Category Archives: கதைகள்

கருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book

கருப்பி

கருப்பி

 

இதை மாமை நிறத்தினள் என்பதா? அல்லது கரும்புச் சுவையினள் என்பதா? ‘கறுப்பி’ என்றும் எழுத முடியாது, அது காத்துக் கறுப்பு என்னும் அர்த்தச்சாயலைத் தந்துவிடும். கருப்பி என்றது சரிதான். ஆனால், அதை நிறமாக அல்லாமல் சுவையாகக் கொள்கிறேன்.

கருப்பி

karupi

ஒரு புத்தகத்தில் தலைப்புக் கதையை முதலில் வாசிப்பது வழக்கம் எனக்கு. கடைசிக் கதை அடுத்து; முதற்கதை அப்புறம். மற்ற கதைகளை, முன்னொன்று பின்னொன்று என்று வாசித்து முடிப்பேன். முதல் மூன்று கதைகளை வாசித்ததும் இடைவேளை எடுப்பேன். அதில் என்ன செய்வேன் என்பது இங்கே முக்கியமில்லை. படைப்புகள் தரும் இன்னொரு, அல்ல அல்ல, வேறுவேறு உலகங்கள், வாழ்க்கைகளை ஒப்பிட ஒரு வாசகனின் அக்கடாக்கள் முக்கியமா என்ன?

 

இடைவேளை முடிந்து, முன், அணி, பதிப்பு உரைகள் இல்லாத இந்தப் புத்தகத்தின் பின்னட்டை விளம்பல் வரிகளை வாசித்தேனா, ‘தினமலர்’ டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவருடைய ‘செகண்ட் ஷோ’ பரிசு வென்றதாகக் கண்டிருந்தது. அதனால், அந்தக் கதையை வாசித்தேன்.

 

 

இன்றைக்கு, பிரியமான ஒரு பிள்ளை, ‘நல்லா இருக்கு’ என்றதே என்று, ‘அஞ்சு சுந்தரிகள்’ மலையாளப் படம் பார்க்கப்போய், ஒரு பிள்ளை வெட்சி (Pedophilia) அதில் வரக்கண்டு, மிரண்டு, படம் பார்ப்பதைப் பாதியிலேயே விட்டுவிட்டேன்.

 

போலவே, ‘பெண்ணியம்’ வரக்கண்டாலும் மிரண்டு போவேன். சொந்த அடிபாடு. முதற்கதை ‘காஃபி’யில் ‘சாவினிஸ்ட்’ என்றொரு வார்த்தை வருகிறது, அப்படி ஆவதற்கும் தெம்பில்லாத ஆள் நான். ‘செகண்ட் ஷோ’, ஆமாம், பெண்ணியக் கதை. அந்த ஷோவில் பார்க்கப்பட்ட படமும் ‘இறைவி’யாம்.

 

மிரண்டேன், ஆனால் வாசிப்பை பாதியிலேயே விட்டுவிடவில்லை. காரணம், முதலில் வாசித்த மூன்று கதைகள்.

‘கருப்பி’ ஓர் இரண்டுங்கெட்டான் காதல் நகைச்சுவை. ‘நிம்மதி’ ஒரு கற்பியல் (மண வாழ்க்கை) காதல் அருமை! ‘காஃபி’ (என்ன ஒரு தலைப்பு!) நாவில் தங்கிப்போன, இன்னதென்று அறியமுடியாத கசப்பென்றும் சொல்லமுடியாத ஒரு சுவை.

 

மொத்தம் ஒன்பது கதைகள். ஒன்றும் சோடையில்லை, ‘செகண்ட் ஷோ’வையும் சேர்த்துத்தான். பெண்களாகிய அவர்கள் நியாயம் அவர்களுக்கு. வீட்டுவேலை விளிம்பு நிலை மனிதர்கள் (‘இருள்’), ஆளுக்கொரு கார்வைத்திருப்பவர்கள் (‘சைக்யாட்ரிஸ்ட்’), கிராமத்து ஆள்கள் (‘கிறக்கம்’) என, சமூகப் படிநிலைகளின் அனைத்துவகை மனிதர்களும், கிட்டத்தட்ட, இந்தக் கதைகளில் வருகிறார்கள். எழுத்தாளரது கவனிப்பின் ஆழம், பரப்பு  இப்படி.

