கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி என அழைக்கப்பட்ட ஜெயலலிதாவும் சேர்ந்து 28 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மீண்டும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்து,  ‘வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்கிற படத்தை அனிமேஷன் முறையில் தயாரிக்கிறார்.

 

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

 

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் தொடர்ந்து ‘கிழக்கு ஆப்பிரிக்காவின் ராஜூ’ என்கிற படத்தைத் தயாரிக்க எம்.ஜி.ஆர் விருப்பமாக இருந்தார். அரசியல் காரணங்களால் அந்தப் படத்தை அவரால் தயாரிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, எம்.ஜி.ஆரின் கனவுப் படமாக இருந்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ இன்றைய காலத்திற்கேற்ற திரைக்கதையோடு  மீண்டும் உருவாக இருப்பது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகத்திற்கும் புதிய தீனியாக இருக்கும்.

“இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் 25 படங்களில் நடித்த என்னுடைய தந்தை ஐசரி வேலன் முக்கிய வேடத்தில் அனிமேஷன் முறையில் நடிக்கிறார். மேலும், எம்.ஜி.ஆருடன் நடித்த நாகேஷ், நம்பியார் போன்றவர்களும் அனிமேஷன் முறையில் நடிக்கவிருப்பது நிச்சயமாக ரசிகர்களிடையே பெரும் ஆதரவு பெறும்.

 

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில், அவருடைய கனவு படைப்பான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில், ‘கிராபிக்ஸ்’சில் தயாரிக்க முடிவு செய்தோம். அதன்படி, எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ந் தேதி, சென்னை சத்யா ஸ்டுடியோவில், ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் தொடக்க விழா நடந்தது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ‘கிளாப்’ அடித்தார். நடிகர் கமல்ஹாசன் கேமராவை ‘ஆன்’ செய்தார். லதா, சவுகார் ஜானகி, வெண்ணிறை ஆடை நிர்மலா, சச்சு உள்பட எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள் பலரும் கலந்து கொண்டார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் எம்.ஜி.ஆரிடம் பணிபுரிந்த உதவியாளர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

அனிமேஷன் படமாக தயாராகி வரும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’, எம்.ஜி.ஆரின் அடுத்த பிறந்த நாளில், அதாவது 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி திரைக்கு  ரிலீஸ் ஆகும்.

‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் ‘கிராபிக்ஸ்’சில் நடிக்க வைத்து, அவர்களுடைய 29வது படமாக உருவாக்கியிருக்கிறோம். இதற்காக எங்கள் பட நிறுவனம் பெருமைப்படுகிறது. எங்களோடு இணைந்து ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ நிறுவனமும் இந்தப் படத்தை தயாரிக்கிறது”  என்றார் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ்.

Clip to Evernote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *