Category Archives: திரை விமர்சனம்

Kochadaiyaan Vimarsanam in Tamil – கோச்சடையான் விமர்சனம் – 52%

கோச்சடையான் விமர்சனம்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானை விமர்சிக்க இந்த ஒற்றை வரி போதும்!

tamil screenplay

”விமர்சிக்க முடியாத பல திரைப்படங்கள் வரும். விமர்சிக்கவேண்டிய படங்கள் அவ்வப்போது வரும். கோச்சடையான் விமர்சிக்கக்கூடாத படம். என்னவோ தெரியவில்லை கோச்சடையானை விமர்சிக்க மனம் ஒப்பவில்லை.

படம் பார்த்து முடிந்தவுடன் நண்பர் ஒருவர் ”படம் எப்படி?” எனக் கேட்டபோது, அவரிடம் நான் சொன்ன பதில் இதுதான்.
”நீர் விமர்சிக்க வேண்டாமய்யா, என்ன கதை? அதையாவது சொல்லும்!” தொந்தரித்துக் கேட்டார்.
வழக்கமான ராஜாக்கள் காலத்து கதைதான்.

கலிங்காபுரி, கோட்டைப்பட்டினம் என ஒன்றுக்கொன்று சளைக்காத இரண்டு நாடுகள். மண் சேர்க்கும் அரசர்களின் ஆசைக்கு பலிகடா ஆகும் படைத் தளபதியாக அப்பா கோச்சடையான் (ரஜினி 1). தந்தை ரஜினியின் மரணத்திற்குக் காரணமான இரண்டு ராஜாக்களையும் பலிவாங்கும் படைத்தளபதியாக மகன் ராணா (ரஜினி 2)
இதற்குள் ஒரு காதல். அம்புட்டுதான் கதை. ஆனால்……

தொழிற்நுட்ப புரட்சியின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட கோச்சடையானில் கதை முக்கியமல்ல என்றாலும், அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, குழப்பம் இல்லாத திரைக்கதையை வடித்துக் கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். வசனமும் அவரே.

”எதிரிகளை வெல்ல பல வழிகள் இருக்கு. முதல் வழி மன்னிப்பு, நண்பனை எதிரியாக்கிக்கொள்ளாதே, வேஷம் போடுறவனுக்கு பகல் என்ன இரவு என்ன, சூரியனுக்கு முன்னரே எழுந்தால் அந்த சூரியனையே வெல்லலாம்” என வாழ்வியல் சார்ந்த வசனங்கள் ஏராளம்.

படத்தில் நிஜக் கதைமாந்தர்கள் ஒருவர்கூட கிடையாது. அவர்களின் உருவத் தோற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு, கனிணியின் சாகசத்தோடு வென்று காட்டியிருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடம் மட்டுமே கதை மாந்தர்களாக காட்சியளிக்கிற கணினி மாந்தர்கள் நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள். அதன்பிறகு அப்படியே நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்கள் படம் முடியும்வரை. காரணம், தொழிற்நுட்பம்.

இந்தியச் சினிமாவுக்கு இது புதுசு. பட்ஜெட் இருந்தால் அவதாரையும் மிஞ்சக்கூடிய வகையில் நம்மிடம் அறிவும், தொழிற்நுட்பமும் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சவுந்தர்யா.

கதைமாந்தர்களின் கண் அசைவு, நடை போன்றவற்றில் துல்லியமான பாவணைக் குறைகள் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளிவிடுகிறது மனசு. காரணம், படத்தில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்டம்.

அரண்மனைக் காட்சிகளிலிருந்து போர்க்கள காட்சிவரை, காட்சிக்கு காட்சி நாம் இதுவரை பார்த்திராதது.

கோச்சடையான் வெளிவருவதில் ஏன் சிக்கல் எனத் தெரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பாக வந்திருந்தால், வசூலை அள்ளிக் குவித்திருக்கும் என்றாலும், இப்போதும் அதற்குக் குறையிருக்காது என்று நம்பலாம்.

குடும்பத்தோடு பார்த்து மகிழ, முக்கியமாக குழந்தைகளோடு பார்த்து மகிழவேண்டிய படம்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை தன் முதல் படத்திலேயே தோற்கடித்திருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

கோச்சடையானின் விமர்சனத்திற்கு இந்த ஒற்றை வரிபோதும்.

மதிப்பெண்கள் 52%

Vallavanukku Pullum Ayudham Vimarsanam 38%

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

கதையின் நாயகனாக சந்தானம் தூள்குழப்பியிருக்கும் படம்.