 

 

அருணா ராஜ் அவர்களை முகாமுகமாக அறிந்தவன் இல்லை நான். பல் மருத்துவர் அவர் என்று தெரிகிறது. முகநூலில் என் நட்புகளில் ஒருவராக இருக்கிறார். நகைச்சுவையாக அவர் இடும் பதிவுகள் கண்டு, எழுத்தாளுமை வியந்து, என் நெருங்கிய நட்புகளில் ஒருவராக்கி வாசித்து வருகிறேன்.

 

 

பெண் எழுத்தாளர்கள் ஆண் குணவார்ப்புகளை, ஆண் எழுத்தாளர்கள் பெண் குணவார்ப்புகளை எப்படிப் படைத்திருக்கிறார்கள் என்று கவனித்து வாசிப்பது எனக்கு வழக்கம். அந்த வகையில், அருணா ராஜ், ஒரு பெண் எழுத்தாளராக, ஆண் குணவார்ப்புகளை (‘காஃபி’யில் அந்த பெயர் தெரியாமலே விலகிவிட்ட இளைஞன், ‘டியர்’ குடிகார குடும்பத் தலைவன், ‘கிறக்கம்’ காளி, ‘மனக்கிணறு’ அப்பா, ‘சைக்கியாட்ரிஸ்ட்’ மருத்துவர், ‘நிம்மதி’ நாயகனும் அப்பாவும்) துல்லியமாகவே வார்த்திருக்கிறார்.

 

 

காதலும் அக்கறையும் இவரது கதைப்பொருள்களாக வெளிப்பட்டு இருக்கின்றன. முகநூல் பதிவுகளில் காணக்கிடக்கிற நகைச்சுவை இந்தக் கதைகளில் அவ்வளவாக இல்லை. ‘இருள்’ என்னும் இருண்ட கதையில், தன் வித்யானுபூதியை நக்கலடித்து நகைச்சுவை ஆக்கியிருக்கிறார். ‘கருப்பி’ நாயகன் கதிரும் ஒரு நகையாடல்.

 

சிறந்த கதை என்று எதைச் சொல்வது? ‘நிம்மதி’ அவ்வளவுக்குப் பிடித்திருந்தது. ‘காஃபி’ வாசித்தபோது அதுவும். ‘கிறக்கம்’ வாசித்து அதுதான் உச்சம் என்று எண்ணினேன். அதில், அந்தக் கொல்லை (எழுத்தாளர் நாட்டுவழக்கில் கொல்லி) காட்சியில் வெட்டி, முடிவில் பண்ணையாள் செல்வம் வாய் வார்த்தையாக அதை ஒட்டியதை வியந்தேன். மற்ற கதைகளும் சிறந்தவைகளே, அக்கறை காரணமாக .

 

இந்த நூலில், வரைந்தவர் யாரென்று தெரியவில்லை, அழகான அர்த்தமுள்ள ஓவியங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அவரை வாழ்த்துகிறேன்!

 

முப்பது ஆண்டுகளாக கார் ஒட்டுகிறேன், எங்கள் பாப்பாவுக்கும் சற்றிப்போதுதான் கற்றுக்கொடுத்தேன். ஓட்டுநர் இருக்கையை எவ்வளவு இடைவெளி விட்டுப் பொருத்துவது என்று அறியாமல் இருந்தேன். ‘காஃபி’ கதைவழியாக அதைக் கற்றுக் கொடுத்தமைக்கு எழுத்தாளர்க்கு நன்றி.

 

இன்றைக்கு நேரம் கிடைத்ததால், புத்தகம் கைக்கு வந்தவுடன் வாசிக்க முடிந்தது. நேரம் கிடைத்ததால் (‘டியர்’, ‘இருள்’ கதை நீதிகள் மன்னிக்க!) இடைவேளையில், டீக்கு பதிலாக பிராந்தி எடுக்க முடிந்தது.

 

  • ராஜா சுந்தர்ராஜன்

 

கருப்பி

ஒரு மழை நாளில், கையில் காஃபியும், ‘கருப்பி’யும்.

எழுத்தாளர் அருணா ராஜின் சிறுகதைத் தொகுப்பு. ‘காஃபி’ முதல் ‘நிம்மதி’ வரை, மொத்தம் ஒன்பது கதைகள்.

