Naan Sigappu Manithan Vimarsanam 40%

Naan Sigappu Manithan Vimarsanam

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

naan sigappu manithan

அதிர்ச்சியான விஷயங்களைக் கேட்டவுடன் தூங்கிப் போகும் ஒருவனின் கதை.

தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்கிற விஷாலுக்கு, ஏதாவது அசம்பாவிதமான சத்தம் திடீரென காதில் கேட்டால், உடனே தூங்கிப்போகிற வியாதி. அப்படித் தூங்கிப் போகிற நேரத்தில், தன் எதிரே, தன் அருகே இருப்பவர்கள் பேசுகிற பேச்சையும், எழுகிற சத்தங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, கண் விழித்தவுடன் அவற்றை நினைவுகூறும் அபூர்வ வியாதி அது.

படிப்பில் கெட்டிக்காரத்தனத்துடன் விளங்குகிற விஷாலுக்கு, இந்த வியாதி பெரும் சிக்கலை தோற்றுவிக்கிறது. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு நிறுவனமும் வேலை கொடுக்க முன்வரவில்லை.

எந்நேரமும் தூக்கம் வரலாம் என்பதால், தாய் சரண்யா இவரை தனியாக எங்கும் அனுப்புவதில்லை. நன்றாகப் படித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்கிற விஷாலை, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிப் பிரிவுக்கு அழைக்கிறார்கள். அதற்காக 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்கிறார் விஷால். அவர்களும் ஓ.கே சொல்ல, தனக்கு இருக்கும் நோயின் தன்மை உணர்த்தும் ஆராய்ச்சி மாணவராக, தன்னை மற்றவர்கள் பயன்படுத்தும் நோக்கில் கணிசமான தொகையை மாதம் தோறும் சம்பாதிக்கத் தொடங்குகிறார்.

விசித்திர நோயுடன் வாழ்கிற விஷாலுக்கு பத்து ஆசைகள் இருக்கின்றன. அந்த பத்து ஆசைகளும் மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், அவரின் கோணத்தில் அந்த ஆசைகள் அனைத்தும் சவாலானவைகள்.

விஷாலின் பத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிற ஒரு பெண்ணாக லட்சுமி மேனன் இவரின் வாழ்க்கையில் குறுக்கிட, அந்தப் பெண்ணுக்கும் இவருக்குமான உறவு நட்பாகி, காதலாகி கசிந்துருகும்போது, வழக்கமான பாணியில் இடைவேளை வந்துவிடுகிறது. அதன்பிறகு…….

அதன்பிறகு உட்டாலங்கடி கிரி கிரியாக நீங்கள் பார்ப்பது அக்மார்க் தமிழ்ச் சினிமா.

இனி விமர்சனத்திற்கு வருவோம்.

பீர் குடித்தவன் போதை பத்தவில்லை என்பதால் பாதி போதையில் பிராந்திக்கு மாறி வாந்தி எடுக்க, இருக்கிற போதையும் போய்த் தொலைந்து, எரிச்சலில் கொண்டுபோய்விடுகிறது. இதைத்தான் செய்துகாட்டியிருக்கிறார் ‘நான் சிகப்பு மனிதன்’ இயக்குநர் திரு.

விசித்திர நோயுடன் வாழ்கிற உத்தம நாயகனுக்கு, அவன் மனம் விரும்பியபடியே காதலியாய் மனைவி கிடைக்கிறாள். அதுவும் செல்வச் செழிப்போடு. அழகான காதல் கதையை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் என ஆச்சரியுடத்துடன் புருவங்கள் உயர்த்தும்போது, நானும் விதிவிலக்கு அல்ல என்பதை நிரூபித்து, நம்மை புருவங்களை இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்து, அவ்வப்போது பார்வையை வேறுபக்கம் திரும்ப வைக்கிறார்.

முன்பாதியில் நாயகனுக்கும், நாயகிக்கும் வாழ்வியல் ரீதியாக எழும் முரண்பாடுகளைக் கொண்டே மீதிக் கதையை நகர்த்திச் செல்லும் திரைக்கதை உத்திகள் ஏராளமாக இருந்தும், இடைவேளைக்குப் பிறகு பாதை மாறியிருப்பது, அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு, முருகன் கோவிலில் மொட்டையடித்த கதையாக இருக்கிறது.

நம் தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று. மையப் புள்ளியாக விளங்கும் கதை எதுவோ, அதிலிருந்து விலகிச் சென்று வித்தியாசம் காட்டி நம் திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற வறட்டுப் பந்தாவுக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ மேலும் ஓர் உதாரணம்.

வளமான ஒளிப்பதிவு, குறைசொல்ல முடியாத பின்னணி இசை, ஜெயப்பிரகாஷ், சரண்யா மற்றும் சக நடிகர்களின் கச்சிதமான நடிப்பு என பல விஷயங்கள் குறைசொல்ல முடியாத அளவிற்கு இருந்தாலும், பிரதான சாலையில் ஜரூராகப் போய்க்கொண்டிருந்த பென்ஸ் காரை முட்டுச் சந்துக்குள் நுழையவிட்டு பஞ்சராக்கிய கதையாக, இடைவேளைக்குப் பின்னான திரைக்கதை உத்தி, மொத்த படத்தையும் கீழே தள்ளி சாய்க்கிறது.

மதிப்பெண்கள் 40%

Clip to Evernote