திரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்

27

ஒரு காட்சியை

பல துண்டுக் காட்சிகளாப் பிரித்தல்

ஒரு திரைப்படத்தில் காட்சிப்படுத்தலும், ஒளிப்பதிவும், காட்சிக்கான நம்பகத்தன்மையும் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக ஒரு காட்சியை பல காட்சிகளாக பிரித்து படமாக்குவார்கள். எடிட்டிங்கில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. அதென்ன…ஒரு காட்சியை பல காட்சிகளாக பிரித்து படமாக்குதல்? சினிமா தயாரிப்பில் இதன் பெயர் ஷாட் பிரித்தல்.

ஆறு வயது முதல் எட்டு வயது வரையிலுமான பதினைந்து சிறுவர்கள் பயணித்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூட வேன் ஒன்று இரு தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது.

இது ஒரு சினிமாவின் ஓபனிங் காட்சி என்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது இந்த ஒற்றை வரி திரைக்கதையை பகுதி பகுதியாகப் பிரித்து பல காட்சிகளாக படம்பிடிக்க வேண்டியதிருக்கும். இதைத்தான் ஷாட் பிரித்தல் என்கிறார்கள். இந்தக் காட்சியை எப்படி ஷாட் பிரித்தால் ஒளிப்பதிவும், காட்சிப்படுத்தலும் நன்றாக அமையும்? அதுவும் வசனமே இல்லாமல்?

பள்ளிக்கூட வேன் ஒன்று சென்றுகொண்டிருக்கிறது.
கட்
அந்த வேனிற்கு முன்பும் பின்பும் பலதரப்பட்ட வாகனங்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன.
கட்
வேனிற்குள் உள்ள சிறுவர்களின் முகபாவணைகள் மற்றும் சைகைகள்.
கட்
ஒரு சிறுவன் தன் கையிலுள்ள சாக்லெட்டை பிய்த்து தனக்கு அருகிலுள்ள நண்பனுக்குக் கொடுக்கிறான்.
கட்
இதைக் கவனிக்கும் இன்னொரு சிறுவன் தனக்கும் தரும்படி கையை நீட்டுகிறான்.
கட்
சாக்லெட் சிறுவன் தரமாட்டேன் என்பதுபோல் தலையை ஆட்டிச் சொல்கிறான்.
கட்
சாக்லெட் தானம்பெற்ற சிறுவன் தன் பங்கிலிருந்து கொஞ்சம் பிய்த்து கைநீட்டிய சிறுவனுக்கு கொடுக்கிறான்.
கட்
சாக்லெட் சிறுவன் அவன் கையிலுள்ள மீதியைப் பிடுங்குகிறான்.
கட்
அவர்களுக்குள் சின்ன சண்டை.
கட்
இடது புறம் உள்ள சிறிய சாலையில் வேன் திரும்புகிறது.
கட்
அந்தச் சாலையில் போக்குவரத்து சுத்தமாக இல்லை.
கட்
அகலம் குறைவான மேடுபள்ளமான சாலை என்பதால் வேன் மெதுவாக செல்கிறது.
கட்
200 மீட்டர் தொலைவில் இரண்டு தீவிரவாதிகள் (சாதாரண உடையுடன்) ஏதோ சிந்தனையுடன் சாலையோரத்தில் நிற்கிறார்கள்.
கட்
தீவிரவாதிகளில் ஒருவன் தூரத்தில் வரும் வேனை பார்க்கிறான்.
கட்
மற்றவனிடம் ஓ.கே என்பதுபோல் கண்களால் சைகை செய்கிறான்.
கட்
அவனின் சைகையைப் புரிந்துகொண்ட மற்ற தீவிரவாதியும் வேனைப் பார்க்கிறான்.
கட்
பெரியவர் ஒருவர் வேனிற்கு எதிர்புறமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு வேனைக் கடந்து போகிறார்.
கட்
வேனைக் கடந்துபோகையில் அவரின் தோள்மேல் ஒரு சாக்லெட் துண்டு விழுகிறது.
கட்
பதற்றத்தில் சைக்கிளிலிருந்து இறங்குகிறார்.
கட்
தோளில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரமான சாக்லெட் துண்டை எடுக்கிறார்.
கட்
ஒரு சிறுவன் வேனிலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்க்கிறான்.
கட்
சைக்கிளில் வந்த பெரியவர் தன் கையிலுள்ள ஈரமான சாக்லெட் துண்டை விரல்களால் நசுக்கியபடியே வெளியே தலைநீட்டும் சிறுவனைக் கவனிக்கிறார்.
கட்
ஐம்பது மீட்டர் தூரத்தில் வேன் வந்துகொண்டிருக்கிறது. இரு தீவிரவாதிகளும் உஷாராகிறார்கள்.
கட்
சைக்கிள் பெரியவர் உற்றுப் பார்ப்பதால் தலைநீட்டிய சிறுவன் உள்ளே தலையை இழுத்துக்கொள்கிறான்.
கட்
பெரியவர் தன் தலையில் அடித்துக்கொள்கிறார்.
கட்
பள்ளிக்கூட வேன் தீவிரவாதிகளுக்கு முப்பது மீட்டர் தொலைவில் வருகிறது.
கட்
ஒரு தீவிரவாதி சரவெடியைக் கொளுத்தி வேனிற்கு முன்பாகப் போடுகிறான்.
கட்
வெடிகள் வெடித்துச் சிதறுகின்றன.
கட்