ஆண்-பெண் உறவு சிக்கல்களை தட்டையாகப் பார்க்காமல், மிக நுண்ணிய உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆழமான எழுத்து.’காஃபி’- நாமே  ஒரு  காஃபிஷாப்பில் பெயரற்ற நண்பனுடன் அமர்ந்து பருகும் அனுபவம்.

‘டியர்’ என்று தொக்கி நிற்கும் அந்த சிறிய வார்த்தை, பாறாங்கல்லை விட அதிகமாக அவனின் நெஞ்சுக்குள் கனக்க ஆரம்பித்தது’ என்று முடிவுக்கு வருகிறது- ‘டியர்’.

உலகமயமாக்கல், பணத்தின், பதவியின் மீதான அதீத ஆர்வம், மனித உறவுகளை எப்படிக் காவு வாங்குகிறது என்று சொல்லிச் செல்கின்றன ‘கிறக்கம்’, ‘செகண்ட் ஷோ’ மற்றும் ‘சைக்கியாட்ரிஸ்ட்’.

மாறிக்கொண்டு வரும் குடும்ப அமைப்பும், அதில் சிக்கும் பெண்ணின்/ஆணின் தனிமனித விருப்பு வெறுப்புகளும், சறுக்கல்களும் கையாளப்படும் விதம் அருமை.

‘மனக்கிணறு’ மற்றும் ‘நிம்மதி’யில் வரும் முதிய அப்பாக்கள் பாத்திர வடிவமைப்பு இயல்பாக, அழுத்தமாக இருக்கிறது. ‘கருப்பி’ க்ளாஸ் கதை. கதிர்கள் மாறாமல் இருக்கும் உலகில், கருப்பிகள் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள். மொத்தத்தில், அருமையான வாசிப்பு அனுபவம்.

  • நிவேதிதா லூயிஸ்

கருப்பி

யோஹான் பதிப்பகம்,

46, வீரப்பநகர் 4-ஆவது தெரு,

கிருஷ்ணகிரி – 635 001

விலை ரூ.120

 

 

உளுந்தூர்பேட்டையில் ஒரு கல்யாணம் – சிறுகதை-

உளுந்தூர்பேட்டையில் ஒரு கல்யாணம்!

தமிழ் சிறுகதை

பாலமுருகன்

tamil screenplay format

tamil thiraikathai sample, tamil screenplay

மறுக்க முடியாத சில பயணங்களில் மறக்க முடியாத நிகழ்வுகள் பலருக்கும் நடந்திருக்கும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. எனக்கு என்று சொல்வதைவிட எங்களுக்கு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

கடந்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது ( துணிகளை துவைப்பது அன்றுதான்), ‘ஏங்க போன் அடிக்குது‘ என்றபடியே அருமை மனைவி அழைத்தாள். ஒரு கையில் சோப்பும் இன்னொரு கையில் நுரையுமாக பாத்ரூமிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, ஓடிப்போய் செல்போனை எடுத்துப் பார்ப்பதற்குள் அது தவறிய அழைப்பாக இருந்தது. மெனுவிற்குள் சென்று மிஸ்டுகால் யார் பார்த்தேன். நண்பர் கவிராஜா அழைத்திருந்தார். இடதுகையிலிருந்த சோப்புக் கட்டியை ஓரமாக வைத்துவிட்டு, நுரைபடிந்த வலது கையை லுங்கியில் தேய்த்துவிட்டு, எனது போனிலிருந்து கவி ராஜாவுக்கு அழைப்பு விடுத்தேன்.

 

“என்ன சார் பிஸியா இருக்கீங்களா?“ என்று நலம் விசாரித்தபடியே, “எட்டாம் தேதி கல்யாணம் வச்சிருக்கேன்..மறக்காம வந்துருங்க…ரிஷி சார்கிட்ட உங்களோட பத்திரிகையை கொடுத்திருக்கேன்…வாங்கிக்கோங்க…நேர்ல வந்து பத்திரிகை வைக்கறதுக்கு டைம் இல்லே…ஸாரி சார்…“என்று அவசரகதியில் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார் கவி.

