Tag Archives: பொன்னியின் செல்வன் சினிமா திரைக்கதை

Ponniyin Selvan Screenplay – Ponniyin Selvan Thiraikathai – Scene 3

பொன்னியின் செல்வன்

கதை,வசனம் : கல்கி

திரைக்கதை,வசனம் : தென்னாடன்

kunthavai

காட்சி 3

பகல்/உள் மற்றும் வெளி

Day/Int and Ext

பெரியதாக காட்சியளிக்கிற பத்துக்கும் மேற்பட்ட மாளிகைகளும், அழங்காரங்களைச் சுமந்து நிற்கும் சில அரண்மனைகளும் தூரமாய் தெரிகின்றன.

திரையில்

பழையாறை நகரம்

என்கிற எழுத்து தோன்றி மறைகிறது.

ஓர் அரண்மனையின் தோற்றம். அரண்மனை மேற்பகுதியில் புலிக்கொடி காற்றில் வீரியமாகப் பறந்துகொண்டிருக்கிறது.

CUT

மக்கள் ஆங்காங்கே தெருக்களில் ஊடாடும் காட்சிகள்.

ஒரு சந்தைப் பகுதி.

காய்கறிகளும், பழங்களும், மண்பாண்டங்களும், தின்பண்டங்களும், இதரப் பொருட்களும் கூவிக் கூவி விற்கப்படுவதும், வாங்கப்படுவதும்.

CUT

மீண்டும் அரண்மனையின் தோற்றம்.

அரண்மனையின் வாயில்.

அங்கே காவலுக்கு நிற்கும் வீரர்கள்.

அரண்மனையின் விதவிதமான அழகு அறைகள், மண்டபங்கள், வேலையாட்கள் ஊடாடுதல், பணிப்பெண்கள் ஊடாடுதல், போர் வீரர்கள் ஒரு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருத்தல் என இன்னும் பல தொகுப்புக் காட்சிகள் பின்னணி இசையோடு.

CUT

அரண்மனையின் மேல்மாடம்.

செம்பியன் மாதேவி (நெற்றி நிறைய திருநீர் பூசியிருக்கிறார். கழுத்தில் உத்திராட்ச மாலைகள். தோற்றத்தில் மூப்பு தெரிகிறது) தூரத்தில் எதையோ பார்த்துக்கொண்டிருக்கும் குந்தவையை நோக்கி வருகிறார்.

(குந்தவை இக்கதையின் நாயகி. மிக அழகாக, இளமையாக இருக்கிறாள். இளவரசியின் தோற்றத்தில் இருக்கிறாள்)

குந்தவையின் முன்னே வந்து நிற்கிறார் செம்பியன் மாதேவி.

குந்தவையின் முகத்தில் குழப்பமும், யோசனையும் தெரிகிறது.

செம்பியன் மாதேவி குந்தவையின் தோள்களில் தன் வலதுகையை வைக்கிறார்.

குந்தவை அவரைப் பார்க்கிறாள்.

செம்பியன் மாதேவி : ‘‘என்ன நடந்துவிட்டது என்று இப்படிக் குழம்பியபடியே யோசித்துக்கொண்டிருக்கிறாய்? எத்தனையோ போர்களைக் கண்டவர்கள் நம் சோழத்து வீரர்கள். உன் அண்ணன் ஆதித்த கரிகாலனாகட்டும், உன் தம்பி அருள்மொழிவர்மனாகட்டும் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள்.”

குந்தவை செம்பியன் மாதேவியைப் பார்க்கிறாள்.

குந்தவை :  ‘‘என் சிந்தனை பலவாறாக குழம்பியிருப்பது உண்மைதான். சண்டை என்றால் மோதிப்பார்த்துவிடும் துணிவு இருக்கிறது. பகைவர்களை வெற்றிகொள்ளும் சக்தியும் இருக்கிறது. இங்கே நடந்துகொண்டிருப்பது சதியல்லவா?’’

பேசியபடியே மெல்ல வேறு இடம்நோக்கி நகர்கிறாள்.

