Ponniyin Selvan Screenplay – Ponniyin Selvan Thiraikathai – Scene 3

பொன்னியின் செல்வன்

கதை,வசனம் : கல்கி

திரைக்கதை,வசனம் : தென்னாடன்

kunthavai

காட்சி 3

பகல்/உள் மற்றும் வெளி

Day/Int and Ext

பெரியதாக காட்சியளிக்கிற பத்துக்கும் மேற்பட்ட மாளிகைகளும், அழங்காரங்களைச் சுமந்து நிற்கும் சில அரண்மனைகளும் தூரமாய் தெரிகின்றன.

திரையில்

பழையாறை நகரம்

என்கிற எழுத்து தோன்றி மறைகிறது.

ஓர் அரண்மனையின் தோற்றம். அரண்மனை மேற்பகுதியில் புலிக்கொடி காற்றில் வீரியமாகப் பறந்துகொண்டிருக்கிறது.

CUT

மக்கள் ஆங்காங்கே தெருக்களில் ஊடாடும் காட்சிகள்.

ஒரு சந்தைப் பகுதி.

காய்கறிகளும், பழங்களும், மண்பாண்டங்களும், தின்பண்டங்களும், இதரப் பொருட்களும் கூவிக் கூவி விற்கப்படுவதும், வாங்கப்படுவதும்.

CUT

மீண்டும் அரண்மனையின் தோற்றம்.

அரண்மனையின் வாயில்.

அங்கே காவலுக்கு நிற்கும் வீரர்கள்.

அரண்மனையின் விதவிதமான அழகு அறைகள், மண்டபங்கள், வேலையாட்கள் ஊடாடுதல், பணிப்பெண்கள் ஊடாடுதல், போர் வீரர்கள் ஒரு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருத்தல் என இன்னும் பல தொகுப்புக் காட்சிகள் பின்னணி இசையோடு.

CUT

அரண்மனையின் மேல்மாடம்.

செம்பியன் மாதேவி (நெற்றி நிறைய திருநீர் பூசியிருக்கிறார். கழுத்தில் உத்திராட்ச மாலைகள். தோற்றத்தில் மூப்பு தெரிகிறது) தூரத்தில் எதையோ பார்த்துக்கொண்டிருக்கும் குந்தவையை நோக்கி வருகிறார்.

(குந்தவை இக்கதையின் நாயகி. மிக அழகாக, இளமையாக இருக்கிறாள். இளவரசியின் தோற்றத்தில் இருக்கிறாள்)

குந்தவையின் முன்னே வந்து நிற்கிறார் செம்பியன் மாதேவி.

குந்தவையின் முகத்தில் குழப்பமும், யோசனையும் தெரிகிறது.

செம்பியன் மாதேவி குந்தவையின் தோள்களில் தன் வலதுகையை வைக்கிறார்.

குந்தவை அவரைப் பார்க்கிறாள்.

செம்பியன் மாதேவி : ‘‘என்ன நடந்துவிட்டது என்று இப்படிக் குழம்பியபடியே யோசித்துக்கொண்டிருக்கிறாய்? எத்தனையோ போர்களைக் கண்டவர்கள் நம் சோழத்து வீரர்கள். உன் அண்ணன் ஆதித்த கரிகாலனாகட்டும், உன் தம்பி அருள்மொழிவர்மனாகட்டும் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள்.”

குந்தவை செம்பியன் மாதேவியைப் பார்க்கிறாள்.

குந்தவை :  ‘‘என் சிந்தனை பலவாறாக குழம்பியிருப்பது உண்மைதான். சண்டை என்றால் மோதிப்பார்த்துவிடும் துணிவு இருக்கிறது. பகைவர்களை வெற்றிகொள்ளும் சக்தியும் இருக்கிறது. இங்கே நடந்துகொண்டிருப்பது சதியல்லவா?’’

பேசியபடியே மெல்ல வேறு இடம்நோக்கி நகர்கிறாள்.

அவள் நகர்ந்த இடம் நோக்கி செம்பியன் மாதேவியும் நகர்ந்துபோகிறார்.

செம்பியன் மாதேவி : ‘‘சண்டையில் தோற்று ராஜ்ஜியத்தை இழந்தவர்களைவிட சதியால் வீழ்ந்து ராஜ்ஜியத்தை இழந்துபோன அரசுகளே அதிகம் என்பதை நானும் அறிவேன். இந்தமாதிரி நேரங்களில் நாம் பதற்றப்படக்கூடாது. முக்கியமாக நீ பதற்றப்படக்கூடாது. மிகப்பெரிய சோழ ராஜ்ஜியத்தின் இளவரசி நீ’’

குந்தவை செம்பியன் மாதேவியைப் பார்க்கிறாள்.

குந்தவை : “தந்தை சுந்தரசோழர் தஞ்சை மாநகரத்தில். மகள் நானோ இந்தப் பழையாறில். அண்ணன் ஆதித்த கரிகாலன் காஞ்சி நகரத்தில். தம்பி அருள்மொழிவர்மன் இலங்கை போர் முனையில். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பேசி, மகிழ்வாய் இருந்து எத்தனை நாளாயிற்று. ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் ஆசையிலே நாங்கள் திசைக்கொருவராய் பிரிந்து, நிர்வாகத்தையும், ராஜ்ஜியத்தையும் கவனித்துக் கொள்வதாலேயே சதிகாரர்கள் சூழ்ச்சி செய்வதற்கு ஏதுவாய் போயிற்று. திட்டமிட்டே என் தந்தை தஞ்சை மாநகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அனைத்திற்கும் முடிவு கட்டுவேன்’’

செம்பியன் மாதேவி குந்தைவையைப் பார்த்து புன்னகைக்கிறார்.

குந்தவை : “ஏனம்மா புன்னகை?’’

செம்பியன் மாதேவி : “இப்போதெல்லாம் பழுவேட்டரையர்கள் உன்னைத்தான் எதிரியாக பாவிக்கிறார்களாம். உன் திட்டப்படியேதான் உன் தந்தையும், சகோதரன்களும் செயல்படுவதாகவும், இந்தச் சோழ ராஜ்ஜியமே உன் சொற்படிதான் நடக்கிறதாகவும் அவர்களுக்கு தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது. அரசு ஒற்றர்களைவிட சதிகாரர்களின் ஒற்றர்கள் திறமையாகவும் விரைவாகவும் பணியாற்றுகிறார்கள்’’

குந்தவை, செம்பியன் மாதேவியை யோசித்தபடியே பார்க்கிறாள்.

Clip to Evernote