யாருக்கு கல்யாணம் வைத்திருக்கிறார்? சின்ன குழப்பம். மிஸ்டர் ரிஷிக்கு அடுத்த அழைப்பு என் செல்போன் வழியே பறந்தது. ரிங் போவதற்கு முன்னே போனை எடுக்கும் ஒரே நபர் இவர்தான். அதற்கான சூட்சுமம் இன்றளவும் எனக்கு பிடிபடவில்லை.
“சார் நான் பாலா பேசறேன்”

”அதான் நம்பர் பாத்தாலே தெரியுதே…அப்புறம் எதுக்கு பாலா பேசறேன் டயலாக்….நேரே விஷயத்துக்கு வாங்க…பிஸியா இருக்கேன்’’ என்ற ரிஷியின் வார்த்தைகளில் நக்கல் கலந்த நையாண்டி ஒலித்தது. ரிஷி எப்பவும் இப்படித்தான்…வெட்டியாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் அவரிடம் பேசும்போது நேராக விஷயத்திற்குச் சென்றுவிடவேண்டும்.

“கவி போன் பண்ணார்… கல்யாணம் வச்சிருக்கேன்…வந்துருங்கன்னு சொன்னார்…உங்ககிட்ட பத்திரிகை கொடுத்திருக்கிறதாவும் சொன்னார்…“ நான் பேசி முடிப்பதற்கு முன்பாகவே ரிஷி ஆரம்பித்தார்.

“தெரிஞ்சவங்களுக்கெல்லாம் வச்சிருங்கன்னு மொத்தம் பத்து பத்திரிகை கொடுத்துட்டுப் போனார்…அவருக்குத் தெரிஞ்சவங்களா…எனக்குத் தெரிஞ்சவங்களான்னு சொல்லலை..இப்போ அதுக்கு என்ன?” அதட்டலாகவே சொன்னார்.

“சார் அதுல ஒரு பத்திரிகை எனக்கானது…மிஸ் பண்ணிராதீங்க…நேர்ல வந்து வாங்கிக்கறேன்…“ நான் சொல்லி முடிக்கவும், அருகிலில் நின்று நான் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்த மனைவி…“யாருக்கு கல்யாணம்?“ என்று கேட்டபோதுதான் எனக்கு மூளையில் எறும்பு கடித்தது… அதற்குள் ரிஷியின் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் நான் ரிஷியின் நம்பருக்கு டயலினேன். கடைசி எண்ணை அழுத்திமுடித்து காதில் போனை வைக்கவும்…ரிஷயின் குரல் கம்பீரமாய் ஒலித்தது.

“என்னங்க…வெட்டியா இருக்கீங்களா…இப்போ என்ன விஷயம்…டக்குன்னு சொல்லுங்க….எனக்கு நெறைய வேலை இருக்கு“ கணீரென்று அவர் குரல் ஒலித்தது.
“ஒன்னுமில்லே சார்…கல்யாணம் யாருக்குன்னு சொல்லவேயில்ல…?’’

“சரியாப்போச்சி…என்னங்க…. தண்ணிய கிண்ணிய போட்டுருக்கீங்களா…கல்யாணம் யாருக்குன்னே தெரியாம பத்திரிகை வாங்க வர்ற ஆளு நீங்கதாங்க…’’ என் கேள்வி அவரை கோபமடையச் செய்தாலும்…அவரின் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்பது அவருக்கும், எனக்கும் நன்றாகவே தெரியும்.

“சொல்லுங்க சார்…டென்ஷன் பண்ணாதீங்க…கல்யாணம் யாருக்கு?’’ என் கேள்வியின் நியாயத்தைப் புரிந்துகொண்டவர்போல் பதிலினார்.
“நம்ம கவிக்குத்தாங்க கல்யாணம்…என்னசார் நீங்க… ஒரு வருஷத்துக்கு முன்ன பேசினத அதுக்குள்ள மறந்துட்டீங்களே’’ என்று சிரித்தவர்…“போன வருஷமே நம்ம எல்லோர்கிட்டேயும் கவி சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்க…ஞாபகம் வரும்’’என்று மீண்டும் சிரித்தார்.

எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. “அப்படி என்ன சொன்னார்?’’ கேட்டேன்.

“இவன்தான் இயக்குநர் பட விஷயமா நாம எல்லோரும் ஆபிஸ்ல உக்காந்து பேசிட்டிருக்கும்போது…அடுத்த வருஷம் எனக்கு கல்யாணம் நடக்கலாமுன்னு கவி ஒரு முறை சொன்னார்ல…மறந்துபோச்சா?’’ ரிஷி தொடர்ந்து என்னை நக்கல் செய்துகொண்டே பேசினார்.