அவள் நகர்ந்த இடம் நோக்கி செம்பியன் மாதேவியும் நகர்ந்துபோகிறார்.

செம்பியன் மாதேவி : ‘‘சண்டையில் தோற்று ராஜ்ஜியத்தை இழந்தவர்களைவிட சதியால் வீழ்ந்து ராஜ்ஜியத்தை இழந்துபோன அரசுகளே அதிகம் என்பதை நானும் அறிவேன். இந்தமாதிரி நேரங்களில் நாம் பதற்றப்படக்கூடாது. முக்கியமாக நீ பதற்றப்படக்கூடாது. மிகப்பெரிய சோழ ராஜ்ஜியத்தின் இளவரசி நீ’’

குந்தவை செம்பியன் மாதேவியைப் பார்க்கிறாள்.

குந்தவை : “தந்தை சுந்தரசோழர் தஞ்சை மாநகரத்தில். மகள் நானோ இந்தப் பழையாறில். அண்ணன் ஆதித்த கரிகாலன் காஞ்சி நகரத்தில். தம்பி அருள்மொழிவர்மன் இலங்கை போர் முனையில். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பேசி, மகிழ்வாய் இருந்து எத்தனை நாளாயிற்று. ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் ஆசையிலே நாங்கள் திசைக்கொருவராய் பிரிந்து, நிர்வாகத்தையும், ராஜ்ஜியத்தையும் கவனித்துக் கொள்வதாலேயே சதிகாரர்கள் சூழ்ச்சி செய்வதற்கு ஏதுவாய் போயிற்று. திட்டமிட்டே என் தந்தை தஞ்சை மாநகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அனைத்திற்கும் முடிவு கட்டுவேன்’’

செம்பியன் மாதேவி குந்தைவையைப் பார்த்து புன்னகைக்கிறார்.

குந்தவை : “ஏனம்மா புன்னகை?’’

செம்பியன் மாதேவி : “இப்போதெல்லாம் பழுவேட்டரையர்கள் உன்னைத்தான் எதிரியாக பாவிக்கிறார்களாம். உன் திட்டப்படியேதான் உன் தந்தையும், சகோதரன்களும் செயல்படுவதாகவும், இந்தச் சோழ ராஜ்ஜியமே உன் சொற்படிதான் நடக்கிறதாகவும் அவர்களுக்கு தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது. அரசு ஒற்றர்களைவிட சதிகாரர்களின் ஒற்றர்கள் திறமையாகவும் விரைவாகவும் பணியாற்றுகிறார்கள்’’

குந்தவை, செம்பியன் மாதேவியை யோசித்தபடியே பார்க்கிறாள்.

Ponniyin Selvan Thiraikathai – Ponniyin Selvan Screenplay – Scene 2

பொன்னியின் செல்வன்

கதை,வசனம் : கல்கி

திரைக்கதை,வசனம் : தென்னாடன்

காட்சி 2

பகல் / வெளி

Day/ Extn

 

மிக நீளமான செம்மண் சாலை ஒன்றில் வந்தியத்தேவனின் குதிரை புழுதி பறக்க வேகமாக வந்துகொண்டிருக்கிறது. அந்தச் சாலையின் இருபுறமும் காட்டு மரங்கள் மிக உயரமாக வளர்ந்து நிற்கின்றன.

குதிரையின் குளம்படிச் சத்தம் மிகத் தெளிவாக ஒலிக்க, நீங்கள் இதுவரை கேட்டிராத பின்னணி இசையுடன் திரையில் தோன்றிய பொன்னியின் செல்வன் எழுத்து மறைந்துபோகிறது.

