Tag Archives: karupi

கருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book

கருப்பி

கருப்பி

 

இதை மாமை நிறத்தினள் என்பதா? அல்லது கரும்புச் சுவையினள் என்பதா? ‘கறுப்பி’ என்றும் எழுத முடியாது, அது காத்துக் கறுப்பு என்னும் அர்த்தச்சாயலைத் தந்துவிடும். கருப்பி என்றது சரிதான். ஆனால், அதை நிறமாக அல்லாமல் சுவையாகக் கொள்கிறேன்.

கருப்பி

karupi

ஒரு புத்தகத்தில் தலைப்புக் கதையை முதலில் வாசிப்பது வழக்கம் எனக்கு. கடைசிக் கதை அடுத்து; முதற்கதை அப்புறம். மற்ற கதைகளை, முன்னொன்று பின்னொன்று என்று வாசித்து முடிப்பேன். முதல் மூன்று கதைகளை வாசித்ததும் இடைவேளை எடுப்பேன். அதில் என்ன செய்வேன் என்பது இங்கே முக்கியமில்லை. படைப்புகள் தரும் இன்னொரு, அல்ல அல்ல, வேறுவேறு உலகங்கள், வாழ்க்கைகளை ஒப்பிட ஒரு வாசகனின் அக்கடாக்கள் முக்கியமா என்ன?

 

இடைவேளை முடிந்து, முன், அணி, பதிப்பு உரைகள் இல்லாத இந்தப் புத்தகத்தின் பின்னட்டை விளம்பல் வரிகளை வாசித்தேனா, ‘தினமலர்’ டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவருடைய ‘செகண்ட் ஷோ’ பரிசு வென்றதாகக் கண்டிருந்தது. அதனால், அந்தக் கதையை வாசித்தேன்.

 

 

இன்றைக்கு, பிரியமான ஒரு பிள்ளை, ‘நல்லா இருக்கு’ என்றதே என்று, ‘அஞ்சு சுந்தரிகள்’ மலையாளப் படம் பார்க்கப்போய், ஒரு பிள்ளை வெட்சி (Pedophilia) அதில் வரக்கண்டு, மிரண்டு, படம் பார்ப்பதைப் பாதியிலேயே விட்டுவிட்டேன்.

 

போலவே, ‘பெண்ணியம்’ வரக்கண்டாலும் மிரண்டு போவேன். சொந்த அடிபாடு. முதற்கதை ‘காஃபி’யில் ‘சாவினிஸ்ட்’ என்றொரு வார்த்தை வருகிறது, அப்படி ஆவதற்கும் தெம்பில்லாத ஆள் நான். ‘செகண்ட் ஷோ’, ஆமாம், பெண்ணியக் கதை. அந்த ஷோவில் பார்க்கப்பட்ட படமும் ‘இறைவி’யாம்.

 

மிரண்டேன், ஆனால் வாசிப்பை பாதியிலேயே விட்டுவிடவில்லை. காரணம், முதலில் வாசித்த மூன்று கதைகள்.

‘கருப்பி’ ஓர் இரண்டுங்கெட்டான் காதல் நகைச்சுவை. ‘நிம்மதி’ ஒரு கற்பியல் (மண வாழ்க்கை) காதல் அருமை! ‘காஃபி’ (என்ன ஒரு தலைப்பு!) நாவில் தங்கிப்போன, இன்னதென்று அறியமுடியாத கசப்பென்றும் சொல்லமுடியாத ஒரு சுவை.

 

மொத்தம் ஒன்பது கதைகள். ஒன்றும் சோடையில்லை, ‘செகண்ட் ஷோ’வையும் சேர்த்துத்தான். பெண்களாகிய அவர்கள் நியாயம் அவர்களுக்கு. வீட்டுவேலை விளிம்பு நிலை மனிதர்கள் (‘இருள்’), ஆளுக்கொரு கார்வைத்திருப்பவர்கள் (‘சைக்யாட்ரிஸ்ட்’), கிராமத்து ஆள்கள் (‘கிறக்கம்’) என, சமூகப் படிநிலைகளின் அனைத்துவகை மனிதர்களும், கிட்டத்தட்ட, இந்தக் கதைகளில் வருகிறார்கள். எழுத்தாளரது கவனிப்பின் ஆழம், பரப்பு  இப்படி.

 

 

அருணா ராஜ் அவர்களை முகாமுகமாக அறிந்தவன் இல்லை நான். பல் மருத்துவர் அவர் என்று தெரிகிறது. முகநூலில் என் நட்புகளில் ஒருவராக இருக்கிறார். நகைச்சுவையாக அவர் இடும் பதிவுகள் கண்டு, எழுத்தாளுமை வியந்து, என் நெருங்கிய நட்புகளில் ஒருவராக்கி வாசித்து வருகிறேன்.

 

 

பெண் எழுத்தாளர்கள் ஆண் குணவார்ப்புகளை, ஆண் எழுத்தாளர்கள் பெண் குணவார்ப்புகளை எப்படிப் படைத்திருக்கிறார்கள் என்று கவனித்து வாசிப்பது எனக்கு வழக்கம். அந்த வகையில், அருணா ராஜ், ஒரு பெண் எழுத்தாளராக, ஆண் குணவார்ப்புகளை (‘காஃபி’யில் அந்த பெயர் தெரியாமலே விலகிவிட்ட இளைஞன், ‘டியர்’ குடிகார குடும்பத் தலைவன், ‘கிறக்கம்’ காளி, ‘மனக்கிணறு’ அப்பா, ‘சைக்கியாட்ரிஸ்ட்’ மருத்துவர், ‘நிம்மதி’ நாயகனும் அப்பாவும்) துல்லியமாகவே வார்த்திருக்கிறார்.

