Tag Archives: பொன்னியின் செல்வன் ஸ்கிரீன்பிளே

Ponniyin Selvan Screenplay – Ponniyin Selvan Thiraikathai – Scene 4

பொன்னியின் செல்வன்

கதை,வசனம் : கல்கி

திரைக்கதை,வசனம் : தென்னாடன்

Tamil screenplay image

காட்சி 4

பகல் / வெளி

Day/ Ext

ஒரு கோயிலின் முகப்புத் தோற்றம்.

CUT

ஊடாடும் மக்கள் கூட்டம். பலவகையான கடைகள்.

CUT

ஓரிடத்தில் மட்டும் மக்கள் கூட்டமாக எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

CUT

தலையை ஓரமாக மழித்து முன்குடுமி வைத்திருக்கும் ஒருவர் (பெயர் ஆழ்வார்க்கடியான் வயது 35 இருக்கலாம். சற்றே குண்டாக இருக்கிறார். நெற்றியில் நாமம்), நெற்றி நிறைய திருநீர் அணிந்திருப்பவரிடம் ஏதோ வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறார்.ஆழ்வார்க்கடியானின் கையில் பிரம்பு ஒன்று இருக்கிறது.

அவர்களைச் சுற்றிலும் சுமாரான மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

CUT

சற்று தூரத்தில் குதிரையில் அமர்ந்தபடியே வரும் வந்தியத்தேவன் அந்த இடத்திற்கு எதிர்ப்புறமாக வருகிறான்.

CUT

குடுமிக்காரர் ஆழ்வார்க்கடியான் தீவிரமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், தன் கையில் உள்ள பிரம்பால் திருநீறு அணிந்திருப்பவரை அடிக்க ஓங்குவதும் வந்தியத்தேவன் கண்களில் படுகிறது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது இவனுக்குக் கேட்கவில்லை.

குதிரையை நிறுத்தி கீழே இறங்குகிறான். அருகில் உள்ள பெரியவரிடம் பேச்சு கொடுக்கிறான்.

வந்தியத்தேவன் : “அங்கே என்ன தகராறு?’’

பெரியவர் : “அய்யோ….அது வெகுநேரமாக நடந்துகொண்டிருக்கிறது. விஷ்ணு பெரிய கடவுளா, சிவன் பெரிய கடவுளா என ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் பேசி மாய்கிறார்கள். அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்’’

வந்தியத்தேவனின் கண்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் ஆழ்வார்க்கடியான் தோற்றம் முழுமையாகப் படுகிறது. ஆழ்வார்க்கடியானின் செய்கைகள் வந்தியத்தேவனுக்கு புன்னகையை வரவழைக்கின்றன. இவன் புன்னகைப்பதை அருகில் உள்ள பெரியவர் கவனிக்கிறார். வந்தியத்தேவன் அவரைப் பார்க்கிறான்.

பெரியவர் : “என்ன வீரனே….நீ போய் அவர்களை சமாதானம் செய்யலாமே? அதற்குள் குதிரையில் இருந்து இறங்கிவிட்டாய். உனக்கும் வேடிக்கை பார்க்கத் தோன்றுகிறதோ?’’

வந்தியத்தேவன் : “அரியும் சிவனும் ஒன்னு அதை அறியாதவன் வாயில மண்ணு என நான் சொன்னால் அவர்கள் கேட்கவா போகிறார்கள்’’

வந்தியத்தேவன் பெரியவரிடம் பேசிமுடித்து மீண்டும் அவர்களின் வாக்குவாதத்தைப் பார்க்கிறான்.

CUT

இப்போது, நான்கு வீரர்கள் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்தபடியே சற்றுதூரத்தில் வருகிறார்கள்.    அதில் ஒரு வீரன் உரக்க கத்தியபடியே வந்தியத்தேவன் நிற்கும் இடத்தை நெருங்கி வருகிறான்.

குதிரை வீரன் : “ “சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு, அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர், சோழநாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள், வழி விடுங்கள்!”

வந்தியத்தேவன் அந்த நான்கு குதிரை வீரர்களையும் பார்க்கிறான்.

CUT

ஊடாடும் மக்களும், ஆழ்வார்க்கடியான் வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்கும் கூட்டமும் அவசர கதியில் சாலையோரம் ஓதுங்கி நிற்கிறார்கள்.

CUT

வந்தியத்தேவனும் தன் குதிரையை இன்னும் ஓரமாக இழுத்து, தானும் சாலையோரமாக நின்றுகொள்கிறான்.

நான்கு குதிரை வீரர்களும் சென்றதைத் தொடர்ந்து முரசு அடித்துக்கொண்டு சிலர் வருகிறார்கள். முரசு சத்தம் காதைக் கிழிக்கிறது.

முரசு அடித்துச் செல்பவர்களைத் தொடர்ந்து பனைமரத்தின் ஓவியத்தை வரைந்த கொடியைத் தாங்கியபடி சிலர் வருகிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வருகிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து ஒரு யானையின் மீது பெரிய பழுவேட்டரையர் அமர்ந்து வருகிறார். (வயது 60 இருக்கலாம். கருநிற மேனி. ஓர் அரசருக்குரிய தோற்றத்தில் கம்பீரமாக யானையின்மீது அமர்ந்து கடந்துபோகிறார்)

யானையைத் தொடர்ந்து ஒரு பல்லக்கினை சிலர் சுமந்து வருகிறார்கள். வந்தியத்தேவன் அந்தப் பல்லக்கினை கூர்ந்து பார்க்கிறான்.

பல்லக்கினைத் தொடர்ந்து குதிரை வீரர்கள் கையில் வேலோடு வருகிறார்கள். வந்தியத்தேவன் முகத்தில் ஆச்சரியமும், யோசனையும் கலந்து நிற்கிறது.

CUT

காட்சி 2ல் ஏரிக்கரையில் வந்தியத்தேவன் நிற்கும்போது தூரத்தில் வந்த படகுகளையும், ஒரு படகில் பல்லக்கு வந்ததும் இண்டர் கட்டாக வந்துபோகிறது.

CUT

தன்னைக் கடந்து தூரத்தில் செல்லும் பல்லக்கினையும், வீரர்களையும் ஏதோ யோசித்தபடியே வந்தியத்தவேன் பார்க்கிறான்.

CUT

குடுமித் தலையுடன் கூடிய ஆழ்வார்க்கடியான் எதிர்புறமாய் நின்று வந்தியத்தேவனை உற்றுப் பார்க்கிறான்.

ஆழ்வார்க்கடியான் தன்னை உற்று நோக்குவதை வந்தியத்தேவனும் கவனிக்கிறான். பின்னர் ஏதோ யோசனையுடன் வந்தியத்தேவன் தன் குதிரையில் ஏறி அமர்கிறான். குதிரையை இயக்க, அது மெல்ல வேகம் எடுக்கிறது.

CUT

வந்தியத்தேவன் குதிரையில் தூரமாய் சென்று மறைவதை ஆழ்வார்க்கடியான் உற்றுப்பார்த்துக்கொண்டே தன் தலையை மெல்ல ஆட்டுகிறான். அந்தப் பார்வையில் விஷமம் தெரிகிறது.