Monthly Archives: February 2018

பதுங்கி பாயனும் தல – pathungi payanum thala

‘பதுங்கி பாயனும் தல’ எனும் மாறுபட்ட தலைப்புடன் திரைத்துறைக்குள் களமிறங்கியிருக்கிறார்  ‘மீடியா பேஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆமீனா ஹீசைன். படத்தை இயக்கியிருப்பவர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி.

தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இதைக் கவனத்தில் கொண்டு முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘பதுங்கி பாயனும் தல’  படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி, இந்தப் படத்தில் ‘மாமனா மச்சானா’ என்கிற பாடலையும் எழுதியிருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியால் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘மாமனா மச்சானா’ பாடலின் சிங்கிள் ட்ராக் முகநூலில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது.

‘பதுங்கி பாயனும் தல’ படத்தின் இயக்குநர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி  அறிமுக இயக்குநர் என்றாலும், படப்பிடிப்பு நாட்களையும், அதற்குத் தகுந்த திட்டங்களையும், அதற்கான வியூகங்களையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு படப்பிடிப்பை நடத்தியதால், 53 நாட்களில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பை 45 நாட்களிலேயே முடித்து, தயாரிப்பாளருக்கு பணத்தை மிச்சம் செய்து கொடுத்திருப்பது, அவருடைய திட்டமிடலுக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இயக்குநர் சீமானிடம் உதவி இயக்குநராகவும், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குநராகவும் களப் பயிற்சி எடுத்தவர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி.

விரைவில் வெளியாகவிருக்கும்  ‘பதுங்கி பாயனும் தல’ ரசிகர்களின் வயிறுகளை குலுங்கச் செய்து வலிக்கச் செய்யும் என்கிறது படக்குழு.

திரையில் :

நாயகன் – மைக்கேல்

நாயகி – நைனிகா

மற்றும்

வேல ராம மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ஆர்.என்.ஆர்.மனோகர், சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தா, ஹலோ கந்தசாமி.

 

திரைக்குப் பின்னால் :

இயக்குநர் – எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி

ஒளிப்பதிவு – கே.ஏ.ரோவின் பாஸ்கர்

இசை – வல்லவன் சந்திரசேகர்

படத்தொகுப்பு – டி.மனோஜ்

பாடல்கள் – ஞானகரவேல்

நடன இயக்குநர்கள் – நோபல், பாபா பாஸ்கர், பேபி ஆண்டனி, கேசவ்

சண்டைப் பயிற்சி – ஸ்டன்னர் ராம்

கலை இயக்குநர் – ரவீஷ்

டிசைன் – சிந்து கிராபிக்ஸ்

மக்கள் தொடர்பு – வின்சன் சி.எம்.

 

 

pathungi payanum thala - பதுங்கி பாயனும் தல

pathungi payanum thala – பதுங்கி பாயனும் தல

கரு – karu

karu - கரு

‘வனமகன்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் துவங்கப்பட்டதிலிருந்தே நிறைய பிரச்னைகள். படத்தின் தலைப்பு தனக்கானது என ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மணிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, படத்தை வெளியிடுவதற்கு தடையுத்தரவு பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் இறுதித் தீர்ப்பில் ‘கரு’ படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, படக்குழுவினர் வெளியீட்டு வேலைகளை துவங்கிவிட்டனர்.

 

karu - கரு

karu – கரு

 

இதைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி 24ம் தேதி நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய் “என்னுடைய சினிமா கேரியரில் ‘கரு’ முக்கியமான படமாக இருக்கும். 2013ம் ஆண்டிலேயே எழுதி முடித்துவிட்ட இந்தப் படத்தின் கதையை லைகா நிறுவனத்தாரிடம் சொன்னேன். படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்கு தான் பண்ணனும் என்று கூறினார்கள்.

இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க சாய் பல்லவியை அணுகினோம். அவர் நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்தப் படத்துக்காக அணுகியதால், முதலில் மறுத்து விட்டார். பின்னர் முழுக் கதையையும் அவருடைய அம்மாவிடம் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம். படத்தின் பெரிய பலமே நாயகி சாய் பல்லவி தான். நிச்சயமாக மிகப்பெரிய நடிகையாக வருவார்” என்றார்.

கருக் கலைப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம் ’கனம்’ எனும் தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி என அழைக்கப்பட்ட ஜெயலலிதாவும் சேர்ந்து 28 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மீண்டும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்து,  ‘வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்கிற படத்தை அனிமேஷன் முறையில் தயாரிக்கிறார்.

 

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

 

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் தொடர்ந்து ‘கிழக்கு ஆப்பிரிக்காவின் ராஜூ’ என்கிற படத்தைத் தயாரிக்க எம்.ஜி.ஆர் விருப்பமாக இருந்தார். அரசியல் காரணங்களால் அந்தப் படத்தை அவரால் தயாரிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, எம்.ஜி.ஆரின் கனவுப் படமாக இருந்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ இன்றைய காலத்திற்கேற்ற திரைக்கதையோடு  மீண்டும் உருவாக இருப்பது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகத்திற்கும் புதிய தீனியாக இருக்கும்.

“இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் 25 படங்களில் நடித்த என்னுடைய தந்தை ஐசரி வேலன் முக்கிய வேடத்தில் அனிமேஷன் முறையில் நடிக்கிறார். மேலும், எம்.ஜி.ஆருடன் நடித்த நாகேஷ், நம்பியார் போன்றவர்களும் அனிமேஷன் முறையில் நடிக்கவிருப்பது நிச்சயமாக ரசிகர்களிடையே பெரும் ஆதரவு பெறும்.

 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில், அவருடைய கனவு படைப்பான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில், ‘கிராபிக்ஸ்’சில் தயாரிக்க முடிவு செய்தோம். அதன்படி, எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ந் தேதி, சென்னை சத்யா ஸ்டுடியோவில், ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் தொடக்க விழா நடந்தது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ‘கிளாப்’ அடித்தார். நடிகர் கமல்ஹாசன் கேமராவை ‘ஆன்’ செய்தார். லதா, சவுகார் ஜானகி, வெண்ணிறை ஆடை நிர்மலா, சச்சு உள்பட எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள் பலரும் கலந்து கொண்டார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் எம்.ஜி.ஆரிடம் பணிபுரிந்த உதவியாளர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

அனிமேஷன் படமாக தயாராகி வரும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’, எம்.ஜி.ஆரின் அடுத்த பிறந்த நாளில், அதாவது 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி திரைக்கு  ரிலீஸ் ஆகும்.

‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் ‘கிராபிக்ஸ்’சில் நடிக்க வைத்து, அவர்களுடைய 29வது படமாக உருவாக்கியிருக்கிறோம். இதற்காக எங்கள் பட நிறுவனம் பெருமைப்படுகிறது. எங்களோடு இணைந்து ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ நிறுவனமும் இந்தப் படத்தை தயாரிக்கிறது”  என்றார் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ்.