Tamil Screenplay

கதை

சிறையிலிருந்து வெளிவரும் சந்தானத்தின் இளைய தாய்மாமனை போட்டுத்தள்ளி, தானும் இறந்துபோகிறார் சந்தானத்தின் அப்பா. அப்போது சந்தானம் தொட்டில் குழந்தை. சந்தானத்தின் தந்தையால் வெட்டப்பட்டு இறந்துபோனவரின் அண்ணன் (மூத்த தாய்மாமன்), தன் தம்பியைக் கொன்றவனின் குடும்பத்தையே அழித்துவிடவேண்டும் என தன் இரண்டு குழந்தைகளோடு அருவாள் முனையில் சபதம் ஏற்கிறார். இனி இந்த ஊரில் இருந்தால் தன் மகனையும் கொன்றுவிடுவார்கள் என சந்தானத்தின் தாய் சென்னையில் குடியேறுகிறார்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு கதை உடனடியாக நகர்ந்துவிடுகிறது.

அதற்குள் அம்மாவும் இறந்துபோக, அநாதையான சந்தானம், இப்போது பழைய சைக்கிளில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளி. “இனி சைக்கிளில் சப்ளை செய்தால் உனக்கு வேலை இல்லை. உடனே ஒரு குட்டியானை வாங்கு” என முதலாளி சொல்ல, வேலை இழக்கும் சந்தானம் குட்டியானை வாங்குவதற்காக பணத்திற்கு அலைய, தான் பிறந்த ஊரில் தன் அப்பாவிற்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிற தகவல் வந்துசேர்கிறது. அந்த இடத்தை விற்பனை செய்வதற்காக தன் பிறந்த ஊருக்குச் செல்ல, இவரைப் பழிவாங்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் வில்லன் குடும்பத்தினரின் வீட்டுக்குள்ளேயே விபரீதமாக அடைக்கலமாகிறார்.

வீட்டில் அடைக்கலமாகியிருப்பது தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் பகையாளியின் மகன் என்கிற உண்மை வில்லன் கோஷ்டிகளுக்குத் தெரியவந்தாலும் அவர்களால் உடனடியாக சந்தானத்தைக் கொல்ல முடியவில்லை. காரணம்,

வில்லன் குடும்பத்திற்கென ஒரு கொள்கை இருக்கிறது. தன் வீட்டிற்குள் வைத்து யாரையும் இவர்கள் பழிவாங்குவது கிடையாது. வெட்டுக்குத்து, அடிதடி எல்லாம் வீட்டிற்கு வெளியேதான்.

வீட்டுவாசலைத் தாண்டினால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்கிற விஷயம் சந்தானத்திற்கு தெரியவர, அவரும் வாசலைத் தாண்டாதாவறு தகிடுதித்தங்கள் செய்து பிழைக்கிறார். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் வில்லனின் மகளுக்கு சந்தானத்தின் மீது காதல் பிறக்க, சந்தானம் பழிவாங்கப்பட்டாரா, காதலியை அடைந்தாரா என்பதை வழக்கமான தமிழ்ச் சினிமா இலக்கண விதிகளுக்கு மீறாமல் படம் காட்டியிருக்கிறார்கள்.

சில காட்சிகளில் மட்டுமே சந்தானம் சிரிக்க வைக்கிறார். சில காட்சிகளில் சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால், படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து முடிவுக் காட்சிவரை அடுக்கடுக்கான லாஜிக் இடர்பாடுகள் வந்து இம்சை படுத்துவதால், படத்தோடும் கதையோடும் ஒன்ற முடியவில்லை.

கதைக்குத் தேவையில்லாத டம்மிக் காட்சிகளே படத்தை அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள, சீரியஸான ஒரு கதைக்குள் காமடி எப்போது வரும் என்கிற மனநிலையோடு  ஏங்க வைக்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே சுற்றிச்சுற்றி வருவது, சந்தானத்தைக் கொல்ல எளிய வழிகள் இருக்கும்போது, அதற்காக வில்லன்கள் பெரிதாக மெனக்கெடுவது, இறுதிக் காட்சியில் அத்தனை அடிவாங்கிய பிறகும் வீறுகொண்டு எழுவது, நாயகியை முறைமாமன் எளிதாக விட்டுக்கொடுப்பது என நிறைய காட்சிகள் சலிப்பைக் கொடுக்கின்றன.

