Ponniyin Selvan Thiraikathai-Ponniyin Selvan Tamil Screenplay for Cinema
பொன்னியின் செல்வன்
கதை,வசனம் : கல்கி
திரைக்கதை,வசனம் : தென்னாடன்
காட்சி 1
பகல்/உள் மற்றும் வெளி
Day/Int and Extn
இடம் : காஞ்சி நகரம்
பிரதான கதை மாந்தர்கள் : இளவரசர் ஆதித்த கரிகாலர்,வந்தியத்தேவன்
மிகப்பெரிய அரண்மனையின் பிரம்மாண்ட முழுத் தோற்றம்.
திரையில் காஞ்சிமாநகரம் என்கிற எழுத்து தோன்றி மறைகிறது.
தங்க நிறம்போல் ஜொலிக்கும் அரண்மனை உட்கட்டமைப்பு வசதிகள்.
அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய தூண்கள், கதவுகள், மாடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் இன்னும்பிற.
அரண்மனையின் பிரதான வாசலில் தொடங்கி, பல பகுதியின் உட்புற, வெளிப்புறத் தோற்றம்.
ஒவ்வொரு பகுதியிலும் அரண்மனைப் பணியாளர்கள் ஊடாடும் காட்சி.
காவலாளிகள் ஊடாடும் காட்சி. மெய்க்காப்பாளர்கள் பணியிலிருக்கும் காட்சி.
CUT
அதி நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்ட ஓர் அறை.
அறைக்குள் இளவரசர் ஆதித்த கரிகாலர் ஓர் இருக்கையில் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே மிக அழகான, வசீகரமான, அகன்று விரிந்த மார்புகளுடன் இளைஞன், இக் கதையின் நாயகன் வந்தியத்தேவன் நின்றுகொண்டிருக்கிறான். அவன் இடையின் ஒரு பகுதியில் கூர் வாளும், இன்னொரு பகுதியில் நீள் கத்தியும் உறைக்குள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
வந்தியத் தேவனின் வலது கையில் பட்டுத் துணியால் சுற்றப்பட்ட ஓர் அடி நீளமான உருண்டை வடிவிலான இரண்டு குழல்கள் இருக்கின்றன.
இளவரசர் ஆதித்த கரிகாலர் வந்தியத்தேவனிடம் பேசுகிறார். பேச்சில் நிதானமும் கண்டிப்பும் இருக்கிறது.
ஆதித்த கரிகாலர் – “வந்தியத்தேவா, நீ சுத்த வீரன் என்பதை நன்கு அறிவேன். அத்துடன் நீ நல்ல அறிவாளி என்பதை உணர்ந்து, இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நான் உன்னிடம் இப்போது கொடுத்திருக்கும் இந்த இரு ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜாவிடமும், இன்னொன்றை என் சகோதரி இளைய பிராட்டியிடமும் ஒப்புவிக்க வேண்டும். தஞ்சையில் இராஜ்யத்தின் பெரிய பெரிய அதிகாரிகளைப் பற்றிக் கூட ஏதேதோ கேள்விப்படுகிறேன். ஆகையால், நான் அனுப்பும் செய்தி யாருக்கும் தெரியக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது. வழியில் யாருடனும் சண்டை பிடிக்கக் கூடாது. நீயாக வலுச் சண்டைக்குப் போகாமலிருந்தால் மட்டும் போதாது, மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன். எத்தனையோ தடவை உன் வீரத்தை நிரூபித்திருக்கிறாய். ஆகையால், வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டுவிடாது. முக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்தை மதுராந்தகரிடமும் நீ மிக்க ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு நீ இன்னார் என்று கூடத் தெரியக் கூடாது! நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது!”
வந்தியத் தேவன் இளவரசரின் கண்களை உற்று நோக்குகிறான்.
வந்தியத்தேவன் – ‘புரிகிறது. ஓலையைக் கொடுத்த பின்னர் மகராஜாவிடம் நேரில் பேச வேண்டிய செய்தியும் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு வெற்றியுடன் திரும்புகிறேன்’’
இளவரசர் ஆதித்த கரிகாலர், வந்தியத்தேவனைப் பார்க்கிறார்.
வந்தியத்தேவன் – ‘என்னை ஆசிர்வதியுங்கள்’’
தன் தலையை இளவரசருக்கு முன்பாகத் தாழ்த்துகிறான்.
இளவரசர் வந்தியத்தேவனின் தலையில், தன் வலது கையை வைத்து ஆசிர்வதிக்கிறார்.
அந்த அறையைவிட்டு வெளியேறுகிறான் வந்தியத்தேவன்.
அவன் செல்வதை தன் இருக்கையில் அமர்ந்தபடியே கவனிக்கிறார் இளவரசர் ஆதித்த கரிகாலர்.
CUT
அறைக்கு வெளியே வேல் கம்புகளுடன் நிற்கும் காவலாளிகள் வந்தியத்தேவன் வெளியேறும்போது இன்னும் கூடுதல் விறைப்பு காட்டுகிறார்கள்.
CUT
அரண்மனையின் மிகப் பெரிய சுற்று வளாகம். ஊடாடும் மனிதர்கள். வந்தியத்தேவன் ஒரு மரத்தின் அடியில் நிற்கும் குதிரையின் அருகே வீரநடையோடு நடந்து வருகிறான். குதிரையின் உடலோடு நீள் வாக்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் வேல் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறான். குதிரையின் மீது மிக எளிதாகத் தாவி ஏறுகிறான். வலது கையில் வேலோடு, கால்களை குதிரையின் வயிற்றுப் பகுதியில் தட்டி குதிரையை இயக்குகிறான். அது மெல்ல ஓடிவந்து அரண்மனை வாயிலை நெருங்குகிறது.
CUT
வாயிற்கதவில் மெய்க்காப்பாளர்களும், காவலாளிகளும் பணிவுடன் வழிவிட, அரண்மனை வாசலை விட்டு வெளியேறுகிறான்.
CUT
இப்போது குதிரையின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. வந்தியத்தேவனின் நீளமான தலைமுடி எதிர்த்திசைக் காற்றில் சிலிர்த்துப் பறக்கிறது. தலையை ஆட்டியபடியே குதிரையின் வேகத்தை இன்னும் அதிகரிக்கிறான். குதிரையின் கால் குளம்புகள் மண்ணில் வேகமாக அழுந்துவதால் மண்துகள்கள் நாலாபுறமும் சிதறித் தெறிக்கின்றன.
CUT
மிகப்பெரிய சூறாவளி, பூகம்பம், சுனாமி ஏற்படப்போவதற்கான அறிகுறியை உணர்த்தும் பின்னணி இசையின் வீரியத்தோடு, புழுதியைக் கிளப்பியபடியே குதிரையின் வேகம் மேலும் அதிகரிக்க, வந்தியத்தேவன் தோற்றம் மெல்ல மெல்ல குதிரையோடு மறைந்துபோவதை அரண்மனையின் உச்சியில் இருக்கும் மாடத்தில் நின்றபடியே கவனிக்கிறார் இளவரசர் ஆதித்த கரிகாலர்.
இதுவரை நீங்கள் கேட்டிராத பின்னணி இசையுடன் திரையில்
பொன்னியின் செல்வன்
என்கிற எழுத்து தோன்றுகிறது.