அதைத் தொடர்ந்து, இத் திரைப்பட உருவாக்கத்தில் பங்கேற்ற கதை மாந்தர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாகத் திரையில் தோன்ற ஆரம்பிக்க, வந்தியத்தேவனின் மூதாதையர்களான பலம்பொருந்திய வாணர் பரம்பரை பற்றியும்,  “வாணர்குலத்து வல்லவரையர்கள் முந்நூறு ஆண்டுகள் அரசு புரிந்தவர்கள் என்பதையும், வந்தியத்தேவனின் தந்தை காலத்தில் வைதும்பராயர்களால் வாணர் குலத்து ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்ததும், எஞ்சியிருக்கும் வாணர் குலத்து மக்களின் கடைசி வீரனாக விளங்கும் வந்தியத்தேவனின் வீரம், நேர்மை மற்றும் அவனின் குணாதியசங்களை விளக்கும் பாடல் ஒலிக்கத் தொடங்க, பல்வேறு சம்பவங்களை உள்ளடக்கிய தொகுப்புக் காட்சிகள் (Montage Scence) வரத் தொடங்குகின்றன.

பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது.

வந்தியத்தேவன் இருபுறமும் மரங்கள் அடர்ந்து நிற்கும் செம்மண் சாலையில் புழுதி பறக்க குதிரையின் மீதமர்ந்து வந்துகொண்டிருக்கிறான்.

CUT

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப்பசேல் என காட்சியளிக்கும் பரந்து விரிந்த  வயல்வெளிகளில் ஆங்காங்கே பெண்களும் ஆண்களும் வேலை செய்துகொண்டிருக்க, வயல்வெளியின் ஓரமாக இருக்கிற சாலையில் மிதமான வேகத்தில் வந்தியத்தேவன் குதிரை வருகிறது.

CUT

தூரத்தில் சில குடிசை வீடுகள் தெரிய, மலை அடிவாரத்தின் ஓரமாக குதிரையில் வருகிறான்.

CUT

பத்து அடி அகலமுள்ள ஒரு சிற்றோடையைத் தாண்டிக் கடக்கிறது குதிரை.

CUT

கடல்போல் காட்சியளிக்கும் ஏரி.

பூச் செடிகளும், புற்களும் ஏரியைச் சுற்றிலும் அமைந்திருக்கிற அகலமான கரை ஓரத்தில் காட்சியளிக்கின்றன.

ஏரியின் சுற்றுப்புறத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், வயது முதிர்ந்தவர்கள் என பலதரப்பட்ட இருபால் வயதினரும் ஆங்காங்கு பேசிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்கும் காட்சி.

சில பெண்கள் கும்மியடித்தும், சில சிறுமியர் ஒற்றைக் காலால் நொண்டியபடி பாண்டி விளையாடிக் கொண்டும், சிறுவர்கள் சிலர் மல்யுத்தம் செய்துகொண்டும், சில ஆண்கள் சிலம்பம் விளையாடிக்கொண்டும் இருக்கிறார்கள்.

இவர்களின் செய்கைகளை மக்களில் பலரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

     CUT

பள்ளமான ஒரு சாலையிலிருந்து மேடாக அமைந்திருக்கும் அந்த ஏரியின் கரையோரப் பகுதிக்குள் வந்தியத்தேவனின் குதிரை நுழைகிறது.

மெதுவாக நடந்துவரும் குதிரையின் மீது அமர்ந்தபடியே மக்களின் விதவிதமான ஆடலையும், விளையாட்டுகளையும் பார்த்து ரசிக்கிறான் வந்தியத்தேவன்.

CUT

குதிரையின் மீதிருக்கும் வந்தியத்தேவனின் கண்கள் ஏரியின் நான்கு திசைகளையும் ஆச்சர்யத்தோடு பார்க்கின்றன.

CUT

ஒரு மூதாட்டியார் மண்சட்டியில் வைத்து எதையோ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

வந்தியத்தேவன் குதிரையிலிருந்தபடியே அந்த மூதாட்டியாரைப் பார்க்க, அவனைச் சாப்பிட அழைக்கிறார் மூதாட்டியார்.

வந்தியத்தேவன் குதிரையிலிருந்து இறங்கி, அந்த மூதாட்டியாரிடம் ஒரு பிடி வாங்கிச் சாப்பிடுகிறான்.

CUT

இப்போது ஏரியின் மதகுப் பகுதியில் வந்தியத்தேவன் நிற்கிறான்.

வரிசையாக மதகுகள்.

மதகுகளிலிருந்து பீய்ச்சியபடியே பெரும் சத்தத்துடன் நுரை பொங்க தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது.