நாயகி ஆஸ்னா சாவேரி அழகாக இருக்கிறார். இறுதிக் காட்சியில் தன் திறமையை வெளிக்காட்டுகிறார். பின்னணி இசையும், பாடல்களும் சுமார் ரகத்திற்கும் கீழே. படத்தின் பிற கதை மாந்தர்கள் நாடக பாணியில் நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது (சக்தி, ரிச்சார்ட் நாதன்).மதிப்பெண்கள் 38%

 

Thenali Raman Vimarsanam – Review – 36%

தெனாலிராமன் விமர்சனம் 36%

 Thenali Raman Vimarsanam – Review – 36%

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம்.

நகைச்சுவைக்கு இவரை விட்டால் ஆள் இல்லை என கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவை தன் உடல்மொழியால் கவர்ந்து, கட்டிப்போட்டு வைத்திருந்த வடிவேலு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடுத்த முடிவால், தமிழ்ச் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்டவர், அரசியலைத் துறந்து சகஜநிலைக்கு வருவதற்குள், அவரின் திரைத்துறை சகாப்தத்தில் மூன்று ஆண்டுகள் காணாமல் போயிற்று. ஒருவழியாக, ‘தெனாலிராமன்’ மூலம் மறுபிரவேஷம் செய்திருக்கிறார். அதுவும் கதையின் நாயகனாக.

 

‘தெனாலிராமன்’ என தலைப்பு வைத்தாலும், படத்திற்குள் நவீன தெனாலிராமனை இன்றைய காலத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் காட்டியிருப்பார்கள் என்கிற நமது கற்பனையை எடுத்த எடுப்பிலேயே அறுத்து எறிந்துவிடுகிறார் இயக்குநர் யுவராஜ். முழுக்க முழுக்க அந்தக் காலத்துக் கதைதான். அதுவும், தென்னிந்திய வரலாற்றுக் கதைகளில் பிரதான இடம்பெற்ற அமைச்சர் தெனாலிராமன் கதையை, அந்தக் காலத்தில் நடப்பதுபோலவே காட்டியிருக்கிறார்கள். எனவே, அக்மார்க் வரலாற்றுப் படம்.

வடிவேலுக்கு இதில் இரட்டை வேடம். ஒருவர் நாடாளும் அரசனாக. மற்றொருவர் நாவண்மை, வீரம், அறிவு படைத்த அமைச்சராக.

விகட நகரம் என்கிற நாட்டை ஆள்கிற அரசர் வடிவேலுவின் மந்திரி சபையில் ஒன்பது பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சீனாவிலிருந்து வருகிற வியாபாரிகள் இந்த விகடநகரத்தில் வணிகம் செய்ய நினைக்க, ஒன்பது அமைச்சர்களில் ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்ற எட்டுபேரும் சீன வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, வியாபாரத்தைத் தொடங்க அனுமதி கொடுக்கின்றனர். எனவே, எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் மட்டும் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் அரசராக இருக்கிற வடிவேலுக்குத் தெரியாது. தன் அமைச்சர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். கொல்லப்பட்ட அமைச்சரின் மரணம் இயற்கையானது என மற்ற எட்டு அமைச்சர்களும் அரசர் வடிவேலுவிடம் தெரிவிக்க, அவரும் நம்பிவிடுகிறார்.

இப்போது கொல்லப்பட்ட அமைச்சருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற எட்டு அமைச்சர்களும் தங்களோடு ஒத்துழைக்கிற ஒருவரை இரகசியமாகத் தேர்வு செய்யும்பொருட்டு திட்டமிடுகின்றனர். ஆனால், அதே தேர்வுக்காக வரும் இரண்டாவது வடிவேலுவின் சாமர்த்தியத்தால் அந்த நபர் தேர்வில் தோற்றுப்போக, இரண்டாவது வடிவேலு அமைச்சராகிவிடுகிறார். அதாவது, அரசர் வடிவேலுவின் அமைச்சரவையில் இன்னொரு வடிவேலு. ஆக, இரண்டு வடிவேல்களும் சேர்ந்து நம் வயிற்றைப் பதம்பார்க்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நம்மை அப்பிக்கொள்கிறது.