 

 

காதலும் அக்கறையும் இவரது கதைப்பொருள்களாக வெளிப்பட்டு இருக்கின்றன. முகநூல் பதிவுகளில் காணக்கிடக்கிற நகைச்சுவை இந்தக் கதைகளில் அவ்வளவாக இல்லை. ‘இருள்’ என்னும் இருண்ட கதையில், தன் வித்யானுபூதியை நக்கலடித்து நகைச்சுவை ஆக்கியிருக்கிறார். ‘கருப்பி’ நாயகன் கதிரும் ஒரு நகையாடல்.

 

சிறந்த கதை என்று எதைச் சொல்வது? ‘நிம்மதி’ அவ்வளவுக்குப் பிடித்திருந்தது. ‘காஃபி’ வாசித்தபோது அதுவும். ‘கிறக்கம்’ வாசித்து அதுதான் உச்சம் என்று எண்ணினேன். அதில், அந்தக் கொல்லை (எழுத்தாளர் நாட்டுவழக்கில் கொல்லி) காட்சியில் வெட்டி, முடிவில் பண்ணையாள் செல்வம் வாய் வார்த்தையாக அதை ஒட்டியதை வியந்தேன். மற்ற கதைகளும் சிறந்தவைகளே, அக்கறை காரணமாக .

 

இந்த நூலில், வரைந்தவர் யாரென்று தெரியவில்லை, அழகான அர்த்தமுள்ள ஓவியங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அவரை வாழ்த்துகிறேன்!

 

முப்பது ஆண்டுகளாக கார் ஒட்டுகிறேன், எங்கள் பாப்பாவுக்கும் சற்றிப்போதுதான் கற்றுக்கொடுத்தேன். ஓட்டுநர் இருக்கையை எவ்வளவு இடைவெளி விட்டுப் பொருத்துவது என்று அறியாமல் இருந்தேன். ‘காஃபி’ கதைவழியாக அதைக் கற்றுக் கொடுத்தமைக்கு எழுத்தாளர்க்கு நன்றி.

 

இன்றைக்கு நேரம் கிடைத்ததால், புத்தகம் கைக்கு வந்தவுடன் வாசிக்க முடிந்தது. நேரம் கிடைத்ததால் (‘டியர்’, ‘இருள்’ கதை நீதிகள் மன்னிக்க!) இடைவேளையில், டீக்கு பதிலாக பிராந்தி எடுக்க முடிந்தது.

 

  • ராஜா சுந்தர்ராஜன்

 

கருப்பி

ஒரு மழை நாளில், கையில் காஃபியும், ‘கருப்பி’யும்.

எழுத்தாளர் அருணா ராஜின் சிறுகதைத் தொகுப்பு. ‘காஃபி’ முதல் ‘நிம்மதி’ வரை, மொத்தம் ஒன்பது கதைகள்.

ஆண்-பெண் உறவு சிக்கல்களை தட்டையாகப் பார்க்காமல், மிக நுண்ணிய உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆழமான எழுத்து.’காஃபி’- நாமே  ஒரு  காஃபிஷாப்பில் பெயரற்ற நண்பனுடன் அமர்ந்து பருகும் அனுபவம்.

‘டியர்’ என்று தொக்கி நிற்கும் அந்த சிறிய வார்த்தை, பாறாங்கல்லை விட அதிகமாக அவனின் நெஞ்சுக்குள் கனக்க ஆரம்பித்தது’ என்று முடிவுக்கு வருகிறது- ‘டியர்’.

உலகமயமாக்கல், பணத்தின், பதவியின் மீதான அதீத ஆர்வம், மனித உறவுகளை எப்படிக் காவு வாங்குகிறது என்று சொல்லிச் செல்கின்றன ‘கிறக்கம்’, ‘செகண்ட் ஷோ’ மற்றும் ‘சைக்கியாட்ரிஸ்ட்’.

மாறிக்கொண்டு வரும் குடும்ப அமைப்பும், அதில் சிக்கும் பெண்ணின்/ஆணின் தனிமனித விருப்பு வெறுப்புகளும், சறுக்கல்களும் கையாளப்படும் விதம் அருமை.

‘மனக்கிணறு’ மற்றும் ‘நிம்மதி’யில் வரும் முதிய அப்பாக்கள் பாத்திர வடிவமைப்பு இயல்பாக, அழுத்தமாக இருக்கிறது. ‘கருப்பி’ க்ளாஸ் கதை. கதிர்கள் மாறாமல் இருக்கும் உலகில், கருப்பிகள் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள். மொத்தத்தில், அருமையான வாசிப்பு அனுபவம்.

  • நிவேதிதா லூயிஸ்

கருப்பி

யோஹான் பதிப்பகம்,

46, வீரப்பநகர் 4-ஆவது தெரு,

கிருஷ்ணகிரி – 635 001

விலை ரூ.120