காளியாட்டம்-காளி ஆட்டம்-Kaaliyattam-Kaali Attam

அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்கிற கடன்

காளியாட்டக் கலைஞர் சிவபால்
38

அறிவியலும், நாகரீகமும் மாற மாற பழசெல்லாம் அழிந்துகொண்டு வருகிற காலம் இது. அது அழிந்துகொண்டு வருகிறதா, இல்லை நாமாகவே அவற்றை அழித்துக்கொண்டு வருகிறோமா? என்று யோசித்தால், இரண்டாவது காரணமே பெரும்பாலும் சரியாக இருக்கும்.
எதையும் உருவாக்குவது கஷ்டம். அழிப்பது மிக எளிது. பழமையை நேசிக்கத் தெரிந்தவர்களுக்குதான் இழப்புகளின் வலி தெரியும். அருங்காட்சியகங்களின் எண்ணிக்கையும், அங்கே குடிபுகும் பழமைகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது அடுத்த தலைமுறை மனிதர்களுக்கு நாம் விட்டுவைக்கிற சொத்து அல்ல, விட்டுப்போகிற கடன்.
சரி, இதையெல்லாம் இங்கே ஏன் சொல்லவேண்டும்? விஷயம் இருக்கிறது.
முன்பெல்லாம் கோவில்களில் திருவிழா என்றால், வில்லுப்பாட்டு, கனியான் கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம் என நம் கிராமிய வாசனையோடு கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்தான் பட்டையைக் கிளப்பும். இப்போது, அரிதாகவே இம்மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. கிராமங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களில்கூட, இன்னிசைக் கச்சேரி என்கிற பெயரில் சினிமா நுழைந்துவிட்டது.

கடந்த மாதம் உறவினர்களின் அழைப்பின்பேரில் கோயில் திருவிழா ஒன்றிற்கு விருந்தினராகச் சென்றிருந்தேன். அங்கே காளி வேடமிட்டபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் ஒருவர். இடையிடையே ருத்ர தாண்டவம் வேறு நிகழ்த்திக் காட்டினார். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, உண்மையாகவே வானுலகத்து காளி வந்துவிட்டாள் என்றே தோன்றியது. பக்கத்தில் சென்று பார்த்தபோதுதான், அவர் ஆண் என்பது தெரியவந்தது.
தமிழ் இலக்கியங்களில் இந்தக் காளிவேடம் பற்றிய குறிப்புகள் நிறைய இருப்பது ஞாபகம் வர, சிறு அறிமுகத்திற்குப் பின்னர் விழா நிகழ்வுகள் முடிந்தவுடன் சந்தித்துப் பேசினோம்.

‘‘என்னோட பெயர் சிவபால். வேதாரண்யம் பக்கத்துல இருக்கற கத்தரிபுலம் கிராமம்தான் சொந்த ஊர். இப்போ இருக்கறது சென்னையில். அங்கே செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில நடன ஆசிரியராக வேலை பார்க்கிறேன்’’ என்றவர், ‘‘நடன ஆசிரியர் என்றவுடன் இந்த காளி நடனத்தைக் கற்றுக்கொடுக்கிறேன் என நினைக்காதீர்கள். ஆனால், இதுவும் உண்டு. நான் பரத நாட்டியம் முறையாகப் பயின்றிருக்கிறேன். அதுதவிர கிராமிய நடனங்களும் தெரியும்’’ எனச் சிரித்துக்கொண்டே காளி நடனத்தை கற்றுகொண்டது பற்றி பேச ஆரம்பித்தார்.
‘‘பத்தாம் வகுப்பு படித்து முடித்தபோது, எங்கள் ஊரில் மேடை நாடகங்கள் நடத்தினோம். நாடகத்தில் அவ்வப்போது நாட்டியமும் உண்டு. நடனமும் உண்டு. எனக்கு  இரண்டுமே சுத்தமாக வரவில்லை. எல்லோரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், நடனத்தின் மீது எனக்கு காதல் இருந்தது. சரி, இதை நாம் முறையாக கற்றுக்கொண்டால் என்ன என்கிற முடிவுடன், திருவாரூர் இசைப்பள்ளியில் பரத நாட்டியப் பள்ளி மாணவனாகச் சேர்ந்தேன். அங்கு தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளையின் மகன் கே.பி.சந்திரசேகர் எனக்கு ஆசிரியராக இருந்தார். மூன்றாண்டுகள் பரதம் கற்றேன். நடனக் கலைமணி பட்டத்துடன் சிறந்த மாணவனாக கல்லூரியைவிட்டு வெளியே வந்தேன்’’ என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