“ஓஓஓஓ….ஆமால்ல…நானும் மறந்தே போயிட்டேன் சார்…அப்போ அவருக்குத்தான் கல்யாணம்…சரி…சரி..சென்னையிலதான கல்யாணம்…போய் ஜமாய்ச்சிணுலாம்’’ என்று நான் சொன்னபோதே…..ரிஷி மீண்டும் ஒரு கோபத்திற்கு ஆயத்தமாகிவிட்டார்.

“என்னங்க…சின்ன புள்ள மாதிரி பேசறீங்க…நீங்க சென்னையில இருக்கீங்கங்கறதுக்காக உங்களுக்கு பத்திரிகை வைக்கறவங்களும் சென்னையிலதான் கல்யாணத்தை வச்சிக்கணுமா..நல்ல கதையா இருக்கே…உளூந்தூர்பேட்டையில கல்யாணம். ஏழாம் தேதி நைட்டே நாம எல்லோரும் கௌம்புறோம்…மொத்த செலவும் உங்களோடது…ஞாபகம் வச்சிக்கோங்க…“ டக்கென்று போனை கட் செய்துவிட்டார்.

காலண்டரில் தேதியையும், அதற்கான கூட்டுமானத்தையும் கணக்கிட்டதில் இன்னும் சரியாய் பதினைந்து நாட்கள்.

ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தும் (ஒரு காருடன் டிரைவர் கம் ஓனர்) நண்பன் புருஷோத்தமனுக்கு அடுத்த அழைப்பு விட்டேன்.

“சொல்லு பாலா…என்ன திடீர்ன்னு ஞாயிற்றுக் கெழமையில கால் பண்றே…“ புருஷிடமிருந்து அடுத்த நையாண்டி வந்தது.

“ஒன்னுமில்லே…ப்ரண்ட் ஒருத்தருக்கு உளூந்தூர்பேட்டையில கல்யாணம்’’

“அதுக்கு ரூட் சொல்லணுமா?’’

“இல்லடா…மொத்தம் எட்டுபேர் போறோம்…பஸ்ஸூல போய் வந்தா நல்லா இருக்காது…உன்னோட கார்ல போயிட்டு வந்துரலாமுன்னு முடிவு பண்ணிருக்கேன்’’     நான் பேசுவதின் அர்த்தம் புரிந்துவிட்டது அவனுக்கு.

“உன் வீட்ல நீயும் உன் ஒய்ஃபும்..மொத்தம் ரெண்டே பேர்தான. எட்டுபேருன்னு எப்படி சொல்றே…உன் தம்பி…அண்ணன் பேமிலியெல்லாம் வர்றாங்களா…மொத்த குடும்பமும் போற அளவுக்கு அப்டி என்ன முக்கியமான ப்ரண்ட் உனக்கு..எங்கிட்ட இது அவரை அறிமுகப்படுத்தவேயில்லியே! ’’புருஷ் ஆச்சரியக்குறியோடு கேட்க…
“பேமிலி ஃப்ரெண்ட்லாம் இல்லே…க்ரைம் டுடே பத்திரிகை ஆபிஸ் ஃப்ரெண்ட்…ஒர்க் பண்றவங்க எல்லோரும் போறோம்’’ நான் சொன்னபோது, புருஷ் சுதாரித்துக்கொண்டவனாய் கேட்டான்..

“ஓஓஓ..ஒரு முறை இவருதான் க்ரைம் டுடே பத்திரிகை ஆசிரியருன்னு கடா மீசைக்காரர் ஒருத்தரை அறிமுகப் படுத்தினியே..பேருகூட ரிஷின்னு நெனைக்கிறேன்’’ என்று எனக்கு இன்னொரு அறிமுகப்படுத்தல் தேவையில்லாமல் அவனே ஆச்சரியமாகிவிட்டபடியால், ஏழாம் தேதி இரவு, புருஷோத்தமனுடைய சைலோ காரில் (வித் ஏசி) டீசல் மட்டும் போட்டுக்கொண்டு, காருக்கு வாடகை தர முடியாது என்கிற நட்பின் ஒப்பந்த அடிப்படையில் எங்கள் குழுவினரின் பயணம் தீர்மானமாயிற்று.

