கவிதைகள்

கடத்தல்

இதுவும் கடந்துபோகும் என்கிறாய்
எதுவென்றே தெரியாது
கடந்துபோகும் எனக்கு
எது கடந்து போனால் என்ன?
பார்வை இருப்பவர்கள்
கடக்கக் கடவது!

மனசு
அழகாய் சேலை உடுத்தியிருந்தாலும்
அம்மணமாகவே பார்க்கிறது மனசு
எதிரே ஜவுளிக்கடை பொம்மை!
சுண்டல் கூட்டங்கள்

நித்தம் வழி கடந்து போகையில்
சைக்கிளை மிதித்து கொண்டே
கன்னத்தில் போட்டுக் கொள்ளும்
ஆளே போகாத சிவன் கோயிலில்
அத்தனைக் கூட்டம் இன்று!

ஓரமாய் சைக்கிளை நிறுத்திவிட்டு
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தேன்
உள்ளே என்ன நடக்கிறதென்று!

அத்தனையும் ஆண்கள் கூட்டம்
அவள் சுண்டல் கொடுக்கிறாள்.
எட்டிப் பார்த்த என்னையும்
ஏகாந்த பார்வையால் அழைத்தாள்
வரிசையில் நின்றுவரச் சொன்னாள்
எனக்கும் சுண்டலுண்டாம்.

அவளுக்கு ஆண்கள் பிடிக்கும்போல
எனக்கு சுண்டல் பிடிக்காது
சொந்தமாய் கோயிலும் இருக்கிறது
அப்படியே திரும்பிவிட்டேன்
அவள் கொடுத்துக்கொண்டே இருக்க
கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது!

 

ஹைக்கூ

வண்ண உடை

சின்ன இடை

வண்ணத்துப் பூச்சி.

பாலமுருகன்

Clip to Evernote