அமைச்சரவையில் இடம்பெற்ற வடிவேலு நாவண்மை மிக்கவர். அதி புத்திசாலி. இவர் அமைச்சரவைக்குள் இடம்பெற்றதன் நோக்கம் அரசர் வடிவேலுவைக் கொல்லவேண்டும் என்பதற்காகத்தான். காரணம், அரசருக்கு நாட்டை ஆளத் தெரிவில்லை. மக்கள் அனைவரும் பஞ்சம், பசி, பட்டினியோடு வாழ்ந்துவருகிறார்கள். அரசரைக் கொன்றால் மட்டுமே மக்கள் விமோசனம் பெறுவார்கள் என்பது இவரின் திட்டம். இதற்கு பின்புலமாக போராளிக் கூட்டம் ஒன்று செயல்பட, அவர்களின் தூதுவனாகவே அமைச்சர் வடிவேலு அரண்மனைக்குள் நுழைந்திருக்கிறார் என்பதை அவ்வப்போது நமக்கு காட்டுகிறார்கள்.

அரசரைக் கொல்வதற்காக அமைச்சர் பொறுப்பேற்று வந்திருக்கும் வடிவேலுக்கு விரைவில் உண்மை தெரியவருகிறது. அரசர் நல்லவரே, எட்டு அமைச்சர்களும்தான் கெட்டவர்கள். எனவே, எட்டு அமைச்சர்களையும் அரசரிடமிருந்து நீக்கிவிட்டால், நாடு சுபிட்சமாகிவிடும் என்பதை உணர்கிறார் அமைச்சர் வடிவேலு.

ஆனால், எட்டு அமைச்சர்களும் வடிவேலுவை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியத் திட்டம் போடுகிறார்கள். அந்த திட்டம் வெற்றிபெறுகிறது. அமைச்சர் வடிவேலு தன் பதவியை  இழக்கிறார். என்றாலும், அரசர் வடிவேலுவுக்கு அமைச்சர் வடிவேலுவின் நடவடிக்கைகள் பிடித்துப் போனதால், தனிப்பட்ட முறையில் அவரைச் சந்திக்கிறார். அப்போது மற்ற எட்டு அமைச்சர்களின் போலித்தனங்களைச் சொல்கிறார் அமைச்சர் வடிவேலு.

உண்மையைப் புரிந்துகொண்ட அரசர் வடிவேலு, அமைச்சர் வடிவேலுவை தற்காலிக அரசராக்கிவிட்டு, வேறு நாட்டுக்கு சுற்றுலா செல்கிறேன் என மக்களை நம்பவைத்து, பத்து நாட்கள் மாறுவேடத்தில் நகரத்தில் உலாவர, மக்கள் படும் துயரங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்கிறார். இந்த பத்துநாளில் மற்ற எட்டு அமைச்சர்களும் சீன வியாபாரிகளோடு சேர்ந்து அரசரைக் கொல்லத் திட்டம் போடுகின்றனர். அவர்களின் திட்டத்தை முறியடிக்கிறார் அமைச்சரும் தற்காலி அரசருமான வடிவேலு. இப்படியாக கதை முடிந்துபோகிறது.

Thenaliraman 3

இனி விமர்சனத்திற்கு வருவோம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலு படம் வந்திருப்பதால், நகைச்சுவையை மையப்படுத்தி வயிற்றைப் புண்ணாக்கும் காட்சிகளோடு கதையைச் சொல்லியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு திரையரங்குக்குள் நுழையும்போதே நமக்கு வந்துவிடுகிறது. அதுபோக, திரைப்படத்தின் சுவரொட்டிகளிலும், விளம்பரப் பதாகைகளிலும் காணப்படும் காட்சிகளும் அப்படியான கற்பனையை நமக்குள் ஊற்றெடுக்க வைத்துவிடுவதால், பரபரப்புடன் இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்கத் தூண்டப்படுகிறோம். ஆனால்….

ஆனால், அடுத்த பத்து நிமிடங்களுக்குள் ஏமாற்றத்திற்கான முதல் அறிகுறி நம் முகத்தில் ஈயாட….அடுத்த பத்துநிமிடத்தில் சிரிக்க வைப்பார் வைப்பார் வைப்பார் வைப்பார் என நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்துக்கொண்டே இருக்க, இடைவேளை வந்து படமும் முடிந்துவிடுகிறது.

இம்சை அரசன் 23ம் புலிகேசியின் சாயல் தெனாலிராமனிலும் பல இடங்களில் வந்துபோகிறது. திரைக்கதை உத்தியும் அதே சாயல்தான். ஆனால், புலிகேசியில் இருந்த பாய்ச்சல் இங்கே காணப்படவில்லை. காரணம், புலிகேசியின் திரைக்கதை புதிதாக எழுதப்பட்டது. தெனாலிராமனின் திரைக்கதை பிரதி எடுக்கப்பட்டு சற்றே மாற்றி அமைக்கப்பட்டது.