அதை ரசிக்கிறான் வந்தியத்தேவன்.

CUT

ஏரிக் கரையின் இன்னொரு பகுதியில் சில பெண்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வந்தியத்தேவன் குதிரை மீது அமர்ந்தபடியே அந்த இடத்தை கடந்துபோகிறான்.

CUT

ஏரிக் கரையின் மற்றோர் பகுதி.

மக்கள் கூட்டம் அதிகம் இல்லை.

வயதான இரண்டு ஆண்கள் குளத்தின் நடுப்பகுதியைச் சுட்டிக்காட்டியபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு அருகே நிற்கும் வந்தியத்தேவனின் பார்வையும் குளத்தின் நடுப்பகுதியை நோக்கிச் செல்கிறது.

அங்கே இருபதுக்கும் மேற்பட்ட படகுகள் வந்துகொண்டிருக்கின்றன.

CUT

பல படகுகளில் போர் வீரர்களின் உடையோடு பலர் வருவது தெரிகிறது.

நடுவாக வரும் ஒரு படகில் பல்லக்கு ஒன்று இருக்கிறது.

CUT

வந்தியத்தேவன் தூரத்தில் வரும் படகுகளையும், பல்லக்கினையும் கண்களால் உற்றுப் பார்க்கிறான்.

வந்தியத்தேவனைப் பற்றியும், அவனுடைய வாணர் பரம்பரை பற்றியும் இதுவரை ஒலித்துக்கொண்டிருந்த பாடல் இப்போது நிறுத்தப்படுகிறது.

CUT

வந்தியத்தேவனுக்கு அருகே பத்து அடி தூரத்தில் நிற்கிற இரண்டு பெரியவர்களும் பேசிக் கொள்கிறார்கள்.

பெரியவர் 1 – ‘பெரிய பழுவேட்டரையர் வீரர்களோடும் இளைய ராணியோடும் வருகிறார். இந்தப் பகுதி வழியாகத்தான் கரை இறங்குவார்கள். நாம் வேறு பக்கம் ஒதுங்கிவிடுவோம்”.

பெரியவர் 2 : ‘ஆமாமாம்…..இங்கு நாம் ஏன் நிற்பானேன். அந்தப் பக்கம் இளம் கன்னியர்கள் கோலாட்டம் ஆடுகிறார்கள். அதைப் பார்த்து ரசிப்போம்’’

வந்தியத்தவேனுக்கு அவர்கள் பேசிக் கொள்வது காதில் விழுகிறது.

வந்தியத்தேவனின் பார்வையில் மாற்றம் வருகிறது.

அவன் தூரத்தில் வரும் படகுகளையும், படகுகளுக்கு நடுவே ஒரு படகில் இருக்கும் பல்லக்கினையும் இப்போது கூர்ந்து கவனிக்கிறான்.

பல்லக்கின் முகப்புத் தோற்றம் மட்டும் இவன் கண்களில் தெளிவாகப் படுகிறது.

அந்தப் பல்லக்கின் மேல்பகுதியில் பனை மரத்தின் உருவம் பொறித்த கொடி பறக்கிறது.

பல்லக்கின் இருபுறமும் பட்டுத்துணிகள் திரைபோல் மூடப்பட்டிருக்கின்றன.

காற்றின் வேகத்தில் அந்தப் பட்டுத் துணிகள் மெலிதாக ஆடுகின்றன.

CUT

வந்தியத்தேவனைக் கடந்து செல்லும் இரண்டு பெரியவர்களில் ஒருவர் அவனைத் திரும்பிப் பார்த்துக்கொள்கிறார்.

வந்தியத்தேவன் தன் மீசையைத் தடவியபடியே திரும்பிப் பார்க்கும் அந்தப் பெரியவரையும், பின்னர் படகுகளையும் பார்க்கிறான்.

CUT

சற்று தூரமாக நடந்து செல்லும் அந்தப் பெரியவர்களில் ஒருவர் தன்னுடன் வரும் இன்னொரு பெரியவரிடம் மீண்டும் பேச்சுக்கொடுக்கிறார்.

