மொக்கை கவிதைகள்

அளவீடு

காதல் அற்பமா
அற்புதமா என்பதை
அதனுள் ஒளிந்திருக்கும்
காமம் முடிவு செய்கிறது!

 

எனக்குள் நான்

படர்க்கை நட்புகளின்
தன்மை அறிய
மனசாட்சியைப் பகைத்து
சித்திரம் பேசி மாய்கிறேன்!

முழுவதுமாய்
எனை உணர்ந்தவன்
எனக்குள் ஒருவனவன்
எட்டி உதைத்து கேட்கிறான்
யாருக்காக இப்படி
உன்னையே விபச்சரிக்கிறாய்?

மெய் அறிய
பொய் தேவை எனக்கு!

நான் பொய்யன் என
மெய்யாக நம்பியவன்
சொன்னதெல்லாம் பொய் என
மெய்யுணரும் காலம் வரும்!
நான் பொய்யனா மெய்யனா
யாசிப்பான் இன்னொருமுறை!
இது பொய்யறி உணர்ந்த
மெய்யறி நிலை
முடிந்தால் புரிந்துகொள்!

நீ யார் சொல்
வெளியிலிருந்து
கேட்கிறான் ஒருவன்!
எனக்குள் எதுவுமில்லை
எல்லாமும் இருக்கிறது
நான் சுழியம்!

 
அவர்கள்

எல்லாம் தெரிந்தும்
வேண்டுமென்றே
ஏமாருவதுபோல்
நடிக்கிறார்கள்
சதைக்குள் சிதைக்கும்
சதையின் ருசிபார்க்க!
பின்னொருநாள்
சொல்லிக் கொள்ள உதவும்
என்னைய ஏமாத்திட்ட!

 

எப்படி?

பழிவாங்க முடியாத
பகை ஒன்று இருக்கிறது.
பலி வாங்கிவிடவா
என யோசிக்கிறேன்!

முகநூல் பதிவுகள்

திறமையைக் காட்ட
நாட்காட்டிகளின் தத்துவங்கள்
அவசரமாய்க் கிழித்து
வாசிக்கப்பட்டு சற்றே
புணரமைக்கப்படுகின்றன
நவீனத்துவங்களாய்!

அதிலொரு குறிப்பு சொல்லிற்று
அதிர்ஷ்டம் உள்ளவனே
ஆட்டயப் போடுவான்!

 

இரவு

ஒரு பகலையும்
பல கவலைகளையும்
பல்வேறு கலைகளையும்
உள்ளடக்கிய இரவுக்குள்
ஒளிந்திருப்பதே இன்பம்தான்!

 

ரெட்டுங்கெட்டான்

அரை குறை புரிதல்
ஆபத்து மட்டுமல்ல
அழிவையும் கொடுக்கும்!

கற்றுக் கொண்டவனும்
கற்றுக் கொடுத்தவனும்
சேர்த்தே அழிக்கப்படுவான்!

 

விமர்சனம்

வீதிக்கு வந்து விட்டால்
விமர்சனங்கள் மட்டுமல்ல
விலை பேரங்களும்
விதவிதமாய்த்தான் இருக்கும்
தாங்கிக் கொள்ள முடியாதவர்
நொந்து பயனில்லை!

என் செய்வேன் மக்கா
பட்டதைச் சொல்லிவிடுகிறேன்
பயமில்லை இங்கு காண்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
கற்றுக்கொடுத்துவிட்டானே
எட்டயபுரத்தான்!

 
எறிகல்
ஆழ்கடல் நீர்போல்
அமைதியாய் இருக்கிறேன்
கல்லெறிந்து பார்க்கிறாய்
கலங்குவேனாஎன்று?

இன்றைக்குதான் வந்திருக்கிறாய்
ஆழ்கடல் உனக்கு புதிதுபோல
எத்தனைபேர் எறிந்திருப்பார்கள்
தெரியாது உனக்கு
அத்தனை கற்களும் என் அடியில்!

கை ஓயும் வரை
கற்கள் தீரும்வரை
எறிந்துகொண்டே இரு
எப்படிச் சொல்வேன்
என்னுள் புதைய
இமயமே போதாது!

 

நானும் அவளும்

தாகம் தீர்க்க அள்ளிப் பருகிவிட்டு
ஆற்றைப் பார்த்துச் சொல்கிறாள்
நானும் உன்னைக் கொள்ளையடித்தேன்
கவனிக்கவில்லையா என!

இப்படித்தான் வாழவேண்டும்
இது நீ.
எப்படியும் வாழவேண்டும்
இது நான்!

வட்டத்துக்குள் நீ
வெளியே நான்!

சிறு புள்ளியிலிருந்துதான்
வரையத் தொடங்கினோம்
நீ கோலம் என்றாய்
நான் ஓவியம் என்றேன்!

 
இது தேறுமா?

ஒன்றாத நாம்
ஒன்றுவோம் என்பது
ஒருநாளும் நடவாது.
என்றாலும் ஒன்றினோம்
நீரும் எண்ணெயும்போல்
சேர்த்து வைத்தது
எழுத்துப் பாத்திரம்
மிதக்கிறோம் தனித்தனியாய்
மேலும் கீழுமாய்!

 

குருட்டுப் பூனை

சீறிப் பாய்ந்த வாகனத்தின்
சக்கர இடுக்குகளில்
சிக்கிக் கொண்ட
சிறு கல் ஒன்று
குறிபார்த்து அடிக்கிறது!

போராட்டம்

யாசகம் கேட்கிறாளா
யாசிக்க கேட்கிறாளா
யோசித்துப் பார்த்தேன்
நாசிக்குள் தும்மல்!

அக்கறை என்கிறாய்
அதுவே கரை என்கிறேன்!

நீ ஆலம் விழுது என்றாள்
ஊஞ்சல்போல் கொஞ்சம்
ஆடிக்கொள்கிறேன் என்றாள்
கீழே விழுந்துவிட்டாள்
விழுது என்ன செய்யும்
விரல் பிடித்தவள் நீதானே
விழுதா உனைப் பிடித்தது?

நீ ஏணியாய் இருந்து
என்னை ஏற்றிவிடு என்றாள்
தோணியாய் இருந்து
சுமந்து செல் என்றாள்.
தெரியவில்லை அவளுக்கு
ஏணிக்கும் சாய்ந்துகொள்ள
சுவர் வேண்டும்.
தோணிக்கும் பாய்ந்து செல்ல
கடல் வேண்டும்!

அச்சம் தவிர்த்தவன் என்றாள்
ஆசையுடன் அருகே வந்தாள்
இச்சையுடன் பார்த்தபின்னே
ஈபோல் பறந்துவிட்டாள்.
உன் பேச்சு கா என்றாள்
ஊமையாய் சில நாள் இருந்தாள்
என்னவென்று கேட்கவில்லை
ஏன் கேட்கவில்லை என்றாள்
ஐயம் கொண்டாள்
ஒன்றாமல் சென்றாள்
ஓடிப்போலாமா என்றேன்.
ஔவை போலவே அவளும்
பழம் நீயப்பா என்றாள்!

 

வேண்டாம் மாற்றம்

சொன்னால் நம்பு…
எனக்கு கவிதை எழுதப் பிடிக்காது
ஏன் தெரியுமா?
கழுதைகள் செய்யற
எல்லா வேலைகளையும்
குதிரைகள் எளிதாகச் செய்துமுடிக்கும்.
ஆனால், குதிரைகள்அதைச் செய்யாது
ஏனென்றால்,
அவைகள் கழுதைகளாக
மாற விரும்புவதில்லை.

Clip to Evernote