மணித்துளிகள் கடந்தன. நாட்கள் பறந்தன…வாரங்கள் ஓடின…என்றெல்லாம் வசனங்கள் எழுதத் தேவையில்லாமல் ஏழாம் தேதி காலை வந்து நின்றது. நான் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பவேண்டும். அன்றைய அலுவல் பணிகளை முடித்துவிட்டு மாலை மூன்றுமணி வாக்கில் புருஷோத்தமனுக்கு போன் செய்தால், அவர் தன் சைலோ காரை ஓட்டிக்கொண்டு என் அலுவலகத்திற்கு வந்து, என்னை பிக்கப் செய்துவிட்டு, அப்படியே ரிஷியின் வீட்டிற்குச் சென்று மற்றவர்களை பிக்கப் செய்துகொண்டு, ஆறு மணிவாக்கில் உளூந்தூர்பேட்டை கிளம்பவேண்டும். இதுதான் அன்றைய புரோக்கிராம். ஆனால்…

ஆனால் கடைசி நேரத்தில் கார் காணல் நீராகிப்போனது.

“பாலா..ஸாரி பாலா…அர்ஜென்ட்டா ஒரு டியூட்டி…திருச்சிக்கு கிளம்பி போயிட்டேன்…நீ வேற கார் பாத்துக்கோ…”

அசால்ட்டாக சொல்லிவிட்டான் டிராவல்ஸ் அதிபர் புருஷோத்தமன். வேற கார் புக் பண்ணி போகத்தெரியாதா எனக்கு…டீசல் மட்டும் போட்டா போதும்ன்னு எவன் வருவான்? கார் கேன்சல் ஆகிப்போனதை ரிஷியிடம் எப்படிச் சொல்ல…கண்டிப்பா வார்த்தையால கொல்வாரு.
விஷயத்தை ரிஷியிடம் சொன்னபோது …“எனக்கு அன்னைக்கே தெரியும்…உங்க ஃப்ரெண்டப் பத்தி தெரியாதா…ஒரு காரை வச்சிக்கிட்டு டிராவல்ஸ் நடத்தறவன் வாக்கு இப்படித்தான் இருக்கும்….சரி வுடுங்க…இப்போ நாம எப்படியாவது போயாகணும்….அதுக்கு என்ன ஐடியான்னு யோசிங்க’’ தெளிவாகப் பேசினார்.. எனக்கு ஆறுதலாக இருந்தது.

பழைய திட்ட அறிக்கை கேன்சல் செய்யப்பட்டு புதிய அறிக்கை தயார்செய்யப்பட்டது. அதாவது இரவு ஒன்பது மணிக்கு கோயம்பேடு சென்று அங்கிருந்து…..

அங்கிருந்து பஸ்ல போகவேண்டியதுதான்….வேற வழி?

பேருந்துப் பயணம் என்றதும் எங்கள் குழுவின் எண்ணிக்கை எட்டிலிருத்து ஐந்தாகக் குறைந்துவிட்டது. ஒன்பது மணிக்கு முதல் ஆளாக நான் கோயம்பேடுக்குள் நுழைந்துவிட்டேன். ரிஷியும் மற்றவர்களும் பத்துமணிக்குத்தான் வருகைதந்தார்கள். விதவிதமான மக்களை உள்வாங்கிக்கொண்டிருந்த பேருந்து நிலையம் திருவிழாக்கூட்டம்போல் காட்சியளித்தது.

உளூந்தூர்பேட்டைக்கு என்று தனிப் பேரூந்துகள் இல்லை போலும்! திருச்சி செல்லும் வண்டியில் ஏறி, உளுந்தூர்பேட்டையில் இறங்கிக்கொள்ளவேண்டும். ஆனால், திருச்சி வண்டியில் உளுந்தூர்பேட்டைக்கு ஆள் ஏற்ற மாட்டார்களாம்…..கிட்டத்தட்ட பத்து பேருந்துகளில் ஏறி…நடத்துனர்களால் எமது குழு விரட்டி அடிக்கப்பட்டது. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’…..ஒவ்வொரு வண்டியாக ஏறி நடத்துனரிடம் பரிதாபமாகப் பேசி….கடைசியாக பனிரெண்டு மணிக்கு எங்கள் பேருந்துப் பயணம் உறுதிசெய்யப்பட்ட.து. அதுவும் “திருச்சி வரை டிக்கெட் வாங்கிக்கொண்டு உளுந்தூர் பேட்டையில் இறங்கிவிடவேண்டும்’’என்று நடத்துனர் சொன்ன அந்த டீலிங்கை எம்மால் மறுக்க முடியவில்லை.