வடிவேலுவின் பல படங்களில் வயிறு வலிக்கச் சிரிக்கும் குழந்தைகள் இந்தப் படத்தில் தூங்கிப் போகிறார்கள். காரணம், கதைக் களங்களை அமைத்த அளவிற்கு, கதையின் போக்கில் சுவராஸ்யத்தை உருவாக்கத் தவறிவிட்டார்கள்.

மகள், காதலி என இரண்டுவேடத்தில்  அரசர் வடிவேலுக்கும், அமைச்சர் வடிவேலுக்கும் ஒரே நாயகியாக மீனாட்சி தீட்சித். ஊறுகாய் தயாரிப்பில் பெரிதாக என்ன திறமைகாட்டிவிடமுடியும்? அதைத்தான் செய்திருக்கிறார் மீனாட்சி தீட்சீத்.

அந்நிய முதலீடு நாட்டிற்குள் நுழைவதால் உள்நாட்டு வணிகர்களும், மக்களும் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான திரைக்கதையை அமைத்துவிட்டு, அதை நகைச்சுவை படமாக்க முயன்றிருப்பதால், முரண்பாடான கதைக்களத்தோடு ஒன்ற முடியாமல் சிதைந்துவிடுகின்றன காட்சி அமைப்புகள்.

பானைக்குள் யானை நுழைவது, எல்லாம் நன்மைக்கே போன்ற காட்சிகள் அரதப் பழசு இரகங்கள். அவற்றிற்குப் பதிலாக இன்றைய காலத்திற்கேற்ப மாற்று உத்திகளை யோசித்து திரைக்கதையாக்கியிருக்கலாம்.

திரைப்படங்கள் மிகச் சிறந்த காட்சி ஊடகங்கள். எழுத்தில் வடிக்க முடியாத பல அற்புதங்களை காட்சிவழியாக எளிதாகச் சொல்லிவிடமுடியும். அதனால்தான், மொக்கை ஜோக்குகளைகூட காட்சிவழியே சொல்லும்போது, விழுந்து விழுந்து சிரிப்பார்கள் பார்வையாளர்கள். அந்த வித்தையைக் மெத்தக் கற்ற வடிவேலு, தெனாலிராமனில் கோட்டைவிட்டிருப்பது, அவரது இயலாமையா, பலவீனமா, அறியாமையா அல்லது அகங்காரமா? அவருக்கே வெளிச்சம்.

படத்தின் இயக்குநர் யுவராஜ். இவரின் முந்தைய படம் ‘பட்டா பட்டி’. கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, அத்தனை அற்புதமாக கதைசொல்லியிருப்பார். இந்தப் படத்தில் அவரின் திறமை மழுங்கடிக்கப்பட்டதற்கு, ‘’எனக்கு எல்லாம் தெரியும். நான் சொல்கிறபடி காட்சியை வை’’ என்ற வடிவேலுவின் அசட்டுத் தைரியமும் காரணமாக இருந்திருக்கலாம்.

படத்திற்கு நிறைய செலவிட்டிருக்கிறார்கள். நிறைய உழைத்திருக்கிறார்கள். யாருக்காக இதையெல்லாம் செய்கிறோம் என்பதையும் மனதில் நினைத்திருந்தால், தெனாலிராமன் புலிகேசியை தோற்கடித்திருப்பான். இங்கே, தோற்றுவிட்டான்.

மதிப்பெண்கள் 36%

Naan Sigappu Manithan Vimarsanam 40%

Naan Sigappu Manithan Vimarsanam

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

naan sigappu manithan

அதிர்ச்சியான விஷயங்களைக் கேட்டவுடன் தூங்கிப் போகும் ஒருவனின் கதை.

தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்கிற விஷாலுக்கு, ஏதாவது அசம்பாவிதமான சத்தம் திடீரென காதில் கேட்டால், உடனே தூங்கிப்போகிற வியாதி. அப்படித் தூங்கிப் போகிற நேரத்தில், தன் எதிரே, தன் அருகே இருப்பவர்கள் பேசுகிற பேச்சையும், எழுகிற சத்தங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, கண் விழித்தவுடன் அவற்றை நினைவுகூறும் அபூர்வ வியாதி அது.

படிப்பில் கெட்டிக்காரத்தனத்துடன் விளங்குகிற விஷாலுக்கு, இந்த வியாதி பெரும் சிக்கலை தோற்றுவிக்கிறது. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு நிறுவனமும் வேலை கொடுக்க முன்வரவில்லை.

