தத்துவங்கள்

கடமையும் உதவியும்

* நாம் யார் என்பதை, நம்மை அறியாத ஒருவரிடம் விளக்கிச் சொல்ல முடியாதபோது, நாம் யாராக இருந்தால் என்ன?

* ஏதோ ஒரு காரணத்தால் கலங்கிய ஏரி நீர், குறிப்பிட்ட நேரம் கழித்து தானாகவே தெளிந்துவிடுவதுபோல், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்சினைகள் தாமாகவே தீர்ந்துவிடும். நாம்தான் குறிப்பிட்ட நேரம் வரும்வரை காத்திருக்கவேண்டும்.

* மரணத்தைத் தவிர மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு நிச்சயமாக இருக்கிறது. நம் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதாலும், அறிவுக்கு எட்டவில்லை என்பதாலும், தீர்வே இல்லை என மனம் வெதும்பி குழம்புவதும் முட்டாள்தனமான காரியங்களில் ஒன்றுதான்.

* கடினமாக உழைக்கிறவர்களைக் காட்டிலும் கவனமாக உழைக்கிறவர்களே விரைவில் முன்னேற்றம் அடைகிறார்கள்.
* கடமையைச் செய்தவன் பலன் எதிர்பார்க்கமாட்டான். உதவியைச் செய்தவன் அதற்கான பிரதி பலன் எதிர்பார்ப்பான்.
கடமையைச் செய்யும்போது எந்தவித எதிர்ப்பு வரினும் தயங்கமாட்டோம். உதவி செய்யும்போது எதிர்ப்பு வந்தால் பின்தங்கிவிடுவோம்.
கடமைக்கு உறவு, நட்பு, பாசம், அன்பு கிடையாது. உதவிக்கு இதெல்லாம் தேவைப்படும்.
கடமையைச் செய்யும்போது கண்ணியம் இருக்கும். உதவியைச் செய்யும்போது அது மீறப்பட்டுவிடும்.
கடமையைச் செய்தவர்களே இறைவனிடம் நற்பெயர் பெறுவார்கள். உதவியைச் செய்தவர்களுக்கு இறைவனின் ஆசி கிட்டாது.
கடமையைச் செய்துவிட்டு அதை மறந்துவிடுவோம். உதவி ஞாபகத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
கடமையில் பற்று இருக்காது. உதவியில் பற்று இருக்கும்.
கடமையைச் செய்தவனுக்கு இறைவன் கடனாளி ஆகிறான். உதவியைச் செய்தவனுக்கு உதவியைப் பெற்றவனே கடனாளி ஆவான்.

 

* புரியாத ஒரு விஷயத்திற்கு தீர்வு காண நினைக்காதீர்கள். தீர்வும் சொல்லாதீர்கள். அவமானமே மிஞ்சும்!

 

* நம்மால் அழுதவர்கள் நமக்காக அழமாட்டார்கள்!
* எல்லையைத் தொட்ட பிறகு, அதன் பிறகு எதைத் தேடிப் போவீர்கள்?
* பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான மனிதர்கள்
சுயம் காட்டுவதில்லை!

Clip to Evernote