வேனிற்குள் உள்ள குழந்தைகளில் சிலர் பயத்தில் காதைப் பொத்துகின்றனர்.
கட்
சில குழந்தைகள் வெடிச் சிதறல்களை வெளியே தலைநீட்டி ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.
கட்
வேன் டிரைவர் பதற்றத்தில் பிரேக்கை அழுத்துகிறார். வேன் நிற்கிறது.
கட்
சாலையில் பட்டாசு புகை மண்டலம்.
கட்
இந்தச் சமயத்தில் தீவிரவாதிகள் இருவரும் வேனுக்குள் ஏறுகின்றனர்.
கட்
திரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்

இவை அனைத்தையும் சைக்கிள் பெரியவர் கவனிக்கிறார்.
கட்
வேனுக்குள் இருவர் ஏறுவதை புகை மண்டலத்தில் டிரைவர் கவனிக்கிறார்.
கட்
ஒரு தீவிரவாதி இடுப்பில் உள்ள துப்பாக்கியை எடுத்து கண நேரத்தில் டிரைவரை சுட்டு வீழ்த்தி வேனுக்குள்ளேயே சாய்க்கிறான்.
கட்
குழந்தைகள் அலறுகின்றனர்.
கட்
இப்போது வேன் டிரைவரை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதி வேனை ஓட்டத் தொடங்குகிறான்.
கட்
இன்னொரு தீவிரவாதி தன் வாயில் ஆட்காட்டி விரல் வைத்து உஷ்ஷ்….என்பதுபோல் குழந்தைகளைப் பார்த்து சொல்கிறான்.
கட்
குழந்தைகளின் முகத்தில் பீதி.
கட்
அந்தத் தீவிரவாதி திறந்திருக்கும் வேன் ஜன்னல்களை மூடுகிறான்.
கட்
சைக்கிள் பெரியவர் முகத்தில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
கட்
வேனை ஓட்டும் தீவிரவாதி கியரை மாற்றுகிறான். வேனின் வேகம் அதிகரிக்கிறது.
கட்

இப்படியாக ஒரு வரித் திரைக்கதை குறைந்தபட்சம் 43 துண்டுக் காட்சிகளாக பிரித்துக்கொள்ளப்படும்போதுதான், ஒளிப்பதிவு சிறப்பாக அமைவதற்கும், காட்சிப்படுத்தல் சிறப்பாக அமைவதற்கும் வழி பிறக்கும்.

அதை விடுத்து ஷாட் பிரித்தலில் தவறு நேரும்போது காட்சிப் பிழை, ஒளிப்பிழை ஏற்படுவதற்கு இடம்கொடுத்துவிடுகிறோம்.

திரைக்கதை தெளிவாக இருந்தால் இந்த ஷாட் பிரித்தலின் பெரும்பகுதி திரைக்கதையிலேயே வந்துவிடும். நம் தமிழ்ச் சினிமாக்களில் இயக்குனர்களே திரைக்கதையை எழுதிவிடுவதால், கூடுமானவரை ஒரு வரித் திரைக்கதையாகவே எழுதி வைத்துக்கொள்கிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் உட்கார்ந்து ஷாட்டுகளைப் பிரித்து அதன்பின்னர் படமெடுக்கிறார்கள். இதனால் காலமும் நேரமும் கெடும்.

முழுத் திரைக்கதையும் எழுதி முடித்து, தயாரிப்பாளர் ஓ.கே சொல்லிவிட்டால், படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்துவிட்டு, அதன்பின்னர் திரைக்கதைக்கு ஏற்றமாதிரி ஷாட்டுகளை படப்பிடிப்புத் தளத்தின் தன்மைக்கேற்ப பிரித்து எழுதி வைத்துக்கொண்டு ஷூட்டிங் செல்வது நிறைய நேரத்தை மிச்சம் பிடித்துக்கொடுக்கும்.

இதே திரைக்கதையை 43 துண்டுக்காட்சிகளுக்கு மேலாகவும் பிரித்து எழுத முடியும். அது போர் அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்திவிட்டேன்.

இங்கே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு துண்டுக் காட்சிகளையும் பல கோணங்களில் ஒளிப்பதிவாளர் படம்பிடிப்பார். ஆக, 43 துண்டுக் காட்சிகளும் 420 காட்சிகளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிகபட்சம் பத்து நிமிடம் திரையில் ஓடக்கூடிய காட்சியாக இது இருக்கும்.27

Clip to Evernote