எந்நேரமும் தூக்கம் வரலாம் என்பதால், தாய் சரண்யா இவரை தனியாக எங்கும் அனுப்புவதில்லை. நன்றாகப் படித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்கிற விஷாலை, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிப் பிரிவுக்கு அழைக்கிறார்கள். அதற்காக 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்கிறார் விஷால். அவர்களும் ஓ.கே சொல்ல, தனக்கு இருக்கும் நோயின் தன்மை உணர்த்தும் ஆராய்ச்சி மாணவராக, தன்னை மற்றவர்கள் பயன்படுத்தும் நோக்கில் கணிசமான தொகையை மாதம் தோறும் சம்பாதிக்கத் தொடங்குகிறார்.

விசித்திர நோயுடன் வாழ்கிற விஷாலுக்கு பத்து ஆசைகள் இருக்கின்றன. அந்த பத்து ஆசைகளும் மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், அவரின் கோணத்தில் அந்த ஆசைகள் அனைத்தும் சவாலானவைகள்.

விஷாலின் பத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிற ஒரு பெண்ணாக லட்சுமி மேனன் இவரின் வாழ்க்கையில் குறுக்கிட, அந்தப் பெண்ணுக்கும் இவருக்குமான உறவு நட்பாகி, காதலாகி கசிந்துருகும்போது, வழக்கமான பாணியில் இடைவேளை வந்துவிடுகிறது. அதன்பிறகு…….

அதன்பிறகு உட்டாலங்கடி கிரி கிரியாக நீங்கள் பார்ப்பது அக்மார்க் தமிழ்ச் சினிமா.

இனி விமர்சனத்திற்கு வருவோம்.

பீர் குடித்தவன் போதை பத்தவில்லை என்பதால் பாதி போதையில் பிராந்திக்கு மாறி வாந்தி எடுக்க, இருக்கிற போதையும் போய்த் தொலைந்து, எரிச்சலில் கொண்டுபோய்விடுகிறது. இதைத்தான் செய்துகாட்டியிருக்கிறார் ‘நான் சிகப்பு மனிதன்’ இயக்குநர் திரு.

விசித்திர நோயுடன் வாழ்கிற உத்தம நாயகனுக்கு, அவன் மனம் விரும்பியபடியே காதலியாய் மனைவி கிடைக்கிறாள். அதுவும் செல்வச் செழிப்போடு. அழகான காதல் கதையை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் என ஆச்சரியுடத்துடன் புருவங்கள் உயர்த்தும்போது, நானும் விதிவிலக்கு அல்ல என்பதை நிரூபித்து, நம்மை புருவங்களை இயல்பு நிலைக்குத் திரும்ப வைத்து, அவ்வப்போது பார்வையை வேறுபக்கம் திரும்ப வைக்கிறார்.

முன்பாதியில் நாயகனுக்கும், நாயகிக்கும் வாழ்வியல் ரீதியாக எழும் முரண்பாடுகளைக் கொண்டே மீதிக் கதையை நகர்த்திச் செல்லும் திரைக்கதை உத்திகள் ஏராளமாக இருந்தும், இடைவேளைக்குப் பிறகு பாதை மாறியிருப்பது, அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு, முருகன் கோவிலில் மொட்டையடித்த கதையாக இருக்கிறது.

நம் தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று. மையப் புள்ளியாக விளங்கும் கதை எதுவோ, அதிலிருந்து விலகிச் சென்று வித்தியாசம் காட்டி நம் திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற வறட்டுப் பந்தாவுக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ மேலும் ஓர் உதாரணம்.

வளமான ஒளிப்பதிவு, குறைசொல்ல முடியாத பின்னணி இசை, ஜெயப்பிரகாஷ், சரண்யா மற்றும் சக நடிகர்களின் கச்சிதமான நடிப்பு என பல விஷயங்கள் குறைசொல்ல முடியாத அளவிற்கு இருந்தாலும், பிரதான சாலையில் ஜரூராகப் போய்க்கொண்டிருந்த பென்ஸ் காரை முட்டுச் சந்துக்குள் நுழையவிட்டு பஞ்சராக்கிய கதையாக, இடைவேளைக்குப் பின்னான திரைக்கதை உத்தி, மொத்த படத்தையும் கீழே தள்ளி சாய்க்கிறது.

மதிப்பெண்கள் 40%