எங்களைச் சுமந்த பேருந்து கிளம்பியபிறகு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை எங்கள் பயணத்தின் போக்குகளை செல்போன் மூலம் மணமகன் கவிராஜாவுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் ரிஷி…. “இப்போ வடபழநி தாண்டிட்டோம்…..கிண்டி வந்துட்டோம்…பல்லாவாரம் ரீச் ஆயிட்டோம்…குரோம்பேட்டையில டிராபிக்ஜாம்.
தாம்பரம் தாண்டும்போது ரிஷியின் செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆஃப் ஆக……நல்லவேளை கவி பிழைத்தார்.

நான்கு மணிநேர பயணம்….ஒருவழியாக வந்துசேர்ந்தது உளுந்தூர்பேட்டை.
தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் விடுதியில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெருநாய்களின் வீரிய அணிவகுப்பு எங்களைப் பின்தொடர…அவைகளை விரட்டியபடியே நாலரைமணிவாக்கில் விடுதிக்குள் நுழைந்து, சுமைகளை வைத்துவிட்டு மணமகன் கவிராஜாவை அழைத்தோம்.

நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தவர் “வந்திட்டீங்களா?” என்றபடியே கொட்டாவி விட்டது எனது செல்போனில் எதிரொலித்தது.

“சார் உடனடியா மண்டபத்துக்கு போயாகணும்…“ செல்போனில் சார்ஜ் ஏற்றிக்கொண்டே உத்தரவு போட்டார் ரிஷி….எனக்கும் உடன் வந்தவர்களுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. ஆனால், எங்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், மண்டபத்திற்கு போவதில் குறியாக இருந்தார் ரிஷி.

“அர்ஜென்ட்டா மண்டபத்துக்குப் போகணும்…நீங்க வரலைன்னா…நான் மட்டும் தனியாப் போவேன்’’

ரிஷியின் வார்த்தையில் ஒரு ஏக்கம் தெரிந்தது. ஓய்வைப் புறந்தள்ளிவிட்டு, ரிஷிக்காக மண்டபம் போகத் தயாராகினோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் நடை பயணத்திற்குப் பிறகு மண்டபம் தெரிந்தது. மறுநாள் மாப்பிள்ளையாகப்போகிற கவிராஜா எங்களுக்காக மண்டபத்தின் வாசலில் காத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் ஒவ்வொருத்தராக கட்டித் தழுவிக்கொண்டார்.

பின்னர் ரிஷியும், கவிராஜாவும் தனியாகப் போய் ஏதோ பேசினர். பின்னர்
மண்டபத்தின் இடதுபக்க சாலை ஓரம் கவிராஜா ரிஷியை அழைத்துக்கொண்டு முன்னேற, நாங்கள் பின்தொடர்ந்தோம். இருபது அடி உயரம் முப்பது அடி நீளத்தில் பெரிய டிஜிட்டல் பேனருக்கு முன்பாக ரிஷியோடு கவிராஜா நிற்க, நாங்களும் அந்தப் பேனருக்கும் முன்பாக நின்று கண்களைச் சுழலவிட்டோம்.

‘மணமக்களை வாழ்த்த வருகை தரும் எங்கள் அண்ணன் ரிஷி அவர்களை வருக…வருக என வரவேற்கிறோம்’ என்கிற வாசகத்தோடு டிஜிட்டல் பேனரில் சிரித்துக்கொண்டிருந்தது ரிஷியின் முகம். பதினைந்து அடி உயரத்தில் ரிஷியின் கடா மீசை புகைப்படம் அது. கண்கொட்டாமல் தன் படத்தை தானே ருசித்துக்கொண்டிருந்த ரிஷியை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்.

இடதுகையால் தனது மீசையை வருடிவிட்டுக்கொண்டே, பேனரில் உள்ள தன் புகைப்படத்தையும் அப்படியே என்னையும் ஜாடையாகப் பார்த்து புன்னகைத்தார் ரிஷி.

 

தமிழ் திரைக்கதை-tamil screenplay-tamil sample screenplay- tamil screenplay format-