பரதநாட்டியத்தில் இந்த காளி வேடமும் கற்றுத் தரப்படுகிறதா?
‘‘இல்லை. இது நானாக கற்றுக்கொண்டது. இசைப் பள்ளியில் சேர்வதற்கு முன்னரே சிறிது காலம் பாலகுமார் என்பவரிடம் நடனம் கற்றேன். இவரின் நண்பர் முத்துக்குமார் என்பவர் காளிவேடம் அணிந்து, கோவில் திருவிழாக்களில் பங்கேற்பார். அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்’’.
இதுபற்றிய இலக்கியப் பதிவுகள் உங்களுக்குத் தெரியுமா?
‘‘ஓ…நன்றாகத் தெரியும். தமிழர்களின் நாட்டுப்புறக்கலைகளில் இதிகாச நிகழ்வுகளை உணர்த்தக்கூடிய கலைகள் ஏராளம் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று இந்த காளியாட்டம். இது வழிபாடாகவோ அல்லது பொழுதுபோக்கினை அடிப்படையாகக் கொண்டோ தோன்றியிருக்கலாம். இதற்கு காளிவேடம், காளி திருநடனம், காளி வீதி உலா என பிற பெயர்களும் உண்டு.
இன்று காளியாட்டம் என்பது ஒரு சடங்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டு காலத்தில் காளியாட்டம் வேறுவிதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அதாவது காளியாட்டம் நிகழ்த்தப்படுவதற்கு முன்னர் 25 அடி நீளத்திற்கு மிகப்பெரிய அரவான் உருவத்தை மண்ணால் படுத்திருப்பது போல் செய்வர். படுத்திருக்கும் அரவான் உருவத்திற்குப் பக்கத்தில் மிகப்பெரிய காளிதேவியின் உருவமும் செய்யப்படும். பொதுவாக கோயிலின் முன்பகுதியிலேயே இந்த உருவங்கள் செய்து வைக்கப்படும். கோவில் பூஜை தொடங்கும்போது காளிதேவியின் உருவத்திற்கு முன்பாக கோழி ஒன்றைப் பலி கொடுப்பர்.

பின்னர், அரவான் உருவத்தின் மேல் பூசணிக்காய் ஒன்றை வைத்து அதைத் துண்டாக வெட்டி எறிவர். கோவில் பூசாரி துரோபதையின் வேடமிட்டு அரவானைச் சுற்றிவந்து ஒப்பாரி வைத்து பாட்டுப்பாடி மார்பில் அடித்துக்கொண்டே அழுவார். கிராமத்தில் பேய் பிடித்து ஆட்டும் பெண்கள் காளிதேவியாக வலம் வருபவரை வணங்குவர். அப் பெண்களைத் தன் கையில் வைத்திருக்கும் துடைப்பத்தால் அடிப்பாள் காளிதேவி.

இவ்வாறு அடிக்கும்போது பெண்களுக்குப் பிடித்திருக்கும் பேய் விலகிவிடும் என்பது மரபு.  இதுதான் பண்டைய தமிழ் கிராமத்துக் கோவில்களில் முக்கிய அங்கம் வகித்தது.

அதன்பிறகு நாளடைவில் மெல்ல மெல்ல இந் நிகழ்ச்சி காளிவேடமிட்டு ஆடும் நிகழ்ச்சியாக மாறியிருக்க வேண்டும். இந்தக் காளியாட்டத்தில் பச்சைக் காளி, சிவப்புக் காளி என இரு பிரிவுகளும் உண்டு. இன்றைய கம்ப்யூட்டர் காலத்தில் பழமையாவும் மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஒரு கலை இருப்பதே தெரியாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது’’.
இந்த வேடம் முழுமையாகப் போடுவதற்கு எத்தனை மணி நேரம் ஆகும்?
‘‘குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் ஆகும்’’.
பரத நாட்டிய ஆசிரியராகப் பணிபுரியும் நீங்கள், இதையும் தொழிலாகச் செய்துவருகிறீர்களே, எதற்காக?
‘‘இதை தொழிலாகச் செய்யவில்லை. மாணவப் பருவத்தில் இந்தக் கலையை கற்றுக்கொண்டேன். நல்ல பணியிலும் இருக்கிறேன். என்றாலும், இந்தக் கலை அழிந்துவிடும் சூழலில் இருக்கிறது. என் உயிர் இருக்கிறவரையிலேனும் பாதுகாப்பது என் கடமையல்லவா? தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இக் கலைஞர்கள் இருக்கிறார்கள்’’.
இதன்மூலம் சினிமா வாய்ப்புகள் வருமே?

‘‘அப்படி எதுவும் வரவில்லை!’’

காளியாட்டம்

தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகள்

kaaliyatam kaaliyaatam kaaliyatam2 15 8 kaaliyatam3kaaliyatam2

 

நம் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு மறுநாள் முழுவேடத்தையும் போட்டு அசத்தினார் சிவபால்.அந்தப் படங்கள்தான் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளன. முதலில் காளியை நினைத்து சிறு தியானம் மேற்கொண்டவர், அதன்பிறகு செந்தூரத்தால் ஆன பச்சை வண்ணத்தை உடலெங்கும் பூச ஆரம்பித்து, படிப்படியாக காளிதேவியாக மாறுவதற்கு மூன்றரை மணிநேரம் ஆயிற்று. உண்மையாகவே மேலுலக காளியே நம் முன் காட்சி தந்ததைப் போல் அவதாரம் எடுத்திருந்த சிவபாலனுக்கு தேங்காய், பழம் படைத்து கற்பூர ஆரத்தி எடுக்கலாம் போலிருந்தது.

நன்றி : சூரியகதிர் தமிழ் மாத இதழ்

 

Clip to Evernote