பெரியவர் 1 : ‘அந்த இளைஞன் பழுவேட்டரையரின் வீரனாக இருப்பானோ?’’

பெரியவர் 2 : ‘அப்படித் தெரியவில்லை. இங்கு நடந்துகொண்டிருக்கும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு, பாதுகாப்பிற்காக வந்த வீரனாகவும் இருக்கலாம்’’

பெரியவர் 1 : ‘யாராக இருந்தால் நமக்கென்ன? பெரிய இடத்துச் சமாச்சாரம் நமக்கு எதுக்கு? அதோ அழகுப் பெண்களின் ஆட்டத்தைக் கவனியுங்கள். இந்தக் காலத்து இளம் கன்னியர்களுக்கு தைரியம் அதிகம்தான். பொது இடத்தில் தங்கள் ஆட்டத்தை என்னமாய் நடத்துகிறார்கள்!’’

பெரியவர் 2 தூரத்தில் பார்க்கிறார். அங்கே இளம்பெண்கள் கோலாட்டத்தில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பதைப் பார்க்கிறார்.

CUT

வந்தியத்தேவன், தான் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து படகுகளைப் பார்த்தபடியே குதிரையை இயக்குகிறான்.

இதுவரை நிறுத்தப்பட்டிருந்த பாடல் இப்போது பாடல் மீண்டும் ஒலிக்கத் தொடங்குகிறது.

CUT

குளக்கரையின் மேடான பகுதியிலிருந்து கீழ்நோக்கி இறங்கி ஒரு சாலையை அடைகிறது குதிரை.

மீண்டும் குதிரை வேகமாக ஓடத்தொடங்குகிறது.

நிறுத்தப்பட்டிருந்த பாடல்  மீண்டும் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்குகிறது.

CUT

நிறைய விழுதுகளைக் கொண்ட பெரிய ஆலமரத்தின் அடியில் வந்தியத்தேவன் ஓய்வெடுக்கிறான். குதிரை அருகே மேய்ந்து கொண்டிருக்கிறது.

CUT

இப்போது இருபுறமும் பாறைகளாக காட்சி அளிக்கும் முட்புதர்கள் கொண்ட பகுதியில் குதிரையில் வந்துகொண்டிருக்கிறான் வந்தியத்தேவன்.

CUT

மல்லிகைப் பூக்களும், ரோஜாச் செடிகளும் நிறைந்திருக்கும் பூந்தோட்டப் பகுதியில் வந்துகொண்டிருக்கிறான்.

CUT

உயரமான ஓர் இடத்தில் நின்றபடியே தூரத்தில் தெரியும் ஒரு ஊரைப் பார்க்கிறான் வந்தியத்தேவன்.

அவனின் பார்வையில் பெரியதும் சிறியதுமான பல வீடுகள், நெடுதுயர்ந்த கோயில் கோபுரம் போன்றவை தெரிகிறது.

எதையோ சிந்தித்தபடியே, தன் முதுகுப் பகுதியில் உள்ள துணிப் பை ஒன்றிலிருந்து, மடக்கி வைத்திருக்கும் ஒரு வெள்ளைத் துணியை எடுத்து விரிக்கிறான்.

அது ஒரு வரைபடம். பல ஊர்களின் பெயர்கள் கோடுகளின் அடிப்படையிலும், புள்ளிகளின் அடிப்படையிலும் அந்த வரைபடத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

வரை படத்தை விரித்து உற்றுப் பார்க்கிறான்.

வீரநாராயணபுரம் விண்ணகரக்கோயில் என்கிற எழுத்து அந்த வரைபடத்தில் இருப்பது தெளிவாகக் காட்டப்படுகிறது.

மீண்டும் அந்த ஊரைப் பார்க்கிறான்.

இதுவரை ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நிறைவு பெறுகிறது.

வரைபடத்தை சுருட்டி எடுத்த இடத்திலே வைத்துவிட்டு, மீண்டும் அந்த ஊரைப் பார்க்கிறான்.

அவன் பார்வையில் ஏதோ ஒரு சிந்தனை.