஷியின் செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆஃப் ஆக……நல்லவேளை கவி பிழைத்தார்.

நான்கு மணிநேர பயணம்….ஒருவழியாக வந்துசேர்ந்தது உளுந்தூர்பேட்டை.
தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் விடுதியில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெருநாய்களின் வீரிய அணிவகுப்பு எங்களைப் பின்தொடர…அவைகளை விரட்டியபடியே நாலரைமணிவாக்கில் விடுதிக்குள் நுழைந்து, சுமைகளை வைத்துவிட்டு மணமகன் கவிராஜாவை அழைத்தோம்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தவர் “வந்திட்டீங்களா?” என்றபடியே கொட்டாவி விட்டது எனது செல்போனில் எதிரொலித்தது.

“சார் உடனடியா மண்டபத்துக்கு போயாகணும்…“ செல்போனில் சார்ஜ் ஏற்றிக்கொண்டே உத்தரவு போட்டார் ரிஷி….எனக்கும் உடன் வந்தவர்களுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. ஆனால், எங்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், மண்டபத்திற்கு போவதில் குறியாக இருந்தார் ரிஷி.

“அர்ஜென்ட்டா மண்டபத்துக்குப் போகணும்…நீங்க வரலைன்னா…நான் மட்டும் தனியாப் போவேன்’’

ரிஷியின் வார்த்தையில் ஒரு ஏக்கம் தெரிந்தது. ஓய்வைப் புறந்தள்ளிவிட்டு, ரிஷிக்காக மண்டபம் போகத் தயாராகினோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் நடை பயணத்திற்குப் பிறகு மண்டபம் தெரிந்தது. மறுநாள் மாப்பிள்ளையாகப்போகிற கவிராஜா எங்களுக்காக மண்டபத்தின் வாசலில் காத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் ஒவ்வொருத்தராக கட்டித் தழுவிக்கொண்டார்.

பின்னர் ரிஷியும், கவிராஜாவும் தனியாகப் போய் ஏதோ பேசினர். பின்னர்
மண்டபத்தின் இடதுபக்க சாலை ஓரம் கவிராஜா ரிஷியை அழைத்துக்கொண்டு முன்னேற, நாங்கள் பின்தொடர்ந்தோம். இருபது அடி உயரம் முப்பது அடி நீளத்தில் பெரிய டிஜிட்டல் பேனருக்கு முன்பாக ரிஷியோடு கவிராஜா நிற்க, நாங்களும் அந்தப் பேனருக்கும் முன்பாக நின்று கண்களைச் சுழலவிட்டோம்.

‘மணமக்களை வாழ்த்த வருகை தரும் எங்கள் அண்ணன் ரிஷி அவர்களை வருக…வருக என வரவேற்கிறோம்’ என்கிற வாசகத்தோடு டிஜிட்டல் பேனரில் சிரித்துக்கொண்டிருந்தது ரிஷியின் முகம். பதினைந்து அடி உயரத்தில் ரிஷியின் கடா மீசை புகைப்படம் அது. கண்கொட்டாமல் தன் படத்தை தானே ருசித்துக்கொண்டிருந்த ரிஷியை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்.

இடதுகையால் தனது மீசையை வருடிவிட்டுக்கொண்டே, பேனரில் உள்ள தன் புகைப்படத்தையும் அப்படியே என்னையும் ஜாடையாகப் பார்த்து புன்னகைத்தார் ரிஷி.

 

தமிழ் திரைக்கதை-tamil screenplay-tamil sample screenplay- tamil screenplay format-